சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 5, 2018

இருவேறு உலகம் – 90


ரிணி அன்று வீடு திரும்ப இரவு பத்து மணி ஆகி விட்டது.  அவள் வரும் வரை மகளிடம் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று கிரிஜா மனதில் ஒத்திகை பார்த்து வைத்திருந்தாள். மாணிக்கம், சங்கரமணி இருவரின் வருகையைச் சொல்லி ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அசந்து போனதையும் சொன்னாள். ஹரிணிக்கு மணீஷின் அப்பா வந்ததில் மகிழ்ச்சி. அதை மட்டும் முகத்தில் காண்பித்தாள். ஆனால் அவள் அக்கம் பக்கத்து ஆட்கள் அசந்து போனதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

“அவர் மணீஷுக்கு உன்னைப் பெண் கேட்டார்” கிரிஜா மெல்லச் சொன்னாள்.

ஹரிணி தாயைக் கூர்ந்து பார்த்தாள். இது புயலிற்கு முன்னே வரும் அமைதி என்று கிரிஜா அறிவாள். ஆனால் புயல் அடித்தால் பின் பேச முடியாது. சொல்ல வேண்டியதை இப்போதே சொன்னால் தான் உண்டு….. “மணீஷுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு தோணினவுடனே முதல்ல அவர் மனசுல வந்தது நீ தானாம். அதான் வந்து கேட்டார்….”

“அதுக்கு நீ என்ன சொன்னாய்?”

“உன்னைக் கேட்டுச் சொல்றதாய்ச் சொன்னேன்…..”

“உனக்கு நான் க்ரிஷைக் காதலிக்கிறது தெரியுமே. அப்பவே அதை அவங்க கிட்ட சொல்லியிருக்கலாமே”

“நான் யோசிச்சுப் பார்த்தேன்….. க்ரிஷ் ஜீனியஸா இருக்கலாம். ஆனா ஜீனியஸ் கூட வாழ்றது சுலபமில்லைடி. நீ அவனை நேசிக்கிற அளவுக்கு அவன் உன்னை நேசிக்கலைங்கறதை நானே பல முறை கவனிச்சு உன் கிட்ட சொல்லியிருக்கேன். நீ அவன் பின்னாடியே போற அளவுக்கு அவன் உன் பின்னாடி வர்றதில்லை….. உனக்கே கூட அது தெரியும்…. நீயே கூட கோவிச்சுகிட்டு அவன் வீட்டுக்குப் போறதை சில மாசம் நிறுத்தியிருந்தாய்….. அவனுக்கு உன்னை விட ஆராய்ச்சி முக்கியம்….. அறிவு முக்கியம்….. ரகசியம் முக்கியம். அவன் காணாமல் போனப்ப என்ன நடந்ததுன்னு உன்கிட்டயாவது சொன்னானா யோசிச்சுப் பாரு…. மணீஷ் அவன் மாதிரி அல்ல. உன்னை நல்லா மதிப்பான். நேசிப்பான். சந்தோஷமா வச்சுக்குவான்….”

“க்ரிஷ் என் பின்னாடியே வர நாய் இல்லை. அப்படி வந்திருந்தா அவனைக் காதலிச்சிருக்க மாட்டேன். எல்லாத்தையும் விட நானே  முக்கியம்னு என்னையே கவனிச்சிட்டிருக்கற ஒருத்தனைக் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன். அப்படிப்பட்டவன் என் வாழ்க்கையை என்னை வாழ விட மாட்டான்…. காதலிக்கறதுனாலயே ஒருத்தர் கிட்ட எல்லாத்தையும் சொல்ல வேண்டியதில்லை. நான் அவன் கிட்ட சொல்லாததும் நிறைய இருக்கு. அவனும் நான் சொல்லாததை ஒரு தடவை கூட துருவிக் கேட்டதில்லை….. இந்த உலகத்துல அவனை மாதிரி ஒரு நல்லவனை நான் பார்த்ததில்லை. இதை அவன் மேல கோபமா இருந்தப்ப கூட என்னால மறுக்க முடிஞ்சதில்லை. இப்ப அந்தக் கோபம் கூட அர்த்தமில்லாததுன்னு புரிஞ்சுடுச்சு. அதனால எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது க்ரிஷ் கூட தான். மணீஷ் நல்லவன் தான். அன்பானவன் தான். அவனை இது வரைக்கும் நண்பனாகத் தான் பார்த்திருக்கேன். அப்படித்தான் இனிமேயும் என்னால பாக்க முடியும். குட் நைட்”

ஹரிணி அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு அவளறைக்குப் போய் தாள் போட்டுக் கொண்டாள். கிரிஜா மகளின் அறைக்கதவையே பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்று விட்டுப் பெருமூச்சு விட்டாள். அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டினாலும், கதவைத் திறந்து உள்ளே விடவும் கொடுப்பினை வேண்டும்…..

மாணிக்கம் மறு நாள் காலை கிரிஜாவுக்குப் போன் செய்தார். “ஹரிணி கிட்ட பேசினீங்களா?”

கிரிஜா தர்மசங்கடத்துடனும் வேதனையுடனும் சொன்னாள். “அவள் மணீஷை நல்ல நண்பனா மட்டும் தான் நினைச்சிருக்காளாம்…. க்ரிஷைத் தான் காதலிக்கிறதா சொல்றா…..”

மாணிக்கம் சொன்னார். “மணீஷ் கிட்ட நான் கேட்டப்ப அவனும் அவளை நல்ல தோழியா தான் நினைச்சிருக்கிறதா சொன்னான். நாம பெரியவங்க ஆசைப்பட்டு என்ன பண்றது….. சரி இதை இதோட விட்டுடுவோம்….”

ஹரிணி சம்மதித்திருந்தால் மணீஷும் சம்மதித்து விட்டான் என்று அவர் சொல்லியிருந்திருப்பார். கல்யாண ஏற்பாடுகளை மும்முரமாக ஆரம்பித்தும் இருப்பார்….. அவர் கிரிஜாவுடன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் மகன் நடைப்பிணமாக எழுந்து போனான். அவனையே அளவில்லாத வேதனையுடன் அவர் பார்த்தார். அரை மணி நேரத்தில் மனோகர் போன் செய்தான். மாணிக்கம் அவனிடமும் தயக்கத்துடன் தான் தகவலைத் தெரிவித்தார். அவன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


ல்லூரியில் தனியாக ஓரிடத்தில் வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த மணீஷைக் கவனித்த ஹரிணி கவலையுடன் அவனருகில் வந்தாள். “டேய் மணீஷ். என்னடா ஆச்சு உனக்கு நீ ஏன் இப்படி இருக்கே?”
அவள் கவலையில் சிறிது மனம் நெகிழ்ந்த மணீஷ் “ஒன்னுமில்லை ஹரிணி” என்றான்.

ஹரிணி அவனருகில் அமர்ந்தாள். “நீ இப்படி இருக்கற கவலைல தான் உன் அப்பா உனக்கு இப்பவே கல்யாணம் செய்ய யோசிக்க ஆரம்பிச்சிட்டார்னு நினைக்கிறேன். என் அம்மா கிட்ட கூட வந்து பொண்ணு கேட்டார்….”

மணீஷ் அவசரமாகச் சொன்னான். “அவர் வந்தது எனக்குத் தெரியாது ஹரிணி. அவர் என் கிட்ட கேட்டப்ப நான் உன்னை நல்ல தோழியாய் மட்டும் தான் நினைக்கிறதா அவர் கிட்ட சொன்னேன்…..”

ஹரிணிக்கு அவன் அப்படிச் சொல்லியிருப்பது பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. “நானும் என் அம்மா கிட்ட அதையே தான் சொன்னேன்….. அதை விடு. உனக்கு என்ன பிரச்னை அதைச் சொல்லு… ஏன் ரொம்ப டல்லாவே இருக்காய்…..”

நம்பும்படியான ஒரு பதிலைச் சொல்லும் வரை அவள் விட மாட்டாள் என்பதை அறிந்திருந்த மணீஷ் யோசித்து ஒரு பொய்யைச் சொன்னான். “என்னவோ தெரியலை…. கொஞ்ச நாளா எனக்கு எங்க அம்மா ஞாபகம் அதிகமா வருது…..”

ஹரிணி அவன் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். ஆறுதலாய் உணர்ந்த மணீஷ் மெல்லக் கேட்டான். “இன்னைக்கு க்ரிஷ் ஏன் வரலை?”

அமெரிக்காவுக்குச் செல்வதை மணீஷிடம் கூடச் சொல்ல வேண்டாம் என்று க்ரிஷ் தெளிவாகச் சொல்லி இருந்ததால் ஹரிணி சமயோசிதமாகச்  சொன்னாள். “உனக்கு தான் தெரியுமே. அவனோட ஆராய்ச்சி ஏதாவது இருக்கும் போல….”


மாஸ்டர் தன்னுடைய குருவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தார். மானசீகமாய் குருவிடம் பேசிக் கொண்டுமிருந்தார்….. “உங்களுக்கு நான் கிடைச்ச மாதிரி எனக்கும் ஒரு சிஷ்யன் கிடைச்சிருக்கான் குருவே. என்னை மாதிரி திமிர்ப் பேச்செல்லாம் கிடையாது….. அகங்காரமே இல்லாத நல்லவன்….. வெறும் காகிதமாய் நான் உங்க கிட்ட வந்தேன்…. இவன் ஒரு பெரிய புஸ்தகமாகவே என் கிட்ட வந்திருக்கான். நான் கூடக் கொஞ்சம் பக்கங்களை மட்டும் தான் இணைக்கணும்….. அவ்வளவு தான்….. அவன் இன்னைக்கு காலைல தான் அமெரிக்கா கிளம்பியிருக்கான். நாலு நாள் கழிச்சி தான் வருவான்…… நீங்க உயிரோட இருந்திருந்தா முதல் வேலையா நான் அவனை உங்களுக்கு அறிமுகம் பண்ணியிருப்பேன் குருவே….. உங்களுக்கும் அவனைப் பிடிச்சிருக்கும்….. பார்த்தா வெகுளி மாதிரி சில சமயங்கள்ல தெரிஞ்சாலும் விவரமானவன் அவன், குருவே….. உங்களைக் கொன்னவனோட ஆளுன்னு நினைச்சு கொஞ்சம் விறைப்பாவே இருந்த என்னை ஒரே சந்திப்புல மாத்திட்டான்….. அவனுக்கு ஒரு காதலி….. ஹரிணின்னு பேரு. வித்தியாசமான கறாரான, அன்பான பொண்ணு…… ரெண்டு பேரும் நல்ல ஜோடி…..”

“குருவே! நீங்க நினைச்சபடி வளர்பிறை சப்தமில எனக்கு அந்தக் குறிப்பு கிடைச்சிருக்கு. அது என்னன்னும் புரியலை… அதை வெச்சு நான் என்ன செய்யறதுன்னும் தெரியலை…. நீங்க அன்னிய சக்தி ஊடுருவிடுச்சின்னு சொன்னது யாரைன்னு இப்ப எனக்கு குழப்பமா இருக்கு….. க்ரிஷைத் தொடர்பு கொண்ட வேற்றுக்கிரகவாசியாய் இருக்கும்னு மூணு நாள் முன்னாடி வரை நினைச்சேன். ஆனா க்ரிஷ் சொன்னதை வச்சுப் பார்த்தா அந்த வேற்றுக்கிரகவாசிங்கற அன்னிய சக்தி பூமியை ஊடுருவியிருந்தாலும் உங்களைக் கொன்னிருக்க வாய்ப்பே இல்லை….. உங்களைக் கொன்னு அது என்னத்தை சாதிச்சிருக்க முடியும். நீங்கள் அடையாளம் காட்டிடுவீங்களோன்னு யாரோ பயந்து கொன்ன மாதிரி தான் இப்போ தோணுது….. வாழ்ந்த காலங்கள்ல அலைவரிசைல நாம பேசிகிட்டது ஞாபகம் வருது….. ஆனால் உங்களோட கடைசி நேரத்துல அந்த அலைவரிசையை எதிரி தடுத்து நிறுத்திட்டதை இப்பவும் என்னால தாங்க முடியலை….. உங்க உயிர் பிரியற அந்த நேரத்துல உங்க கையைப் பிடிச்சுட்டு பக்கத்துல இருக்கற பாக்கியத்தை அந்தப் பாவி எதிரி பறிச்சிட்டதை என்னால இப்பவும் தாங்க முடியலயே குருவே….. நான் என்ன செய்வேன்?”

மாஸ்டரின் கண்களிலிருந்து கண்ணீர் தானாகப் பெருகியது. சிறிது நேரம் அழுதார். பின் மறுபடி பேசினார். “நடந்ததை மாத்தற சக்தி நமக்கில்லை. ஆனால் இனி என்ன செய்யணும்னும் தெரியாத ஒரு குழப்பத்தில் நான் இருக்கேன் குருவே. எனக்கு ஒரு வழி காட்டுங்கள்……”

சொல்லி விட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். மனம் லேசானது….. குருவின் ஆசிகள் கிடைப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது…. சிறிது நேரத்தில் அவர் மனத்திரையில் அனந்த பத்மநாப சுவாமியின் அனந்த சயனம் மூன்று வாசல்களில் அலங்காரத்துடன் தெரிந்தது. மாஸ்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மனத்திரையில் விரிந்த காட்சி மிகத் தெளிவாக இருந்ததால் திருவனந்தபுரம் போய் தரிசனம் செய்துவிட்டு வந்தால் ஏதாவது வழி பிறக்கும் என்று குரு சொல்கிறாரோ என்று தோன்ற ஆரம்பித்தது. உடனே மாஸ்டர் திருவனந்தபுரம் கிளம்பினார்.

(தொடரும்)
என்.கணேசன்





5 comments:

  1. ஹரிணியின் புரிதல் மிக மிக அருமை...அவள்,காதல் பற்றி கூறியது... நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று...
    மாஸ்டர் சொன்னது போல ரெண்டு பேரும் நல்ல ஜோடி...

    மாஸ்டர் தன் குருவிடம் மானசீகமாக வழி கேட்க்கும் விதமும்..குரு குறிப்பு மூலம் உணர்த்துழதும்
    ..சூப்பர்..

    க்ரிஷ் அமெரிக்காவுலையும்...மாஸ்டர் பத்மநாப சுவாமி கோவிலிலும்...என்ன கண்டறிவார்கள்..என்பதை அறிய ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete
  2. Conversation between mother n daughter is awesome. U define what real love is!

    ReplyDelete
  3. அருமை
    1ஹரிணியின் பதில் காதலை பற்றி ஹரிஷை பற்றி
    இன்னும் எவ்வ்ளவு நாள் அறிந்து கொல்லாமல் போகும் மனிஷின் மனநிலை ஹரணிக்கு
    2மாஸ்டர் ஹரிஷை குறித்து நினைப்பது மிக அருமை அவன் ஒரு புத்தகம் அதில் சில பக்கங்கள் மட்டுமே இணைக்க வேண்டும் என்ற வரி
    அமெரிக்காவும் திருவனந்தபுரம் என்ன சொல்ல போகிறது ...................

    ReplyDelete
  4. Very interesting update. Eagerly waiting for next Thursday.

    ReplyDelete
  5. ஹரிணி, மனீஷ் திருமண முயற்சி தோல்வியடைந்தது ... மனோகரின் அடுத்த
    திட்டம் என்னவாக இருக்கும். ?

    ReplyDelete