சஞ்சய் ஷர்மாவுக்கு தினமும் மூன்று சப்பாத்திகள் தரப்பட்டன. காலையில்
எட்டுமணிக்கும், மதியம் இரண்டு மணிக்கும், இரவு எட்டு
மணிக்கும் தலா ஒரு சப்பாத்தி ஏதாவது ஒரு சப்ஜி அல்லது குருமாவோடு தரப்பட்டது. அந்த சப்ஜி
அல்லது குருமாவும் ஒரு சப்பாத்திக்கு அளவாக மட்டுமே தரப்பட்டது. அரசாங்க
சிறையே எத்தனையோ பரவாயில்லை போலிருக்கிறது என்று சஞ்சய் மனம் புழுங்கினான். உண்மையைச்
சொன்னதற்குக் கிடைத்த ஒரே பலன் ஒரு கூடுதல் சப்பாத்தியும், ஐஸ் தண்ணீர் மேலே ஊற்றாத
பெருந்தன்மையும் தான். ’எப்படியெல்லாம் இருந்த எனக்கு இப்படி ஆகி விட்டதே, இதிலிருந்து
விடுதலை கிடைக்குமா’ என்ற எண்ணமே திரும்பத் திரும்ப வந்து அவனைக் கொன்றது. இரவிலிருந்து
காலை வரை குளிரும் அவனை வதைத்தது. இந்தப் பசிக்கொடுமையும், குளிரும், தனிமையும்
சேர்ந்தே அவனைச் சீக்கிரம் பரலோகம் சேர்த்து விடும் என்று சஞ்சய்க்குத் தோன்றியது.
முன்பே திட்டமிட்டபடி நரேந்திரனை அடிக்கடி
இங்கு வரவழைக்க மறுநாள் மாலையிலேயே சஞ்சய் முயன்றான். தடியனை
அழைத்தான். தடியன் வரவில்லை. சஞ்சய்
மறுபடியும் அழைத்தான். சத்தமில்லை. அவன் அந்த அறைக்கு வெளியேயும் காது
கேட்கும் தொலைவில் இருப்பதில்லை போலிருக்கிறது. கத்தி அழைத்தாலும்
வருவதில்லை. இது போன்ற நேரத்தில் ஏதாவது சாகசம் செய்து தப்பிக்க அவனுக்கு ஆசையாக இருந்தது.
இந்த இரும்புச் சங்கிலி இல்லாமலிருந்திருந்தால் முயற்சி செய்து பார்த்திருக்கலாம்...
இரவு ஒரு சப்பாத்தியோடு அவன் வந்த போது நரேந்திரனிடம் எல்லா உண்மைகளையும் சொல்லத்
தயார் என்றும் உடனே அவனை வரச்சொல்லும்படியும் சஞ்சய் சொன்னான்.
“நீ தயாராய்
இருக்கலாம். அவர் தயாராய் இருக்கணுமே” என்று அமெரிக்க
ஜனாதிபதியைச் சொல்வது போல் தடியன் சொல்லிப் போனது சஞ்சய்க்கு அடிவயிற்றிலிருந்து ஆக்ரோஷத்தை
வரவழைத்தது. ஆனால் அவன்
அதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
இரவு நேரத்தில்
அவனுக்கு அந்தக் குளிரில் உறங்க முடியவில்லை. இரவில் அந்தக் கட்டிடத்தில் ஏதாவது சத்தம்
கேட்கிறதா என்று அவன் காதைக் கூர்மையாக்கிக் கேட்டான். தூரத்து வாகனங்களின் சத்தம்
தவிர வேறு சத்தம் எதுவுமில்லை. அறையில் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிவதைப் போல வராந்தாவிலும் ஒன்று
எரிந்தது. உறக்கம் வராத அந்தத் தனிமை அவனை வதைத்தது.
மறுநாள் காலை ஒரு சப்பாத்தியோடு வந்த
போது சஞ்சய் அவனிடம் கேட்டான். “இப்படி ஒவ்வொரு வேளையும் ஒரே ஒரு சப்பாத்தியை எடுத்து வருகிறாயே
உனக்கே வெட்கமாக இல்லையா?”
“வெட்கமாய்த்
தான் இருக்கிறது. இதுவும் தர வேண்டாம் என்று சொன்னால் சார் கேட்க மாட்டேன்கிறார்.” என்று எந்தக்
கருணையும் இல்லாமல் தடியன் சொன்னான்.
“சரி அவரைக்
கூப்பிடு. நான் எல்லாம் சொல்லத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னேனே?”
“நீ யோசித்து
யோசித்துச் சொல்வாய். அதற்கெல்லாம் அவர் நேரத்தை வீணாக்கிட்டு இங்கே வர முடியாது.” என்று சொல்லி
விட்டுப் போனான்.
மறுபடியும் மதியம் ஒரு சப்பாத்தியோடு
அவன் வந்த போது சஞ்சய் அழாக்குறையாக நரேந்திரனை வரச்சொல்லச் சொன்ன போது “சரி சொல்லிப்
பார்க்கிறேன்” என்று தடியன் சொன்னான்.
“அப்படியானால்
நீ அவரிடம் சொல்லவேயில்லையா?” என்று சஞ்சய் திகைப்புடன் கேட்ட போது ”இல்லை. நானாகப்
போன் செய்தால் அவருக்குப் பிடிக்காது. அவராகப் போன் செய்யும்
போது தான் சொல்ல முடியும்” என்றான் தடியன்.
“அவராக எப்போது
போன் செய்வார்?” என்று சஞ்சய் திகைப்புடன் கேட்டான்.
“எப்பவாவது
பண்ணுவார்” என்று தடியன் சொல்லி விட்டுப் போனான். நரேந்திரனை
அடிக்கடி வரவழைக்கத் திட்டம் போட்டால் ஒரு தடவை வரச் சொல்லித் தெரிவிப்பதற்கே பல நாள்
ஆகும் போல் தெரிகிறதே என்று சஞ்சய் மனம் நொந்தான். ’எல்லாவற்றிற்கும் வட்டியும் முதலுமாய் திருப்பித் தர வேண்டும் – உயிரோடிருந்தால்’
வேலாயுதம் பக்கத்து வீட்டு ஆசாமியைக் கவனிப்பதையே தன் முழு
நேர வேலையாக ஆக்கிக் கொண்டிருந்தார். ஜன்னல்
வழியாகச் சிறிது நேரம், வெளியே புல்வெளியில் நடந்து கொண்டு சிறிது நேரம், வெளியே
சாய்வு நாற்காலி போட்டு அரைக்கண் மூடிப் படுத்தபடி சிறிது நேரம் என அவனையே அவர் கவனித்துக்
கொண்டிருந்தார். புரோக்கர் அவன் பெயர் நாகராஜ் என்று சொல்லி இருந்தது
அவர் காதில் முந்தைய இரவு கேட்ட சத்தத்திற்கு ஏற்ற பெயராக இருந்தது. அவன் காலையில்
வாசல் கூட்டி விட்டு உள்ளே போனவன் பின் வெளியே வரவில்லை.
அவன்
வெளியே வந்தால் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று வேலாயுதம் காத்துக்
கொண்டிருந்தார். அவர் ஒரு மனிதரிடம் பேச வேண்டும் என்று நினைப்பதற்கு
எப்போதுமே இரண்டில் ஒரு காரணம் இருக்கும். ஒன்று அந்த மனிதரால்
அவருக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்க வேண்டும். அல்லது அந்த
மனிதர் அவரை விடப் பணக்காரனாக இருக்க வேண்டும். அவரை விடப் பெரிய பணக்காரரிடம்
தொடர்பில் இருப்பது அந்தஸ்தின் உயர்வை நாலு பேருக்குத் தெரியப்படுத்தும் என்று நினைப்பார்.
நாகராஜிடம் பேச இரண்டு காரணங்களுமே இருந்தன. நாகராஜ் வீட்டில் இரவில்
பல முறை கேட்ட பாம்புச் சீறல் சத்தத்தின் பின்னணி அவருக்குத் தெரிய வேண்டி இருந்தது.
தோற்றத்தில் அவனைப் பார்த்தால் பெரிய பணக்காரன் மாதிரி தெரியவில்லை என்றாலும்
அவன் வீட்டில் நிற்கும் புதிய மாடல் பென்ஸ் கார் விலை எண்பது இலட்சத்திற்கும்
மேல். அதோடு லீ
மெரிடியனில் தங்கியபடி வாடகைக்கு வீடு பார்த்து வந்தவன் என்ற தகவலும் தெரிந்த பிறகு
அவருக்கு நாகராஜிடம் பேசாமல் இருப்பு கொள்ளவில்லை.
அன்று காலை
சுமார் பதினோரு மணிக்கு பக்கத்து
வீட்டு முன் ஒரு விலையுயர்ந்த ’ஆடி’ கார் நின்றது. அதிலிருந்து இறங்கி
அந்த வீட்டின் உள்ளே போன ஆள் கோயமுத்தூரில் மூன்று மில்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய
பணக்காரர். அவரை வேலாயுதம் நன்றாக அறிவார். அந்த ஆள் அழைப்பு
மணியை அழுத்திக் காத்திருக்கும் போது கூட இந்தப் பக்கம் திரும்பவில்லை. திரும்பியிருந்தால்
அவருடன் பேசி அப்படியே அவருடன் சேர்ந்து அந்த வீட்டுக்குள்ளே நுழைந்து விடவும் முயற்சி
செய்திருக்கலாம்.
நாகராஜ் கதவைத்
திறந்தவுடன் அவர் உள்ளே போனார். உடனே கதவு சாத்தப்பட்டு விட்டது. அந்த மில் அதிபர்
பக்கத்து வீட்டில் அரை மணி
நேரம் இருந்து விட்டுப் போனார். அவரை வழியனுப்ப நாகராஜ் வெளியே வரவில்லை. மில் அதிபர் நேராகப்
பார்த்தபடி வெளியேறி தன் ‘ஆடி’ கார் ஏறிப் போய் விட்டார். சே சத்தமாகக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாமோ என்று
அவர் போன பிறகு வேலாயுதம் நினைத்துக் கொண்டார்.
இரவு மகன் வந்ததும் வேலாயுதம் அந்தத்
தகவல்களைச் சொன்னார். அவரளவு பாம்புச் சீறல் சத்தத்தால் கவரப்படாத கல்யாண், அந்த மில்
அதிபர் பக்கத்து வீட்டுக்கு வந்து போன தகவலால் மிகவும் கவரப்பட்டான். அவனுக்கும்
பணம் இல்லாதவர்களுடன் பழகுவது தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவது போல
மிகவும் கஷ்டமானது. ஒரு காலத்தில் அடிமட்டத்தில் இருந்தோம் என்ற நினைவே கூட அவனுக்கு
நினைத்துப் பார்க்கக் கூச்சமாக இருக்கும். ஐந்து நட்சத்திர
ஓட்டலில் தங்குபவன், கல்யாணிடம் இருப்பதைப் போல பல மடங்கு சொத்து இருக்கும் மில்
அதிபரிடம் தொடர்பு இருப்பவன் இப்போதைய பக்கத்து
வீட்டுக்காரன் என்று தெரிந்த பிறகு கல்யாணும் அவனுடன் நட்பு பாராட்ட ஆசைப்பட்டான்.
வேலாயுதம் சொன்னார். “நேத்து
ராத்திரி பதினோரு மணிக்கு மேல தான் எனக்கு பாம்பு சீறும் சத்தம் கேட்டது. எதற்கும்
நீயும் ராத்திரி கொஞ்ச நேரம் முழிச்சிட்டிரு. இன்னைக்கும்
கேட்குதான்னு பார்ப்போம்”
பழகலாம் என்று நினைத்த கல்யாணை இந்தப்
பாம்பு சமாச்சாரம் பயமுறுத்தியது. அதனாலேயே நாகராஜிடம் ஏதோ அபாயம் இருப்பதாக அவன் உள்மனம் உணர்ந்தது. ஆனாலும்
தந்தைக்குக் கேட்ட பாம்புச் சீறல் உண்மையா என்று தெரிந்து தெளிந்து விட வேண்டும் என்று
எண்ணிய கல்யாண் அன்று தூக்கத்தில் கண் சொக்கினாலும் கஷ்டப்பட்டுத் தூங்காமல் விழித்திருந்தான்...
(தொடரும்)
என்.கணேசன்
Different story. Could not guess what next. Very interesting.
ReplyDeleteசஞ்சயின் ராஜ தந்திரம் எடுபடவில்லை... இன்னும் கூடுதல் முயற்ச்சியும், சிந்தனையும் வேண்டும்...
ReplyDelete