சாமுவல் வாங் வே வரப் போவதை உடனடியாகக் கர்னீலியஸுக்குச் சொல்லவில்லை. முதலில் போன் செய்து இல்லுமினாட்டியின் தலைவர், உபதலைவர் இருவரின் அப்பாயின்மெண்டையும் பெறக் கடுமையாக முயன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லி இனி தலைமைக்குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முயல்வதாகத் தெரிவித்தார். பின் இரண்டு மணி நேரம் கழித்து மறுபடி போனில் பேசினார். தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வாங் வே வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அறிந்து அவரைத் தொடர்பு கொண்டதாகவும், அவரிடம் விஷயத்தைச் சொன்னவுடன் அவர் உடனடியாக கர்னீலியஸைச் சந்திக்க ஒத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
தனக்காக இவ்வளவு தூரம் முயற்சிகள் எடுத்த சாமுவலுக்கு நன்றி சொன்ன கர்னீலியஸ் வாங் வேயைத் தானே சென்று சந்திக்கத் தயார் என்றும் எங்கு எப்போது சந்திக்க வேண்டும் என்று சொன்னால் போதும் என்றும் சொன்னார்.
சாமுவல் சொன்னார். “இப்போதைய நிலைமையில் நீங்களாக அவரைச் சந்திக்கச் சென்றால் யார் மூலமாகவாவது விஸ்வம் தெரிந்து கொண்டு எச்சரிக்கை அடைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாங் வேயே தங்கள் வீட்டுக்கு வந்துச் சந்திப்பது நல்லது. அவரிடம் அதைச் சொல்லி அவரும் ஒப்புக் கொண்டு விட்டார். அவர் நாளை மாலை ஆறரை மணிக்கு உங்களைச் சந்திப்பார்”
”உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை” என்று கர்னீலியஸ் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
“நான் என் கடமையைத் தான் செய்திருக்கிறேன்” என்று அடக்கமாகச் சொல்லி சாமுவல் போனை வைத்து விட்டார். இனி மீதியை வாங்
வே பார்த்துக் கொள்வார்.
கர்னீலியஸ் வாங் வேயை நன்றாக அறிவார். தலைமைக்குழு உறுப்பினர்களிலேயே வாங் வே மிகவும் துடிப்பானவர்....
அவரே நேரில் வரச் சம்மதித்தது கர்னீலியஸுக்குத் திருப்தியாக இருந்தது. அவரிடம் தெரிவித்தால் இல்லுமினாட்டி தலைவருக்குக் கண்டிப்பாகத் தகவல் போய்ச் சேர்ந்துவிடும்.. .வாங் வே வருவதற்குள் அடுத்த வாசகம் எதாவது நினைவுக்கு வருகிறதா என்று கர்னீலியஸ் கடைசியாக ஒரு முறை முயன்று பார்த்தார். பரபரப்புடன் முயன்றதாலோ ஏனோ மனம் அமைதி அடைய மறுத்தது. அதனால் அந்தப் பயிற்சி பலனளிக்கவில்லை...
மறுநாள் சரியாக மாலை ஆறரை மணிக்கு வாங் வே கர்னீலியஸ் வீட்டில் இருந்தார். அவரை மரியாதையாக வரவேற்று அமர வைத்த கர்னீலியஸ் உபசரிப்பில் இறங்கினார். இல்லுமினாட்டியின் தலைமைக்குழு உறுப்பினர்
அதிகார பந்தா எதுவுமில்லாமல் அவருடைய வீடு தேடி வந்திருப்பதில் அவருக்கு ஏற்பட்டிருக்கும்
மகிழ்ச்சியை அவருக்கான கௌரவத்தை அளித்துக் காட்டுவது தான் முறை என்று அவர் நினைத்தார்.
வாங் வேயோ விஷயத்தைத்
தெரிந்து கொள்ளும் அவசரத்தில் இருந்தார். இந்தக் கிழவரின் உபசரிப்பில் காலந்தாழ்த்தப்படுவது இம்சையாக
அவருக்கு இருந்தது. அவர் உபசரிப்பை வெட்டிச் சொன்னார். “பெரியவரே. நாம் ஒரே குடும்பத்தவர்கள் போலத் தான். அதனால் விருந்தாளிக்கான உபசரிப்பு எனக்குத் தேவையில்லை. மிக ஆபத்தான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கனவிலும் நினைத்திராதது எல்லாம் நடந்து
கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க உதவும் தகவல்கள் உங்களிடம் இருக்கலாம் என்று கேள்விப்பட்டு
வந்திருக்கிறேன். அந்தத் தகவல்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதிலிருந்து ஆரம்பித்துச் சொன்னால்
நன்றாய் இருக்கும்.”
கர்னீலியஸ் அந்த ரகசிய ஆவணம் அவர் கையில் எப்படிக் கிடைத்தது என்பதைச் சொல்லி அதன் முக்கியத்துவம் அந்தக் காலத்தில் புரியாததால் அதை மேலோட்டமாகப் படித்து வங்கி லாக்கரில் வைத்ததையும், விஸ்வம் வேறு உடலில் போய்ச் சேர்ந்ததை அறிந்த பின் அப்படி ஒன்று நடக்கும் என்று ஆரகிள் சொன்னது நடந்து விட்டபடியால் அதற்குப் பின் ஆகப் போவதை சங்கேத பாஷையில் விவரித்திருந்ததும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்ததையும் விவரித்தார்.
மிகவும் கவனமாக அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வாங் வே திகைத்தார். கேள்விப்பட்டது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆரகிள் சொன்ன முதல் பகுதி அப்படியே பலித்திருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதில் எத்தனையோ குழப்பங்கள் இருந்த போதும் எல்லாம் முடிந்த பிறகு யோசித்துப் பார்க்கையில் எல்லாமே முன்பு கூறியபடி தான் நடந்திருக்கின்றன. இப்போது இதில் இரண்டாம் பகுதி இருந்திருக்கிறது என்பது இவர் மூலம் தெரிகிறது. இதில் கூடுவிட்டு கூடு பாயும் சம்பவம் நடக்கும் என்றது நடந்திருக்கிறது. அதனால் அதில் இனி என்ன சொல்லி இருக்கிறதோ அதுவும் நடக்கவே கூடும். இப்படி எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அப்படியே நடப்பதில் வாங் வேக்கு சம்மதமில்லை. இந்த விஷயத்தில் அவரும் விஸ்வம் கட்சி தான். விதியை அவரே தீர்மானிப்பதில் தான் அவருக்குத்
திருப்தி.... ஆனால் முதலில் ஆரகிள் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அதற்குத் தகுந்தபடி தனக்கு லாபகரமான முடிவெடுப்பது நல்லது என்று எண்ணிக் கொண்டார்.
கர்னீலியஸ் தொடர்ந்து விஸ்வத்தின் மறுபிறவி பற்றிக் கேள்விப்பட்டபின் வங்கி லாக்கரில் வைத்திருந்த அந்த ரகசிய ஆவணத்தை எடுக்கப் போகும் போது ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னார். வாங் வே திகைத்தார். கர்னீலியஸ் சந்தேகப்பட்டது போல இது விஸ்வத்தின் வேலையே என்று அவருக்கும் தோன்றியது. வேறு யாராலும் இப்படிச் செய்திருக்க முடியாது.... பின் கர்னீலியஸ் தான் இளமையில் கற்றிருந்த ஒரு ரகசிய நினைவுபடுத்திக் கொள்ளும் கலையைப் பயன்படுத்தி அந்த ரகசிய ஆவணத்தில் எழுதியிருந்ததை நினைவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருப்பதாய்ச் சொன்ன போது வாங் வே அதிசயித்தார். இந்தக் கிழவனும் சாதாரணமான ஆள் கிடையாது என்று தோன்றியது. இந்தக் காலமும் அசாதாரணமானது போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். அதனால் தான் அவர் உட்பட எல்லோரும் என்னென்னவோ மாதிரி நடந்து கொள்கிறார்கள். முடிவில் எவன் ஜெயிக்கிறானோ அவன் செய்ததெல்லாம் சரி என்று சரித்திரம் பேசும். தோற்றவன் செய்ததெல்லாம் முட்டாள்தனமாகி விடும். எனவே இதில் யார் ஜெயிப்பார்கள் என்று அந்த இரகசிய ஆவணம் சொல்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்வது தான் புத்திசாலித்தனம்...
கர்னீலியஸ் தன்னுடைய முயற்சியில் கிடைத்த ஆரம்ப வெற்றியைத் தெரிவித்து விட்டு நினைவுக்குக் கொண்டு வர முடிந்த வரிகளைச் சொல்லி விட்டுச் சொன்னார். ”இனி என்ன செய்ய வேண்டும் என்பதை இல்லுமினாட்டி தீர்மானம் செய்வது நல்லது. தகுந்த பாதுகாப்போடு போய் வங்கியிலிருந்து எடுத்துத் தருவதானால் எடுத்துத் தருகிறேன். நான் என்னுடைய இந்தப் பயிற்சி வழியே முயற்சி செய்தால் முழுமையாக எப்போது நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என்பது எனக்கே நிச்சயமில்லை.”
வாங் வே யோசித்தார். கர்னீலியஸுடன் ஓரிரண்டு பேரை அனுப்பிப் பயனில்லை. இந்த முறை கார் நிற்கும் என்றும் சொல்ல முடியாது. ஆட்களே விபத்துக்குள்ளாகி இறந்து போகலாம். பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போவது என்றால் பலர் சூழ கர்னீலியஸ் போக வேண்டியிருக்கும். அப்படிப் போய், வாஷிங்டன் நகரமே அறியும் ஒரு விஷயம் இம்மானுவலை எட்டாமல் போகாது. அது ஆபத்து.
வாங் வே மெல்லச் சொன்னார் “விஸ்வத்திற்குத் தெரியாமலேயே நம்மால் அதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும் என்றால் அதுவே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இனியும் நான்கு நாட்களோ, ஒரு வாரமோ ஆனால் கூட உடனடியாக எதுவும் நடந்து விடப் போவதில்லை. நீங்கள் உங்கள் முயற்சியையே தொடருங்கள். நீங்கள் கண்டுபிடித்திருக்கும் அந்த வாசகங்களை மறுபடி சொல்கிறீர்களா, நான் எழுதிக் கொள்கிறேன்...”
கர்னீலியஸ் சொன்னதை வாங் வே எழுதிக் கொண்டார். இதில் முக்கியமானது விஸ்வம் போய்ச் சேரும் இடம் பற்றி இருக்கும் வாசகம் தான். அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமில்லை. சாமுவலிடம் சொன்னால் சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்வார்.... அப்படிக் கண்டுபிடித்து ரகசியமாக விஸ்வத்தை முதலில் சந்தித்துப் பேசினால் நன்றாக இருக்கும்....
வாங் வேயிடம் கர்னீலியஸ் சொன்னார். “தலைவரிடம் பேசும் போது நான் மன்னிப்பு கேட்டேன் என்றும் சொல்லுங்கள். அந்த ஆவணம் அர்த்தமுள்ளது, முக்கியமானது என்று முதலிலேயே தெரிந்திருந்தால் முன்பே தலைமையிடம் அதை ஒப்படைத்திருப்பேன்...”
வாங் வே சொன்னார். “நீங்கள் மட்டுமல்ல யாருமே அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்க மாட்டார்கள். இப்போது முக்கியத்துவம் தெரிந்தவுடன் உங்கள் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறீர்கள். அதனால் மன்னிப்பு கேட்க அவசியமே இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னதாகக் கண்டிப்பாகத் தலைவரிடம் தெரிவிக்கிறேன்.”
கர்னீலியஸ் அவருடைய
வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார். வாங் வே கிளம்பும் முன் சொன்னார். “நீங்கள் உங்கள்
பயிற்சிகளை மட்டும் தயவுசெய்து தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு மற்ற வாசகங்களும்
நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தால் அது இல்லுமினாட்டிக்குச் செய்யும் பெரிய சேவையாக
இருக்கும். அப்படி நினைவுக்கு வந்தால் உடனடியாக எனக்குப் போன் செய்து சொல்லுங்கள்.
என் போன் நம்பரைக் குறித்துக் கொள்ளுங்கள்”
(தொடரும்)
என்.கணேசன்
Poor Cornelius is cheated. What next? Eager to know.
ReplyDeleteகர்னீலியஸ் நினைவுபடுத்தி முழுமையாக சொல்லும் போது.... அந்த ரகசிய ஆவணமும் எடுக்கப்பட்டடிருக்கும்...என்று நினைக்கிறேன்....
ReplyDelete