என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, January 1, 2017

எண்ணங்களின் வலிமையாலேயே விதி எழுதப்படுகிறது!ண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.”            

என்கிறது திருக்குறள். மறுக்க முடியாத பிரபஞ்ச உண்மைகளில் இதுவும் ஒன்று. ‘நினைப்பதை உறுதியுடன் நினைப்பவர்கள் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே அடைவார்கள்’.

வலிமையான எண்ணமே ஒரு காரியம் நிறைவேறியே ஆக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க வைக்கிறது. இருக்கின்ற வழிகளை முழுமையாகப் பயன்பட வைக்கின்றன. வழிகளில் தடைகள் இருந்தால் பின்வாங்காமல் தடைகளைத் தாண்டியோ, விலக்கியோ மேலே முன்னேற வைக்கிறது.  வழியே தென்படாவிட்டால் வழியை உருவாக்கவும் வைக்கிறது. நினைத்தது நடக்கும் வரை வலிமையான எண்ணம் இளைப்பாற விடுவதில்லை.  

வலிமையான எண்ணம் ஒவ்வொரு கணமும் இலக்கு குறித்த கவனத்தையே தினசரி வாழ்க்கையின் அடிநாதமாக இருக்க வைக்கிறது. ஏதாவது தகுந்த சந்தர்ப்பம் வந்தால் உடனடியாக அதை உபயோகித்துப் பயன்படுத்தும் உற்சாகத்தைத் தருகிறது. எந்தச் சூழலிலும் சின்னச் சின்ன முன்னேற்றங்களையாவது காண வைக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லாத நாட்களிலும் இன்றில்லா விட்டாலும் நாளையாவது முன்னேற்றம் வரும்என்று நம்ப வைக்கிறது. வெற்றி பெறத் தேவையான உழைப்பை 200 சதவீதம் உழைக்கத் தயாராக இருக்க வைக்கிறது.

எண்ணங்கள் மேற்போக்காக இருக்குமானால் அவை பெரும்பாலும் நம்மை செயல்படத் தூண்டாதவையாகவே இருக்கும். அப்படியே செயல்பட்டாலும் நம் செயல்கள் ஏனோ தானோவென்று இருக்கும். நினைத்தபடி முடிவுகள் வருவது அத்தி பூத்தது போல் மிக அபூர்வமாகவே இருக்கும்.  சிறு உழைப்பிலேயே பெரும் பலன்கள் உடனடியாகக் கிடைத்து விட ஆசைப்படும். யாராவது உதவி செய்து நம் ஆசை நிறைவேறாதா என்ற நப்பாசை மட்டும் இருக்கும். நமக்கேற்ற மாதிரி சூழ்நிலைகள் அமைய ஆசைப்படும். சூழ்நிலை சரியில்லா விட்டாலோ, தடைகள் இருந்தாலோ வருத்தப்பட்டு செயலற்று விடும் தன்மை இருக்கும். அவை தானாகச் சரியாகும் என்றோ, யாராவது சரி செய்து விட்டால் பரவாயில்லை என்றோ எதிர்பார்ப்பு இருக்கும். செய்கின்ற வேலையில் சீக்கிரமே களைப்பு ஏற்படும். ஓய்வில்லா விட்டால் அதையே புலம்பிப் பலருக்கும் தெரிவிக்கும் எண்ணம் உண்டாகும். வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் விதி அனுகூலமாக இருக்கும் என்ற எண்ணமும், தனக்கு மட்டும் விதி அனுகூலமாக இல்லை என்ற வருத்தம் உண்டாகும். வெற்றி பெற்றவர்கள் மீது பொறாமையும் தன் மீது பச்சாதாபமும் வந்து சுமையாய் அழுத்தும்.

இந்த இரண்டில் எந்த வகையில் சேர வேண்டும் என்பதை இந்தப் புத்தாண்டில் முடிவு செய்யுங்கள். இன்று முடிவு செய்ததை தினசரி அமல்படுத்துங்கள். எந்த அக்னியானாலும் ஒருமுறை பற்ற வைத்தபின் கடைசி வரை அணையாமல் இருந்து விடாது. தினசரி அதற்கு விறகுகள் போட்டு பாதுகாக்க வேண்டும். அப்படியானால் தான் அது தொடர்ந்து எரியும். நம் இலக்குகள், கனவுகள் எல்லாம் கூட அப்படித்தான். தினமும் நினைவுபடுத்திக் கொண்டும், உயிரூட்டிக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் என்றோ ஒரு நாள் எவன் வெற்றியைப் பார்த்தோ ஆசைப்பட்டு அடுத்த சில நாளில் மறந்து போவது உங்களை நீங்களே கேலி செய்வதற்கு இணையானது.

நினைவு வைத்திருங்கள். எண்ணங்களின் வலிமையாலேயே விதி தினசரி எழுதப்படுகிறது. அப்படியே இது வரை எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே இனியும் எழுதப்படும். இந்தப் புரிதலுடன் புத்தாண்டை ஆரம்பிப்போமா?
என்.கணேசன்10 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. Wish You and Your Family Happy Prosperous New Year 2017

  ReplyDelete
 3. Wishing You & your Family a happy and prosperous new year.

  ReplyDelete
 4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அருமையா வரிகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அருமையா வரிகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நல்ல செயல் முயற்சிக்கு ஊக்கபடுத்தும் கட்டுரை.
  நன்றி ஐயா

  ReplyDelete
 8. Arumaiyana katturai. Nandri Anna. Iniya puthandu valthukkal annaivarukum...

  ReplyDelete