நரேந்திரன் கடுமையாக அவனைப் பார்த்தபடி சொன்னான். “சரி சீக்கிரம்
சொல்”
சஞ்சய் அதிகமாகவே பயந்து போயிருந்தான். இரவின்
குளிர் கடுமையாக இருக்கிற இந்தச் சமயத்தில் அவனுக்குச் சாதாரணமாய் வெறும் தரையில் படுப்பதே
கொடுமையாக இருக்கிறது. ஐஸ் தண்ணீரையும் இரவில் அவன் மீது ஊற்றினால் இவன் சொல்கிற
மாதிரி இரண்டு நாளில் அல்ல ஒரே நாளில் அவனுக்கு குளிர்காய்ச்சல் ஜன்னி வந்து விடும். பிறகு சீக்கிரமே
சாவும் வந்து விடும். பிணத்தை அப்புறப்படுத்துவது வரை யோசித்திருக்கும் இந்தக்
கிராதகனிடம் குறைந்தபட்ச உண்மையையாவது சொல்லா விட்டால் உயிர் பிழைக்க முடியாது என்பது
தெளிவாகப் புரிந்து விட்டாலும் இன்னொரு பயமும் மெள்ளத் தலையெடுக்க அவன் சொன்னான். “நான் உண்மையைச்
சொல்லிட்டேன்னு தெரிஞ்சா அவங்க என்னைக் கொன்னுடுவாங்க. நான் கிடைக்காட்டி
என் குடும்பத்தைக் கொன்னுடுவாங்க.”
“நீ சொன்னது
அவங்களுக்குத் தெரியப் போறதில்லை. அதனால் தைரியமாய் சொல்”
“நான் இந்தக்
கேஸ்ல உங்கப்பாவோட இருக்கேன்னு எப்படியோ தெரிஞ்சுகிட்டு ஒரு நாள் அவங்க ஆள் என் வீட்டுக்கு
வந்து என்னைப் பார்த்தான். இந்தக் கேஸ் சம்பதமாய் உங்கப்பா எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையையும்
சொன்னால் நிறைய பணம் தர்றேன்னு சொன்னான். நான் முடியாதுன்னு
மறுத்துட்டேன். அதுக்கு என் குடும்பத்தை அழிச்சுடுவேன்னு பயமுறுத்தினான். வேற வழி
தெரியலை. சரின்னு ஒத்துகிட்டேன்...”
நரேந்திரன் அவன் சொன்னதில் முடியாது
என்று மறுத்ததையும், வந்தவன் அவன் குடும்பத்தை அழிப்பேன் என்று பயமுறுத்தியதையும்
கழித்துக் கொண்டான். இந்த அயோக்கியன் உடனே சரியென்று ஒத்துக் கொண்டு இருப்பான்
என்பது அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது.
சஞ்சய் தொடர்ந்தான். ”அவன் ஒரு
போன் நம்பரை என்கிட்டே கொடுத்துட்டுப் போனான். ஆனால் எனக்கு
மனசாட்சி கேட்கலை. உங்கப்பாவுக்குத் துரோகம் பண்ண என் மனசாட்சி அனுமதிக்கலை. நிறையவே...”
நரேந்திரன் சொன்னான். “இன்னொரு
தடவை நீ உன் மனசாட்சியைப் பத்திப் பேசினால் நான் போயிடுவேன். அப்புறம்
தினமும் ஐஸ் தண்ணில தான் படுக்க வேண்டி வரும். அதனால கதை
வேண்டாம். விஷயத்தை மட்டும் சொல்லு”
சஞ்சய் உடல் தானாக நடுங்கியது. அவன் எச்சிலை
விழுங்கித் தலையசைத்து விட்டுத் தொடர்ந்தான். “அதுக்கப்பறம்
அவங்களுக்கு நான் சில தகவல்களைச் சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்கு
அவங்க பணம் தருவாங்க...”
“இது வரைக்கும்
எத்தனை தகவல் சொல்லியிருக்கே? உனக்கு எத்தனை பணம் கிடைச்சுது?”
“மூனு தகவல்
சொல்லியிருக்கேன். ரெண்டு தகவல் உங்கப்பா அஜீம் அகமது பத்திச் சேகரிச்சிருந்த
தகவல். அதுக்கு ரெண்டு, ரெண்டு
லட்சம் கிடைச்சுது. கடைசியா உங்கப்பா அவனைத் தேடிப் போற இடத்தைச் சொன்னேன். அதுக்கு
ஆறு லட்சம் கிடைச்சுது..”
பத்து இலட்ச ரூபாய்க்குத் தன் மனசாட்சியையும், தொழில்
தர்மத்தையும், தன் உயர் அதிகாரியையும் சேர்த்து விற்ற அந்தப் பாதகனை நரேந்திரன்
வெறித்துப் பார்த்தான். அன்று ரா தலைவர் இவனைக் களையெடுக்காமல் விட்டிருந்தால் இன்னும் ’ரா’வில் இருந்து
கொண்டே எத்தனையோ பேரை அழித்திருப்பான். விட்டிருந்தால்
நாட்டையே விற்றிருப்பான்...
“என் அப்பா
எப்படி இறந்தார்? யார் கொன்றது?” நரேந்திரன் கேட்டான்.
“தெரியலை”
“பின் எப்படிச்
செத்துப் போன மகேந்திரன் என்று சொன்னாய்?
“உன் அப்பா
திரும்ப வராததைப் பார்த்து நான் கேட்டப்ப அவர் எப்பவுமே இனி திரும்பி வரமாட்டார்னு
சொன்னாங்க. அதை வெச்சு அவர் இறந்திருப்பார்னு அனுமானிச்சேன்...”
“முந்தா
நாள் யார் கிட்ட போன் பண்ணி நான் விசாரிக்க ஆரம்பிச்சிருக்கறதைச் சொன்னாய்?”
“அதே ஆள்
கிட்ட தான்...”
”அந்த ஆள்
பார்க்க எப்படி இருப்பான்?”
“ஆறடி உயரமாய்
இருப்பான். நல்ல சிவப்பாய் இருப்பான். பெரிய தாடி
வெச்சிட்டிருப்பான். வயசு என்
வயசு இருக்கும்.”
“அவன் கிட்ட
இதுக்கு முன்னால் எப்ப பேசினே?”
சஞ்சய் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. இதற்கான
பதில் இவனுக்கு எந்த விதத்தில் பயன்படப் போகிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை.
“உங்கப்பா பத்தி கடைசியா விசாரிக்கிறப்ப
பேசினது…”
“அவன் இப்ப
எங்கே இருக்கான்?”
“தெரியல. முதல் தடவைக்கு
அப்புறம் அவனைச் சந்திக்கல. போன்ல தான் எல்லாத் தொடர்பும்”
“இதுல உன் மாமாவோட பங்கு என்ன?”
“என்னை டிஸ்மிஸ் பண்ணுவேன், என் மேல் நடவடிக்கை எடுப்பேன்னு
ரா தலைவர் சொன்னப்ப மாமா கிட்ட போய் எல்லாத்தையும் சொன்னேன். அவர் காப்பாத்தினார். அதைத்தவிர அவர் பங்கு இதில் எதுவுமில்லை.”
“வேறெதாவது தகவலை என் கிட்ட சொல்லாமல் விட்டிருக்கியா?”
“இல்லை. தெரிஞ்சதெல்லாம் உன் கிட்ட சொல்லியாச்சு.
என்னை விட்டுடு”
நரேந்திரன் சொன்னான்.
“உன்னை ஏன் விடணும்.”
சஞ்சய் திகைத்தான்.
“நான் தான் எல்லாத்தயும் சொல்லிட்டேனே. பின் ஏன்
என்னை இன்னும் இங்கேயே வெச்சுருக்கணும்…”
”நீ எல்லாத்தயும் சொல்லிட்டேன்னு நான் நம்பலை. இன்னும்
நீ மறைக்கறது நிறைய இருக்கு. நீ அப்ரூவரா மாறி எல்லாத்தையும்
மறைக்காம சொல்லி அஜீம் அகமதைப் புடிச்சுக் கொடுத்தா உன்னை விட்டுடறேன். நீ சொன்ன கொஞ்சூண்டு உண்மைக்கெல்லாம் உன்னை விடற அளவுக்கு என்னை மடையன்னு நினைச்சுட்டியா?”
“இந்த சங்கிலியையாவது அவிழ்த்து விடு.” அழாத குறையாக சஞ்சய்
சொன்னான்.
“உன்னால எங்கப்பா கொல்லப்பட்டிருக்கார். அந்த நம்பிக்கை
துரோகத்துக்கு சங்கிலியோட நீ இருக்கறது நியாயம் தான்”
நரேந்திரன் போய் விட்டான். கெட்ட வார்த்தை சொல்லிக் கத்த ஆசைப்பட்ட சஞ்சய்
கன்னத்தைத் தடவிக் கொண்டு மவுனமானான். ஆனால் அவன் உள்ளே எரிமலை
வெடித்துக் கொண்டிருந்தது. அவன் சிறிது உண்மை தான் சொன்னான் என்பதை
எப்படி நரேந்திரன் கண்டுபிடித்தான். நன்றாக யோசித்துக் கோர்வையாகத்
தானே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறான்.
அன்று இரவு தடியனிடம் படுக்க மெத்தை
கேட்டான். மெத்தை கேட்டால் பாயாவது கிடைக்கும். இந்தக்
குளிரிலிருந்து அதாவது சிறிது காப்பாற்றும்.
“நீ உண்மை
எல்லாத்தையும் சொல்லிடலைன்னு சார் சொன்னாரே. உனக்கு
லொள்ளு கொஞ்சம் அதிகம் தான்.” என்று அவன் சொல்லி விட்டுப் போய் விட்டான்.
சஞ்சய்க்கு இந்த அராஜகத்தை நம்ப முடியவில்லை. வெளியே
போனால் இந்த இரண்டு பேரையும் நிச்சயம் பழிவாங்குவான் இந்த சஞ்சய். ஆனால் வெளியே
போக வேண்டுமே. நரேந்திரனாய் அனுப்பும் வாய்ப்பு சுத்தமாக இல்லை. படுக்க
பாய் கொடுக்காதவன், கட்டியிருக்கும் சங்கிலியை எடுக்காதவன் கண்டிப்பாக மனம் மாறி
விடுவிக்க மாட்டான். ‘அஜீம் அகமதை நான் பிடித்துக் கொடுக்க வேண்டுமாம். நானே அவனை
இது வரை நேரில் பார்த்ததில்லை. அவன் எடுபிடிகளைப் பார்ப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் போது
இவன் அநியாயத்திற்கு ஆசைப்படுகிறான்....’
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி மாமாவுக்கோ, அவர்களுக்கோ
இந்த இடத்தைக் காண்பித்துக் கொடுப்பது தான். செல்போனை
எடுத்து விட்டார்கள். அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லை. இருக்கும்
ஒரே வழி நரேந்திரன் இங்கே வரும் போது அவர்கள் அவனைப் பின் தொடர்ந்து வந்தால் கண்டுபிடித்து
விடலாம்.
மாமன் முட்டாள்தனமாக அவன் எதோ பெண்
வீட்டிற்குப் போய் விட்டதாக நினைக்காமல் இருக்க வேண்டும். சென்ற முறை
அவன் மனைவியின் இம்சை தாங்க முடியாமல் ஒரு பஞ்சாபிய துணை நடிகையோடு போய் சில நாட்கள்
சந்தோஷமாக இருந்தது வாஸ்தவம். அதற்கென்று நரேந்திரன் ஆசைப்படுவது போல இப்போதும் சஞ்சய்
அப்படிப் போயிருப்பான் என்று மாமன் நினைக்க மாட்டார். நினைக்கக்கூடாது. மாமனை விட
அந்தத் தீவிரவாதிகள் உஷார்ப் பேர்வழிகள். அவர்கள் ஆளிடம்
பேசி விட்டு அன்றே காணாமல் போனால் என்ன நடந்திருக்கும் என்று அனுமானிக்கக்கூடிய அறிவு
அவர்களிடம் உண்டு. அவர்கள் கண்டிப்பாக நரேந்திரனைக் கண்காணிக்காமல் இருக்க மாட்டார்கள்.
சஞ்சய் செய்ய வேண்டியது ஒன்று தான். உண்மையைச் சொல்கிறேன் என்று
அடிக்கடி நரேந்திரனை இங்கே வரவழைக்க வேண்டும். தொடர்ந்து அவன் இங்கே வந்தால் கண்காணிப்பவர்கள் கண்டுபிடித்து
விடுவார்கள்…. சஞ்சய்க்கு நம்பிக்கை பிறந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
கெட்ட வார்த்தை சொல்லிக் கத்த ஆசைப்பட்ட சஞ்சய் கன்னத்தைத் தடவிக் கொண்டு மவுனமானான். - In this simple one sentence you tell a a lot about Sanjay's thought process and arrived decision. I used to wonder about your command of language. Super.
ReplyDeleteதர்மம் காக்கப்படும்போது அதுவும் (நம்மைக்) காக்கிறது.
ReplyDeleteநாவலை முழுதுமாக படித்து முடித்ததும் இதுதான் மனதில் மேலோங்கி இருந்தது.உங்கள் நாவல்களின் மொத்த சாரம்சமும் இதுதானோ என தோன்றுகிறது.எந்த சூழலிலும் தர்மப்படி நடக்க மனம் உறுதி கொள்கிறது.நாகசக்தி,இலுமினாட்டி,ஆழ்மனம் குறித்து நிறைய சந்தேகங்கள் வருகிறது கேள்வி-பதில் பகுதி ஆரம்பித்தீர்கள் எனில் நன்றாக இருக்கும்.கடினமான விஷயங்களை புரிந்து கொள்ள கதைகளில் சேர்த்து தரும் தங்கள் பணிக்கு மிக்க நன்றி
நீ சொன்ன கொஞ்ச உண்மைக்கெல்லாம், உன்னை வெளியே விட முடியாது... இது தான் செம்ம ட்விஸ்ட்., சஞ்சய் நினைப்பது போல் அவர்கள் பின்தொடர்ந்தது வந்து கண்டுபிடிக்கக் கூடாது...
ReplyDeleteநாவல் வாங்கிப் படித்த பின்னும் திங்கட்கிழமை இங்கே வர என்னைத் தூண்டுகிறது. அடுத்த நாவலை சீக்கிரம் ரெடி செய்யுங்கள் சார். ப்ளீஸ்.
ReplyDeleteஇந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சி நடக்குமா? உங்கள் நாவல்களை அங்கு தான் வாங்குவேன். தங்களை போன வருடமே நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..இந்த வருடம் எப்படி?
ReplyDeleteஇந்த வருடம் பொங்கல் சமயம் புத்தகக் கண்காட்சி நடக்காது. பின் எப்போதாவது இருக்கலாம் என்கிறார்கள். பார்ப்போம்.
Delete