க்ரிஷ் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறான் என்று உள்ளுணர்வு தெரிவித்தவுடன் சிந்துவிற்குத் தோன்றிய முதல் எண்ணம் அங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்பது தான். கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளி பிடிபட்டு தண்டனைக்குள்ளாவதற்கு முன் தப்பிக்க வேண்டும் என்று இயல்பாகத் துடிப்பது போல் தான் இதயம் படபடத்தது. ஆனால் அவள் அப்படிச் செய்தால் குற்றத்தை அவளாக ஒப்புக் கொண்டது போலாகி விடும் என்ற உண்மை அவளுக்கு உறைத்தது. அதுமட்டுமல்லாமல் அப்படி ஏதாவது சொல்லி
அங்கிருந்து தப்பித்துப் போனாலும் அவளைக் கண்டு பிடிக்க அவர்களுக்கு நிறைய நேரம் தேவைப்படாது என்றும் அவள் அறிவு எச்சரித்தது. அது எப்படியாவது அங்கிருந்துத் தப்பித்துப் போகும் அவசர எண்ணத்தை மெல்ல மாற்றியது.
அடுத்த சில நிமிடங்கள் அவள் எந்திரத்தனமாக அவர்களிடம் பேசினாள், அவர்கள் கேட்டதற்குப் பதில் சொன்னாள் என்றாலும் அவள் கவனம் எல்லாம் மற்றவர்கள் எல்லோரும் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதிலேயே இருந்தது. அவர்கள் எல்லோரும் பழையபடியே அன்பாகவும், நெருக்கமாகவும் அவளிடம் பழகினார்கள். அப்படியானால் க்ரிஷ் தான் கண்டுபிடித்து வைத்திருப்பதை அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை என்பது உறுதியாகியது. ஆனால் அது ஏன் என்று தெரியவில்லை. அவன் பார்வை மட்டும் அவள் மீதே தைக்கப்பட்டது போல் இருந்தது. ஒரு ஆராய்ச்சியாளன் தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பொருளை ஆராய்வது போல, ஒரு நீதிபதி குற்றவாளியின் போக்கைக் கவனமாகத் தீர்மானித்துக் கொண்டிருப்பது போல அவளையே க்ரிஷ் பார்த்துக் கொண்டிருந்தான். சிந்துவோ அவன் பார்வையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக பத்மாவதி சமைக்கக் கிளம்பிய போது ஹரிணி அவளுக்கு உதவக் கூடப் போக, அவர்களுடன் சிந்துவும் சேர்ந்து கொண்டாள். க்ரிஷ் அங்கும் கூடவே வந்தாலும் வருவானோ என்ற பயம் அவளுக்கு இருந்தது. ஆனால் க்ரிஷும் உதயும் ஹாலிலேயே தங்கி விட சிந்து சிறிது நிம்மதியடைந்தாள்.
தாயிற்கு சமையலில் உதவ ஹரிணி போன போது சிந்துவும் சேர்ந்து போனது உதய்க்குத் திருப்தியாக இருந்தது. அவன் மனநிறைவுடன் தம்பியிடம் சொன்னான். “எனக்கு வரப் போகிற மனைவி இப்படி எல்லாம் இருக்கணும்னு சில கனவுகள் எப்பவுமே என் மனசில் இருந்தது. ஆனால் அப்படி ஒருத்தி கிடைப்பாளா, அவளும் ஹரிணி மாதிரி நம் குடும்பத்தில் அன்பாய் சேர்ந்து கொள்வாளான்னு தெரியாமல் இருந்தது. இப்ப தான் மனசு நிம்மதியாயிருக்கு. கிழவி விடாமல் சாமி கும்பிட்டது வீண் போகலை”
க்ரிஷ் கஷ்டப்பட்டுப் புன்னகைத்து விட்டுத் தலையாட்டினான். பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை ஏதோ அடைத்தது.
சிந்து பள்ளி
சென்று கொண்டிருந்த காலத்தில் அவளுடைய வீட்டில் அவள் சமையலறைக்குப் போய் சமைக்க அனுமதி இருக்கவில்லை. அவளாக ஒருவேளை சென்றால் உடனே சித்தி சமையலறையிலிருந்து தனதறைக்குப் போய் விடுவாள். சிந்து சமையலறையிலிருந்து வெளியே வராமல் அவள் சமையலறைக்குப் போக மாட்டாள். சமையலில் ஒத்தாசை செய்து சித்தியின் அன்பைச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்த பிறகு சிந்து பின் எப்போதும் தன் வீட்டில்
சமைக்கப் போவதை நிறுத்தியிருந்தாள். வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறித் தனியாக வீடு எடுத்து வாழ ஆரம்பித்த பிறகு அவள் மட்டும் தான் அவளுடைய சமையலறையில் இருப்பாள். இன்று வேறு வீட்டுச் சமையலறையில் வேறிரண்டு பேருடன் இருப்பது அவளுக்கு அன்னியமாகப் பட்டது.
ஹரிணி கேட்டாள். “அத்தை இன்றைக்கு என்ன எல்லாம் பண்ணப் போறீங்க?”
பத்மாவதி சந்தோஷமாக ஒரு பட்டியலைச் சொன்னாள். தானும் எதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக சிந்து கேட்டாள். “இதில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதார்த்தம் என்ன?”
பத்மாவதி அந்தப் பட்டியலில் அவளுக்குப் பிடித்த பதார்த்தம் எதுவும் இல்லை என்றாள். எல்லாமே அவளுடைய இரண்டு பிள்ளைகளுக்குப் பிடித்தவை தானாம். தனக்குப் பிடித்தவை அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால் அதை மிக அபூர்வமாகத் தான் சமைப்பதாய் அவள் எந்த விதமான வருத்தமும் இல்லாமல் சொன்னாள். தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்து வரும் அவளைப் பார்க்கையில் சிந்துவுக்குத் தாயின் நினைவு வந்து போனது. இப்போதும் ஆழத்தில் மனம் வலித்தது. இந்த வீடு அவள் இழந்ததை எல்லாம் அறைகிற மாதிரி சொல்கிறது. எல்லாவற்றையும் மறந்து வாழ நினைக்கும் அவளுக்கு அதனாலேயே இவர்கள் யாரையும் பிடிக்கவில்லை.
பலவந்தமாக மனதைத் திருப்பி இழுத்து விட்டு அவர்களுடன் சமையல் வேலையில் சிந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். கைகள் சமையல் வேலை செய்த போதிலும் அவள் மனம் க்ரிஷ் பார்வை பற்றியும், இனி அவள் எடுக்க வேண்டிய முடிவு பற்றியும் கவலைப்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அவள் நினைத்தது போல அவள் ஓடிப் போக முடியாது. க்ரிஷ் ஏதாவது செய்வானா என்பது வேறு விஷயம். விஸ்வமே அவன் ஒப்படைத்த வேலையைச் செய்யாமல் போக விட மாட்டான். ஒருவேளை அவள் ஓடிப்போனால், மனோகர் போல அவளும் எங்கேயாவது இறந்து கிடக்க நேரிடலாம். அவளுக்கு வாழ்க்கையை நன்றாக அனுபவிக்காமல்
அற்பாயுசில் சாக விருப்பமில்லை... நிலைமை இப்படி இருப்பதால் என்ன ஆனாலும் சரி இங்கேயே இவர்களிடமே தாக்குப்பிடிக்க வேண்டும்....
அப்படித் தாக்குப் பிடிக்க க்ரிஷ் அனுமதிக்க வேண்டும். உண்மை அறிந்தவன் இப்போது அதை ஏதோ சில காரணங்களால் தன் குடும்பத்திற்குச் சொல்லவில்லை. ஆனால் எப்போதுமே சொல்லாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பான் என்று அவள் நம்புவதும் முட்டாள்தனம். வீட்டுக்குத் தெரிவிக்காமலேயே சத்தமில்லாமல் ஒருநாள் அவள் கதையை முடித்து விட அவன் ஏற்பாடு செய்யவும் கூடும். எதையும் நிச்சயமாய் சொல்ல முடியாது. அமைதியானவர்கள் ஆபத்தானவர்கள்....
“சிந்து எதோ கனவுலகில் இருக்கிறாள்” என்று ஹரிணி பத்மாவதியிடம் சொன்ன போது தான் தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மீண்டாள். இல்லை என்று மறுத்தால் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையை சிந்து படரவிட்டாள்.
பத்மாவதி சிரித்தபடி சொன்னாள். “அதெல்லாம் சகஜம் தானே”
ஹரிணி பத்மாவதியிடம் ரகசியமாய் கேட்பது போலக் கேட்டாள். “அத்தை நீங்களும் உங்கள் இளம் வயதில் கனவுலகில் நிறைய இருந்திருக்கிறீர்களா?”
ஹரிணி இப்படி உரிமை எடுத்துக் கொண்டு கேட்பது சிந்துவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பத்மாவதியும் மாமியார் என்ற பந்தா எதுவும் இல்லாமல் புன்னகையுடன் அன்றைய யதார்த்தத்தைச் சொன்னாள். “அந்தக் காலத்தில் எங்களுக்குக் கனவு காணக் கூட முடிஞ்சதில்லை. பொண்ணுங்களுக்குக் காலா காலத்தில் கல்யாணம் ஆகிறதே பெரிய விஷயம். அதையே அதிர்ஷ்டமா நினைப்போம். பொண்ணுங்களைக் கிள்ளுக் கீரையாய் நினைச்ச காலம் அது. பையனைப் பிடிச்சுதா இல்லையான்னு கூடக் கேட்க மாட்டாங்க. பெரியவங்க பார்த்து இவன் தான் பையன்னு சொல்வாங்க. பையன் வயசான ஆளு, இரண்டாம் தாரம்னு இல்லாமல் கல்யாணம் ஆனா அதுவே ஒரு பாக்கியம்னு பொண்ணுங்க நினைச்ச காலம் அது...”
சிந்துவுக்கு அந்தக் காலத்து ஆட்கள் மேல் கோபம் வந்தது. அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த பத்மாவதி போன்ற பெண்கள் மீதும் கோபம் வந்தது. அதை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டு ஹால் பக்கம் பார்த்தாள்.
உதய் தன் அலைபேசியில் எதோ பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் க்ரிஷ் அவளையே பார்த்துக்
கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் எப்போது இடம் மாறி உட்கார்ந்தான்? அவனுக்குச்
சில சக்திகள் இருப்பதாகச் சொல்கிறார்களே, இவ்வளவு நேரம் அவள் மனதில் ஓடும் எண்ணங்களை
எல்லாம் அவனுக்கு அறிய முடிந்திருக்குமோ? நினைக்கவே அவளுக்குப் பகீரென்றது. உடனே அவள்
அவன் ஹாலில் இருந்து பார்க்க முடியாதபடி இடம் மாறி பத்மாவதி அருகே அவள் சமைப்பதைப்
பார்க்க ஆசைப்படுவது போல் நின்று கொண்டாள். ஆனால் அவள் இதயம் படபடவென்று அடித்துக்
கொண்டது.
சீக்கிரம் இந்த வேலையை முடித்து விட்டுத் தப்பித்தால் போதும் என்று மறுபடியும்
தோன்றியது. விஸ்வம் என்ன வேலை கொடுப்பான் என்று
தெரியவில்லை. அதை எப்போது கொடுப்பான் என்றும் தெரியவில்லை. வேலை எதுவானாலும் அதை அவள் சீக்கிரம் முடிக்க வேண்டும்.... அதிலும் அவளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. யாரும் சந்தேகப்படாத சமயங்களில் சில வேலைகளைச் செய்வது சுலபம். கண்கொத்திப் பாம்பு போல க்ரிஷ் பார்த்துக் கொண்டிருக்கையில் அவளால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இவன்
தொடர் பார்வையிலிருந்து எப்படித் தப்புவது என்று தீவிரமாக யோசித்த போது அவள் மூளையில்
ஒரு அருமையான திட்டம் உதயமானது. பிரச்னைக்குத் தீர்வு கண்ட திருப்தியுடன் அவள் புன்னகைத்தாள்.
(தொடரும்)
என்.கணேசன்
Myself and my friends are very big fan of your writings .can u pls make your novels available on amazon kindle sir .
ReplyDeleteSince it will affect the sale of printed book we couldn't do at this stage.
DeleteWhat is Sindhu's plan? Will it affect Krish & family
ReplyDeleteஒருவரை பற்றி முழுமையாக தெரியமல் இருந்தால... மனம் கண்டபடி கணக்கு போட்டு பீதி அடைய வைக்கும்... சிந்து அடையும் பீதியும் அப்படியே உள்ளது.... அருமை...
ReplyDeleteஎத்தனை முறை படித்தாலும் இனிமை
ReplyDelete