“கன்சல்டிங்” என்றான் நாகராஜ். அவன் நடையின்
வேகம் குறையவில்லை.
“என்ன மாதிரி
கன்சல்டிங்?” என்று மூச்சு வாங்க நடந்து கொண்டே வேலாயுதம் கேட்டார்.
“எல்லாமே” என்று அவன்
சொன்னான்.
எல்லாமே என்றால் என்னவெல்லாம் என்று
கேட்க அவர் வாயைத் திறந்தார். அதற்குள் அவனுடைய செல்போன் அடித்தது. அதை எடுத்து “ஹலோ” என்றான். அவன் நடைவேகம்
கூடியது. அவரால் அதை விட வேகமாக அவனோடு நடக்க முடியவில்லை. மூச்சு
வாங்க அவர் நின்று விட்டார். அவர் நின்று விட்டதைக் கூட அவன் கவனிக்காமல்
செல்போனில் பேசிக் கொண்டே போனான்.
வேலாயுதம் மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தார். நாகராஜ்
திரும்பி வரும் போது முடிந்தால் பார்த்துப் பேச்சைத் தொடரலாம் என்று நினைத்தார். அவர் நடந்து
வந்து கொண்டிருந்த போது ஒரு கிழவர் எதிரே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். நேற்று
நாகராஜைப் பார்க்க வந்த மில் அதிபரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்ப்பவர் அந்த ஆள். அந்த மில்களுக்கும்
அவர்களுடைய கம்பெனி தயாரிக்கும் உதிரி பாகங்கள் விநியோகிப்பது உண்டு என்பதால் அந்த
ஆளை அவர் நன்றாக அறிவார். நாற்பதாண்டு காலமாக அந்த மில் அதிபரிடமே வேலை பார்ப்பதால்
அந்த ஆள் முதலாளியோடும், முதலாளி குடும்பத்தோடும் மிகவும் நெருக்கமானவர் என்பது அவருக்குத்
தெரியும்.
ஆனால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின்
கீழ்நிலை ஊழியர்களுடன் பேசுவது கவுரவக்குறைவு என்ற எண்ணம் உடையவர்கள் வேலாயுதமும், அவர் மகனும். அவர்கள்
அந்த ஊழியர்களை நேர் பார்வை பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் இந்த
அவசிய நேரத்தில் வேலாயுதம் அன்பே வடிவானார். “என்ன நீங்களும்
தினம் வாக்கிங் போக ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று அந்த ஆளிடம்
கேட்டார்.
அந்தக் கணக்குப் பிள்ளைக்கு வேலாயுதம்
அவருடன் தான் பேசுகிறாரா, இல்லை பின்னால் வேறு யாருடனாவது பேசுகிறாரா என்ற சந்தேகம்
வந்து திரும்பிப் பார்த்தார். பின்னால் சில அடிகள் தூரம் வரை ஆட்கள் யாரும் இல்லை என்பதால்
தன்னிடம் தான் அவர் பேசுகிறார் என்பது அவருக்கு உறுதியாகியது. “ஆமாம் சார். ரெண்டு
வருஷமாய் போறேன்” என்றார்.
இரண்டு வருடமாய் இந்த மனிதர் அவருடைய
வீட்டைக் கடந்து போவதை வேலாயுதம் கவனித்திருந்தாலும் “அப்படியா” என்று கேட்டு
விட்டு “நேத்து உங்க முதலாளி பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போனதைப்
பார்த்தேன்...” என்று வரவேண்டிய விஷயத்துக்கு வந்தார்.
“ஓ உங்க
வீட்டுக்குப் பக்கத்துல தான் மகராஜ் வந்திருக்காரா? முதலாளி
இடம் சொன்னாரு. எனக்குச் சரியா விளங்கல. இப்ப தான்
புரியுது. அந்த வீடு தானா அது”
வேலாயுதம் இது என்ன புதுக்குழப்பம்
என்று திகைத்தார். நாகராஜ் என்று தான் பக்கத்துவீட்டுக்காரன்
சொன்னான், வீட்டு புரோக்கரும் அப்படித் தான் சொன்னதாய் நினைவு. இந்த ஆள்
மகராஜ் என்று புதுப் பெயர் சொல்கிறாரே. இருக்கிற குழப்பங்கள்
போதாதா? இது வேறா?. “அவர் பேரு நாகராஜ்னு
சொன்ன மாதிரியில்ல ஞாபகம்” என்றார்.
“அவர் பேரு
நாகராஜ் தான். ஆனா அவரை எல்லாரும் மகராஜ்னு மரியாதையா கூப்பிடறது வழக்கம். பார்க்க
ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும் பெரிய ஆளு சார் அவர். அஞ்சு மாசத்துக்கு
முன்னாடி புக் பண்ணின அப்பாயின்மெண்ட் சார். நேத்து
தான் எங்க முதலாளிக்கு அவரைப் பார்க்க முடிஞ்சுது... பார்த்ததுக்குக்
கைமேல அவருக்குப் பலன் கிடைச்சுடுச்சு. நேத்து வந்து அவர்
மகராஜைப் பார்த்தார். இன்னைக்கு காலைல ஆஸ்திரேலியால இருந்து எங்க எக்ஸ்போர்ட் ஆர்டர்
ஓக்கே ஆயிடுச்சு. நல்ல கைராசியான மனுஷன்...”
“ஓ அவர்
எக்ஸ்போர்ட்ஸ்ல கன்சல்டண்டா இருக்காரா?” என்று வேலாயுதம்
கேட்டார்.
“சேச்சே
நான் அப்படிச் சொல்லலைங்க. மகராஜ் ஒரு சித்தர். நாகசக்தியை
வசப்படுத்தினவரா பலரும் சொல்றாங்க. சிலர் அவர் கிட்ட
பல நாகரத்தினக் கல்கள் இருக்குன்னு சொல்றாங்க. எது எவ்வளவு
உண்மைன்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அவர் சொன்னா பலிக்குது. அவர சந்திச்சுட்டு
வந்தா அதிசயம் நடக்குது...”
“அப்படியா?” என்று ஆச்சரியத்தோடு
வேலாயுதம் கேட்டார். நாகசக்தியை வசப்படுத்தினவன் அந்த நாகராஜ் என்பதும், பல நாகரத்தினக்
கல்களை அவன் வைத்திருக்கிறான் என்பதும் அவர் ஆர்வத்தை மிக அதிகப்படுத்தியது. நேற்று
இரவு கேட்ட சத்தங்கள் இந்த ஆள் சொல்வதற்குப் பொருத்தமாய் தான் இருக்கிறது. அவர் தன்
மனதில் எழுந்த சந்தேகத்தை உடனடியாகக் கேட்டார்.
“அவரு
இப்ப தான் இங்கே வந்திருக்கார்.
நீங்க அஞ்சு மாசம் முன்னாடி அப்பாயின்மெண்ட் வாங்கினதா சொல்றீங்க.
ஒன்னுமே புரியலயே”
“அவர் வடக்குல டெல்லிக்குப் பக்கத்துல எங்கேயோ இருக்கிறவர். எப்பவுமே எங்க முதலாளி அவரை அங்கே போய்ப் பார்த்துட்டு வருவார். மகராஜ் ஒரு நாளைக்கு ஒரு ஆளைத்தான் பார்ப்பார், எவ்வளவு
கோடி தந்தாலும் ஒரு நாள்ல ரெண்டாவது ஆளுக்கு அப்பாயின்மெண்ட் கிடைக்காது. ஏதோ ஒரு வேலையா கோயமுத்தூர் வந்து கொஞ்ச நாள் தங்கறதால இந்த மாச அப்பாயின்மெண்ட்ஸ
மட்டும் இங்கே பார்க்கறதா தகவல் வந்துச்சு. எங்க முதலாளிக்கு
இது வசதியாயிடுச்சு.…”
”நீங்க வடநாட்டுக்
காரர்னு சொல்றீங்க. ஆனா அவர் தமிழ் நல்லா பேசறாரே?”
“அவர் தமிழர்
தான். வடக்குல செட்டில் ஆனவர். நீங்க அதிர்ஷ்டக்காரர். மகராஜ்
உங்க பக்கத்து வீட்டுக்கே குடிவந்திருக்கார். உங்க கிட்ட
பேசியும் இருக்கார். ”
நாகராஜ் அவரிடம் பேசிய வார்த்தைகளை
விரல்விட்டு எண்ணி விட முடியும் என்றாலும் அந்தக் கணக்குப்பிள்ளையின் உயர்ந்த அபிப்பிராயத்தை
வேலாயுதம் குறைத்து விட விரும்பவில்லை.
கணக்குப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்.
“.... முதலாளியோட தம்பிக்கு நாலு மாசம் கழிச்சு ஒரு தேதி கிடைச்சிருக்கு. எப்படியும் கோயமுத்தூர் வந்திருக்காரே சந்திச்சுட்டா தேவலைன்னு
நினைச்சு அவரோட ஆசிரமத்துல பேசியிருக்கார். அஞ்சு லட்சத்துக்குப்
பதிலா பத்து லட்சம் ரூபாய் தர்றேன்னு சொல்லியும் ஒத்துக்கலையாம்...”
“என்னது
அந்த ஆளைப் பார்க்க அஞ்சு லட்சம் ரூபாயா?” வேலாயுதம் வாயைப்
பிளந்தார். அந்த ஆளுக்கு ஒரு ஆசிரமமும் இருப்பது இன்னொரு ஆச்சரியம்.
“ஆமா. நேத்து
அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்த என் முதலாளிக்கு
இன்னைக்குக் காலைல கிடைச்ச ஆஸ்திரேலியா எக்ஸ்போர்ட் மூலமா கிடைக்கப் போற லாபம் ரெண்டே
கால் கோடி. அதனால யாருமே அவர் கிட்ட கணக்குப் பாக்கறதில்லை....
அஞ்சு லட்சத்தைப் பத்து லட்சம் பண்ணினாலும், பதினைஞ்சா
பண்ணினாலும் பார்க்க தவமாயிருக்காங்க”
“அப்படிப்பட்ட
ஆள் வீடு கூட்டித் துடைக்கக்கூட ஏன் ஆளு வெச்சுக்கல. எல்லாத்தையும்
அவரே செய்யறாரு?”
அந்தத் தகவல் அவரையும்
ஆச்சரியப்படுத்தியது போலிருந்தது. “அப்படியா? அது ஏன்னு எனக்குத்
தெரியலையே!. சரி சார் வர்றேன். நேரமாச்சு.” அந்த ஆள்
கும்பிட்டு விட்டுப் போனார்.
வேலாயுதம் யோசனையுடன் நடந்தார். எல்லோரும்
வியாபாரத்தில் பெருந்தொகையை முதலீடு செய்து எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்து, சமாளித்துப்
பணம் சேர்க்க வேண்டியிருக்க நாகராஜ் மாதிரியான ஆட்கள் அரை மணி நேரம் ஒருவனைச் சந்திக்க
ஐந்து லட்சம் ரூபாய் வாங்குவது தொழிலதிபர்களைக் கேலி செய்வது போன்ற விஷயமாக அவர் நினைத்தார். அதில் பத்து
லட்சம் ரூபாய் தந்தாலும் வரிசை மாறிச் சீக்கிரம் அப்பாயின்மெண்ட் கிடைக்காதாம். நாடு எங்கே
போகிறதோ?
ஆனால் எவனுமே வந்து பயன் கிடைக்காமல்
சும்மா திரும்பவும் வர மாட்டானே. இந்தக் கிழவன் சொல்வதைப் பார்த்தால் அவனிடம் போகிறவர்களுக்கு
அவனால் பெருந்தொகைகள் லாபமாகக் கிடைக்கிறது போலிருக்கிறதே. அதற்கெல்லாம் இந்தக் கிழவன் சொல்கிற மாதிரி நாகசக்தி தான்
காரணமோ? கல்யாண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் சொன்ன அந்த அமானுஷ்ய
சம்பவம் அங்கே நடக்கிறதோ? ஆனால் இரவின்
அமைதியைக் குலைத்துக் கொண்டு கேட்ட அந்தப் பாம்புச் சீறல்கள் இப்போதும் அவரை லேசாக
நடுங்க வைத்தது. என்ன இருந்தாலும் அது அபாயம் தான்....
(தொடரும்)
என்.கணேசன்
I am also very eager to know about Nagaraj Is he divine or devil?
ReplyDeleteSuspense thrill just inceeasing chapter after chapter.
ReplyDeleteஎல்லாம் இயல்பாக நடக்கிறதா...இல்லை...நாகராஜின் திட்டமா...? ஆனால், மற்றவர்களை மதிக்காத வேலாயுதம் போன்ற ஆட்களை தன்வழிக்கு கொண்டுவர கண்டுகொள்ளமல் விடுவதே சிறந்த வழி...
ReplyDelete