சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 23, 2017

இருவேறு உலகம் – 22


ந்த மலையிலிருந்து இறங்கிய செந்தில்நாதன் ஜீப்பில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து மெயின் ரோடு வந்து சேர்ந்தார். மெயின் ரோடு வரும் வரை எந்த வாகனமும் எதிர் வரவில்லை. நள்ளிரவாகி இருந்ததால் மெயின் ரோட்டிலும் பெரிதாகப் போக்குவரத்து இல்லை. ஆள்நடமாட்டம் சுத்தமாக இல்லை. சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு வாகனம் மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.

மெயின்ரோடு சந்திப்பில் ஜீப்பை நிறுத்தி செந்தில்நாதன் அந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்து அனுப்பினார். அவர் ஒவ்வொருவரையும் கேட்டார். “வழியில் மிகவேகமாகப் போய்க்கொண்டிருந்த கருப்புக் கார் ஏதாவது பார்த்தீர்களா?   

ஒவ்வொருவரும் இல்லை என்றார்கள். அந்தக் கருப்புக் காரில் வந்தவர்கள் அவர் பின் தொடரவில்லை என்பது உறுதியானவுடன் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாதபடி நிதானமாகப் பயணிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்தது. சிறிது யோசித்து விட்டுக் கூடுதலாகச் சில கேள்விகளும் கேட்க ஆரம்பித்தார். “இந்த வழியாகத் தினமும்  இதே நேரம் போவீர்களா?  ஆம் என்றால் அடுத்ததாக “கடந்த இரண்டு நாட்களாக இந்த இடத்தில் வித்தியாசமாக எதையாவது பார்த்தீர்களா?  என்று கேட்க ஆரம்பித்தார்.

வெகு சிலரே தினமும் அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் செல்பவராக இருந்தார்கள். அவர்களில் யாரும் வித்தியாசமாக எதையும் பார்த்திருக்கவில்லை. சைக்கிளில் வந்த கிழவர் ஒருவர் மட்டும் சொன்னார்.  “முந்தாநாள் ராத்திரி அந்த மலைக்குப் போகற ரோட்டுக்குக் குறுக்கே ரோடு ரிப்பேர் வேலை நடக்கறதா ரெண்டு தடுப்பு வெச்சிருந்தாங்க. நானும் அப்படியே இந்த மெயின் ரோட்டுக்கும் ரிப்பேர் வேலை செஞ்சாங்கன்னா புண்ணியமாப் போகும்னு நினைச்சேன். மறுநாள் வர்றப்ப அந்த தடுப்பைக் காணோம்.... ரிப்பேர் வேலையும் நடந்த மாதிரி தெரியலை.

செந்தில்நாதனுக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. முதலில் அவரைப் பற்றி விசாரித்தார். கிழவர் நான்கு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஒரு தொழிற்சாலையில் இரண்டாம் ஷிஃப்ட் வேலை செய்யும் தொழிலாளி. தினமும் இந்த வழியாகத் தான் அவர் வீடு திரும்புபவர். ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் சைக்கிளில் போவது மிகவும் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்.

“அப்ப எத்தனை மணி இருக்கும்.

“இதே நேரம் தான் சார்

“ஆளுக யாராவது இருந்தாங்களா?

“இல்லையே சார்

“ஏதாவது வண்டிக?

”இல்லை சார் தடுப்புகளை மட்டும் தான் பார்த்தேன்....

அவரை அனுப்பிய செந்தில்நாதன அடுத்து வருபவர்கள் தினமும் இந்த நேரத்தில் இந்தப் பகுதியில் பயணிப்பவர்களாக இருந்தபட்சத்தில் கிழவர் சொன்ன ரோடு ரிப்பேர் தடுப்புகளைப் இங்கு பார்த்திருக்கிறீர்களா என்றும் கேட்க ஆரம்பித்தார். சிலர் நினைவில்லை என்று சொன்னார்கள். பைக்கில் வந்த ஒரு இளைஞன் மட்டும் சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற தடுப்புகளை மலைக்குப் போகும் பாதையின் துவக்கத்தில் பார்த்ததைக் கையைக் காட்டிச் சொன்னான். கிழவரும் அங்கே தான் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். ரிப்பேர் வேலையே நடக்காத தெருவுக்கு முன் அந்தத் தடுப்புகளை அந்த நேரத்தில் வைத்து விட்டுப் பின் விலக்கிக் கொண்டவர்கள் யார்? அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?

செந்தில்நாதன் யோசிக்க ஆரம்பித்தார்.


ரிணிக்கு க்ரிஷ் வீட்டார்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. க்ரிஷின் அம்மா அவளிடம் அன்பாகப் பேசக்கூடியவர். க்ரிஷின் அப்பா புன்னகையோடு சரி என்றாலும் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி என்பது அவர் முகபாவனையிலேயே தெரியும். க்ரிஷின் அண்ணா கலகலப்பான ரகம். எத்தனையோ நாட்கள் அவர்கள் வீட்டில் அவள் சாப்பிட்டிருக்கிறாள். க்ரிஷ் மேல் இருந்த கோபத்தில் அவர்கள் வீட்டுக்குத் திடீரென்று போவதை அவள் நிறுத்தி விட்டாள். அவர்களிடம் போனில் கூட அவள் பேசியதில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போயேயாக வேண்டும், அது தான் அடிப்படை நாகரிகம் என்று அவளுக்குத் தோன்றியது. போனாள்.

பத்மாவதி அவளைப் பார்த்ததும் ஓவென்று கதறி அழுது விட்டாள். ஹரிணிக்கு அதைப் பார்க்கையில் கண்கள் ஈரமானாலும் அவர் முன்னால் உடைந்து போய் அவர் துக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடாது என்று தோன்றியது. தன் துக்கத்தை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டவள் பத்மாவதியைச் சமாதானப்படுத்தினாள். “அழாதீங்கம்மா. அப்படி, இப்படின்னு எதாவது ஒரு கதை சொல்லிகிட்டு திடீர்னு வந்து நிப்பான் பாருங்க.

பத்மாவதி அவள் உறுதியாகச் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு ‘அப்படியா சொல்கிறாய்?என்பது போலப் பார்த்தாள். ஹரிணிக்கு அந்தத் தாயின் வெகுளித்தனம் மனதை என்னவோ செய்தது.

பத்மாவதி சொன்னாள். “பைக்கும் அங்கேயே இருந்துச்சு. போன் சுவிட்ச்டு ஆஃப் ஆயிடுச்சு. நாள் ரெண்டாயிடுச்சு. அதான் பயமாயிருக்கு....

ஹரிணி பலவந்தமாய் குரலில் கலகலப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “அதெல்லாம் சாதாரண மனுஷங்க விஷயத்துல தான் பயப்படணும். உங்க பையன் சூப்பர் மேன்....

பத்மாவதி மெல்லப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டிருந்த உதய் மனதிற்குள் ஹரிணிக்கு நன்றி சொன்னான். பொய்யே ஆனாலும் அந்த நேரத்திற்குக் கிடைக்கும் தைரியம் இதமானது தானே?

“நீ என்ன சாப்டறே?பத்மாவதி கேட்டாள்.

“க்ரிஷ் வரட்டும். விருந்தே சாப்ட வர்றேன்என்று ஹரிணி அதே உறுதியான நம்பிக்கையுடன் சொன்னாள்.

பத்மாவதி கேட்டாள். “ஆமா நீயேன் இவ்வளவு நாளா வரல?

அவளுடைய நேரடியான கேள்விக்கு உடனடியாக என்ன சொல்வது என்று யோசித்துவிட்டு ஹரிணி சொன்னாள். “வர்றப்ப எல்லாம் அவன் பிசியாவே இருக்கான். அதனால அவனை ஏன் தொந்திரவு செய்யணும்னு வரல

என்ன தான் அவள் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாலும் அவள் முகத்தில் கணநேரம் வந்து போன வலியை உதய் கவனித்தான். தம்பி மேல் கோபம் வந்தது.

பத்மாவதி சொன்னாள். “அவன் கிட்ட நான் சொல்லியிருக்கேன். ஒருநாள் அத்தனை புஸ்தகத்தயும் பழைய பேப்பர்காரனுக்குப் போடறேன் பாத்துட்டே இருன்னு....  மனுஷங்களுக்கு மேலயா புஸ்தகமும் ஆராய்ச்சியும்....

பத்மாவதி சிலமுறை அப்படி மிரட்டியிருப்பதாக க்ரிஷே ஹரிணியிடம் சொல்லி இருக்கிறான்... ஆனால் இப்போது அதை அவள் சொல்வது ஹரிணிக்காகத் தான் என்பது ஹரிணிக்குப் புரிந்தது. “ஸ்வீட் ஆண்ட்டிஎன்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

பத்மாவதியின் செல்போன் இசைத்தது. அதை எடுத்துப் பார்த்தவள், “என் அக்கா பேசறா... டேய் உதய் ஹரிணி கிட்ட பேசிட்டிருடா வந்துடறேன்...என்றவள் செல்போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போனாள்.

ஹரிணி மெல்ல உதயிடம் கேட்டாள். “அவன் செல்போன்ல இருந்து எதாவது கால்ஸ் போயிருக்கான்னு செக் பண்ணீங்களா

அன்னைக்கு சாயங்காலம் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆன செல் அப்புறமா ஆனே ஆகலன்னு சொல்றாங்க....என்றான் உதய்.

இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். உதய்க்கு அவள் முகத்தில் சற்று முன் தெரிந்த வலி மனதை உறுத்தியது. தம்பி அலட்சியப்படுத்தியிருக்கிறான், அது வலித்திருக்கிறது, அதனால் தான் அவள் வரவில்லை என்பதில் இப்போது சிறிதும் சந்தேகமேயில்லை. வீட்டுக்குள்ளே நுழைந்தவுடன் பத்மாவதியைப் போல் அவளும் அழப்போகிற மனநிலையில் தான் இருந்தாள் என்பதையும் அவன் கவனித்திருந்தான். அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட விதமும், கம்பீரமாக தன் உணர்வுகளைக் கையாண்ட விதமும் அந்தப் பெண் மீது அன்பை அதிகப்படுத்தியது.

தம்பி வருவானோ இல்லையோ ஒரு உண்மை அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் போகக்கூடாது என்று நினைத்தான். அதை அறியும் உரிமை அவளுக்கு நிச்சயம் உண்டு....

உதய் மெல்ல எழுந்தான். “ஒரு நிமிஷம் வாம்மா

கேள்விக்குறியோடு அவளும் எழுந்தாள்.  உதய் அவளை க்ரிஷ் அறைக்கு அழைத்துப் போனான். தம்பியின் கம்ப்யூட்டரைத் திறந்து பட்டனை அழுத்தி விட்டு மௌனமாக நின்றான்.

சில வினாடிகளில் கம்ப்யூட்டர் திரையில் தன் புகைப்படம் வந்து தன்னைப் பார்த்துப் புன்னகைத்ததைப் பார்த்த ஹரிணி தன் அத்தனை கட்டுப்பாட்டையும் இழந்தாள். க்ரிஷின் நாற்காலியில் அமர்ந்து அவன் மேசையில் தலைவைத்து குமுறி அவள் அழ ஆரம்பித்ததைப் பார்க்கையில் அவன் கண்களும் கலங்கின. இவ்வளவு நேசிக்கும் ஒரு பெண் கிடைக்க தம்பி நிறையவே புண்ணியம் செய்திருக்கிறான் என்று தோன்றியது.

இரண்டே நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள். “தேங்க்ஸ்ண்ணா

அவன் மெல்லத் தலையசைத்தான்.

மனதில் என்ன இருக்கிறது என்று காட்டாமல், சொல்லாமல், அன்னியனைப் போல நடந்து கொண்டு இத்தனை நாள் என்னைப் பாடாய் படுத்தி விட்டானேஎன்று அவளுக்கு க்ரிஷ் மீது ஆத்திரமாய் வந்தது. உதயிடம் கேட்டாள்.  “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?

“இல்லை, சொல்லும்மா

“அந்த ராஸ்கல் திரும்பி வந்தான்னா அவனை ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டு தான் மத்ததெல்லாம்....துக்கத்துடனும் ஆத்திரத்துடனும் அவள் சொன்னாள்.

தம்பி வந்தது போலவே ஒரு கணம் அந்தக் காட்சியைக் கற்பனை செய்த உதய் புன்னகைத்தான்.  தம்பி இருந்திருந்தால் சொல்லியிருப்பான். “எதுவானாலும் கதவை முதல்ல சாத்திட்டு செய்ங்க




புதுடெல்லி உயரதிகாரி புனேயில் இருந்து இஸ்ரோ டைரக்டர் சொன்ன தகவலை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். கடத்தல், கொலை என்று ஆராய்ச்சி ஆபத்தான பாதையில் நகர்ந்து போவதை அந்த டைரக்டர் எடுத்துச் சொன்னதோடு நிற்காமல் அவனுக்கு மெயிலிலும் நிகழ்வுகளை விளக்கி இருந்தார். நாளைக்குப் பிரச்னை என்று வந்தால் நான் முன்கூட்டியே தெரிவித்து விட்டேன்என்று வாய் வழியாகவும், எழுத்து மூலமாகவும் தெரிவித்து, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விட்டார் அந்த டைரக்டர். நியாயமாக அந்த உயரதிகாரி மத்திய மந்திரிக்கும், உளவுத் துறைக்கும் இந்தத் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த உயரதிகாரி நியாயமானவன் அல்ல. மிக ரகசியமான இந்த ஆராய்ச்சி பற்றி டிபார்ட்மெண்டில் ஓரிருவருக்கு மட்டுமே தெரியும். அவர்களும் தங்களுக்குள்ளே கூட இது பற்றி பொது இடங்களில் பேசியதில்லை. ஆனால் இந்த ஆராய்ச்சி குறித்த சகல விவரங்களையும் ஆரம்பத்திலிருந்தே நல்ல விலைக்கு வெளியே ஒரு ரகசிய மனிதருக்கு விற்றுக் கொண்டிருந்த அந்த உயரதிகாரி இந்தத் தகவலுக்கு  என்ன விலை கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்...



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Very interesting. Eagerly waiting for next Thursday.

    ReplyDelete
  2. சுஜாதாMarch 23, 2017 at 7:35 PM

    சுவாரசியமா போகுது சார். வாரம் ரெண்டு அப்டேப் குடுத்தா இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete