செந்தில்நாதன்
க்ரிஷ் பற்றி அன்று வரை மற்றவர்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் வாயிலாகவும்
கேள்விப்பட்டிருந்தது இரண்டு விஷயங்கள் மட்டுமே. ஒன்று, அறிவுஜீவி. மற்றது, தந்தை,
தமையன் அரசியலில் வெற்றிகரமாக இருந்த போதும் அரசியலில் ஈடுபாடு இல்லாதவன். சில மாதங்களுக்கு முன்
முதல்வரின் சமூகநலத்திட்டம் ஒன்றை முட்டாள்தனம் என்று பகிரங்கமாகச் சொன்னது மூலம்
அவன் நேர்மையான கருத்துகளைச் சொல்வதில் எந்த விதத் தயக்கமும் இல்லாதவன் என்று
தெரிந்தது. அடுத்த நாட்களில் அவனிடமிருந்து பத்திரிக்கைக்காரர்கள் தன் கருத்தைத்
தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்ற மறுப்போ, அந்தக் கருத்து குறித்து எந்த மழுப்பலான
விளக்கமோ வராமல் இருந்தது அவன் மேலிருந்த மதிப்பை மேலும் உயர்த்தியிருந்தது.
அதற்கு மேல் அவன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் அவசியம் அவருக்கு
இருக்கவில்லை. ஆனால் இன்று அவன் காணாமல் போனதைத் துப்பு துலக்கும் வேலை வந்ததால்,
தன் வேலையை ஆரம்பிப்பதற்கு முன் அவனைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வது அவசியம்
என்று தோன்றவே செந்தில்நாதன் இணையத்தில் அவன் பற்றி நிறைய தகவல்கள் தேடிப்படிக்க
ஆரம்பித்தார். முடிவில்
பிரமிப்பே மிஞ்சியது. அவன் தொட்டிராத துறைகள் இல்லை என்று தோன்றியது. விஞ்ஞானத்திலிருந்து
வேதாந்தம் வரை பிசிறில்லாமல் ஆழமாகப் பேசியும், எழுதியும் இருந்தான். அவனைப்பற்றி
அவன் நண்பர்களும், ஆசிரியர்களும் உயர்வாக நிறையச் சொல்லியிருந்தார்கள். சில
கல்லூரி நிகழ்ச்சிகளில் அவன் பேசிய பேச்சுகளை யூட்யூபில் சிலர் பதிவேற்றி
இருந்தார்கள். முக்கால் மணி நேர, ஒரு மணி நேரப் பேச்சுகளில் ஒரு முறையும் அவன்
சின்னத் துண்டுக் காகிதத்தைப் பார்த்து கூடப் பேசவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு
பேச்சிலும் நிறைய புத்தகங்களையும், ஆராய்ச்சிகளையும், அறிஞர்களையும், இந்திய, உலக
நிகழ்வுகளையும் புள்ளிவிவரங்களுடன் மேற்கோள் காட்டியிருந்தான். அதிராமல்,
கத்தாமல், அமைதியாக ஆத்மார்த்தமாய் அவன் பேசியிருந்த விஷயங்கள் அறிவுபூர்வமானதாகவும்,
ஆக்கபூர்வமானதாகவும், சமூக அக்கறை கொண்டவையாகவும் இருந்தன. எல்லாவற்றையும் விட
அவரைக் கவர்ந்த ஒரு விஷயம் அவனிடம் பெரும்தன்னம்பிக்கை தெரிந்ததே ஒழிய கர்வத்தின்
சாயல் துளியும் தெரியவில்லை. எல்லாம் படித்து முடித்த போது அவரையும் அறியாமல் அவன்
விசிறியாக மாறியிருந்தார்.
கமலக்கண்ணன் பத்தாம் வகுப்பு தோல்வி கண்டவர் என்று அவர்
கேள்விப்பட்டிருந்தார். அவர் மனைவியும் அதிகம் படித்தவள் அல்ல என்பது தெரிந்தது.
மூத்தமகன் காட்டான் என்பது அவருடைய சொந்த அனுபவம். அந்த வீட்டில் இப்படி ஒரு
பிள்ளையா என்று வியந்தவராக அந்த வீட்டுக்குப் புறப்பட்டார்.
போகும் போது, அங்கெல்லாம் போக வேண்டியிருக்கிறதே என்ற சலிப்பு, க்ரிஷ்
மேல் இருந்த நல்லபிப்பிராயத்தையும் மீறி, அவருக்கிருந்தது. அவருக்கும்
அரசியல்வாதிகளுக்கும் என்றுமே ஒத்துப் போனதில்லை. அதிகாரத்தில் இல்லாத போதே
கேவலமாக நடந்து கொள்ளும் பெரும்பாலான அரசியல்வாதிகள், அதிகாரத்திற்கு வந்து
விட்டாலோ மகா கேவலமாக நடந்து கொள்பவர்களாக இருந்தார்கள். அதை சகித்துக் கொள்ளும்
மனநிலை அவருக்குப் பலவருட அனுபவத்திற்குப் பின்னும் வரவில்லை. மேடைகளில்
கண்ணியத்தின் மறு உருவமாக இலக்கிய தரத்தில் பேசும் எத்தனையோ அரசியல்வாதிகள்
தனிச்சந்திப்புகளில் பேசும் போது காதுகள் கூசும். அதிகாரி என்றும் பார்க்காமல்
ஒருமையில் பேசுவார்கள். வீட்டு எடுபிடி வேலையாள் மாதிரி நடத்துவார்கள். பல
நேரங்களில் அதற்குச் சரியான பதிலடி தந்து மிக மோசமான இடமாற்றங்களை அவர் பெற்றிருக்கிறார்.
சில பேர் தாங்களாகப் பேசாமல் தங்கள் அடியாட்களைப் பேச வைத்து ரசிப்பார்கள். சில நேரங்களில்
அந்த அடியாட்களை அந்த அரசியல்வாதிகள் முன்னாலேயே அவர் ஓங்கி அடித்து அதிர வைத்த சம்பவங்களும் உண்டு.
மறுபடி இடமாற்றம் அல்லது சஸ்பென்ஷன்.
இந்த அனுபவங்களால் அவர் எப்போதும்
இடமாற்றத்திற்குத் தயாராகவே இருப்பார்.
ராஜதுரை அரசுக்கு முந்தைய இரண்டு அரசு நிர்வாகங்கள் அவருக்கு தினசரி
நரகங்களாக இருந்தன. ராஜதுரை ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையாக இல்லாவிட்டாலும்
ஓரளவாவது நிலைமை சீராகியது. ராஜதுரை மிக நாகரிகமானவர். தனியாகப் பேசும் போதும்
சரி, பொது இடங்களில் இருக்கும் போதும் சரி அனாவசியமாக அடுத்தவரைப்
புண்படுத்தாதவர். அவர் அமைச்சர்கள் அவரளவு இல்லாவிட்டாலும், அவர்களைப் பரவாயில்லை என்று
சொல்லக்கூடிய மட்டிலாவது ராஜதுரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பேச்சிலும், நடத்துவதிலும்
ஓரளவு கண்ணியம் இருந்தது. தலையீடுகளும் பெரிதாக இருக்கவில்லை. எல்லாம் ஓரளவு
சரியாகி விட்டது, தமிழ்நாட்டு நிலைமை மாறிவிட்டது என்று அவர் நம்ப ஆரம்பித்திருந்த
வேளையில் தான் உதயின் தலையீடு வந்தது. அதை விடப் பலமடங்கு மோசமான எத்தனையோ முந்தைய
ஆட்சிகளில் செந்தில்நாதன் சந்தித்திருந்தாலும் ‘மறுபடியுமா?’ என்ற ஆத்திரத்தை
அவருக்குள் வரவழைத்து விட்டது. இடமாற்றத்தோடு பதவி உயர்வும் கிடைத்திருந்த
போதும் அந்த ஆத்திரம் முழுமையாக அவர் மனதில் இருந்து போய்விடவில்லை....
இந்த முறை கமலக்கண்ணன் குடும்பத்தோடு நேரடியாகவே தொடர்பு கொள்கிறார்.
பிரச்னையாகி இன்னொரு இடமாற்றம் உடனடியாக இருக்குமா என்று அவருக்கே தெரியவில்லை....
அவர் ஜீப் கமலக்கண்ணன் பங்களா வாசலை அடைந்தது.
புனேயிலிருந்து
அவர்கள் வந்து சேர்ந்த போது இருட்டத்துவங்கி இருந்தது. அந்தப் பெண் விஞ்ஞானி ISTRAC யைச்
சேர்ந்தவர் தான். அவர் வந்ததில் யாருக்கும் சந்தேகம் எழாது என்பதால் அவர் நேராக
அந்த ஆராய்ச்சியாளன் அறைக்குப் போய்
விட்டார். ஆனால் டைரக்டர் பெரும்பாலும் புனேயில் இருப்பவர். உயர் அதிகாரியான அவரது
எதிர்பாராத வரவில் அந்த ஆராய்ச்சியாளனை மட்டும் அவர் சந்தித்து விட்டுப் போனால்
மற்றவர்கள் மனதில் பல கேள்விகள் எழும், ஆராயத்தூண்டும் என்பதால் அவர் அலுவலகப்பணி
ஒன்றிற்காக வந்ததாகச் சொல்லி அது சம்பந்தமாக அந்த மையத்து அதிகாரிகள் சிலரிடம் பேசி விட்டுக்
கடைசியில் தான் அந்த ஆராய்ச்சியாளன் அறைக்கு வந்தார்.
உள்ளே வந்தவுடன் கதவைத் தாளிட்டு விட்டு வந்தமர்ந்தவர் எந்த குசல
விசாரிப்புமில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தவராக அந்தப் பெண்மணியிடம் கேட்டார். “நீ பார்த்து விட்டாயா?”
“இல்லை. சேர்ந்தே பார்க்கலாம் என்று காத்திருந்தேன்.” என்றார் அந்தப் பெண்மணி. அது கஷ்டமான காரியமாகத் தான் அவருக்கு இருந்தது
என்பது பார்க்கையிலேயே தெரிந்தது.
டைரக்டர் புன்னகையுடன் தலையாட்டி விட்டு அவனிடம் சொன்னார். “சீக்கிரம்
அந்தப் படங்களைக் காட்டு”
கம்ப்யூட்டரில் அவன் தனியாகப் பிரித்து எடுத்து வைத்திருந்த படங்களை பெரிய
வெள்ளைத் திரையில் பிரதிபலிக்க வைத்துக் காட்ட ஆரம்பித்தான். அவரும் அந்தப்
பெண்மணியும் பரபரப்புடன் பார்த்தார்கள்.
அமாவாசை இருட்டில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்தாலும் ASTROSAT விண்வெளி
ஆராய்ச்சி மையத்திலிருந்து நவீன அதிநுட்பக் காமிராக்கருவிகள் மூலம் எடுத்து அனுப்பப்பட்ட
படங்களானதால் தரம் மிகநன்றாக இருந்தது. ஆனாலும் இருட்டின் குறைபாடு இருக்கவே
இருந்தது.
ஆரம்பப் படங்களில் மலையின் மேல் ஒரு இளைஞன் டெலஸ்கோப்பில் வானத்தை
ஆராய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்த
படங்களில் மலையடிவாரத்தை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. சில
படங்கள் கழிந்து அந்தக் காரில் இருந்து ஒருவன் இறங்குவது தெரிந்தது.
டைரக்டர் அந்த ஆராய்ச்சியாளனைக் கேட்டார். “அந்த ஆள் யாருன்னு தெரியுமா?”
“தெரியல சார். இவங்க நாம எதிர்பார்க்காதவங்க.”
டைரக்டர் சொன்னார். “கார் நம்பரைக் கண்டுபிடிக்க முடியுதான்னு பார்”
“முயற்சி செஞ்சு பாத்துட்டேன் சார். முடியல. அவன் தூரத்துல இருந்தே விளக்குகளை
அணைச்சுட்டு தான் வந்திருக்கான். நம்ம ப்ரோகிராம்ல நாம இந்த மலை, மலையடிவாரத்தை
தான் காமிராக்கள்ல ஃபோகஸ் செஞ்சி வச்சிருந்தோம்.....”
காரிலிருந்து இறங்கியவன் உள்ளே எதையோ எடுக்கக் குனிந்த படத்தையும் ஒரு
அட்டைப்பெட்டியோடு அவன் நிமிர்ந்த படத்தையும் கூர்ந்து பார்த்து விட்டு டைரக்டர்
கேட்டார். “உள்ளே இன்னொரு ஆள் உக்கார்ந்திருக்கிற மாதிரி தெரியுதே. அந்த ஆளை
ஃபோகஸ் பண்ணு”
அவன் அப்படியே செய்தான். ஆனால் காருக்குள் அமர்ந்திருந்த
பஞ்சுத்தலையரின் தலை அந்த அமாவாசை இருட்டில் தெரிந்த அளவு முகம் தெரியவில்லை. நரைத்த
தலையுடைய வயதான மனிதன் என்பது தெரிந்ததே ஒழிய வேறெதுவும் சரியாகத் தெரியவில்லை.
காரிலிருந்து இறங்கிய மனிதன் மலையேறுவது அடுத்த படங்களில் தெரிந்தது.
அந்த நேரத்தில் தான் வேகமாக ஒரு கரிய பறவை மலையை நெருங்குவது தெரிந்தது. அடுத்தடுத்த
படங்களில் ஒன்றில் மலை மேல் இருந்த க்ரிஷ் அந்தப் பறவையை நோக்கி தன் டெலஸ்கோப்பைத்
திருப்புவது தெரிந்தது.
“அந்தப் பறவையை ஃபோகஸ் பண்ணு” பரபரப்புடன் டைரக்டர் கத்தினார்.
அந்த ஆராய்ச்சியாளன் அப்படியே செய்தான். அந்தக்
கரிய பறவை திரையை நிறைத்தது. மூவரும் பிரமிப்புடன் அந்தப் பறவையைப் பார்த்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
அடுத்த வியாழனுக்குள் என் மண்டை வெடிக்குமானால் அதற்கு முழுப்பொறுப்பு எழுத்தாளர் என்.கணேசன் என்று டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
ReplyDeleteninga sonnathu 100% unmai.... BP yethi nammala mandai vedika vachiruvanga pola.... expectations konjam kuda kuraya matenguthu...
DeleteVery interesting, unusual and unpredictable story.
ReplyDelete//இவங்க நாம எதிர்பார்க்காதவங்க// அப்போ அவர்களுக்கு க்ரிஷ் ஆராய்ச்சி செய்வது தெரியும் போல.. அவனை கண்காணிக்கும் போது நிகழ்ந்த ஏதோ ஒரு அசாதாரண நிகழ்வை பற்றி தான் பேசினார்கள் போல.....அங்கு என்ன தான் நடந்துருக்கும்.... பிரமிப்புடன் பார்க்கும் அளவிற்கு அந்த கரிய பறவை எது.... எந்த முடிவுக்கும் வர முடியவில்லை...
ReplyDeleteமுடிந்தால் வாரத்திற்கு 2 பதிவு தாங்க.. Suspense தாங்கலை... வியாழன் வரை எல்லாம் பொறுப்பது கடினம் :)
தங்கள் நாவல்களின் தீவிர ரசிகன் நான். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். இன்று செந்தில் நாதன் கதாபாத்திரம் பற்றி சொன்னது மிக நேர்த்தி. காவல்துறையில் இல்லா விட்டாலும் வேறு துறையில் அரசியல்வாதிகளுடன் பழக வேண்டி வந்ததால் அவர்கள் பற்றி செந்தில் நாதன் மூலமாகச் சொன்ன அத்தனையும் கலப்படமில்லாத உண்மை என்று என்னால் சொல்ல முடியும். அதனால் பிரமித்தேன். உங்கள் எழுத்தின் பலமே உள்ளதை உள்ளபடி சொல்லி எங்கள் மனதில் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக நிற்க வைக்க முடிந்ததில் தான் இருப்பதாக நினைக்கிறேன். அமானுஷ்யன், ஆனந்தவல்லி, கணபதி, மைத்ரேயன் என்று எத்தனை அமரத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள். வாழ்க பல்லாண்டு. நிறைய எழுத இறைவன் துணை நிற்பாராக. -செ.கந்தசாமி
ReplyDeletePoliticians olunga Nadu alaganatha Mari vidumae
ReplyDeleteKanavil than sathiyam
Ethellam niyayama sir? vaykulla ee poradhu theriyama padichittu erukkum pothae thodarum nu pottutinga
ReplyDeleteYes you are rocking but as per earlier request posted by another reader please update twice in a week if possible...
ReplyDeleteExcellent...
ReplyDeleteஐயா.. இப்படி எல்லாம் வாசிக்க முடியாது! சீக்கிரம் புத்தகத்தை வெளியிடுங்கள். வாங்கி ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடுகிறேன். முதல் வரி தொடங்கி, கடைசி வரி வரும் வரை நிறுத்த முடியவில்லை. சீக்கிரமே முடிந்துவிட்டது என்ற கவலை வேறு. அடுத்த வாரம் வரை காத்திருக்கனுமே...
ReplyDelete