சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 7, 2021

இல்லுமினாட்டி 84


சிந்துவை அழைத்து வர உதய் காரை அனுப்பியிருந்தான். பள்ளிக்குச் செல்ல சிறிதும் விருப்பமில்லாத பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் பள்ளி வாகனத்தில் ஏறுவதைப் போல அவள் ஏறி உட்கார்ந்தாள். இந்த ஞாயிறு நரகம் தான். உதய் வீட்டு மனிதர்களைச் சகித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கெல்லாம் சிரிக்க வேண்டும். அவர்களைப் போலவே கோமாளித்தனமாகப் பேச வேண்டும். க்ரிஷின் சந்தேகப் பார்வையைச் சகிக்க வேண்டும். பத்மாவதி பொழியும் பாச மழையில் நனைய வேண்டும். சாயங்காலம் உதயுடன் ஒரு சினிமா நரகத்தில் இருக்க வேண்டும். சினிமா அவளுக்குப் பிரச்னை அல்ல. உதயின் நெருக்கம் தான் பிரச்னை. கணவனாகப் போகிறவன் என்கிற உரிமையில் இப்போதெல்லாம் கூடுதல் நெருக்கத்தை அவன் காட்ட ஆரம்பித்திருக்கிறான். அவளுக்கோ அவன் நெருக்கமும், செய்யும் சில்மிஷங்களும் அருவருப்பாகவே இருந்தது.  அவள் அந்த நேரங்களில் எல்லாம் விலக யத்தனித்ததை அவன் பெண்மையின் இயல்பான வெட்கம் என்று நினைத்தானே ஒழிய வெறுப்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளவில்லை.

முட்டாள்தனம் என்றாலும் இரண்டு மாதம் திருமணப் பேச்சே வேண்டாம் என்று சொன்ன ஜோதிடனை சிந்து மனமார வாழ்த்தினாள். அதற்குள் வேலை முடித்து தப்பித்து எங்காவது ஓடி மறைந்து விடவேண்டும். அவள் மட்டும் இருக்கிற ஒரு பாதுகாப்பான உலகில் இருந்து கொண்டு எதையும் யோசிக்காமல் செலவு செய்து வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும்விஸ்வம் அனைவரிடமும் மிக நெருக்கமாகப் பழகி அவர்கள் மனதில் அவள் இடம் பிடிக்க வேண்டும் என்றும் வீட்டுக்குள் எல்லா இடங்களுக்கும் தங்கு தடையில்லாமல் போகிற அளவு உரிமை பெற வேண்டும் என்றும்  சொல்லி இருந்தான். பின் நேரம் வரும் போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதாகச் சொல்லி இருந்தான். அந்தப் பொன்னான நேரம் எப்போது வருமோ அவளுக்குத் தெரியவில்லை.

கார் உதயின் வீட்டை எட்டிய போது உதயும் பத்மாவதியும் வாசலில் அவளை வரவேற்கக் காத்திருந்தார்கள். பத்மாவதி வாயெல்லாம் புன்னகையாக மருமகளை வரவேற்றாள். க்ரிஷும், ஹரிணியும் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். சிந்துவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் பத்மாவதி “உட்காரும்மா, நான் க்ரிஷ், ஹரிணியைக் கூப்பிடறேன்என்று சொல்லி வேகமாக க்ரிஷ் அறையை நோக்கிப் போனாள்.

உதய் மெல்ல முணுமுணுத்தான். “அம்மா உள்ளே போறப்ப கதவைத் தட்டிட்டுப் போ. அப்புறம் நீ தான் வெட்கப்பட்டுக்கணும்.” சொல்லி விட்டு சிந்துவைப் பார்த்து அவன் அர்த்தத்துடன் புன்னகைக்க அவள் ரசிக்க முடியா விட்டாலும் கஷ்டப்பட்டு முகத்தில் வெட்கத்தைப் படர விட்டாள்.

அடுத்த நிமிடம் க்ரிஷ் அறையிலிருந்து மூவரும் வெளிப்பட்டார்கள். ஹரிணி நட்பின் புன்னகையோடு சிந்துவை நோக்கி வர, க்ரிஷ் அவளை ஆழமாகப் பார்த்தபடியே பின்னால் வந்தான். சென்ற முறை இருந்த சந்தேகப் பார்வை இப்போது அவனிடம் இல்லை. மாறாக அவள் யார் என்று புரிந்து கொண்டு பார்ப்பவன் போலவே அவளைப் பார்த்தான். சிந்துவுக்கு திக்கென்றது. இது அவளுடைய தோன்றல் அல்ல நிஜம் என்று அவள் உள்ளுணர்வு சொன்னது. அவள் ஹரிணிக்காக முகத்தில் காட்டிய போலி அன்புப் புன்னகை அப்படியே உறைந்து போனது. ‘நான் மிகவும் கவனமாகச் சரியாகத் தானே நடந்து கொள்கிறேன்? அப்படி இருக்கையில் க்ரிஷ் எப்படிக் கண்டுபிடித்தான்?’

வாங் வேயிடம் சாமுவல் சொன்னார். ”கர்னீலியஸை ஷாங்காய் அழைத்து வந்தால் அது கண்டிப்பாக சந்தேகத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அவர் அப்படி எங்கேயும் வழக்கமாகப் போகாதவர். அதனால் நீங்கள் ஏதாவது வேலையாக வாஷிங்டன் வருகிற மாதிரி இருந்தால் நல்லது. இங்கே வந்தவர் கர்னீலியஸை ஏதாவது சாக்கு வைத்துப் பார்ப்பது போல் இருந்தால் சந்தேகம் வராது

வாங் வேக்கு வாஷிங்டன் போவதற்குச் சந்தர்ப்பமே இல்லை. அங்கே எந்த நிகழ்ச்சியோ, யாரையும் சந்திக்கக் காரணமோ இல்லை. ஆனாலும் ஏதாவது அழைப்பை அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும்...

வாங் வே தன் நண்பர் அகிடோ அரிமாவுக்குப் போன் செய்து இப்போது திடீரென்று அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றிச் சொன்னார். கண்டிப்பாக இப்போதைய நிலைமையில் மறைமுகமாக அவராலும் எதாவது செய்ய முடியும் என்று நம்பிக்கை பிறந்திருப்பதாகச் சொன்னார்.

அகிடோ அரிமா சொன்னார். “நண்பரே. மிகுந்த எச்சரிக்கை தேவை. எர்னெஸ்டோவுக்கோ, இம்மானுவலுக்கோ விஷயம் தெரிந்தால் உங்களுக்குப் பேராபத்து. அதை மறந்து விட வேண்டாம். நீங்கள் வாஷிங்டன் போய் கர்னீலியஸைச் சந்தித்தால் அது உளவுத்துறைக்குத் தெரியாமல் போகவே போகாது. கர்னீலியஸை யாரும் ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றாலும் உங்களைக் கண்டிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்போதும் சந்திக்கப் போகாத அவரை இப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்றால் ஏன் என்ற கேள்வி வராமல் இருக்காது

அகிடோ அரிமா நட்பின் அக்கறையில் சொல்வதை வாங் வேயால் அலட்சியம் செய்ய முடியவில்லை. இல்லுமினாட்டி தலைமைக்கே தெரியாமல் ரகசியமாக அவர் இயங்குகிறார், காய்களை நகர்த்துகிறார் என்பது தெரிய வந்தால் உடனடியாக அவர் கணக்கை அவர்கள் முடித்து விடுவது உறுதி...

வாங் வே மறுபடியும் சாமுவலுக்குப் போன் செய்து பேசினார். அகிடோ அரிமாவின் எச்சரிக்கையைச் சொன்னார்.

சாமுவல் சொன்னார். “உளவுத்துறைக்குக் கண்டிப்பாக அந்தத் தகவல் வந்து சேரும். ஆனால் அது என் பார்வைக்குத் தான் வரும். நான் தான் வேண்டியது வேண்டாதது, முக்கியமானது என்றெல்லாம் பிரித்து சம்பந்தப்பட்டவர்கள் பார்வைக்கு அனுப்பி வைப்பேன். அதனால் அது பற்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. விஸ்வம் இப்போது எங்கே இருக்கிறான் என்பது தெரிந்தாலோ, மற்றவர்களுக்கு முன் அவனுடன் தொடர்பு கொள்ள முடிந்தாலோ நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொன்னதால் தான் இதைச் சொன்னேன். உங்களுக்கே தயக்கம் இருந்தால் இதை இத்தோடு மறந்து விடுவோம். கர்னீலியஸ் சொன்னதை நான் இம்மானுவல் காதில் போட்டு வைக்கிறேன். மீதியை அவனும் தலைவரும் தீர்மானித்துக் கொள்ளட்டும்

வாங் வே யோசித்தார். கர்னீலியஸிடமிருந்து கிடைக்கப் போகும் தகவல் இப்போதைய நிலவரம் அல்லது விஸ்வம் சம்பந்தமானது என்று சாமுவல் நம்புகிறார். கர்னீலியஸின் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கிறது. இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி ஒரு முறை கண்டிப்பாகக் கிடைக்காது. ஆபத்து இதில் வரலாம் தான். ஆனால் ஆபத்தைச் சந்திக்காமல் பெரிய வெற்றிகளை யாரும் பெற்று விட முடியாது. சாமுவல் மிக மிக எச்சரிக்கையானவர். அப்படிப்பட்ட அவரே தைரியமாக ஒரு முடிவெடுத்து இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இதுவே ஒரு நல்ல சகுனம். இந்த நேரத்தில் தயக்கம் காட்டினால் கடைசி வரை இப்படியே இருந்து விட வேண்டியது தான் என்று நினைத்த வாங் வே அவசரமாகவும், உறுதியாகவும் சொன்னார். “உளவுத்துறைக்குப் போகும் தகவல்கள் முதலில் உங்கள் பார்வைக்குத் தான் வரும் என்றால் இந்தச் சந்திப்பு பற்றி இல்லுமினாட்டி தலைமைக்குத் தெரியாமல் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்று தைரியம் தந்தால் மற்றதை யோசிக்க ஒன்றுமில்லை சாமுவல். நாம் தைரியமாக இதில் இறங்குவோம். இனி சில நாட்களில் வாஷிங்டனில் நடக்கும் பெரிய நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதை எனக்குப் பட்டியல் அனுப்புங்கள். அதில் ஏதாவது ஒன்றுக்கு எனக்கு அழைப்பு வருகிற மாதிரி நான் பார்த்துக் கொள்கிறேன்....”

சாமுவல் வாங் வேயின் உறுதியான வார்த்தைகளில் தைரியம் பெற்றார். அடுத்த அரை மணி நேரத்தில் ஐந்தாறு நாட்களில் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் சில முக்கிய நிகழ்ச்சிகள், விருந்துகள் பட்டியல் வாங் வேக்கு வந்து சேர்ந்தது. சில மணி நேரங்களில் அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பிதழையும் வாங் வே பெற்றார். வரும் இரண்டு மூன்று தினங்களில் அவர் கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்களை எல்லாம் ரத்து செய்யச் சொல்லித் தன் காரியதரிசிக்கு உத்தரவிட்டார்.

மறுநாளே வாங் வே வாஷிங்டன் கிளம்பினார்.

(தொடரும்)
  
என்.கணேசன்

3 comments:

  1. Plot is tightening in all places. Thrilling.

    ReplyDelete
  2. சிந்துவைப் பற்றி இன்னும் சில தகவல்கள் தற்போது சந்திப்பில் கிரிஷ்க்கு கிடைக்குமா?

    ReplyDelete
  3. வாங் வேக்கு வாஸ்து சரியில்லை போல..

    ReplyDelete