சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 9, 2018

சத்ரபதி – 28


சிவாஜியின் நண்பர்கள் டோரணா கோட்டைத்தலைவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்கள். “என்ன கோட்டைத் தலைவரே?”

“சிவாஜி ஆசைப்படுவது தவறல்ல. சுபமுகூர்த்தம் மிகமுக்கியம்” என்றான் கோட்டைத்தலைவன்.

“உண்மை தான். ஆனால் இரண்டு மூன்று நாட்களில் பெரிதாக எதுவும் நஷ்டப்பட இல்லை. பழுதுபார்க்கும் வேலைகளை அதிக ஆட்களை வைத்து துரிதப்படுத்தினால் சிவாஜி நினைத்த நாளுக்குள் வேலைகளை முடித்து விடலாம்” என்றான் தானாஜி மலுசரே.

“மூன்று நாட்களில் ஆணை வரும் என்பது நிச்சயமல்ல. உங்களுக்கு பீஜாப்பூர் அரசு அதிகாரிகளின் சுறுசுறுப்பு பற்றித் தெரியாது. சுல்தான் ஆணை இட்டாலும் அதை எழுதி அனுப்ப அவர்கள் வாரக்கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த ஓலையை அனுப்ப ஆள் தேர்ந்தெடுப்பதும் மந்தமாகவே இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்குத் தரும் குதிரையும் போர்க்களத்திலோ, அவசரத்திற்கோ பயன்படுத்த முடியாத தரத்திலேயே இருக்கும். மொத்தத்தில் ஆணை இங்கு வந்து சேரவே குறைந்த பட்சம் மூன்று வாரமே கூட ஆகலாம். இது அவர்களுடன் எனக்கு இது வரை ஏற்பட்டிருக்கும் தொடர் அனுபவம்…..”

மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். யேசாஜி கங்க் மற்ற இருவரிடம் கேட்டான். “என்ன செய்யலாம்?”

தானாஜி மலுசரே சந்தேகத்துடன் கேட்டான். “என்ன கோட்டைத்தலைவரே இப்படிச் சொல்கிறீர்கள்? இந்த அளவு மந்தமாகவா முக்கிய ஆணைகளை அனுப்புவார்கள்?”

கோட்டைத்தலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அது உங்களுக்குத் தான் முக்கிய ஆணை. அவர்களுக்கு அல்ல. பீஜாப்பூர் அரசுக்கு நான் இந்தக் கோட்டையை நிர்வாகம் செய்தாலும் ஒன்று தான். நீங்கள் நிர்வாகம் செய்தாலும் ஒன்று தான். அது இன்று ஆனாலும், ஒரு மாதம் கழித்து ஆனாலும் அரசுக்கு அது எந்தப் பிரச்னையும் இல்லை. சுல்தான் இந்தச் சில்லறைக் காரியங்களை நினைவு வைத்துக் கேட்கப் போவதில்லை….”

பாஜி பசல்கர் யோசனையுடன் சொன்னான். “அப்படியானால் இந்தக் கோட்டையை முகூர்த்த நாளுக்குள் ஓரளவு பழுது பார்ப்பது கூட நடக்காதே. இந்தத் தாமதத்தை சிவாஜி விரும்ப மாட்டாரே”

தானாஜி மலுசரே சொன்னான். “அதற்கு இவர் என்ன செய்ய முடியும். சுல்தானின் ஆணை எழுத்து மூலமாக வராமல் இவர் எப்படி நம்மிடம் ஒப்படைப்பார். இது ராஜாங்க காரியம் ஆயிற்றே. சரி நாம் நிலைமையை சிவாஜியிடம் போய்ச் சொல்வோம். இந்த முகூர்த்தம் இல்லா விட்டால் அடுத்த முகூர்த்தம் பார்க்க வேண்டியது தான். வேறென்ன செய்வது…”

டோரணா கோட்டைத்தலைவன் சொன்னான். “முதல் முறையாக ஒரு கோட்டையை சிவாஜி தன் வசமாக்கிக் கொள்கிறார். அது அவர் விரும்பிய முதல் சுபமுகூர்த்தத்தில் அமைவது தானே சிறப்பு”

அவர்கள் மூவரும் கோட்டைத்தலைவனையே யோசனையுடன் பார்த்தார்கள்.

கோட்டைத்தலைவன் யேசாஜி கங்க் கையிலிருந்த பையை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டே சொன்னான். “நண்பர்களுக்காக சில சிறிய விதி விலகல்களைச் செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்”

இப்போதும் தரலாமா வேண்டாமா என்பது போன்ற யோசனை முகபாவனையை தானாஜி மலுசரே காட்ட கோட்டைத்தலைவனுக்கு பதற்றமாய் இருந்தது. நல்ல வேளையாக யேசாஜி கங்க் ஆணித்தரமாகவே சொன்னான். “மூன்று வாரம் காப்பதெல்லாம் மிக அதிகம். சிவாஜி ஒத்துக் கொள்ள மாட்டார்….”

பாஜி பசல்கரும் “உண்மை தான்” என்று சொல்ல தானாஜி மலுசரே தயக்கத்துடனேயே கடைசியில் ஒத்துக் கொண்டான். யேசாஜி கங்க் மூன்று பொற்காசு முடிச்சுகளையும் தர அவற்றைத் திருப்தியுடன் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு பின்பு யோசனை வந்தவன் போலச் சொன்னான். “ஆனால் இதை நான் சிவாஜியிடம் அல்லவா ஒப்படைக்க முடியும். எழுத்து மூலமாக அல்லவா நாம் இதை ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும்”

யேசாஜி கங்க் சிவாஜி இதை எதிர்பார்த்து எழுதி அனுப்பியிருந்த ஓலையை கோட்டைத்தலைவனிடம் தந்தான். அதில் சிவாஜி டோரணா கோட்டையின் பொறுப்பைப் பெற்றுக் கொண்டதாய் எழுதித் தந்திருந்தான். கோட்டைத் தலைவன் அதைப்படித்து விட்டுத் திருப்தியுடன் தலையசைத்தான்.

தானாஜி மலுசரே சொன்னான். “நீங்கள் டோரணா கோட்டையை சிவாஜியிடம் ஒப்படைப்பதாக எழுதிக் கொடுங்கள். அப்போது தானே ஆவணமாக்குவது பூர்த்தியாகும்”

சிவாஜி பெற்றுக் கொண்டதாக எழுதித்தந்த பிறகு அவனிடம் ஒப்படைப்பதாய் எழுதித்தருவதில் கோட்டைத்தலைவன் எந்தத் தவறையும் காணவில்லை. அப்படியே எழுதித் தந்தான்.

டோரணா கோட்டை சிவாஜியின் வசமானது.

டோரணா கோட்டை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலையை சிவாஜி தாதாஜி கொண்டதேவிடம் காட்டிய போது அவர் அதிர்ந்து போனார்.

“அவன் ஏன் அந்தக் கோட்டையை உன்னிடம் ஒப்படைத்தான்?” என்று அவர் சந்தேகத்துடன் கேட்டார்.

’எவ்வளவு குறைவாக இதைப் பற்றியெல்லாம் அறிகிறீர்களோ, அந்த அளவு உங்கள் மன அமைதி நீடிக்கும் ஆசிரியரே’ என்று மனதில் கூறிக் கொண்ட சிவாஜி தாதாஜி கொண்டதேவிடம் வாய்விட்டுச் சொன்னான். “இதைக் கட்டாயப்படுத்தி நான் வாங்கி விடவில்லை ஆசிரியரே. சொல்லப் போனால் அவனே கட்டாயப்படுத்தி என்னிடம் ஒப்படைத்தான். போதுமா?”

கோட்டைகள் இந்த அளவு சுலபமாக யாரிடமும் ஒப்படைக்கப்படுவதில்லை என்பதை அறிந்திருந்த தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனைச் சந்தேகத்துடன் பார்த்து விட்டுச் சொன்னார். “ஒரு வேலையாள் ஒப்படைப்பதால் கோட்டை உன்னுடையதாகி விடாது. அதன் உரிமையாளர் அதை அங்கீகரித்தால் மட்டுமே கோட்டை உன்னுடையதாகும் சிவாஜி”

“அதை நான் அறிவேன் ஆசிரியரே. அதனால் தான் சுல்தானுக்கு அனுமதி கேட்டு உடனடியாகக் கடிதம் எழுத நிச்சயித்திருக்கிறேன்”

தன் பிரியமான மாணவன் ஏதோ தந்திர வேலையில் ஈடுபடுகிறான் என்பதில் தாதாஜி கொண்டதேவுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் சொன்னார். “சிவாஜி செய்வது நியாயம் தானா என்பதை மட்டும் பார்த்துக் கொள்” என்றார்.

சிவாஜி நியாய அநியாயத்தை விளக்க ஒரு கதை சொன்னான். “ஆசிரியரே. ஒரு குழந்தை ஒரு பொம்மையை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு பெரியவன் வந்து அந்தக் குழந்தையிடமிருந்து அந்தப் பொம்மையைப் பிடுங்கிக் கொண்டு தன்னிடம் வைத்துக் கொள்கிறான். குழந்தைக்கு அந்தப் பொம்மையை அவனிடமிருந்து சண்டை போட்டு வாங்குமளவு வலிமையில்லை. அது தந்திரமாக அவனிடம் இருக்கும் தன் பொம்மையை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறது. இப்போது யாராவது அந்தக் குழந்தையிடம் போய், “அவனிடமிருந்த அந்த பொம்மையை நீ அவனை ஏமாற்றி எடுத்துக் கொண்டு வந்து விட்டது தவறு” என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது சரியா ஆசிரியரே! நியாயம் தர்மம் அறிந்த நீங்கள் சொல்லுங்கள்.  பொம்மையை அந்தப் பெரியவன் பிடுங்கிக் கொண்டது சரியா? குழந்தை அந்தப் பொம்மையைத் திரும்ப எடுத்து வந்தது சரியா? அந்தப் பொம்மையின் சரித்திரம் தெரியாமல் குழந்தை திரும்ப எடுத்துக் கொண்டு வந்ததை மட்டும் பார்த்து தவறெனச் சொல்வது நியாயமா?”

“அந்தக் குழந்தை எடுத்துக் கொண்டு வந்தது தந்திர வழியானாலும் தவறில்லை” தாதாஜி ஒத்துக் கொண்டார். ஆனால் தொடர்ந்து சொன்னார். “அந்தப் பொம்மையும் கோட்டையும் ஒன்றாகி விடாதே சிவாஜி. அந்தக் கோட்டை உன்னுடையதல்லவே”

“அந்தக் கோட்டையை முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் கட்டியவர்கள் சிவனை வணங்கும் நம் சைவப் பெரியோர்கள். தங்கள் பலப்பிரயோகம் செய்து அன்னியர்கள் அதை அபகரித்திருக்கிறார்கள். அதை மீட்கும் அனைத்து உரிமையும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன் ஆசிரியரே. மீட்கும் கோட்டையை அன்னியர்களை விட நான் நன்றாகப் பராமரிப்பேன். அங்குள்ள மக்களின் நலனை அந்த அன்னியர்களை விடச் சிறப்பாய் நான் பார்த்துக் கொள்வேன். அந்த வகையில் அந்த மக்களுக்கும் நான் நல்லதையே செய்கிறேன். அதுவும் புண்ணியமே அல்லவா ஆசிரியரே”

தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனிடம் பேசி வெல்வது சிரமம் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டார். ஆனால் கண்டிப்பான குரலில் சொன்னார். “நீ சுல்தானுக்கு உன் வசம் கோட்டை இருப்பதைக் காரணத்துடன் தெரிவிக்க வேண்டும். அதை இன்றே நீ செய்ய வேண்டும்”

சிவாஜி மறுக்காமல் சொன்னன். “உத்தரவு ஆசிரியரே. இன்றே என் ஓலையை அனுப்புகிறேன்”

தாதாஜி கொண்டதேவும் ஷாஹாஜிக்கு சிவாஜி டோரணா கோட்டையைக் கைப்பற்றியதை அன்றே எழுதி அனுப்பினார். பெங்களூரில் முகாமிட்டு இருக்கும் ஷாஹாஜிக்கு அவர் ஓலை சென்று சேர்வதற்கு முன் சிவாஜி பீஜாப்பூரில் இருக்கும் சுல்தானுக்கு அனுப்பும் ஓலை போய் சேர்ந்து விடும். சுல்தான் என்ன செய்வாரோ என்ற கவலை அவரைத் தொற்றிக் கொண்டது. எல்லாம் சிவாஜி எப்படி ஓலை எழுதி அனுப்புகிறான் என்பதைப் பொருத்தது. என்ன எழுதுவானோ?

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. சுஜாதாJuly 9, 2018 at 6:48 PM

    அருமை சார். சிவாஜி கோட்டையைக் கைப்பற்றிய விதமும், ஆசிரியரிடம் வாதிடும் விதமும் சூப்பர்.

    ReplyDelete
  2. Sivaji's understanding of human nature is really extraordinary. Tempting the fort leader and at the same time confusing him is brilliantly done.

    ReplyDelete
  3. சிவாஜி கோட்டையை தன் வசமாக்கிய விதமும்..அதன் நியாயத்தை... பொம்மை கதை...மூலம் புரிய வைப்பதும் அருமை....

    'சுல்தானுக்கு எப்படி ஓலை அனுப்பி தனக்கு சாதகமாக்கிக் கொள்வான்?' என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete