சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 22, 2021

யாரோ ஒருவன்? 20


ஞ்சய் ஷர்மா நரேந்திரன் இன்னொரு முறை நேரில் வராவிட்டாலும் அவனைப் போனிலாவது தொடர்பு கொண்டுஅன்றைக்கு என்ன சொல்ல வந்தாய்?” என்று கேட்பான் என்று எதிர்பார்த்தான். ஆனால் நரேந்திரனுக்கு அதை அறிய ஆவல் எதுவும் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை.  டெல்லி குளிரில் வெறும் தரையில், அதுவும் இந்த அழுக்கு சிமெண்ட் தரையில், படுத்து ஒரு வேளைக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டு உயிர் பிழைக்கும் அவலம் என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. அவன் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டது. உடை மாற்றவுமில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் தேவைகளுக்கு அவரவரே கவலைப்பட வேண்டும் என்று நினைத்த சஞ்சய், ஒரு நாள் காலை சப்பாத்தியோடு தடியன் வந்த போது சொன்னான். “எனக்கு குளிக்க வேண்டும்.”

பாத்ரூமில் தான் தண்ணீர் இருக்கிறதே குளித்துக் கொள்என்றான் தடியன்.

இந்தக் குளிரில் பச்சைத் தண்ணீரில் எப்படிக் குளிக்க முடியும்?” என்று சஞ்சய் கோபமாகக் கேட்டான்.

சரி. அப்படியானால் குளிக்காதேஎன்றான் தடியன்.

சஞ்சய் ஷர்மா கோபம் பொங்க அழாத குறையாகக் கேட்டான். “நீங்கள் எல்லாம் மனுஷங்க தானா?”

தடியன் சொன்னான். “காசுக்கு விலை போன நாய் நீ மனுஷனாடா முதல்ல அதை யோசி. நான் மனுஷனல்ல. ஆனா சார் மனுஷனாய் இருக்கறதால தான் நீ உயிரோடு இருக்கிறாய் நாயேஉன்னால என் அப்பா மட்டும் கொல்லப்பட்டிருந்தால் நான் இன்னேரம் உன் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு அணு அணுவாய் சித்திரவதை பண்ணி ரசிச்சுருப்பேன். அவருக்கு மூன்றரை வயசாய் இருக்கறப்ப அவங்கப்பா வீட்டை விட்டுப் போனார். போனவர் இருக்காரா செத்தாரான்னு தெரியாமல் சித்திரவதை அனுபவிச்சும் கூட எல்லாத்துக்கும் காரணமாய் இருக்கற உன்னை இந்த மட்டுக்குமாவது அவரானதால வெச்சிருக்கார்.  அவர் இடத்துல நானாயிருந்திருந்தா உன் குடும்பம் உன்னைப் பாத்தாலும் அடையாளம் தெரியாத அளவு உன்னை இன்னேரம் மாத்தி இருந்திருப்பேன்...”

தடியன் போய் விட்டான். சஞ்சய்க்கு ஆத்திரம் வந்ததே ஒழிய மனசாட்சி என்ற பெயரில் எதுவும் உறுத்தவில்லை. மனசாட்சி ஒரு மனிதனிடம் சிறிதளவாவது நன்மை இருந்தால் மட்டுமே தன் இருப்பைக் காட்டும். நல்லது எல்லாவற்றையும் என்றோ இழந்திருந்த சஞ்சய், வெளியே போன பின் இந்தத் தடியனைத் தேடிப்பிடித்தாவது ஆசை தீர சித்திரவதை செய்து ஆத்திரத்தை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

இந்தத் தடியன் பேசுவதைப் பார்த்தால் நரேந்திரன் மீது இவன் மிக நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறான். சார் சார் என்று மிக மரியாதையுடனும், அன்புடனும் பேசுகிறான். அப்படியானால் இவன் நரேந்திரனின் விசுவாச ஊழியனாக இருக்க வேண்டும். அப்படியானால் இதில்ராபங்கு எதுவும் இல்லை போலிருக்கிறது. நரேந்திரன் தனிப்பட்ட முறையில் தான் சட்டத்தையையும், சஞ்சயையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறான். பாவி இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு அழுத்தமும், தைரியமுமா


நரேந்திரன் இங்கே நேரில் வருவதைத் தவிர்த்தால் மாமனுக்கு இந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல. ஆனால் தீவிரவாதிகள் மனம் வைத்தால் அவனைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று நம்பினான். அஜீம் அகமதை அவன் நேரில் பார்த்தது இல்லையே ஒழிய அவன் ஆட்கள் அவனை வானில் இருந்து வந்தவன் போல உயரத்தில் வைத்திருந்தார்கள். அவனால் ஆகாதது இல்லை, அவன் அறிவுக்கூர்மைக்கு நிகரானவர்கள் யாருமில்லை என்றெல்லாம் பயபக்தியுடன் சொல்வதை சஞ்சய் கேட்டிருக்கிறான். அந்த அஜீம் அகமது மனது வைத்தால் அலட்டிக் கொள்ளாமல் நரேந்திரனை அவன் அப்பனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி தந்தையோடு சேர்த்து வைப்பான். தயவு செய்து யாராவது சீக்கிரம் இந்த நரேந்திரனைப் பற்றி அஜீம் அகமது காதில் போட்டு வைத்தால் தேவலை...

க்கத்து வீட்டில் அடுத்த இரண்டு நாள் இரவுகளில் எந்தச் சத்தமும் ஒளியும் இல்லை. அந்த வீட்டில் இப்போது ஒரு உதவியாளன் வந்து சேர்ந்திருந்தான். அவன் பெயர் சுதர்ஷன் என்பது நாகராஜ் அவனை அழைத்த போது தெரிந்தது.  சுதர்ஷனுக்கு வயது சுமார் நாற்பது இருக்கும் போலத் தெரிந்தது. அவன் வந்த பிறகு அந்த வீட்டில் சில மாற்றங்கள் தெரிந்தன. சுதர்ஷன் வாசல் கூட்டிக் கோலம் போட ஒரு பாட்டியை வேலைக்கு அமர்த்தி இருந்தான். ஆனால் அந்தப் பாட்டியை வீட்டுக்குள் கூட்டித் துடைப்பது உட்பட எந்த வேலைக்கும் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.

வீட்டுக்குள்ளே பாம்புகளும், பல ரகசியங்களும் இருப்பதால் தான் வெளியாள் யாரையும் அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று கல்யாணும் வேலாயுதமும் நினைத்தார்கள்வேலாயுதம் சுதர்ஷனிடமாவது பேச்சுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். பொதுவாகவே அவர் வேலைக்காரர்களிடம் பேசுவதை அவர்களுக்குத் தரும் பெரிய கவுரமாகவே நினைத்தார். அதை உறுதிப்படுத்துகிற மாதிரி அவர் பேசப் போனால் அவர்களும் நடந்து கொண்டு மரியாதையுடன் பேசுவார்கள். அப்படியே சுதர்ஷனும் நினைப்பான் என்று எண்ணினார் அவர்.

ஆனால் நடை உடை பாவனைகளில் நாகராஜை விடப் பல விதங்களில் மேம்பட்டிருந்த சுதர்ஷன் பேசும் விஷயத்தில் அவன் முதலாளியே எத்தனையோ தேவலை என்று நினைக்கும்படி நடந்து கொண்டான். அவன் பார்த்தால் புன்னகை செய்து விட்டு பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணிய வேலாயுதம், அவன் வெளியே தென்படும் நேரங்களில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்ஆனால் அவன் தப்பித்தவறி கூட அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

மாலை நாகராஜும், அவனும் சேர்ந்து ரேஸ்கோர்ஸில் நடக்கப் போனார்கள். இருவரும் வேகமாக நடந்தார்கள்பேசிக் கொண்டே அவர்கள் நடக்கும் போது நாகராஜ் முதலாளி, சுதர்ஷன் தொழிலாளி போலத் தெரியவில்லை. நண்பர்களைப் போலவே பேசிக் கொண்டு போனார்கள்.

இரண்டு நாட்களில் ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ஒரு ராணுவ அதிகாரி வந்து போனார். இன்னொரு நாள் வேறொரு சுவாமிஜி வந்தார். இருவரும் வந்த போது அவர்களை வரவேற்கவும், போகும் போது அவர்களை வழியனுப்பவும் சுதர்ஷன் வெளியே வந்தான். அவர்கள் போனவுடனே ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் உள்ளே போய் விட்டான். மற்ற சமயங்களில் போன் பேச மட்டும் வெளியே வருவான். அந்த அழைப்புகள் எல்லாம் நாகராஜிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு வந்தவை என்பது அவன் ஹிந்தியிலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும்  சொல்லும் பதில்களிலேயே தெரிந்தது.

“ஐந்து மாதங்களில் இல்லையே. கேன்சல் ஆகும் வாய்ப்பும் குறைவு சார். பார்க்கிறேன். இருந்தால் சொல்கிறேன்....”

ஜனவரி ஐந்தாம் தேதிக்கு மேல் தான்.... சாரி சார்.... அதுவே ஓக்கேயா..... சரி அட்வான்ஸ் ஒரு லட்சம் அனுப்பி வையுங்கள். இல்லையில்லை. ஒருத்தருக்கு மட்டும் தான் அனுமதி. சரி. சந்தோஷம்....”

வேலாயுதம் இது போன்ற பேச்சுக்களைக் கேட்டு மனம் புழுங்கினார். அவருக்கு மட்டும் இது போல் ஒரு அமைப்பிருந்தால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முப்பது ஆட்களைப் பார்த்து விடுவார். இவனைப் போல ஐந்து லட்சமெல்லாம் அவருக்கு வேண்டாம்; ஒரு லட்சம் போதும். ஆளுக்கு அரை மணி என்றாலும் பதினைந்து மணி நேரம் தான் அதற்கு ஆகும். ஆளுக்கொரு லட்சம் கொடுத்தாலும் ஒரு நாளுக்கு முப்பது லட்சம். ஒரு மாதத்துக்கு ஒன்பது கோடி. வருடத்துக்கு 108 கோடி.... ஐயோ ஐயோ... மூலதனப் பிரச்சினை இல்லை, தொழிலாளர் பிரச்சினை இல்லை,  மார்க்கெட் பிரச்சினைகள் இல்லை....

இரண்டு நாளும் இரவு மகன் வந்தவுடன் அன்று நடந்ததை அவர் ஒப்பித்தார். கிட்டத்தட்ட அவர் சிந்தனைகள் தான் கல்யாணுக்கும் என்றாலும் அவன் அவரைப் போல அங்கலாய்க்கவோ, புலம்பவோ இல்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரனிடம் எப்படியாவது நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கென்ன வழி என்று யோசித்துக் கொண்டுதானிருந்தான்

இரண்டு இரவுகளில் பக்கத்து வீட்டைக் கண்காணித்து எந்தப் புதிய நிகழ்வும் நடக்காததால் மூன்றாம் நாள் இரவு அவன் கண்காணிப்புக்குப் போகவில்லை. தன் அறையில் உறங்கியிருந்த அவனை இரவு பதினொன்றரைக்கு வேலாயுதம் போனில் பரபரப்புடன் மூச்சு வாங்க அழைத்தார். “கல்யாண் சீக்கிரம் கீழே வா...”




(தொடரும்)
என்.கணேசன்


6 comments:

  1. வாரா வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.. அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  2. Hi sir chennai book fair unga books sale panreengala sir ???. Plz rep thank you sir.

    ReplyDelete
    Replies
    1. This year my publisher is not participating sir.

      Delete
  3. சஞ்சயின் மனாசாட்சி பற்றிய விளக்கம் அற்புதம்... தற்போது நாம் பார்க்கும் சில மனிதர்களின் நடத்தைக்கு, மனசாட்சி என்பது சுத்தமாக வெளியே சென்றுவிட்டது தான் காரணம்....

    வேலாயுதம் கதாபாத்திரம் அற்புதம்.... பணத்தாசை பிடித்தவர்களின் எண்ண ஓட்டம் அப்படிதான் இருக்கும்....

    ReplyDelete