சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 11, 2021

யாரோ ஒருவன்? 14



ல்யாண் காலை எழுந்து அறையை விட்டு வெளியே வந்த போது அவன் தந்தை வேலாயுதம் மாடி ஜன்னலில் இருந்து தீவிரமாகப் பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மாடி ஏற முன்பு போல் முடிவதில்லை என்பதால் தான் அவருக்குக் கீழேயே வசதியான அறையை ஒதுக்கியிருந்தான். அதனால் அவர் மாடி ஏறி வந்து மாடி ஹால் ஜன்னல் வழியே பக்கத்து வீட்டை வேவு பார்ப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னப்பா பார்க்கறீங்க?” கல்யாண் தந்தையைக் கேட்டான்

பக்கத்து வீட்டுக்குப் புதுசா யாரோ குடி வந்திருக்காங்கடாஎன்று வேலாயுதம் பார்வையைத் திருப்பாமல் சொன்னார்.

சரி அதுக்கென்ன?”

அந்த ஆள் ரொம்பவே மர்மமான ஆசாமியாய்த் தெரியறான்.”

அவன் எப்படி இருந்தா நமக்கென்னப்பா?”

வேலாயுதம் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார். ”நேத்து ராத்திரி எல்லாம் அந்த வீட்டுல இருந்து ஒரு அமானுஷ்யமான சத்தம் கேட்டுச்சுடா

என்ன சத்தம்?”

பாம்பு சீறுகிற மாதிரியே சத்தம். ஒரு தடவை இல்லை. பல தடவை

கல்யாண் திகைத்தான்வேலாயுதத்துக்கு இரவில் சரியாகத் தூக்கம் வருவதில்லைமூன்று மணி நேரம் தூங்கினால் அதுவே அதிகம். அதன் பிறகு சும்மா படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார். அல்லது எழுந்து வீட்டை வலம் வந்து கொண்டிருப்பார். இது பல வருடங்களாக அவன் பார்ப்பது தான்அவருக்கு இத்தனை வயதானாலும் கண்ணும் காதும் மிகவும் சூட்சுமமாகத் தான் வேலை செய்கிறது. அதனால் அவர் எதையோ கேட்டு எதையோ அர்த்தம் செய்து கொண்டு விட்டார் என்று யாரும் சொல்ல முடியாது. அவர் அறையும் பக்கத்து வீட்டின் ஒரு அறையும் ஒரே காம்புவுண்டு சுவருக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாய்த் தான் இருக்கின்றன. ஆனால் அவருக்குக் கேட்டது பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அல்லவா கேட்டிருக்க வேண்டும். அவன் அதைக் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வரவில்லையே. அது தான் அவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்க வேண்டும்.

கல்யாண் யோசித்துக் கொண்டே படியிறங்க அவரும் பின்னாலேயே படியிறங்கினார்.  “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

கல்யாண் சொன்னான். “வீடு ரொம்ப நாளாய் காலியாய் இருந்ததில்லையா. அந்தச் சமயத்துல பாம்பு எதாவது உள்ளே போயிருந்திருக்கலாம். முதல்ல புதுசா குடிவந்தவன் உயிரோடிருக்கானான்னு பாருங்க. பாம்பு கடிச்சு ஆள் செத்தும் இருக்கலாம்

வேலாயுதம் சொன்னார். “அப்படித் தான் நானும் சந்தேகப்பட்டேன். ஆனால் அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வாசல் கூட்டிகிட்டு இருக்கறதை என் கண்ணால பார்த்ததுக்கு அப்பறம் தான் எனக்கு என்னமோ மர்மம் இருக்கற மாதிரி பட்டுது

அப்படின்னா நீங்க கேட்ட சத்தம் பாம்பு சீறின சத்தமாயிருக்காது. சிலர் குறட்டை விடறது கூட இந்த மாதிரி வித்தியாசமான சத்தங்களாய் இருக்கிறதுண்டு.”

இல்லைடா. குறட்டைச் சத்தம் அல்ல அது. பாம்பு சீறின சத்தம் தான்... இத்தனை பெரிய வீட்டுல ஆள் தனியா தான் இருக்கான். ஆனா வேலைக்கு யாரும் இல்லை. அவனே எல்லாம் செஞ்சுக்கறான். வாசல் கூட்டறது கூட அவனே தான். நான் ஆரம்பத்துல அவன் வேலைக்காரன்னு நினைச்சுகிட்டேன். அப்புறம் நம்ம கூர்க்கா அந்த ஆள் தான் வீட்டுக்காரனேன்னு சொன்னவுடன ஆச்சரியமா இருந்துச்சு. புதுசா தான வந்திருக்கான். வேலைக்கு ஆள் கிடைச்சிருக்காதாயிருக்கும். எனக்கு அந்த பாம்பு சமாச்சாரம் தான் மண்டைய குடையுது..”

கல்யாண் புன்னகைத்தான். அவருக்கு ஒரு விஷயம் புதிராகப் பட்டது என்றால் பின் அதற்கு விடை கிடைக்கிற வரை விட மாட்டார்.

சரி மெல்லப் போய் அவன் கிட்ட பேச்சு குடுங்களேன். அந்தச் சத்தம் நிஜம் தானான்னு தெரிஞ்சுடப் போகுது.”

காலைலயே அதைத் தான் நினைச்சேன். ஆனா அவன் வாசலைக்கூட்டிட்டு நேரா உள்ளே போய்ட்டான். பிறகு வெளியவே வரலை

அவர் எதிர்பார்த்த ஆர்வத்தைக் காட்டாமல் கல்யாண் வெளியே தோட்டத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து அன்றைய தினசரிப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம்பிக்க, வேலாயுதம் பக்கத்து வீட்டை நோட்டமிட்டபடி அந்தப் புல்தரையில் நடக்க ஆரம்பித்தார்.

கூர்க்கா வேகமாக வந்து அவரிடம் சொன்னான். “ஐயா. அதோ போறாரே, அவர் தான் பக்கத்து வீட்டுக்காரரைக் குடிவெச்ச புரோக்கர்

வேலாயுதம் வயதுக்கு மீறிய வேகத்தோடு ஓட்டமும் நடையுமாய் தெருவுக்கு ஓடினார். “தம்பி

வீட்டு புரோக்கர் தன்னை அழைக்கும் அண்ணன் யார் என்று திரும்பிப் பார்த்தான். எத்தனையோ வருடங்களாய் அவன் இந்த ரேஸ்கோர்ஸில் காலை தினமும் நடக்கிறான். இந்த முதியவரைப் பார்த்தும் இருக்கிறான். ஆனால் ஒரு தடவை கூட அவர் அவனைப் பார்த்து புன்னகைத்ததாகக் கூட அவனுக்கு நினைவில்லை.  இன்று ஏன் இப்படிப் பாசமாக அழைத்து விரைவாக வருகிறார் என்று புரியாமல் நின்றான்.

சவுக்கியமா தம்பி?” என்று வேலாயுதம் கேட்டார்.

உங்க தயவுல சவுக்கியம் தான் ஐயாஎன்றான்  புரோக்கர்.

இந்தப் பக்கத்து வீட்டுக்காரரைக் கூட்டிகிட்டு வந்தது நீ தானா?”

ஆமாங்கய்யா?”

ஆள் எந்த ஊர்க்காரர்? என்ன தொழில்?”

புரோக்கர் சொன்னான். “டெல்லில ரொம்ப வருஷமா இருந்தவராம் ஐயா. தொழில் என்னன்னு கேட்டுக்கல. ஆனா பெரும் பணக்காரராய் தான் தெரியுது. வீடு கிடைக்கறதுக்கு முன்னால லீ மெரிடியன்ல தங்கியிருந்தார்....”

ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குபவன் தன் வீட்டு வாசலைத் தானே கூட்டுவானா என்று ஆச்சரியப்பட்ட வேலாயுதம் சொன்னார். “இல்லை.... வீட்டைக் கூட்டக் கூட ஆள் வெச்சுக்கலையேன்னு நினைச்சேன். ஆள் கிடைக்காமல் இருந்திருக்கலாம்....”

அப்படியெல்லாம் இல்லை ஐயா. நான் அதுக்கு ஆள் ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு சொன்னேன். ஆனா அவர் வேண்டாம்னு சொல்லிட்டார்...”

வேலாயுதத்துக்கு பக்கத்து வீட்டுக்காரன் எல்லா விஷயத்திலும் புதிராய் தெரிந்தான். அவனைப்பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டால் ஒழிய வழக்கமாய் வரும் தூக்கம் கூட வராதென்று தோன்றியது...

னார்தன் த்ரிவேதிக்கு சஞ்சய் ஷர்மா எங்கிருக்கிறான் என்ற கவலையே அன்று முழுவதும் வாட்டியது. அவன் இதற்கு முன் இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் போனவன் தான். இந்த முறை அப்படிப் போயிருக்கிறானா இல்லை ராவின் பிடியில் சிக்கியிருக்கிறானா என்று அவருக்குத் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் சும்மா இருந்த ரா இப்போது திடீரென்று அந்த வழக்கை மறுபடி திறந்திருக்கா விட்டால் அவர் இந்தக் குழப்பத்தில் இருந்திருக்க மாட்டார். எதோ ஒரு பக்கம் போய் சில நாள் கழித்து வந்து சேர்வான் என்று நம்பி நிம்மதியாக இருந்திருப்பார். நரேந்திரன் வந்து விசாரித்துப் போன அன்றே சஞ்சய் தொலைந்தது தற்செயல் போல் தெரியவில்லை. ஆனால் நரேந்திரன் சுட்டிக் காட்டியது போல் விசாரிக்க வேண்டுமென்றிருந்தால் சட்டப்படியே அவர்கள் சஞ்சயை விசாரிக்க முடியும். அப்படி இருக்கையில் அவன் சட்டத்திற்குப் புறம்பாக கடத்துவதற்கு அவசியமே இல்லை.

சஞ்சய் ஷர்மாவின் கார் நின்றிருந்த இடம் ஒரு மேட்டுக்குடி விபசாரியின் வீட்டு வாசல். அங்கே போய் விசாரித்தால் அவள் அவன் தொலைந்த அன்று இரவு தான் எவனுடனோ கோவாவுக்குப் போயிருக்கிறாள் என்ற தகவல்  கிடைத்தது. அந்த எவனோ சஞ்சய் ஆகக்கூட இருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கிருந்தது. நரேந்திரன் போய் விசாரித்ததும் இந்தத் தொந்தரவெல்லாம் இல்லாமல் ஜாலியாகச் சில நாட்கள் இருந்து விட்டு வரலாம் என்று சஞ்சய் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.  அவன் செய்யக்கூடியவன் தான்...

எதற்கும் கோவாவில் விசாரிக்கச் சொல்லி அவர் ஆட்களை அனுப்பி இருந்தார். கோவாவில் விபசாரியுடனிருப்பது சஞ்சய் அல்ல வேறு எவனோ ஒருவன் என்பது அன்றிரவே உறுதியாகத் தெரியவந்தது.

இந்த நேரத்தில் இன்னொரு சந்தேகம் அவர் மனதில் மெள்ள எழுந்தது. அஜீம் அகமதின் ஆட்களே அவன் நரேந்திரன் கையில் சிக்கக்கூடாதென்று என்று எண்ணி அவனைக் கடத்திச் சென்றிருந்தால்...? சேச்சே இருக்காது என்று ஒரு பகுதி அறிவு சொன்னாலும், இன்னொரு பக்கம் சந்தேகம் வருவதைத் தடுக்கவும் முடியவில்லை.

அவருடைய அடியாள் ஒருவனின் அலைபேசியிலிருந்து சஞ்சய் கடைசியாகப் பேசிய ஆளின் இன்னொரு அலைபேசி எண்ணுக்குப் போன் செய்து விசாரித்தார். அவன் இதில் அவர்கள் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்று உறுதியளித்தான்


மறுபடி யோசித்த போது பழையபடி சந்தேகம் நரேந்திரன் மீதே வந்து நிலைத்தது. அவன் சட்டப்படி விசாரிக்க அழைத்தால் ஒரு வரைமுறையோடு தான் விசாரிக்க முடியும். கடத்திக் கொண்டு போனால் உண்மை வெளி வருகிற வரை  அவன் எப்படி வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அந்த அராஜக அளவுக்கு நரேந்திரன் போயிருப்பானோ?

(தொடரும்)
என்.கணேசன்   

தற்போது விற்பனையில்...





3 comments:

  1. Very interesting. Seems different from your other stories.

    ReplyDelete
  2. நரேந்திரன் தன்மேல் சந்தேகப்பார்வை திரும்பும் என்று கணித்து.... அதற்கும் ஒரு திட்டம் வைத்திருப்பானா??

    ReplyDelete