ராஜதுரை கட்சி ஆரம்பித்த போது ஆரம்பகால
உறுப்பினராகச் சேர்ந்தவர் மாணிக்கம். படித்தவராகவும், புத்திசாலியாகவும் அவர்
இருந்ததால் ராஜதுரை மாணிக்கத்திற்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு தந்திருந்தார்.
அந்தக் காலத்தில் தான் கமலக்கண்ணன்
ராஜதுரையின் அடியாளாகச் சேர்ந்தார். குறுகிய
காலத்தில் தன் விசுவாசத்தால் கட்சியில் இடம் பிடித்த கமலக்கண்ணன் பின் கட்சி வளர
வளர மாணிக்கத்திற்கு இணையாகவே வளர ஆரம்பித்தார். அது ஆரம்ப காலத்தில்
மாணிக்கத்திற்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது.
தனக்குக் கிடைத்த
உயர்வுகள் சந்தோஷப்படுத்திய போதிலும் இணையான உயர்வுகளைத் தகுதியில்லாத ஆளாக அவர்
நினைத்த கமலக்கண்ணனுக்கும் ராஜதுரை தந்து வந்தது சந்தோஷத்தைப் பாதியாகக்
குறைத்தது. ஆனாலும் காலப்போக்கில் அரசியலில் கமலக்கண்ணனை விட மோசமானவர்களும்,
கழிசடைகளும் வந்து சேரவே கமலக்கண்ணன் எவ்வளவோ தேவலை என்கிற எண்ணம் வந்து அவர்
கமலக்கண்ணனிடம் நட்பு பாராட்ட ஆரம்பித்தார். அவர் மனைவியும் பத்மாவதியுடன் நட்பாகி விடவே
இரண்டு குடும்பங்களும் நெருங்கிய குடும்பங்களாகின. சங்கரமணியை மட்டும் ஏனோ
கமலக்கண்ணனாலும், அவர் குடும்பத்தாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சங்கரமணிக்கும் எடுபிடி, அடியாளாய் இருந்த ஒரு ஆள் தன் மருமகனுக்குச் சரிசமமாக
வளர்ந்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இந்த நட்பில் சங்கரமணி விலகியே நின்றார்.
இருவருக்கும்
குழந்தைகள் பிறந்தன. கமலக்கண்ணனின் மூத்த மகன் உதய் ஓரளவு படித்தாலும் பல
விஷயங்களில் இன்னொரு கமலக்கண்ணனாக வளர்ந்தான். ஆனால் ஒரு மாத வித்தியாசத்தில்
பிறந்த மாணிக்கத்தின் மகன் மணீஷும், கமலக்கண்ணனின் மகன் க்ரிஷும் நல்ல
அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். அது இரு குடும்பங்களை ஏகதேச சரிநிகர்
நிலையில் நிறுத்தியதாக மாணிக்கம் உணர்ந்தார். அவருக்கு மகனின் அறிவுத்திறன்
குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. அவனை ஊட்டி கான்வெண்டில் படிக்க வைத்து அவன்
நுனிநாக்கு ஆங்கிலத்தையும், கான்வெண்டில் சேர்ந்த நாளில் இருந்து வெளியே வரும்
நாள் வரை எந்தத் தேர்விலும், எந்த ஆண்டிலும் முதல் நிலை மாணவன் என்ற இடத்தை
விட்டுக் கொடுக்காத தன்மையையும் பெருமிதத்துடன் ரசித்தார். இரு குடும்ப நட்பு
ஆழப்பட்டது.
ஆனால் உதயின்
வளர்ச்சி சங்கரமணியை மிகவும் உறுத்தியது. அவன் அரசியலில் நுழைந்து பாராளுமன்ற
உறுப்பினராகி சற்று பிரபலமும் ஆகி விட்ட பின் அவர் எப்போதும் மருமகனிடம் சொல்வார். “மத்தியில மூத்த
பையனை அவன் பலப்படுத்திட்டான். மாநிலத்துல உன்னை விட அவனுக்கு நல்ல பேர் இருக்கு.
ராஜதுரையும் உன்னை விட அதிகமா அவனை நம்பறான். இதெல்லாம் நல்லதுக்கல்ல.”
அவர் வார்த்தைகளில்
இருந்த உண்மை மாணிக்கத்திற்கு மனதோரத்தில் ஒரு உறுத்தலாகவே இருந்தது.
நிர்வாகத்திறனைப் பொருத்த மட்டில் அவர் கமலக்கண்ணனை விட எத்தனையோ சிறந்தவர். ஆனால் அரசியல் களத்தில் கமலக்கண்ணன்
மக்களிடமும், ராஜதுரையிடமும் கூடுதலாக நல்ல பெயர் எடுத்தவராக இருந்தார். அதற்குக்
காரணங்கள் இருந்தன. என்ன ஆனாலும் சரி களத்தில் இறங்கி கமலக்கண்ணன் வேலை செய்பவராக
இருந்தார். அடிமட்டத் தொண்டர்கள் மீதும், மக்கள் மீதும் அவருக்கு ஒரு தனிப்பாசம்
இருந்தது. ‘தானும் அங்கிருந்தே வந்தவன்’ என்பதை அவர் மறக்கவில்லை... அவர் இரண்டாம் மகன் மறக்க விடவில்லை....
தான் சம்பாதித்தாலும் கூட மக்களுக்கும் பல நல்லது செய்திருக்கிறார்.
மாணிக்கத்திற்கு
அடிமட்டத் தொண்டர்களும், அடித்தட்டு மக்களும் உண்மையிலேயே கசந்தார்கள். அவரால்
அதிகமாக அவர்களை நெருங்க முடியவில்லை. பொதுவாக அடிமட்ட நிலையில் அவர் வேலைகளைக்
கையாள்வதும் சங்கரமணியானதால் மேல்மட்டத்திலேயே இருந்து அவர் பழகி விட்டார். மேலும்
பொதுவாகவே அவர் பேசுவது குறைவானதால் அவரால் கமலக்கண்ணன் அளவுக்கு ராஜதுரையிடமும்
நெருக்கமாகப் பழக முடியவில்லை. தனக்கு என்ன பிரச்னையானாலும் உரிமையோடு போய்
ராஜதுரையிடம் சொல்லி அறிவுரை கேட்ட கமலக்கண்ணன், அதே போல் ராஜதுரைக்காக எந்த
அடிமட்டத்திற்கும் இறங்கி அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்.
மாணிக்கத்தால் இந்த இரண்டுமே முடியவில்லை. இப்படிச் சில விதங்களில் கமலக்கண்ணனை
விட மாணிக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இதுவும் அவர் ‘ஈகோ’வைப் பெரிதும் பாதித்தது.
கல்லூரியில் மகன்
சேர்ந்த பின்னர் அவர் தன் மகனும் கமலக்கண்ணனின் மகனுக்குப் பின்னுத்தள்ளப்பட்டதை
உணர்ந்த போது அதிர்ந்தே போனார். அவர் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
க்ரிஷ் அறிவாளி என்பது தெரியும். ஆனால் இந்த அளவு அறிவாளியென்பது அவருக்குத்
தெரிந்திருக்கவில்லை. அதுவும் அவனுடைய ரசிகராகி விட்ட ஒரு பேராசிரியர் அவனைப் பல
பல்கலைக்கழகங்களில் பாராட்டிப் பேசி, பலரிடம் பரிந்துரை செய்து அவனைப் பல
கல்லூரிகளிலும், அறிவுசார்ந்த மேடைகளிலும் பேசச் செய்தார். இப்படி க்ரிஷ் புகழ் பல
விதங்களிலும் ஓங்கி வளர மணீஷ் பொலிவிழ்ந்து வாடினான். மற்ற பின்னடைவுகள் கூடத் தாங்க
முடிந்த அவருக்கு அவருடைய ஒரே மகன், புத்திசாலி மகன், செல்ல மகன் முகவாட்டம்
மட்டும் சிறிதும் தாங்க முடியாததாகவே இருந்தது.
இந்த நிலையில்
ராஜதுரைக்கு மாரடைப்பு வந்தது. அவர் இன்னொரு மாரடைப்பைத் தாங்க மாட்டார் என்று
மருத்துவர்கள் கூறி விட்டார்கள். ராஜதுரைக்கு ஒரே மகள். அவளும் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கித் தன் கணவனுடன் நிரந்தரமாகத்
தங்கி விட்டிருந்தாள். எனவே அரசியல் வாரிசுகளாக குடும்ப நபர்களும் இல்லாத சூழலில்
அவருக்கு அடுத்த கட்ட நிலையில் இருக்கும் அமைச்சர்களே அடுத்த முதல்வராக முடியும்
என்ற நிலைமை நிலவியதால் சங்கரமணி தன் மருமகனை முதல்வராக்கிப் பார்க்க
ஆசைப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்து இப்போது பின்வாங்க
ஆரம்பித்திருக்கிற மருமகன் முன்னுக்கு வருவது அவசியம் என்று நினைத்தார். அல்லது
கமலக்கண்ணனை சற்றுப் பின்வாங்க வைக்க வேண்டும் என்பதை மருமகனிடம் அவ்வப்போது சொல்ல
ஆரம்பித்தார்.
இந்த சூழ்நிலையில்
அதுநாள் வரை வாட்டம் அடைந்திருந்த மணீஷ் முகத்தில் மகிழ்ச்சிக் களை பரவ
ஆரம்பித்ததை மாணிக்கமும், சங்கரமணியும் கவனித்தார்கள். மகன் யாரையோ காதலிக்கிறான் என்பது
மாணிக்கத்திற்குப் புரிந்தது. ஒரு நாள் அவன்
பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல ஹரிணி வந்திருந்தாள். அப்போது மணீஷ் முகத்தில்
தெரிந்த பூரிப்பு அவன் காதலிக்கும் பெண் அவள் என்பதையும் தெரிவித்தது.
“அந்தப் பொண்ணோட
அப்பா இறந்துட்டாராம். அம்மா ஏதோ இன்ஷூரன்ஸ் கம்பெனில வேலை பண்றாராம்” என்று அதிருப்தியுடன் சங்கரமணி சொன்ன போது மாணிக்கம் சொன்னார். “அந்தஸ்து
எல்லாம் பாக்க வேண்டாம் மாமா, அவனுக்குப் பிடிச்சிருந்தா சரி....”
”வயசு இப்ப தானே இருபத்தி மூணு முடியப் போகுது. இப்பவே
என்ன கல்யாணத்துக்கு அவசரம்”
“அவசரத்துக்குச்
சொல்லலை. எப்பவானாலும் அவனுக்குப் பிடிச்சுருந்தா வேற எதுவும் நாம சொல்லக்
கூடாதுன்னு சொன்னேன்”
சங்கரமணி பெருமூச்சு
விட்டார். அவர் இரண்டாம் மகளின் நாத்தனார் பெண் செகந்தராபாத்தில் பல கோடி
சொத்துகளுக்கு ஒரே வாரிசு. அவளை அவர் யோசித்து வைத்திருந்தார்.... ஆனாலும் பல
தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விட்ட நிலையில் அந்தஸ்து, சொத்து எல்லாம்
பார்ப்பது அவசியம் இல்லாதது என்பது அவருக்கும் புரிந்தது. மெல்ல ஒரு நாள் பேரனிடம்
பேச்சுக் கொடுத்தார். அவன் ஹரிணி மேல் உயிரையே வைத்திருக்கிறான் என்பதும் அவள்
ஆரம்பத்தில் க்ரிஷைக் காதலித்து இப்போது இருவரும் விலகி இருக்கிறார்கள் என்பதும்
தெரிந்தது. மேலும் சில கேள்விகளை கேட்டுப் பதில் பெற்றுக் கொண்ட அவர் நிறைய
யோசித்து விட்டு மாணிக்கத்திடம் தனியாகப் பேசினார்.
“அந்தப் பொண்ணு
இன்னும் க்ரிஷை ஒரேயடியா மறந்த மாதிரி தெரியல. அது காதலர்களோட ஊடலா தெரியுது. அவன்
எப்ப மனசு மாறினாலும் அந்தப் பொண்ணு பழையபடி அவன் கூடப் போயிடுவா. பாவம் உன்
மகனுக்குப் புரியல.”
மாணிக்கத்திற்கு அது
அதிர்ச்சியாக இருந்தது. விதி கமலக்கண்ணன் குடும்பத்திற்கு மட்டும் எப்போதுமே
சாதகமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. மறுபடி மகன் முகத்தில் வேதனையைப் பார்க்க
வேண்டி இருக்கும் என்கிற எண்ணமே அவருக்குத் தாங்க முடியாததாக இருந்தது.
“எல்லாத்தையும் சரி
செய்ய ஒரு வழி இருக்கு” என்றார் சங்கரமணி.
என்ன
என்பது போல் மாணிக்கம் பார்த்தார்.
“க்ரிஷ்
செத்துட்டா எல்லாமே சரியாயிடும்”
மாணிக்கம் சொன்னார்.
“அவன் எப்ப சாகிறது. எல்லாம் எப்ப சரியாகறது?”
“இப்ப எல்லாம்
எத்தனயோ விபத்து நடக்குது” என்று உட்பொருள் வைத்து மாமன்
சொன்ன போது மாணிக்கம் அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தார்.
சங்கரமணி சொன்னார்.
“பாரு. நாளைக்கு ராஜதுரை செத்தான்னா, இன்னைக்கு இருக்கற சூழல்ல கமலக்கண்ணன் தான்
அடுத்த முதல்வர். அவன் மகன் மத்திய மந்திரியாவான். அவன் சின்ன மகன் அந்த ஹரிணி
பொண்ண கட்டிகிட்டு சந்தோஷமா இருப்பான். அவன் அறிவு அவனை என்னென்னவோ செய்ய வைக்கும்
பேர் புகழ் வாங்குவான். கமலக்கண்ணன் குடும்பம் ஆகாசத்துல இருக்கறப்ப, உன் பையன்
அட்ரஸ் இல்லாம இருப்பான். நீ இதே நிலைமைல இருப்பாய். இது வேணுமா”
மாணிக்கத்திற்கு அவர்
சொன்னதை யோசித்துப் பார்க்கவே திகிலாக இருந்தது. சங்கரமணி மருமகனை முழுவதும்
யோசிக்க விடவில்லை. தொடர்ந்து சொன்னார். “எனக்குத் தெரிஞ்சு ஒரு வாடகைக் கொலையாளி
இருக்கான். அவன் பல கொலைகளைச் செஞ்சிருக்கான். எல்லா மரணமுமே பாம்புக்கடியாலன்னு
எல்லாரையும் நம்ப வச்சிருக்கான்.... க்ரிஷ் எல்லா அமாவாசையும் ஏதோ மலைக்குத் தனியா
ஆராய்ச்சிக்குப் போறான். உதய் கூட தடியன்க நாலு பேர் இருக்கற மாதிரி இவன் கூட
யாரும் இருக்கறதுல்லை”
மாணிக்கத்திற்குத்
தலை சுற்றியது. சங்கரமணி சொன்னார். “கமலக்கண்ணன் வீட்டுல அந்தப் பையன்னா
எல்லாருக்கும் உயிர். அந்த உயிர் போச்சுன்னா எல்லாருக்குமே சேர்ந்து ’செக்’ வச்ச மாதிரி இருக்கும். கமலக்கண்ணனுக்கும் இதயக் கோளாறு இருக்கு. பையன்
செத்த வருத்தத்துல அவனே போய்ச் சேர்ந்தாலும் சேர்ந்துடுவான்.... அடுத்த முதலமைச்சரா நீ ஆகறதுக்குப் பிரச்னை
இருக்காது.... உதயை டெல்லியிலயே ஏதாவது பதவி கொடுத்து அங்கயே இருக்க வச்சுக்கலாம்.
உன் பையன் ஹரிணிய கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கலாம்.... யோசி....”
மாணிக்கம் தன் மாமனை யோசனையுடன் பார்த்தார். அவர் சொல்வதை ரகசியமாய்க்
கேட்டுக் கொண்டிருந்த மணீஷ் ஆவலுடன் வந்து கேட்டான். “நீங்க சொல்றதெல்லாம்
நடக்குமா தாத்தா”
மாணிக்கம் மகனைத்
திகைப்புடன் பார்த்தார். சங்கரமணி சொன்னார். “நடக்கும். யாருக்கும் எந்த
சந்தேகமும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம் தர்றேன். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்
இல்லை, மூணு மாங்காய் அடிச்சுடலாம்”
கடைசியில் இரண்டு நாட்கள் பேசி யோசித்து மாணிக்கமும் சரியென்றார். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கவும் நடந்தது. ஆனால், ஒரு கல்லில் மூணு மாங்காய் அடிக்கக் கிளம்பியதில் மாங்காயும் விழவில்லை, கல்லையும் காணோம்! இப்போது மூவரும் திகிலோடு தான் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான்
மாஸ்டர் களத்தில் இறங்க மாணிக்கத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்....
(தொடரும்)
என்.கணேசன்
FANTASTIC
ReplyDeletePlot is interesting and not guessable. Super ji.
ReplyDeleteரொம்ப இண்ட்ரஸ்டிங்கா போகிறது கணேசன் சார்.
ReplyDeleteஅன்பு கணேசன், உங்கள் கதாபாத்திரங்கள் அழுத்தமானவை. அதை அனைத்து நாவல்களிலும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவலிலும் தொடர்கிறது. வாழ்த்துக்கள். இந்தக் கதை ஹீரோவை 21 அத்தியாயம் வரை நேரடியாக காட்டாமலேயே வலிமையாக பதித்திருக்கிறீர்கள். இது வரை மற்ற எந்த தமிழ் நாவலிலும் நான் இந்த உத்தியைப் பார்க்கவில்லை. சுவாரசியமாக இருக்கிறது.
ReplyDeleteKonjam drag panra mathiri iruku...
ReplyDelete