என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, March 30, 2017

இருவேறு உலகம் – 23

செந்தில்நாதன் பொதுப்பணித் துறையை விசாரித்தார். அவர்கள் அந்த மலைக்குப் போகும் பாதையைச் சரி செய்யும் திட்டம் ஒன்றும் தங்கள் கைவசம் இல்லை என்றும் தாங்கள் அங்கே சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற தடுப்புகள் வைக்கவில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அது போன்ற தடுப்புகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன என்றும் அது நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்றும் சொன்னார்கள். அதனால் அவற்றை இரவு நேரத்தில் எங்கிருந்தாவது அப்புறப்படுத்திக் கொண்டு வந்து அந்தச்சாலையில் வைத்து விட்டு, மறுபடி காலையில் எடுத்த பழைய இடத்திலேயே வைத்து விட்டிருந்தால் அது யார் கவனத்திற்கும் வந்திருக்காது... மறு நாள் காலையில் அந்தப் பக்கம் போனவர்கள் யாரும் அந்தத் தடுப்புகளைப் பார்க்கவில்லை.... 

க்ரிஷைக் கடத்தவோ, கொல்லவோ யாராவது திட்டம் இட்டிருந்தால் அந்த நேரத்தில் வேறெந்த வாகனமும் அந்தப் பாதையில் வழிமாறிக்கூடப் போய் விட வேண்டாம் என்று ஜாக்கிரதை உணர்வுடன் அந்தத் தடுப்புகளை அங்கே வைத்திருந்திருக்கலாம். வேலை முடிந்தவுடன் அப்புறப்படுத்தி இருக்கலாம்... அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. கடத்திப் பணம் பறிப்பது உத்தேசமாக இருந்தால் கடத்தல்காரர்கள் இன்னேரம் கமலக்கண்ணனைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கொலை தான் உத்தேசம் என்றால் பிணம் இன்னேரம் கிடைத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாத குழப்ப நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை செந்தில்நாதன் யோசித்துக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு காரில் வந்தவர்கள் திரும்பவும் இன்று வந்தாலும் வரலாம் என்று தோன்றியதால் மலையடிவாரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருந்தார் அவர்.   அதை அறிந்தால் அவர்கள் வர மாட்டார்கள் என்ற போதும் நேற்றிரவு அவர்கள் வந்த உத்தேசம் இனியும் நிறைவேற வேண்டாம் என்று அவர் நினைத்தார். அந்த உத்தேசம் என்னவாக இருக்கும் என்று எத்தனையோ விதங்களில் யோசித்துப் பார்த்தார். எதையுமே யூகிக்க முடியவில்லை. இது வரை தன் சர்வீஸில் எத்தனையோ கேஸ்களை அவர் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கேஸ் போல எந்தக் கேஸும் பிடிகொடுக்காத கேஸாக இருக்கவில்லை.


புதுடெல்லி மனிதனுக்கு இது வரை தகவல்களைக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்குக் கூப்பிட்டுச் சொல்லும் வேலை மட்டுமே இருந்தது. அவன் அந்த வினோத ஆராய்ச்சியில் கிடைக்கும் எல்லா ரகசியத் தகவல்களையும் சொல்வான். மறுநாளே அவனுடைய மனைவியின் ரகசிய அக்கவுண்டில் பணம் போய்ச் சேர்ந்து விடும். முதல் முறையாக இந்த தடவை அந்தச் செல்போன் எண்ணிற்கு அவன் பேச முயற்சித்த போது போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர் முனை போனை எடுத்துப் பேசவில்லை.  அவன் பல முறை முயற்சி செய்த பிறகு அந்த எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்தது. நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் சர்ச்சிற்கு, நாளை மதியம் ஒரு மணிக்கு நேரில் வர உத்தரவாகியிருந்தது. 

தகவலைப் படித்தவுடன் முதலில் கோபம் வந்தது. நேரில் எல்லாம் வந்து சொல்ல மாட்டேன். விருப்பப்பட்டால் போனில் சொல்வதைக் கேட்டுக் கொள். இல்லாவிட்டால் ஆளைவிடுஎன்று கறாராகச் சொல்ல அவனுக்கு ஒரு கணம் ஆசை இருந்தது.

ஆனால் கிடைக்கின்ற  பணம் சிறிய தொகை அல்ல. அவன் மாதம் முழுவதும் வேலை பார்த்துச் சம்பாதிக்கும் தொகையை, தெரிவிக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் பெற்று வருகிறான். சில தகவல்கள் அவனுக்கே தலைகால் புரியாது. அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருப்பது போலவும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் சொல்வதெல்லாம் அப்படி ராணுவ ரகசியமும் கிடையாது. அப்படி இருக்கையில் பெரிய தொகையை விடவும் அவனுக்கு மனமில்லை. அதனால் கோபம் தணிந்து நாளை மதியம் ஒரு மணிக்குள் அந்த சர்ச்சிற்குப் போய்ச் சேர உத்தேசித்தான். அப்படியே பணம் தரும் அந்த ஆளைப் பார்த்தது போலவும் ஆயிற்று.....


மாஸ்டருக்கு அந்தப் பெண் விஞ்ஞானி போன் செய்தாள்.சார், எங்க டெக்னிகல் இஞ்சீனியர்ஸ் ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க. சாடிலைட்ல எந்த டெக்னிக்கல் ப்ரச்னயும் இல்லையாம். என்ன இருந்துச்சோ அதை தான் படம் எடுத்து அனுப்பிச்சிருக்கு. கருப்பா அந்த ஏரியா படம் வந்துருக்குன்னா, அந்த இடத்துல அப்படி ஏதாவது இருந்துருக்கணும்னு சொல்றாங்க.....

மாஸ்டர் கேட்டார். “சரி உங்க டிபார்ட்மெண்ட்ல என்ன முடிவு பண்ணினீங்க?

“அந்தக் கருப்புப் பறவை மேல தான் இப்போ முழு ஆராய்ச்சியும் திரும்பப் போகுது

மாஸ்டர் புன்னகைத்தார். விஞ்ஞானம் வளர வளர சந்தேகங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. நிரூபிக்கப்பட்டால் தான் நம்புவேன் என்கிறது விஞ்ஞானம். உள்ளுணர்வை நம்பு, உட்கருவைப் புரிந்து கொள் மீதி எல்லாம் தானே நிரூபணமாகும் என்கிறது மெய்ஞானம். மெய்ஞானம் கண்டதை விஞ்ஞானம் எப்போதுமே தாமதமாகத் தான் கண்டுபிடிக்கும்....

அந்த மலைக்குப் போய் க்ரிஷ் இருந்த இடத்தையும் மலையுச்சியின் அமைப்பையும் நேரிலேயே ஒரு முறை பார்க்க வேண்டும் என்றெண்ணி நேற்றிரவு போனது அந்தப் போலீஸ் அதிகாரி அங்கிருந்ததால் முடியாமல் போயிற்று. நல்லவேளையாக அந்தப் போலீஸ் அதிகாரி அடிவாரத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் சந்திப்பைத் தவிர்ப்பது முடியாமல் போயிருக்கும்....

தாடிக்கார இளைஞன் வந்து அவர் முன் வந்து நின்றான். “ஐயா நீங்க அவங்கள சந்திக்க வேண்டிய ஏற்பாடு எதாவது நான் செய்யட்டுமா?

பொறு. அவங்க நிலைமை இன்னும் கொஞ்சம் மோசமாகும். அப்ப    சொல்றேன்என்றார் மாஸ்டர். தூண்டில் போட  இன்னும் சமயம் வரவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அந்தக் காலம் வராமல் இயங்குவது வீண்.

அவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “இப்ப மாணிக்கமும், அவர் மகன் மணீஷும் க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்பியிருக்கறதா தகவல் வந்துருக்கு....க்ரிஷ் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் மணீஷ் மனம் பலவிதமான உணர்ச்சிகளால் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தது. க்ரிஷ் பிணம் கிடைக்காததும், வாடகைக் கொலையாளி இறந்ததும், வாடகைக் கொலையாளியின் போனில் இருந்து அழைப்புகள் வந்து திகில் மூட்டிக் கொண்டிருந்ததும் முன்பே அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இப்போது ஹரிணி அவன் வீட்டுக்குப் போய் வந்திருப்பது கூடுதல் வேதனையாக இருந்தது. போய் விட்டு வந்தவள் அவனுக்குப் போன் செய்தாள்.

“க்ரிஷோட அம்மா என்னைப் பாத்தவுடனயே அழுதுட்டாங்கடா. அதப் பாத்து எனக்கும் அழுகைய கட்டுப்படுத்த கஷ்டமா இருந்துச்சு.... அவங்க கிட்ட சொல்லியிருக்கேன்.... உங்க பையன் சூப்பர் மேனா திரும்பி வருவான்னு.... அவங்களைத் தைரியப்படுத்த சொல்லிட்டேன்.... அவங்க வீட்டுல இருந்து வர்றப்ப நான் சொன்னபடியே அவன் நல்லபடியா வந்துரட்டும் கடவுளேன்னு கடவுளை வேண்டிகிட்டே வந்தேன். டேய் ப்ளீஸ் நீயும் கடவுள வேண்டிக்கோடா

அவள் வார்த்தைகள் அவனை வெட்டிப் போட்டன. கஷ்டப்பட்டு “கண்டிப்பாஎன்றான்.

“ஆமா நீ ஏன் இது வரைக்கும் அவன் வீட்டுக்குப் போகல.... உன்னை அவங்கம்மா கேட்டாங்க

எனக்கு அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு புரியல. அதனால நான் அப்பா வந்தவுடனே போலாம்னு காத்திருந்தேன் ஹரிணி. இப்ப கிளம்பிகிட்டிருக்கோம்

அவளிடம் பேசி முடித்தவுடன் அவன் முகத்தில் தெரிந்த துக்கத்தைப் பார்த்து மாணிக்கம் மனமுருகினார். ‘திட்டப்படியே க்ரிஷ் செத்து அவன் பிணம்  இத்தனை பிரச்னை இல்லாம இருந்திருக்கும். பிணம் எப்போது கிடைக்குமோ?

க்ரிஷ் வீட்டுக்குப் போகும் வழி நெடுக தந்தையும் மகனும் மௌனமாகவே இருந்தார்கள். அங்கு அவர்கள் போன போது க்ரிஷ் வீடே மயான அமைதியில் மூழ்கியிருந்தது. எப்போதுமே கலகலவென்று இருக்கும் வீடு அது. இப்போது அங்கும் நிம்மதியில்லை, இங்கும் நிம்மதியில்லை, நிலவரம் என்ன என்று தெரியவில்லை என்று மனம் நொந்தார் மாணிக்கம்.

கமலக்கண்ணன் தன் நண்பர் மாணிக்கத்தைப் பார்த்தவுடன் கண்கலங்கினார். பத்மாவதி மணீஷைப் பார்த்தவுடன் கண்கலங்கினாள். உதய்க்கும் மணீஷைப் பார்த்தவுடன் தம்பியின் நினைவு அதிகமாவதைத் தவிர்க்க முடியவில்லை. மணீஷின் முகத்தில் தெரிந்த வேதனை க்ரிஷின் மேல் இருந்த அன்பினால் வந்தது என்று அவன் நினைத்துக் கொண்டான். மணீஷைத் தட்டிக் கொடுத்தான்.

மாணிக்கம் கமலக்கண்ணனிடம் எல்லாவற்றையும் பொறுமையாக முகத்தில் வருத்தம் காட்டிக் கேட்டுக் கொண்டார். கடைசியில் சொன்னார். “கவலைப்படாதே கண்ணன். செந்தில்நாதன் திமிர் பிடிச்ச ஆளாயிருந்தாலும் திறமையானவர். யாராவது கடத்தியிருந்தாலும் கண்டுபிடிச்சு மீட்டுக்  கொடுத்துடுவார்  

கமலக்கண்ணன் கண்கள் ஈரமாகச் சொன்னார். “வேண்டாத தெய்வமில்லை. என் பையன் தர்மம் காப்பாத்தும்னான். நாங்களாவது முன்னபின்ன இருந்திருக்கோம். அவன் சரியாவே இருந்தவன். அவனை அந்த தர்மம் காப்பாத்தும்னு நம்பறேன்....

உனக்கு யார் மேலயாவது சந்தேகமிருக்கா கண்ணன்?என்று மாணிக்கம் கேட்டார்.

அப்படி சந்தேகம் யார் மேலயும் வரலையே மாணிக்கம்...

பத்மாவதி கண்களைத் துடைத்துக் கொண்டே மாணிக்கத்திடம் சொன்னாள். “அண்ணா அந்த மலைப்பகுதில பேய் நடமாட்டம் இருக்கறதா பேசிகிட்டாங்க ஞாபகம் இருக்கா? எனக்கென்னவோ அது மேல தான் சந்தேகம்?

உதய் மெல்ல தந்தையைக் கேட்டான். “ஏம்ப்பா பேய் மேல நடவடிக்கை எடுக்க முடியுமா?

கமலக்கண்ணனுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. இவன் மட்டும் இல்லை என்றால் இந்த வீடே சுடுகாடு போல் ஆயிருக்கும்!

பத்மாவதி தன்னையும் மீறி புன்னகை செய்து விட்டு மகன் மேல் கோபப்பட்டாள். “இவனுக்கு ஜோக் அடிக்க நேரம் காலமே கிடையாது. நானே என் பிள்ளையைக் காணோம்னு தவிச்சுகிட்டிருக்கேன்...

உதய் தாய் அருகே போய் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான். “சும்மா அழுதுகிட்டே இருந்தா உன் முகத்த பார்க்க சகிக்கல. ஹரிணி சொன்ன மாதிரி உன் பையன் சூப்பர் மேனாட்டம் வருவான் பாரு”.

திடீர்னு நல்ல செய்தி வரும் ஆண்ட்டி, கவலைப்படாதீங்கஎன்று தன் பங்குக்கு மணீஷும் சொல்லி வைத்தான். அப்படிச் சொன்னதாக அவனும் ஹரிணியிடம் சொல்லலாம்....

அவன் சொல்லி முடித்த போது உதய் செல்போனில் ஏதோ தகவல் வந்த மணிச்சத்தம் கேட்டது. சுரத்தே இல்லாமல் செல்போனை எடுத்து, வந்த தகவலைப் படித்த உதய் முகத்தில் திகைப்பும் பிரமிப்பும் கலந்து தெரிந்தது.

கமலக்கண்ணன் மனம் நடுங்கக் கேட்டார். “என்னடா?

“தம்பி அனுப்பியிருக்கான். நலமா இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். அப்பா அம்மா கிட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லுன்னு அனுப்பி இருக்கான்.

மாணிக்கம் சந்தேகத்தோடு கேட்டார். “அவன் தான் அனுப்பிச்சிருக்கான்னு எப்படித் தெரியும்?

“அவன் மொபைல்ல இருந்து தான் மெசேஜ் வந்திருக்கு

(தொடரும்)      

என்.கணேசன்   

7 comments:

 1. Amazing writing and interesting from all angles. Thanks for Thursday treats sir.

  ReplyDelete
 2. சுஜாதாMarch 30, 2017 at 6:29 PM

  சூப்பர் சார். க்ரிஷ் குடும்பம் மேல் தனியான அன்பு பிறந்துடுச்சு. நல்ல கேரக்டரைசேஷன்.

  ReplyDelete
 3. க்ரிஷ்! வருவன் நம்பிக்கை நிறைவேறியது. நன்றி.

  ReplyDelete
 4. I am a regular follower of your blog. I like the way you are writing. You are keeping lot of suspense in this story from beginning. If I ever get heart attack you are the one to be blamed. Can't wait...

  ReplyDelete
  Replies
  1. Add me also in this list. Couldn't wait till Thursday. So come regularly to this blog and read earlier chapters again and again. Suspense and charaterisation are excellent in his writing.

   Delete