என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, March 9, 2017

இருவேறு உலகம் – 20


செந்தில்நாதன் இந்தப் புதிய வரவை எதிர்பார்த்திருக்கவில்லை. எதாவது தடயம் கிடைக்கிறதா என்றும் இரவுச் சூழலில் அந்தச் சம்பவ இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் வந்தாரே ஒழிய இந்த இரவு நேரத்தில் வேறொரு சந்திப்பு நிகழும் என்று நினைத்திருக்கவில்லை. வருவது யாரென்று அறிய பரபரப்புடன் அவர் காத்திருந்தார்.

வந்து கொண்டிருந்தது கருப்பு நிறக்கார் என்பது மட்டும் தெரிந்தது. காரிருளும், தெருவிளக்கின்மையும் அதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள விடாமல் தடுத்தன். அந்தக்  கார் மலையடிவாரத்தை நெருங்கும் வரை சீரான வேகத்திலேயே வந்தது. மலை அடிவாரத்தை நெருங்கிய போது தான் அடிவாரத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை காரில் வந்தவர்(கள்?) கண்டிருக்க வேண்டும். மிக வேகமாகத் திரும்பிய கார் வந்த வழியில் வாயு வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது.

செந்தில்நாதன் திகைத்தார். உடனே வேகமாகக் கீழே இறங்கிப் போய்ப் பின் தொடரவும் வழியில்லை... அவர் கீழே இறங்குவதற்குள் அந்தக் கார் பல கிலோமீட்டர்கள் கடந்திருக்கும். கார் தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தவுடனேயே இறங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

வந்து போனவர்கள் இங்கே எதற்கு வந்தார்கள்? க்ரிஷ் தலைமறைவு சம்பந்தப்பட்ட ஆட்களா அவர்கள்? ஏதாவது தடயங்களை விட்டு விட்டுப் போய் விட்டார்களா, அதைத் தேடி வந்தார்களா? உதயின் ஆட்கள் இங்கு ஒவ்வொரு அங்குலமாகத் தேடி விட்டுப் போயிருக்கிறார்கள். ஏதாவது தடயம் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் கையில் சிக்கியிருக்கும் என்பதை இவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா? செந்தில்நாதனுக்கு குழப்பமாக இருந்தது. யாராக இருந்தாலும், வந்தது எதற்காக இருந்தாலும் போலீஸ் பார்வையில் விழுவதை விரும்பவில்லை என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது.

யோசனையுடன் அவரும் அங்கிருந்து கிளம்பினார்.மாணிக்கத்திடம் பஞ்சுத்தலையர் என்ன நடந்தது என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அருகே மணீஷ் அமர்ந்திருந்தான். தந்தையின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆவலாக இருந்தது. அவர் அறிவு கூர்மையானது. பிரச்னைகளை வேர் வரை சென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பிரத்தியேக சக்தி அவருக்கிருந்தது. அவர்கள் இருவருக்கும் புரியாதது அவருக்கு ஏதாவது புரியுமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

தன் தாய்மாமனின் விவரிப்பை முழுவதுமாகக் கேட்டு முடிக்கும் வரையில் அவர் இடைமறிக்கவில்லை. முடித்த பின்னும் சில நிமிடங்கள் மௌனமாக அவர் அமர்ந்திருந்தார்.

மணீஷ் க்ரிஷின் கொலைக்கு ஒரு சாட்சி இருந்து, வாடகைக் கொலையாளிடம் பேரம் படியாமல் அவனைக் கொன்று விட்டு இப்படி ப்ளாக்மெயில் செய்ய வய்ப்பிருக்கிறது என்று தோன்றுவதாகச் சொன்ன போது அவர் மெல்லச் சொன்னார். “அதுக்கு வாய்ப்பில்ல. ஏன்னா கொன்னதைப் பாத்தவன் கொலைகாரனை மிரட்டலாமே ஒழிய பிணத்தை எடுத்துட்டு போக மாட்டான் மணீஷ். பிணம் கிடைச்சுருந்துதுன்னா நீ சொன்ன மாதிரி இருக்க சான்ஸ் இருக்கு. ஆனா க்ரிஷோட பிணம் இன்னும் கிடைக்கலயே...” 

அவர் சொல்வதும் சரியாகவே தோன்றியது.

“வேற என்ன தான் நடந்திருக்கும்னு நினைக்கறே?பஞ்சுத்தலையர் நொந்து போய் மருமகனிடம் கேட்டார்.

“எதையும் நினைக்க முடியல. ஒரு பக்கம் சரியா இருக்கற மாதிரி இருந்தா இன்னொரு பக்கம் உதைக்குது. அந்த மலை மேல வாடகைக் கொலையாளி என்ன செஞ்சுட்டு வந்தான்னு தெரிஞ்சிருந்தா ஏதாவது ஒரு யூகத்துக்கு வந்திருக்கலாம். நீங்க அதை அவன் கிட்ட கேட்டிருக்கணும்....

“கேக்கப் போன நேரத்துல தான் உன் மகன் போன்ல பேசி கழுத்தறுத்தான்....என்று பஞ்சுத்தலையர் சலித்துக் கொண்டார்.

மணீஷ் பலவீனமாகச் சொன்னான். “எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்துச்சு.... அதான் அவர் கிட்ட ரெண்டு வார்த்தை பேசினேன்....

“ரெண்டு வார்த்தையா? அவன் கார்ல இருந்து என்னை இறக்கி விடற வரைக்கும் பேசினயே!........“ பஞ்சுத்தலையர் அங்கலாய்த்தார்.

டென்ஷனா இருந்துச்சு..... அதனால தான்....என்று மணீஷ் மெல்ல இழுத்தான்.

மகன் நிலைமை மாணிக்கத்திற்குப் புரிந்தது. முதல் முறையாகப் பெரியதொரு குற்றம் புரியும் போது எல்லோருக்கும் இது போல் படபடப்பு இருப்பது சகஜம் தான்.....

“மொத்தத்துல எனக்கு நேரம் சரியில்ல. சரியா தூங்க முடியல. எப்ப அவன் போன் பண்ணுவான்னு திகிலாவே இருக்கு....என்று சொல்லிப் பஞ்சுத்தலையர் பெருமூச்சு விட்டார்.

மாணிக்கம் தன் தாய்மாமனை இது போல் பயந்த நிலையில் இதுவரையில் பார்த்ததில்லை. முதல் முறையாக இது நடந்திருக்கிறது….

மாணிக்கத்தின் தந்தையார் அக்காலத்தில் நிறைய நிலபுலன்களை தஞ்சாவூரில் வைத்திருந்தார். அழகாக இருந்த ஒரே காரணத்திற்காக ஒரு ஏழை விவசாயியின் மகளைத் திருமணம் செய்து கொண்டவர் அவர். திருமணமாகி வரும் போது அவர் மனைவி வேறு வேலைவெட்டி இல்லாத தன்  தம்பி சங்கரமணியையும் புகுந்த வீட்டுக்கு அழைத்து வந்தாள். அங்கு கணக்கு எழுதவும், வேலைக்காரர்களை கட்டி மேய்க்கவும் அவர்களுக்கு ஆள் தேவைப்பட்டது.  சங்கரமணி தன் வேலையைக் கச்சிதமாகவே செய்தார்.

பிறந்த வீட்டில் பலர் முன் கை கட்டி நிற்க வேண்டியிருந்த சங்கரமணிக்கு அக்காவின் வீட்டில் பல வேலைக்காரர்கள் தன் முன் கை கட்டி நிற்பது பெரியதொரு கௌரவத்தைத் தந்தது. வேலை கிடைக்காமல் பலர் பட்டினி கிடந்த அந்தக்காலத்தில் பணக்காரன் வைத்தது தான் சட்டமாக இருந்தது.  அந்த அதிகாரத்தை அக்காவின் கணவரை விட அதிகமாக சங்கரமணி பயன்படுத்திக் கொண்டார். அவரிடம் யாராவது வேலையாள் சிறிய மரியாதைக்குறைவு காட்டினாலோ, சொன்னபடி கேட்காவிட்டாலோ எந்தெந்த விதத்தில் அவர்களைப் பாடாய் படுத்த முடியுமோ அந்தந்த விதத்தில் பாடுபடுத்தினார். அதற்காக ஓய்வில்லாமல் மெனக்கெட்டார். அப்போது அவரிடம் பாடுபட்டவன் ஒருவன் சங்கரமணிக்கு சகுனி என்று பெயர் வைக்க அந்தப் பெயர்ப்பொருத்தம் சரியாக இருப்பது பார்த்து பலரும் அவரைச் சகுனி என்றே தங்களுக்குள் குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

சகுனி என்று பெயர் வைக்கப்பட்டது சங்கரமணி காதிலும் விழுந்தாலும் அதையும் ஒரு பெருமையாகவே அவர் எடுத்துக் கொண்டார். “சகுனி இல்லாட்டி மகாபாரதமே இல்லடா. உங்க கிருஷ்ண பரமாத்மாவுக்கே வேலை இருந்திருக்காது....

மாணிக்கத்தின் தந்தை சில வருடங்களுக்குள்ளேயே மரணம் அடைந்து விட சங்கரமணியின் ஆட்சி மேலும் பலப்பட்டது. மாணிக்கமும் படிப்பதில் காட்டிய ஆர்வத்தை பண்ணை நிர்வாகத்தில் காட்டவில்லை. எனவே தனி ராஜாவாக சங்கரமணி இருந்தார்.

அவர் திருமணம் செய்து கொண்டு மனைவியையும் அக்கா வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அவர் மனைவி வாயில்லாப்பூச்சியாக இருந்தாள். இரண்டு மகள்களைப் பெற்றுக் கொடுத்து விட்டு அவளும் கண்ணை மூடினாள். காலப்போக்கில் மாணிக்கத்தின் தாயும் மறைந்தாள். மாணிக்கத்திற்குத் தன் மூத்த மகளையே சங்கரமணி திருமணம் செய்து வைத்தார்.

மாணிக்கம் ராஜதுரையால் கவரப்பட்டு அரசியலுக்குள் நுழைந்து அரசியலில் முன்னுக்கு வர ஆரம்பித்த போது மருமகனுக்கு உதவ சங்கரமணி ஆவலுடன் முன்வந்தார். மாணிக்கம் அரசியலில் படிப்படியாக முன்னேற முன்னேற அதிகாரத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அவரை விட அதிகமாகப் பரிசோதனைகள் செய்து பார்த்தவர் சங்கரமணி. மருமகனுக்கு அரசியலில் பக்க பலமாக இருப்பதால் இரண்டாம் மகளை செல்வாக்கு மிகுந்த இடத்தில் கட்டிக் கொடுத்த பின்னும் ஹைதராபாத்தில் உள்ள அவள் வீட்டிற்கு அவர் போவது மிக அபூர்வம். அவளே கணவர், குழந்தைகளுடன் தந்தையைப் பார்க்க வருவாள். ஒரு சந்தர்ப்பத்தில் மாணிக்கத்துக்கும் அவரது இரண்டாம் மருமகனுக்கும் ஏதோ சின்ன மனஸ்தாபம் ஆன பிறகு இரண்டாம் மகளும், அவள் வீட்டினரும் மாணிக்கம் வீட்டில் இருக்கும் அவரை வந்து சந்திக்க சங்கடப்பட்டனர்.

வேறுவழியில்லாமல் சங்கரமணி அவர்களுக்காக வேறு தனி வீடு பார்த்துக் கொண்டு போனார். ஆனால் தினமும் வந்து மாணிக்கத்தின் அரசியல் நிர்வாகக் காரியங்களில் பங்கெடுத்துக் கொள்ள மட்டும் அவர் தவறவில்லை. மாணிக்கம் அமைச்சரான பிறகு பல கோடிகள் சம்பாதித்தாலும் வசூல் செய்வதும், அதைப் பாதுகாப்பாக எங்கே எப்படி வைப்பது என்றும் முடிவு செய்வதும் சங்கரமணி தான். பலரும் மாணிக்கத்திடம் காரியம் ஆக வேண்டும் என்றால் முதலில் சங்கரமணியைப் பார்த்து அவரைத் திருப்தி செய்தால் தான் அது முடியும் என்று அறிந்து அதன்படியே நடந்து கொண்டார்கள். சங்கரமணி இந்த அளவு சம்பாத்தியம் இல்லாத இரண்டாம் மகள் குடும்பத்திற்கு, இங்கு சம்பாதிப்பதில் கால் பாகம் ஒதுக்கி அனுப்பியும் வைத்தார். அதை மாணிக்கம் கண்டுபிடித்திருந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

பல்வேறு வேலைகளுக்கு நடுவிலும் அவரைப் பகைத்துக் கொண்ட அதிகாரிகள், எதிர்க்கட்சிக்காரர்கள், வேலைக்காரர்கள் போன்றோர் வாழ்க்கையை எப்படி நரகமாக்குவது என்று அறிந்து அதையும் சிரத்தையுடன் சங்கரமணி யோசித்து யோசித்து செய்தார். பணமும், அதிகாரமும் முன்பை விடச் சிறப்பாக அதைச் செய்ய உதவின. பலருக்கு அவர் சிம்ம சொப்பனமாக ஆரம்பித்தார். தமிழக அரசியலிலும் சகுனி என்ற பெயர் பிரபலமாக ஆரம்பித்தது. சில நேரங்களில் மாமன் தேவையில்லாமல் குரூரமாக நடந்து கொள்வதாக மாணிக்கத்துக்குத் தோன்றும். ஆனால் அந்தக் குரூரம் அந்த மனிதருக்கு மூச்சு போல, உணவு போல மிக முக்கியமான ஒன்று என்பதை அவர் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்ததால் அதைத் தடுக்கப்போனதில்லை. சிலர் அவரிடம் ஜாடை மாடையாகவும், நேரடியாகவும் அவர் பற்றி புகார் செய்திருக்கிறார்கள். “எனக்கும் கூடப் பிடிக்கவில்லை, என்ன செய்வது, வயதானவர், மாற்ற முடியாதுஎன்கிற வகையில் பதில் சொல்லி மாணிக்கம் சமாளிப்பார்.

ஒரு கட்டத்தில் ராஜதுரை வரையிலுமே  சங்கரமணி பற்றிய புகார்கள் போகவே, அவர் மாணிக்கத்தை அழைத்து எச்சரித்தார். மாணிக்கம், உன் மாமனைக் கொஞ்சம் அடக்கி வை....

அப்போது மட்டும் மாமனை மாணிக்கம் எச்சரித்திருக்கிறார். “மாமா நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க. ஆனா சி எம் வரைக்கும் எதுவும் போகாத மாதிரி பாத்துக்கோங்க.  போனா ஆபத்து. அவரு சில விஷயத்துல ரொம்பவே கறார்....

அதன் பின் தான் சங்கரமணி ஓரளவாவது கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்தார்.....

அப்படிப் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாமனே இப்படி தூக்கம் தொலைந்து புலம்பும் அளவுக்கு அவரிடம் விளையாடுவது யாராக இருக்கும் என்று மாணிக்கம் யோசித்தார். அது யாரேயானாலும் அவர்களுடைய அரசியல் வாழ்வை அஸ்தமிக்க வைக்கும் சக்தி படைத்தவர்களாக இப்போது இருக்கிறார்கள் என்கிற உண்மை ஆபத்தின் அளவை மாணிக்கத்திற்கு உணர்த்தியது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பது மட்டும் புரிந்தது.  

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. சுஜாதாMarch 9, 2017 at 6:36 PM

    பஞ்சுத்தலையர் கேரக்டர் செம யதார்த்தம். புலம்பலும் தான்.

    ReplyDelete
  2. Nice characterization.

    ReplyDelete