எர்னெஸ்டோ அடைந்த திகைப்பிற்கு அளவேயில்லை. அவருடைய திகைப்பு ஹாலில் கேட்ட சத்தத்தின் விளைவாக இருக்கவில்லை. அக்ஷயின் அதிவேகத்தைப் பார்த்துத் தான் அவர் திகைத்திருந்தார். ”இப்போது தானே சம்மணமிட்டு தரை விரிப்பில் அக்ஷய் அமர்ந்திருந்தான். எப்படி இவன் கதவருகே போனான்?” என்று திகைப்புடன் அவர் தனக்குள்ளே கேட்டுக் கொண்டார். அவன் சம்மணம் கலைத்ததையோ, நின்றதையோ, கதவை நோக்கித் தாவியதையோ அவர் பார்த்திருக்கவில்லை. காற்றின் வேகத்தில் நகரக்கூடியவன் என்று அவன் ஃபைலில் இருந்தது உயர்வு நவிற்சியாக அவருக்கு இப்போது தோன்றவில்லை. விஸ்வம் கணப்பொழுதில் தாக்கக்கூடியவன்
என்று அறிந்த பின் அவனிடமிருந்து அவரைக் காப்பாற்றப் பொருத்தமானவன் என்று அக்ஷயை ஏன்
இம்மானுவல் தேர்ந்தெடுத்தான் என்பது இப்போது விளங்கியது.
அவர் அவனிடம் அமைதியாகச் சொன்னார். “நீ பயப்படும்படி எதுவும் இருக்க வழியில்லை. என்னிடம் 96 வயது வேலையாள் ஒருவர் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி இப்படி எதையாவது கீழே நழுவ விட்டு விடுவது வழக்கம். அவராகத் தான் இருக்கும்”
அக்ஷய் பாதி இறுக்கம் தளர்ந்தாலும் எச்சரிக்கையுடன் மெல்ல கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான். எர்னெஸ்டோ சொன்னபடியே ஒரு முற்றிய முதியவர் ஹாலில் தவறு செய்து விட்ட குழந்தை போல் நின்று கொண்டிருக்க இரண்டு வேலையாட்கள் கீழே விழுந்திருந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டும், தரையைத் துடைத்தும் கொண்டும் இருந்தார்கள்.
கதவைச் சாத்திவிட்டுத் திரும்பும் போது தான் அக்ஷய் இயல்பான நிலைக்கும் திரும்பினான். எர்னெஸ்டோ மென்மையான குரலில் சொன்னார். “அவர் ஆர்லாண்டோ.
நான் பிறந்த போதே ஆர்லாண்டோ என் தந்தையிடம் வேலையில் இருந்தார். அப்போது அவர் பத்து வயதுப் பையன். நான் என் தாய் தந்தை தோளில் இருந்த காலத்தை விட அவர் தோளில் இருந்த காலம் அதிகம். நான் விளையாடியதும் அவரிடம் தான் அதிகம். அன்றிலிருந்து இன்று வரை என்னிடம் இருக்கிறார். வேலை பார்த்தது போதும், ஓய்வில் இருங்கள், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன், ஒரு ராஜாவைப் போல் இருங்கள் என்று பல முறை சொல்லி விட்டேன். அவர் கேட்பதாயில்லை. சில நாட்கள் உடம்புக்கு
முடியாமல் படுத்திருப்பார். திடீரென்று ஒரு நாள் எழுந்து வேலை செய்வார். எனக்கு எதாவது சாப்பிடக் கொண்டு வந்து கொடுப்பார். நான் சாப்பிட்டு முடியும் வரை என் பக்கத்தில் அமர்ந்திருப்பார். பின் போவார். இரண்டு மூன்று நாள் இப்படி வேலை செய்வார். பழையபடி முடியாமல் சில நாட்கள் படுத்துக் கொள்வார். பின் மெல்ல எழ முடிந்தால் இப்படி வந்து விடுவார். அவருக்கு இப்போதெல்லாம் கைபலம் இருப்பதில்லை. சாமான்களைக் கீழே போட்டு விடுகிறார்....”
மெல்ல கதவைத் திறந்து அந்த முதியவர் எட்டிப் பார்த்தார். “நான் உனக்கு சில காய்கறிகளை வெட்டி சாலட் செய்து கொண்டு வந்தேன். அது கீழே விழுந்து விட்டது. மறுபடி கொண்டு வருகிறேன்.”
எர்னெஸ்டோ புன்னகைத்தார். “சரி ஆர்லாண்டோ.”
ஆர்லாண்டோவின் முகத்தில் குற்றவுணர்ச்சி போய் பேரன்புடன் புன்னகை விரிந்தது. “சரி சீக்கிரம் வருகிறேன். காத்திரு” என்று சொல்லி விட்டு மெல்லக் கதவை மூடினார்.
எர்னெஸ்டோ நெகிழ்ச்சியுடன் சொன்னார். “எந்த எதிர்பார்ப்பும், காரணமும் இல்லாமல் என்னை எனக்காகவே நேசிக்கின்ற ஒரே மனிதர் இவர் தான் அக்ஷய். எனக்கு முன் அவர் இறந்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் என் மரணத்தைப் பார்க்கும் சக்தி அவருக்கு இருக்காது. நான் முன்னால் போய் விட்டால் அவருக்கு நேசிக்கவும் யாருமில்லை, அவரை நேசிக்கவும் யாருமில்லை...”
அக்ஷய் எர்னெஸ்டோவின் புதிய பரிமாணத்தைப் பார்க்கிறான். அந்த மனிதரை அவனுக்கு மிகவும் பிடித்து
விட்டது.
அவன் திரும்பி வந்து
அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த பிறகு எர்னெஸ்டோ அவனிடம் ஆச்சரியத்துடன்
கேட்டார். “உன்னால் எப்படி உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து அவ்வளவு சீக்கிரம்
அந்தக் கதவுப் பக்கம் போக முடிந்தது”
அக்ஷய் சொன்னான்.
“இதெல்லாம் பயிற்சி தான்”
எர்னெஸ்டோ சொன்னார்.
“நீ எழுந்ததையோ, நின்றதையோ, அங்கே போனதையோ நான் பார்க்கவில்லை... நான்கைந்து வினாடியில்
அத்தனையும் நடந்து முடிந்தது எப்படி? ”
அக்ஷய் சிறு புன்முறுவல்
பூத்து மௌனமாகவே இருந்தான். எர்னெஸ்டோ அவனை மௌனமாக இருக்க விடுவதாக இல்லை. அது எப்படி
என்று அறிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருந்தார். அக்ஷய் சொன்னான். “நீங்கள் ஒரு வினாடி
என்று சொல்கிறீர்களே அது ஒன்றும் குறைந்த கால அளவு அல்ல. ஒரு வினாடியை ஒரு ஆயிரத்தால் வகுத்து அதை ’மில்லி செகண்ட்’ என்கிறார்கள். அந்த மில்லி செகண்டை ஆயிரத்தால் வகுத்து
அதை மைக்ரோ செகண்ட் என்கிறார்கள். அந்த மைக்ரோ செகண்டை ஆயிரத்தால் வகுத்து அதை’நானோ செகண்ட்’ என்கிறார்கள். அந்த அளவுகளில்
பார்த்தால் வினாடி என்பதே நீண்ட காலம் தான், அப்படி மில்லி செகண்ட், நானோ செகண்ட்களில்
கூட நம்மால் இயங்க முடியும். நம் உடலில் எத்தனையோ வேலைகள் அந்த அளவுகோல்களில் தான்
நடக்கிறது...”
எர்னெஸ்டோவுக்குத்
தலைசுற்றியது. பிரமிப்புடன் அக்ஷயைக் கேட்டார். “அப்படி இயங்க நீ எங்கே கற்றுக் கொண்டார்.”
அக்ஷய்
சொன்னான். “திபெத்தில்”
சினிமா பார்த்து விட்டு உதய் வீடு திரும்பிய போது க்ரிஷும்
பத்மாவதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மாவதி இன்று போலவே வாரம் ஒரு முறையாவது
ஹரிணியை வெளியே கூட்டிக் கொண்டு போக வேண்டும், அது அவனது கடமை என்று இளைய மகனுக்கு
அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள். க்ரிஷ் தலையாட்டிக் கொண்டிருந்தான். உதயைப் பார்த்தவுடன்
தாயிடமிருந்து தப்பிக்க அவன் கேட்டான். “சிந்து என்ன சொல்கிறாள்?”
“பாவம்டா அவள்”
என்று சொன்னபடி தம்பியருகே உட்கார்ந்த உதய் சிந்து அவனிடம் ““யார் பேச்சையாவது கேட்டு என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ, வெறுத்து விலகி விடுவீர்களோ என்று பயம்?” என்று கண்கலங்கச் சொன்னதையும் அதற்கு அவன் “யார் என்ன சொன்னாலும் சரி. நீ தான் என் மனைவி. நான் என்றுமே உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். இது சத்தியம்” என்று வாக்கு
கொடுத்திருப்பதையும் மிகவும் உருக்கமாகச் சொன்னான்.
பத்மாவதி கண்களைத்
துடைத்துக் கொண்டு சொன்னாள். “பாவம் அந்தப் பொண்ணு. அந்த அளவு வாழ்க்கைல அன்பு கிடைக்காமல்
கஷ்டப்பட்டிருக்கு. அதனால் தான் அப்படி பயப்படுது”
க்ரிஷ் தானும் முகத்தில்
அனுதாபத்தைக் காட்டினான். சிந்து தன் நிலைமையைக் கூடுமானவரை ஸ்திரப்படுத்திக் கொள்ள
முயல்வது அவனுக்குப் புரிந்தது. அம்மா சொல்லும் அந்தப் பாவப்பட்ட பெண் மிகவும் விவரமாகத்
தான் நடந்து கொண்டு வருகிறாள்... நாளுக்கு நாள் உதய்க்கு சிந்து மேல் உள்ள காதலும்
நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது என்பதிலும், இனி உண்மையெல்லாம் தெரிய வந்தால் கூட
அவனால் அவளைப் பிரிவது மிகவும் கஷ்டம் என்பதிலும் க்ரிஷுக்குச் சந்தேகமில்லை. ஒருவிதத்தில்
எல்லாமே அவன் கையை மீறித் தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் இன்னொரு விதத்தில்
முயன்று கொண்டிருக்கிறான். கத்தி மேல் நடப்பது போல் ஆபத்து நிறைந்தது தான் அந்த இன்னொரு
விதம்.... ஆனால் துணிந்து இறங்கி விட்டதிலிருந்து அவன் பின்வாங்க முடியாது.
அன்றிரவு சிந்துவுக்கு உறக்கம் வரவில்லை. இப்போதும் க்ரிஷின்
பார்வை அவள் மனதோடு பதிந்திருப்பது போல் தோன்றியதை அவளால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
க்ரிஷ் விஸ்வம் இந்த இரண்டு பேர் தவிர வேறு யாராவது பார்ப்பது போல் தோன்றியிருந்தால்
அவள் பொருட்படுத்தியிருக்க மாட்டாள். பிரமை என்று ஆரம்பக் கணமே அலட்சியப்படுத்தியிருப்பாள்.
ஆனால் விஸ்வத்திடமும், க்ரிஷிடமும் அவள் உணர்ந்திருந்தது பிரமை அல்ல என்பதை அவள் அறிவாள்.
இப்போது அவளுக்கு ஒரு புதிய பயம் வேறு ஏற்பட்டிருந்தது. க்ரிஷ் ஹரிணி சொன்னது போல்
ஏதோ ஆராய்ச்சி மாதிரி அவள் மனதிலிருப்பதை கவனித்துக் கொண்டிருப்பது உண்மையானால் எப்போதாவது
விஸ்வம் எங்கிருந்தாவது அவள் மனதின் மீது அதே முயற்சியை எடுத்தால் என்ன ஆகும்?
விஸ்வம் அந்த சமயத்தில் க்ரிஷ் அவள் மனதைக் கவனித்துக் கொண்டிருப்பதை
உடனடியாகக் கண்டுபிடித்து விடுவானல்லவா? அதன் பின் என்ன ஆகும்?
(தொடரும்)
என்.கணேசன்
Sema interesting. Akshay is still rocking.
ReplyDeleteSir please correct 1000 milli sec 1 sec
ReplyDelete1000000 micro sec 1 sec
1000000000 nano sec 1 sec
மாற்றி விட்டேன்.
Deleteகிரிஷின் வேறு ஒருவிதமான முயற்சி என்னவென்று தெரியவில்லை.... சிந்துவை கவனிக்கிறான்... பிறகு என்ன செய்வான்? என்று தெரியவில்லை...
ReplyDelete"அவன் ஃபைலில் இருந்தது உயர்வு நவிற்சியாக அவருக்கு இப்போது தோன்றவில்லை" நல்ல தமிழ் பதங்களை பொருத்தமான இடங்களில் கையாளும் வல்லமை கொண்டவராக இருக்ககிறீர்கள்.கடந்த 5 ஆண்டுகளாக தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நான் பல சமயங்களில் தங்களின் இந்த ஆளுமையை படித்து வியந்திருக்கிறேன். தங்களுக்கு இறைவன் நலன்கள் எல்லாம் குறைவில்லாமல் வழங்குவாராக. நன்றி வணக்கம். அன்புடன் விபுலானந்தன்
ReplyDelete