அமானுஷ்ய ஆன்மிகம்- 2
கிலியை ஏற்படுத்தும் படியாக விசித்திரமான சடங்குகள் செய்து அமானுஷ்ய
சக்திகளை வரவழைத்து அந்த சக்திகளின் உதவியுடன் தொடர் போராட்டங்கள் நடத்தி ஹைத்தி
விடுதலை அடைந்தது, மேலை நாடுகளின் அதிகார வர்க்கத்தையும்,
அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மதகுருமார்களையும் ஆபத்தை உணர வைத்தது. எந்த
விதத்திலும் தங்கள் அறிவுக்கோ, அதிகாரத்திற்கோ இணையாக உயர முடியாதவர்கள் அந்த அடிமைகள்
என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் இந்த அளவுக்கு வளர வூடூவும், அதன்
சடங்குகளும் தான் காரணம் என்று உறுதியாகத் தோன்ற ஆரம்பித்தது.
அதற்கு வலுவான காரணம் அந்த அடிமைகளின்
மூதாதையர்கள் எகிப்தில் பிரமிடுகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட அடிமைகள் என்பதாக
இருந்தது. பழங்காலத்தில் எகிப்தின் பிரமிடுகள் தங்களுக்குள் எத்தனையோ,
ரகசியங்களையும், சாபங்களையும் அடக்கி வைத்திருந்ததாக உலகத்தின் மற்றபகுதி மக்களும்
நம்பினார்கள். பெரும்பாலான சமாதிகளில் அந்த சமாதிகளை மாசுபடுத்தவோ, தோண்டவோ
முனைபவர்களுக்கு உடனடி மரணம், கடுமையான வியாதிகள், தாங்கொணாத துன்பங்கள்
வழங்கப்படும் என்கிற வகையில் சாபங்கள் எழுத்து வடிவிலேயே செதுக்கப்பட்டிருந்தன. அப்படித் துணிந்து யாராவது ஏதாவது செய்வதும்,
அவர்கள் பல துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க நேர்வதும் குறித்து கதைகள் அக்காலத்திலேயே
நிறைய உலா வந்த வண்ணம் இருந்தன.
(பிற்காலத்தில், சரியாகச் சொல்வதென்றால்
1922ல், எகிப்தில் டுட்டன்காமுன் என்ற சக்கரவர்த்தியின் சமாதியைத் தோண்டி எடுத்த
ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கண்டுபிடிக்க முடியாத
வியாதியோ, எதிர்பாராத விபத்தோ, அகால கோர மரணமோ அடைய ஆரம்பித்தது வரலாற்றுச்
செய்தி. ஒவ்வொரு மரணச்செய்தியுடனும் பத்திரிக்கைகள் டுட்டன்காமுன் சாபத்தை
நினைவுபடுத்திய வண்ணம் இருந்தன. இந்த அளவு ஆதாரபூர்வமாக இல்லா விட்டாலும் முந்தைய
காலத்தில் உண்மைகளும், கட்டுக்கதைகளுமாகக் கலந்து பயமுறுத்தும் விதமாக
நிறையவே பரவி வந்தன)
அப்படிப்பட்ட பிரமிடுகளின்
கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அடிமைகள் கட்டும் போது என்ன எல்லாம் கண்டார்களோ,
எதை எல்லாம் அறிந்தார்களோ, தீயசக்திகளுடன் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டார்களோ
என்ற பலத்த சந்தேகம் மேலை நாட்டு அதிகார வர்க்கத்திற்கு வந்தது. அறிந்ததை அந்த
அடிமைகள் ஒழுங்குபடுத்தி அமைத்து தங்கள் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்க
வேண்டும், அதனாலேயே ஹைத்தி சுதந்திரம் சாத்தியமாகி இருக்க வேண்டும் என்ற
முடிவுக்கு வந்த அவர்கள் சில இடங்களில் இருந்து அந்த அடிமைகளை நாடு கடத்தியே
விட்டார்கள். சில இடங்களில் அடிமட்ட வேலைகள் செய்ய அந்த அடிமைகளை விட்டால் வேறு
கதி இல்லை என்பதால் அந்த அடிமைகளின் சடங்குகளை முடக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள்.
உலகின் பல பகுதிகளிலும் குடியேறியிருந்த
கருப்பின மக்களின் வூடூ வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஹைத்தியிலேயே கூட ஆட்சி
மாற்றங்கள் ஏற்பட்டதால் பிற்காலத்தில் வூடூவிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன. 1896, 1913 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் ஹைத்தியில்
கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும்,
மற்ற சில பகுதிகளிலும் வூடூ சம்பந்தப்பட்ட பொருள்களோ, சின்னங்களோ, சிலைகளோ
வைத்திருப்பவர்களுக்கு கசையடி, சிறைத்தண்டனை, தூக்குத்தண்டனை வரை தரப்பட்டது. சில
இடங்களில் வூடூவைப் பின்பற்றுபவர்களை சூனியக்காரர்கள் என்ற முத்திரை குத்தி
உயிரோடு எரிக்கவும் செய்தார்கள். இந்த வகைகளில் ஹைத்தியில் ஆரம்பங்களில் நடந்தது
போன்ற வூடூ நிகழ்வுகள் முறைப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள். வூடூவைப்
பின்பற்றிய கருப்பின மக்களில் பலர் பல இடங்களில் தாங்களாகவே அந்தந்த இடங்களை
விட்டு தப்பி ஓடினார்கள்.
அவர்கள் சென்றடைந்த இடங்களிலும் நிலைமை
பெரிய விதத்தில் வேறுபட்டு இருக்கவில்லை. இப்படி எல்லாம் ஆதிக்க வர்க்கத்தின்
கடுமையான நடவடிக்கைகள் வூடூவைப் பின்பற்றும் மக்களை அதிகமாக பாதித்தன. அவர்களின்
நம்பிக்கைகளின்படி வெளிப்படையாக வழிபடும் சுதந்திரத்தை இழந்து விட்ட அவர்கள்
மனதளவில் மாறிவிடத் தயாராக இருக்கவில்லை. எல்லாம் இழந்த போதும் தங்கள்
கடவுள்களையும், நம்பிக்கைகளையும் மிக உறுதியாக அவர்கள் தங்கள் மன ஆழத்தில் பற்றிக்
கொண்டிருந்தார்கள். நடனங்கள், மத்தள சத்தங்கள், மிகப்பெரிய வரைமண்டலங்கள் வரைதல்
ஆகியவற்றுடன் செய்யும் அவர்களுடைய மிக நீண்ட சடங்குகள் அதிகார வர்க்கத்தின்
கவனத்தைக் கவரும் என்பதால் மிக ரகசியமாக சத்தமில்லாத வகையில் வழிபாடுகளை அவர்கள்
நடத்தி வாழ்ந்தார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இந்த வழிபாட்டுப்
பிரச்னையில் இருந்து மீள வழி என்ன என்று தீவிரமாக யோசித்தார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்கள்
முன்பே பிறந்திருந்த அவர்கள் மதத்தை வூடூ மக்கள் கைவிட்டு விடத் தயாராக
இருக்கவில்லை. மோசஸ் கூட அவர்களுடைய
அமானுஷ்யக் கலைகளை அவர்களுடைய பழங்கால குரு ரா-கு-எல் பெத்ரோ (அல்லது ஜேத்ரோ) Ra-Gu-El Pethro
(Jethro) விடமிருந்து
கற்றுக் கொண்டு சென்றதாக அவர்கள் நம்பினார்கள். அப்படிக் கற்றுக் கொண்டு போன மோசஸ்
மூலமாகக் கூட அவர்களுடைய கோட்பாடுகள் சில கிறிஸ்துவத்தில் வேரூன்றி இருக்க
வேண்டும் என்று நம்பினார்கள்.
யோசித்துப் பார்க்கையில் ஆட்சியாளர்களின்
மதமாக இருந்த கிறிஸ்துவத்திற்கும், வூடூ மதத்திற்கும் பொதுவான முக்கிய அம்சங்கள்
சில இருந்தன. கிறிஸ்துவத்தைப் போலவே வூடூ மக்களும் இறைவன் ஒருவனே என்பதை
நம்பினார்கள். கிறிஸ்துவத்தில் பரம பிதா,
குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலை வழிபாடு இருப்பது போலவே வூடூவிலும் சர்வ
வல்லமை உள்ள இறைவன், தேவதைகள், இறந்து போன முன்னோர்கள் என்ற மூன்று நிலை வழிபாடு
இருந்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தங்கள் வழிபாட்டையே கிறிஸ்துவ வழிபாடு போல
வூடூ மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.
வெளிப்படையாக அவர்கள் வணங்கியது வேறு,
உட்புறமாக அவர்கள் பாவித்துக் கொண்டது வேறு என்கிற விதத்தில் வழிபாடுகள் நடக்க
ஆரம்பித்தன. சில கிறிஸ்துவ புனிதத்துறவிகளை தங்கள் தேவதைகளில் சிலராக
வரித்துக் கொண்டார்கள். அப்படி வரித்துக் கொண்டவர்களை வெளிப்படையாகவே
வழிபட்டார்கள். புனிதர் பேட்ரிக் (St. Patrick) துறவியை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். புனிதர் பேட்ரிக்
அயர்லாந்தில் இருந்து பாம்புகளை ஒழித்தவர். வூடூ மக்கள் பாம்புகளை வணங்குபவர்கள்.
பண்டைய இந்தியர்களைப் போலவே பாம்புகளிடம் விசேஷ சக்திகள் இருப்பதாக நம்புபவர்கள்
அவர்கள்.
அவர்கள் புனிதர் பேட்ரிக் சிலையை தங்கள்
பாம்புக் கடவுளான தன்பல்லாவாக வணங்க ஆரம்பித்தார்கள். அப்படி வணங்கும் போது தங்கள்
கையில் பாம்பு பொம்மைகளையோ, சின்னங்களையோ, விஷமற்ற சிறு பாம்புகளையோ கூட வைத்துக்
கொண்டு புனிதர் பேட்ரிக் சிலையை வணங்க ஆரம்பித்தனர். அப்படி வணங்கும் போது
கிறிஸ்துவ முறைப்படி மெழுகுத் திரிகள் கொளுத்தியே வணங்கினார்கள். பாம்பு
பொம்மைகளையோ, சின்னங்களையோ வைத்துக் கொண்டு வணங்கும் வழக்கம் கிறிஸ்துவத்தில்
இல்லா விட்டாலும் கூட அவர்களுடைய பாரம்பரிய முறைப்படி வணங்குவது புனிதர்
பேட்ரிக்கை என்பதும், மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவது கிறிஸ்துவ முறைப்படி தான்
என்பதும் ஆட்சியாளர்களையும், மதகுருமார்களையும் அதை பொறுத்துக் கொள்ள வைத்தது. அதே
நேரத்தில் தங்கள் தேவதையை சிறிய அளவிலாவது தங்கள் முறையில் வணங்கிய திருப்தி வூடுவைப்
பின்பற்றும் மக்கள் அடைந்தார்கள்.
இப்படி கிறிஸ்துவத்தில் சிலவற்றையும்
தங்கள் நம்பிக்கைகள் சிலவற்றையும் இணைத்துக் கொண்டு வூடூ மக்கள் தாங்கள் சேர்ந்த
இடங்களில் ஓரளவு அமைதியாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள். அதனால் மற்றவர்களுக்கு
அவர்கள் மீதிருந்த ஆரம்ப கால சந்தேகக் கண்ணோட்டம் விலக ஆரம்பித்தது. காலப்போக்கில்
வூடூ மக்களும் மற்ற வெள்ளை இன மக்களும் ஓரளவு நட்பு பாராட்டியே வாழ ஆரம்பித்தனர்.
சில வெள்ளை இன மக்களின் வியாதிகளை வூடூ முறைப்படி அதைப் பின்பற்றி வந்த சில
கருப்பின மக்கள் குணப்படுத்திக் காட்டும் அளவு நிலைமை முன்னேறியது. வெள்ளை இன
மக்களும் வூடூ சாத்தான் வழிபாட்டுச் சமாச்சாரம் அல்ல, இதில் நல்ல விஷயங்களும்
இருக்கின்றன என்று நம்ப ஆரம்பித்தார்கள். அதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவும்
ஆரம்பித்தார்கள்.
இருதரப்பினரும் எத்தனையோ மாற்றங்களை
அடைந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வூடூ வழிபாட்டு நிகழ்வுகளில் கிறிஸ்துவப்
பாதிரிகள் கலந்து கொள்வதும், கிறிஸ்துவ வழிபாடுகளில் வூடூ குருக்கள் கலந்து
கொள்வதும் சகஜமாக ஆரம்பித்தன. வூடூவையும் அதன் அடிப்படை நன்மைகளையும் புகழ்ந்து போப் இரண்டாம் ஜான் பால் அவர்களே
பேசினார் என்பது வூடூவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அது மட்டுமல்லாமல் 1993 ஆம் ஆண்டு போப் இரண்டாம்
ஜான் பால் ஒரூ வூடூ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
1996 ஆம் ஆண்டு பெனின் நாடு வூடூவைத்
தங்கள் நாட்டு மதமாக அறிவித்தது. 2003ல் ஹைத்தி தங்கள் தேச மதமாக வூடூவை அதிகார
பூர்வமாக அறிவித்தது.
அடக்குமுறையில் இருந்து இப்படி மீண்டு வந்த
வூடூவின் இரகசிய வழிபாட்டு முறைகளை இனி அடுத்த வாரம் பார்ப்போமா?
-என்.கணேசன்
நன்றி-தினத்தந்தி 14.3.2017
No comments:
Post a Comment