சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 2, 2018

சத்ரபதி – 27



டோரணா கோட்டைத் தலைவன் பக்கத்துப் பிராந்தியத்திலிருந்து வந்த மூவரையும் விருந்தினர்களாகவே வரவேற்றான். யுத்தமில்லாத காலங்களில் தினசரி வாழ்க்கையின் எந்திரத்தனத்தில் இருந்து தப்ப இது போன்ற வரவுகள் நிறையவே அக்காலத்தில் உதவின. அக்கம்பக்கத்து செய்திகள், தலைநகரத்து நிலவரங்கள் அறிந்து கொள்ள முடிவதுடன் பொழுதும் சுவாரசியமாகப் போகும்…. “வாருங்கள் வாருங்கள்….” என்று வரவேற்றான்.

“வணக்கம் கோட்டைத்தலைவரே. நலம் தானே?” தானாஜி மலுசரே விசாரித்தபடி அவன் காட்டிய இருக்கைகளில் நண்பர்களுடன் அமர்ந்தான்.

“பெரிய பிரச்சினைகள் இல்லை என்பதைத் தான் நலம் என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறேன். உங்களைப் போல முழு சுதந்திரம் எங்களுக்கில்லை என்பதால் சுபிட்சமும் பெரிதாக இல்லை. ஒவ்வொன்றையும் பீஜாப்பூரிலிருந்து கேட்டுப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. கேட்டதில் பாதியைத் தான் தருகிறார்கள். அந்தப் பாதியைப் பெறும் போது அடுத்த பத்து தேவைகள் எழுந்து விடுகின்றன. என்ன செய்ய!....  சிவாஜி நலமா?

”நலம் தான். அவரே தான் வருவதாக இருந்தது. ஆனால் நிர்வாக வேலைகள் சிலவற்றை தாதாஜி திடீரென்று தந்து விட்டதால் தான் நாங்கள் வந்திருக்கிறோம்” என்றான் பாஜி பசல்கர்.

”ஏதாவது முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர்களா? அரசு வேலையாக வந்தீர்களா, இல்லை தனிப்பட்ட வேலையாக வந்தீர்களா?”

யேசாஜி கங்க் நட்பாய் புன்னகைத்தபடி சொன்னான். “இரண்டையுமே  சொல்லலாம்…”. என்று சொன்னபடி தான் எடுத்து வந்திருந்த பையில் எதையோ தேடுவது போல பாவித்து அதனுள் இருந்த தங்கக்காசு முடிச்சு இரண்டை வெளியே எடுத்து மறுபடியும் உள்ளே வைத்தான்.

தங்கக் காசு முடிச்சுகளை கண நேரம் பார்த்தாலும் டோரணா கோட்டைத் தலைவன் மனதில் காட்சி பசுமையாக மனதில் பதிந்தது. இரண்டிலும் சேர்த்து எவ்வளவு இருக்கும் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டு பெருமூச்சு விட்டான். இந்த இரண்டு முடிச்சு மட்டும் தானா, இல்லை இன்னும் கூடுதல் முடிச்சுகள் இருக்குமா என்ற சந்தேகமும் அவன் மனதை அரித்தது…. அதை வெளிக்காட்டாமல் “சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“இந்தக் கோட்டையை சிவாஜி சுல்தானிடம் கேட்டிருக்கிறார்” தானாஜி மலுசரே சொன்னான்.

டோரணா கோட்டைத்தலைவன் திகைத்தான். அவன் திகைப்பைப் புரிந்து கொண்டு ரகசியமாய் சொல்வது போல் பாஜி பசல்கர் சொன்னான். ”எங்கள் பகுதியில் அனைத்தும் தற்போது தாதாஜி அதிகாரத்தில் இருக்கிறது. சிவாஜி இனித் தனியாக இயங்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறார். ஆனால் தன் ஆசிரியரிடமிருந்து எதையும் பிடுங்கிக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. அதனால் அடுத்து இருக்கிற இந்தக் கோட்டையைச் சுல்தானிடம் கேட்டிருக்கிறார்…..”

கோட்டை தன் கையை விட்டுப் போவதில் டோரணா கோட்டைத்தலைவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைப் பராமரிப்பதில் பல கஷ்டங்களைப் பட்டு வரும் அவன் தன் சொந்த ஊருக்குப் போயும் பல காலம் ஆகிறது. அவனுக்கு வர வேண்டிய ஊழியத் தொகை முழுவதுமாகக் கிடைத்து விட்டால் நிம்மதியாகப் போய் விடலாம் என்று தோன்றியது…. “சுல்தான் என்ன சொன்னார்?” என்று கேட்டார்.

”சுல்தானுக்கும் சம்மதம் தான்…. அவருக்கு நீங்கள் வசூலித்து அனுப்ப வேண்டிய பாக்கித் தொகை நிறைய இருக்கும் போலிருக்கிறது. அதைப் பெற்றவுடன் சிவாஜிக்குத் தந்து விடும் எண்ணம் அவருக்கு இருக்கிறது….” தானாஜி மலுசரே சொன்னான்.

டோரணா கோட்டைத்தலைவன் உள்ளுக்குள் கோபத்தை உணர்ந்தான். சுல்தான் தனக்கு வரவேண்டியதில் காட்டும் அக்கறையை, தான் தர வேண்டியதிலும் காட்டினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்ட அவன் சொன்னான். “வசூல் செய்து அனுப்புவதில் நான் முனைப்பு காட்டாமல் இல்லை. முழுவதுமாய் தர மக்கள் மறுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பாக்கி வைத்துத் தான் தருகிறார்கள். சிறையிலா அவர்களை அடைக்க முடியும்? அடைப்பதென்றால் அத்தனை இடம் வேண்டாமா? அவர்களுக்கு உணவளிக்க வேண்டாமா? அதற்கும் கஜானாவில் இருப்பு வேண்டாமா? சொல்வது சுலபம். இது போல் ஒரு மலையில் கோட்டையைப் பராமரிப்பதே கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல…..”

யேசாஜி கங்க் அவன் நிலைமையை முற்றிலும் புரிந்தவன் போலத் தலையசைத்தான். பாஜி பசல்கரும் அந்தப் புரிதலுடன் பேசுபவன் போலப் பேசினான். ”அது எங்களுக்கும் புரிகிறது. நிலைமை இப்படி இருக்கையில் சுல்தான் நீங்கள் வசூல் செய்து அனுப்புவதை விட அதிகமாய் சிவாஜி வசூல் செய்து அனுப்ப வேண்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்…..”

கோட்டைத்தலைவன் வரண்ட சிரிப்போடு சொன்னான். “இப்போது நிர்ணயித்திருக்கும் தொகையை அனுப்பவே வழியைக் காணோம்….”

தானாஜி மலுசரே சொன்னான். “அதையே தான் நானும் சிவாஜியிடம் சொன்னேன். ஆனாலும் ஒன்றை எண்ணி விட்டால் மாற்றிக் கொள்கிற தன்மை சிவாஜியிடம் இல்லை. அருகில் உள்ள இந்தக் கோட்டையைப் பெற்றே தீர்வது என்று பிடிவாதமாக இருக்கிறார். நீங்கள் வசூலித்து அனுப்ப வேண்டிய பாக்கித் தொகைக்காகக் காத்திருக்காமல் உடனடியாக ஆணை பிறப்பிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார். சுல்தானும் சிவாஜி மேல் பிரியமுள்ளவர் ஆனதால் என்னேரமும் உங்களுக்குச் சுல்தான் ஆணை வந்து சேரலாம்…..”

கோட்டைத்தலைவனுக்கு இந்தச் செய்தி நல்ல செய்தியாகவே தோன்றியது. இந்த வசூல் கொடுமையிலிருந்து தப்பித்து நிம்மதியாகப் போய்த் தொலைந்து விடலாம். ஆனால் அவனுக்கு வர வேண்டிய தொகை வராமல் போவது தான் வருத்தமாக இருந்தது. சுல்தான் அனுப்பும் ஆணையுடன் அந்தத் தொகையும் வந்தால் நன்றாக இருக்கும்.

யேசாஜி கங்க் சொன்னான். “கோட்டை சிவாஜிக்குக் கிடைத்து  விட்டால் பழுது பார்த்துப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதுவே பெருஞ்செலவு. உடனே கையில் கிடைத்தால் பழுது பார்க்கும் பணியை ஆரம்பிக்கவும் எண்ணியிருக்கிறார். அடுத்த மாதம் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாள் இருக்கிறதாம். அதற்குள் பணி முடிந்து விட வேண்டுமாம். உடனே நீங்கள் ஒப்படைத்தால் இந்த பொற்காசுகள் முடிச்சுகளை உங்களுக்குப் பரிசளிக்கவும் தயார் என்றார்….” சொல்லி விட்டு யேசாஜி கங்க் பையிலிருந்து மூன்று பொற்காசு முடிச்சை எடுத்துக் காட்டி விட்டு திரும்பவும் பைக்குள் போட்டுக் கொண்டான்.

பாஜி பசல்கர் சொன்னான். “நான் தான் சிவாஜியிடம் இந்த முட்டாள்தனம் வேண்டாம் என்று சொல்லித் தடுத்தேன். எப்படி இருந்தாலும் ஓரிரு நாளில் சுல்தான் ஆணை இங்கு வந்து சேரத்தான் போகிறது. ஆணை வந்தால் கோட்டைத்தலைவர் தானாகக் கொடுத்து விட்டுப் போகத்தான் போகிறார். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள், அனாவசியமாய் இந்தப் பொற்காசு முடிச்சுகளை வீணாக்குகிறீர்கள் என்று கேட்டேன். இந்தப் பொற்காசுகள் கோட்டைப் பழுதுச் செலவுகளுக்காவது பயன்படுமே என்று சொன்னேன்…..”

யேசாஜி கங்க் சொன்னான். “அதைக் கேட்ட பிறகு சிவாஜிக்கு இருமனமாகவே இருந்தது. கடைசியில் ”அங்கு சென்றவுடன் கோட்டையை ஒப்படைத்தால் இதைக் கொடுங்கள். இல்லாவிட்டால் முறைப்படி ஆணை வரும் வரை காத்திருப்போம். ஆணையில் டோரணா கோட்டைத்தலைவரை வசூல் செய்து தந்து விட்டுப் போகச் சொல்லும் சாத்தியக்கூறும் உள்ளது. அப்படி என்றால் காத்திருந்தாலும் இந்தப் பொற்காசுகளைக் கோட்டையைப் பழுதுபார்க்கப் பயன்படுத்துவோம். கோட்டைத் தலைவர்  இருந்து பாக்கியிருக்கும் வரி வசூல் செய்து கொடுத்தால் நம் வேலை சிறிது குறையும்.” என்று சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கோட்டைத்தலைவரே?”

டோரணா கோட்டைத் தலைவன் யோசித்தான். இரண்டு மூன்று நாட்கள் முன்பே ஒப்படைத்தால் மூன்று பொற்காசு முடிச்சுகள் கிடைக்கிறது என்றால் அது மிக நல்ல தொகை. அவனுக்கு வரவிருக்கும் ஊதியத்தை விடப் பலமடங்கு அதிகம். ஆணை வரும் வரை இருந்தால் சிவாஜி சொன்னது போல் இந்த வசூல் தலைவலி வேறு இருக்கலாம். ஆனாலும் சுல்தானின் ஆணை இல்லாமல் எப்படி….?

தானாஜி மலுசரே யேசாஜி கங்கிடம் சொன்னான். “நீ என்ன பேசுகிறாய். சுல்தானின் ஆணை எழுத்து மூலமாக இல்லாமல் இவர் எப்படிக் கோட்டையை ஒப்படைக்க முடியும்?” பின் நெருங்கி அமர்ந்து யேசாஜி கங்கிடம் மெல்லச் சொன்னான். “அந்தப் பொற்காசு முடிச்சுகள் உள்ளேயே இருக்கட்டும். சிவாஜி தான் அவசரத்தில் சொல்கிறார் என்றால் நாமும் அவசரப்பட வேண்டுமா? நாளையே கூட ஆணை வரலாம். அப்படி இல்லா விட்டாலும் இரண்டு மூன்று நாட்களில் கண்டிப்பாக வந்து விடத்தான் போகிறது….”

பாஜி பசல்கர் தானும் சாய்ந்தபடி தானாஜி மலுசரே சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு “அதுவும் சரி தான்” என்றவன் எழுந்தே நின்று விட்டான். மற்ற இருவரும் கூட எழுந்து விட்டார்கள். அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டாலும் அது கோட்டைத்தலைவன் காதில் தெளிவாகவே கேட்டது.

தானாஜி மலுசரே சொன்னான். “சரி கோட்டைத்தலைவரே. என்னேரமும் சுல்தானிடமிருந்து ஆணை வந்து சேரும். வந்தவுடன் ஆளனுப்பித் தெரியப்படுத்துங்கள். வருகிறோம். அது தான் முறையும் கூட….”

கோட்டைத் தலைவன் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்தது. இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள் என்றால் ஆணை வரப் போவது நிச்சயம். ஆணை வந்தபிறகு கோட்டையை ஒப்படைத்தால் சல்லிக்காசு இவர்களிடமிருந்து பெயராது. ஆணையுடன் பணம் வந்தால் பிறகும் வந்து வாங்கிக் கொள்ளலாம். வசூல் வேலை சேர்ந்து வந்தால் ஏதாவது காரணம் சொல்லித் தப்பிக்கலாம். அதிர்ஷ்டம் அடிக்கடி வருவதில்லை. சொல்லப் போனால் என் வாழ்க்கையில் இது வரை வந்ததேயில்லை. இனியொரு முறை வருவது நிச்சயமில்லை…..

“சற்றுப் பொறுங்கள்” என்று அவன் கிளம்பியவர்களை நிறுத்தினான்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. சுஜாதாJuly 2, 2018 at 5:51 PM

    சிவாஜி டெக்னிக் சூப்பர். கோட்டைத்தலைவனின் பேராசையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. கோட்டை தலைவனை ஏமாற்றும் சிவாஜியின் யோசனையும்... அதை சிறப்பாக செயல்படுத்தும்..அவர் நண்பர்களும் சூப்பர்...

    கோட்டை தலைவனை அனுப்புனதுக்கு அப்புறம்..அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete