சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, January 10, 2017

என் புதிய நாவல் “மனிதரில் எத்தனை நிறங்கள்” (திருத்தியது) வெளியீடு! 4 அத்தியாயங்கள் இலவச இணைப்பு!


ன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

மனிதரில் எத்தனை நிறங்கள் அச்சுப்பதிப்பில் வரும் எனது ஐந்தாவது நாவல் என்றாலும் நான் எழுதிய வரிசையில் இரண்டாம் நாவல். இந்த நாவலில் வரும் சிவகாமி என்னும் கதாபாத்திரம் அமானுஷ்யனுக்கு முன்பாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கதாபாத்திரம். இரண்டு வருட காலம் நிலாச்சாரலில் தொடராக வெளி வந்த இந்த நாவலின் வாசகர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பல.

ஆரம்பத்தில் இருந்தே மர்ம நாவல் போல் செல்லும் இந்த நாவல் மர்ம அம்சத்தையும் விட அதிகமாக மனிதர்களின் குணாதிசயங்களை அலசுவதாக இருந்தது. மனித குணாதிசயங்களை விட, மர்மத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்த சில வாசகர்கள் விரைவில் மர்மத்தை அறிந்து கொள்ள அவசரப்படுத்தியதால் கடைசி அத்தியாயங்களை அவசரகதியில் அப்போது எழுதினேன். நாவல் முடிவுக்கு வந்த போது அவசரப்படுத்தி எழுதி விட்டீர்களே என்று பல வாசகர்கள் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். எங்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரத்திற்கு என்ன இப்படி ஒரு முடிவைக் கொடுத்து விட்டீர்களே என்று வருத்தப்பட்டவர்கள் பலர். இதற்காக என்னிடம் சண்டை போட்ட வாசகர்களும் உண்டு.

புத்தம் சரணம் கச்சாமியை அடுத்து ஒரு நாவல் அச்சில் வெளியிடுவது பற்றி என் பதிப்பாளர் திரு யாணன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,  வேறெந்த நாவலையும் எழுத ஆரம்பிக்காத நிலையில், அச்சில் வராத இந்த மனிதரில் எத்தனை நிறங்கள்நாவல் வாசகர்களிடையே பெற்ற வரவேற்பைப் பற்றியும் முடிவு குறித்து ஏற்பட்ட வருத்தம் பற்றியும் தெரிவித்தேன். உடனே அவர் இந்த நாவலைத் திருத்தி எழுதி வாசகர்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவது தானே என்று கேட்டார்.


விளைவு உங்கள் கையில் இருக்கும் இந்த நாவல். முடிவு மட்டுமல்லாமல் பல இடங்களை திருத்தி எழுதினேன். முன்பு ஒருமுறை எழுதிய நாவலை மறுபடி திருத்தி எழுதிய ஒரே நாவல் இது தான்.


முன்பே நான் சொன்னது போல் இது சுவாரசியமான மர்ம நாவல் மட்டுமல்ல. பலம்-பலவீனம், அன்பு-வெறுப்பு, சந்தேகம்-நம்பிக்கை போன்ற முரண்பாட்டு அம்சங்களைத் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் யதார்த்த மனிதர்களைக் கதாபாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.


ஒரு வாசகர் எனக்கு எழுதினார். “நான் பல சுயமுன்னேற்ற நூல்களில் கற்றுக் கொண்டதை விட, ஆளுமை நூல்களில் கற்றுக் கொண்டதை விட அதிகமாய் உங்கள் சிவகாமி கதாபாத்திரத்திடமிருந்து கற்றுக் கொண்டேன்”.  அதுவே இந்த நாவலில் கடைசி வரை முரண்பாடுகளின் தொகுப்பு போலத் தோன்றும் அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி என்று கருதுகிறேன்.   


மனிதர்களில் எத்தனை நிறங்கள் என்று பார்க்க இந்த நாவல் களத்துக்குள் நுழையுங்கள் என்று உங்களை வரவேற்கிறேன்.


அன்புடன்
என்.கணேசன்

  
1


 றுபடியும் அதே கனவு-                                                                              

 வெளியே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டு இருக்கிறது.... அழைப்பு மணியை யாரோ விடாமல் அழுத்திக் கொண்டே இருந்தார்கள்...அந்த மழை சத்தத்துடன் சேர்ந்து கேட்கும் போது அந்த அழைப்பு மணியின் தொடர்ச்சியான சத்தம் நாராசமாகக் கேட்கிறது....ஒரு பெண் கலவரத்துடன் யாருடனோ போன் பேச முயன்று கொண்டிருக்கிறாள்..... பிறகு கலவரத்துடன் ரிசீவரைக் கீழே வைத்து விட்டு முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்கிறாள். யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது.... இரண்டு பெண்கள் ஒரு அறைக்குள் ஆவேசத்துடன் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கிறது... பேச்சைத் தொடர்ந்து ஒரு பெண் அமானுஷ்ய குரலில் சிரிக்கிறாள். ஒரு வினோதமான காலடி ஓசை கேட்கிறது... ஒரு பெண்ணின் அலறல் இடிச்சத்தத்தையும் மீறி அந்த பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது.... துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.... மூடிய அறைக்குள் இருந்து கதவிடுக்கின் வழியே இரத்தம் வெளியே வருகிறது... வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது....முகமெல்லாம் இரத்தம் வடிய ஒரு பெண் அறையிலிருந்து ஓடி வருகிறாள்.... யாரோ ஈனசுரத்தில் "ஆர்த்தி" என்றழைக்கிறார்கள்....."

அலறியபடி ஆர்த்தி விழித்துக் கொண்டாள். உடல் எல்லாம் வியர்க்க, இதயம் படபடக்க திகிலுடன் படுக்கையில் உட்கார்ந்தாள்இந்தக் கனவு அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வருகிறது. முன்பெல்லாம் நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்தக் கனவு இப்போதெல்லாம் மாதம் ஓரிரு முறை வர ஆரம்பித்து விட்டன. இந்தக் கனவின் காட்சிகள் எப்போதும் இதே வரிசையில்  வருவதில்லை. ஒவ்வொரு முறையும் முன் பின்னாக மாறி மாறி வரும்ஆனால் கனவில் காணும் அந்த காட்சிகளில் மாற்றம் இருப்பதில்லை. ஒரு பெரிய ஸ்கிரீனில் சினிமா ஸ்லைடுகள் காண்பிக்கப்படுவது போல கோர்வையில்லாமல் வேகமாக வந்து போகும் கனவின் காட்சிகள் கலைவது மட்டும் ஈனசுரத்தில் ஆர்த்தி என்று யாரோ அழைக்க அலறியபடி அவள் விழித்துக் கொள்வதில் தான்

அறையின் மின் விளக்கு எரிந்தது. அவளுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த  தாத்தாவும் பாட்டியும் அவளையே கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் என்ன ஆயிற்று என்று அவளைக் கேட்கவில்லைவருடக்கணக்கில் அவளை வதைத்து வந்த கனவைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சிவந்த நிறம், நீண்ட கூந்தல், அழகான பெரிய கண்கள், கண்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய அழகு முகம், செதுக்கிய உடற்கட்டு, சராசரிக்கும் மேற்பட்ட உயரம் என அழகோவியமாய் இருக்கும் பேத்தியின் இந்த தொடர் சித்திரவதையைப் பார்க்க  பாட்டியின் கண்களில் லேசாக கண்ணீர் திரை போட்டதுதாத்தாவின் முகத்தில் இயலாமையுடன் கூடிய துக்கம் குடி கொண்டது. இருபத்தியொரு வயதை அடுத்த வாரம் எட்டப் போகிற அவர்கள் பேத்தியை இந்தக் கனவில் இருந்து காப்பாற்ற அவர்களால் முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடம் தெரிந்தது. ஆர்த்தி அவர்கள் இருவரையும் பார்த்து பலவந்தமாக மெலிதாய் புன்னகையை வரவழைத்தாள். "வழக்கமான கனவு தான். நீங்க போய் தூங்குங்க".

பாட்டி பார்வதி அவளைப் படுக்க வைத்து போர்வை போர்த்தி அவள் தலைமுடியைக் கோதி விட்டு ஆசுவாசப்படுத்தி விட்டுத் தான் அங்கிருந்து நகர்ந்தாள். தாத்தா நீலகண்டன் பேத்தியைப் பாசத்துடன் பார்த்தபடி ஒரு கணம் நின்று விட்டு மனைவியைப் பின் தொடர்ந்தார். பார்வதி கணவனிடம் மெல்லிய குரலில் சொன்னாள். "அவள் கிட்ட இன்னும் எத்தனை நாள் உண்மையை மறைக்கிறது. எல்லாத்தையும் சொல்லிடறது நல்லதில்லையா?"  அவர் தற்காலிகமாய் செவிடானார்

அவர்கள் போன பின்பு ஆர்த்திக்கு உறக்கம் நீண்ட நேரம் வரவில்லை. இந்தக் கனவு ஏன் வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அடிக்கடி வரும் கனவாக இருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும் அது அவளுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு ஏனோ சிறிதும் குறைவதில்லை. அவளுக்கு சுமார் பதினைந்து வயது இருக்கும் போது நீலகண்டன் அவளை ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் கூட்டிக் கொண்டு போனார்அந்த டாக்டர் அவளிடம் அரை மணி நேரம் பேசி விட்டுப் பிறகு தனியாக தாத்தாவிடம் அரை மணி நேரம் பேசினார். அவர் என்ன சொன்னார் என்று கேட்டதற்கு தாத்தா சரியாகப் பதில் சொல்லவில்லை. அதற்குப் பின் தாத்தா அவளுக்கு இந்த விஷயத்தில் சிகிச்சைபார்க்கும் முயற்சியே எடுக்கவில்லை. பணம் அதிகமாக செலவாகும் சிகிச்சை ஏதாவது அந்த டாக்டர் தாத்தாவிடம் சொல்லி இருக்கலாம், ஏழ்மை நிலையில் இருக்கும் தாத்தா இது நம் வசதிக்கேற்றதில்லை என்று விட்டிருக்கலாம் என்று ஆர்த்தி நினைத்தாள். ஆனால் அவளுக்கு தாத்தா மீது வருத்தம் இல்லைபாண்டிச்சேரியில் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் குடியிருந்து கொண்டு காலையிலும் மாலையிலும் டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு, இடைப்பட்ட நேரத்தில் ஒரு தனியார் நூலகத்தில் வேலை செய்து கொண்டு, வரும் வருமானத்தில் மனைவியையும், பேத்தியையும் காப்பாற்ற வேண்டி உள்ள அவர் நிலைமையை அவள் நன்றாகவே அறிவாள். அவர் அவளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்ததே பெரிய விஷயம்......... அவள் அப்படியே உறங்கிப் போனாள்.

    ஆனால் பார்வதியால் உறங்க முடியவில்லை. பேத்தியின் கனவின் பின்னால் இருக்கும் உண்மையை இனியும் தெரிவிக்காமல் இருப்பது முட்டாள்தனம் என்று அவள் உள்ளுணர்வு சொன்னது

    மறுநாள் காலை பார்வதி பேத்தியிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதும் பின் வாங்குவதுமாக இருந்தாள். ஆர்த்தி "என்ன பாட்டி?" என்று கேட்கும் போது நீலகண்டன் அவர்கள் அருகே வர, அவர் போகட்டும் பிறகு சொல்கிறேன் என்று அவர் அறியாமல் சைகையால் சொன்னாள்நீலகண்டன் காய்கறி வாங்கி வர வெளியே போகும் வரை காத்திருந்து விட்டுப் பிறகு பேத்தியைத் தன் அருகே உட்கார வைத்து ஏதோ சொல்ல பார்வதி வாய் திறந்தாள். மறுபடியும் வார்த்தைகள் வெளிவரவில்லை

    "என்ன பாட்டி?"

  பார்வதிக்கு முகமெல்லாம் வியர்த்தது. அவள் முந்தைய நாள் இரவெல்லாம் உறங்காமல் சிந்தித்து தான் பேத்தியிடம் சில உண்மைகளை தெரிவித்து விடத் தீர்மானித்திருந்தாள்ஆனாலும் அதைச் சொல்ல முற்படுகையில் ஏதோ தொண்டையை அடைத்தது. பொறுமையாக ஆர்த்தி தன் பாட்டி பேசக் காத்திருந்தாள்

    "ஆர்த்தி, உன்னோட அந்தக் கனவு...."

    "சொல்லுங்க பாட்டி அதுக்கென்ன?"

    "அது நீ நினைக்கற மாதிரி காரணமில்லாமல் வர்றதில்லை"

     ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்.

    "உன் அம்மா சாகறப்ப உனக்கு மூணு வயசு....அவ மரணம் இயற்கையாய் இருக்கலை....அது கொலையாய் இருக்கலாம்கிற சந்தேகம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கு... அந்த சமயத்தில் நீ உங்கம்மா கூட இருந்திருக்கிறாய்.... உன் ஆழ்மனசில் அப்ப பதிஞ்சதெல்லாம் தான் இந்தக் கனவாய் வருதுன்னு அன்றைக்குப் பார்த்த டாக்டர் நினைக்கிறார்... எங்களுக்கும் அது சரியாக இருக்கலாம்னு தோணுது"

    ஆர்த்தியின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று போனது.


2


    ர்த்தி அதிர்ச்சியிலிருந்து மீண்டவுடன் கேட்டாள். "என்ன பாட்டி சொல்றீங்க?.... இதையேன் இவ்வளவு நாள் சொல்லாமல் வச்சிருந்தீங்க?"

    பார்வதி குற்ற உணர்ச்சியுடன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.  "உன் தாத்தா உன் கிட்ட சொல்லவே கூடாதுன்னு முதல்ல இருந்தே பிடிவாதமாய் இருக்கார். உனக்கு தான் உன் தாத்தாவோட குணம் தெரியுமே. உண்மையைச் சொன்னா உனக்கு அதிர்ச்சியாகும்னு நினைச்சார்இன்னொரு பக்கம் உன்னை இழந்துடுவோமோன்னு பயப்பட்டார்...."

     "என்னை இழந்துடுவோம்னா?...."

     "நீ உங்கப்பா கிட்ட போயிடுவாயோன்னு பயந்தார்..."

      ஆர்த்தி திகைப்புடன் தன் பாட்டியைப் பார்த்தாள்அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகிறாளே பாட்டி! பார்வதி தலை குனிந்தபடியே சொன்னாள். "உன் அம்மா ஆனந்தி தான் உன் மூணாம் வயதில் இறந்தாளே ஒழிய உன் அப்பா உயிரோட தான் இருக்கார்....."

   ஆர்த்திக்கு தலை சுற்றியதுதன்னுடைய சிறு வயதிலேயே பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் அதனால் தான் தன்னுடைய தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் நம்பி வந்திருந்த அவளுக்கு இந்தப் புதுத் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன. "எல்லாத்தையும் தெளிவாய் ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க பாட்டி"

  பார்வதி தன் கணவன் வருவதற்கு முன் சொல்லி முடித்து விட எண்ணி சுருக்கமாய் சொன்னாள்.  "உங்கப்பா பெரிய பணக்காரர். ஊட்டியில் பெரிய எஸ்டேட்டும், கோயமுத்தூரில் பல கம்பெனிகளும்,  ஃபேக்டரிகளும் அவங்களுக்கு இருக்கு. அப்ப நாங்களும் கோயமுத்தூர்ல இருந்தோம்உன் அம்மாவும், உங்கப்பாவும் ஒரே காலேஜில் படிச்சாங்ககாதலிச்சாங்க. கல்யாணம் செய்துகிட்டாங்க. உன் அம்மா ஆரம்பத்தில் சந்தோஷமாய் தான் இருந்தாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சந்தோஷம் வடிஞ்சு போனதை நாங்க பார்த்தோம். என்னன்னு கேட்டதுக்கு அவள் பதிலே சரியாய் சொல்லலை."

     "உனக்கு மூணு வயசு இருக்கறப்ப ஒரு தடவ ஊட்டி பக்கம் விடாம பேய் மழை அடிச்சு பல இடங்கள்ல நிலச்சரிவு ஆயிடுச்சு. உங்கம்மா ஆனந்தியும் அப்ப ஊட்டி எஸ்டேட் பங்களாவில் இருந்ததால் நாங்க கவலையோட போன் செஞ்சு கேட்டோம். வீட்டாளுங்க யாரும் இருக்கலை. உங்கம்மாவைக் காணோம்னும் தேடிகிட்டிருக்கிறதாகவும் ஒரு வேலைக்காரன் தான் சொன்னான்நாங்க பதறிப் போய் அங்கே உடனே போனோம்ரெண்டு நாள் அங்கேயே இருந்தோம். அப்பவும் அவளை தேடிகிட்டு தான் இருந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு அவங்க எஸ்டேட் பக்கத்தில் நிலச்சரிவு ஆகியிருந்த இடத்தில் சிக்கி செத்திருந்ததாய் சொல்லி அவள் பிணத்தை எடுத்துட்டு வந்தாங்க. எங்களை முகத்தைப் பார்க்கக் கூட விடலை..... முகம் சிதிலமாயிடுச்சு, பார்த்தா தாங்க மாட்டீங்கன்னு சொல்லி மூடி எடுத்துகிட்டு வந்த பிணத்தை அவசர அவசரமாக அப்படியே எரிச்சுட்டாங்க..... எங்களுக்கு சந்தேகம் வந்தாலும் அந்த சமயம் ஒண்ணும் சொல்ல முடியலை.... அப்புறமாய் உனக்கு தொடர்ச்சியாய் வந்த கனவு, உங்கம்மா மரணம் பத்தி முதல்ல எங்களுக்கு வந்த சந்தேகம் பொய்யில்லைன்னு நிரூபிச்சிடுச்சு...." பார்வதி சொல்லச் சொல்ல அழுதாள். அவள் கடந்த காலத்துக்கே போய் விட்ட மாதிரி இருந்தது.

    பின் தன்னை சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.  "அந்த சமயத்துல அந்த ஊட்டி பங்களாவில் உன் அம்மா கூட இருந்தது நீயும் ஒரு வேலைக்காரியும் மட்டும் தான். அந்த வேலைக்காரி என்ன ஆனாள்னு யாருக்கும் தெரியலை. பிரமை பிடிச்ச மாதிரி அங்கே அழக்கூட முடியாமல் நீ மட்டும் நின்னுட்டுருந்தாய். உங்கம்மாவை எரிச்ச மறு நாளே உன்னை கொஞ்ச நாள் வச்சிகிட்டிருந்து பிறகு அனுப்பறோம்னு சொல்லி எடுத்துகிட்டு வந்த நாங்க பிறகு அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கலை. "

    பாட்டி சொன்னதை ஜீரணிக்க ஆர்த்திக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதுஏதோ இரவல் வாங்கிக் கொண்டு வந்த புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்பது போல பார்வதி சொன்னது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. திகைப்போடு ஆர்த்தி கேட்டாள்.  "எங்கப்பா பிறகு என்னைத் தேடிகிட்டு வரலையா?"

    பாட்டி குற்ற உணர்வோடு சொன்னாள். "கோயமுத்தூரில் உங்க தாத்தாவுக்கு ஒரு ஸ்கூல்ல வாத்தியார் வேலை இருந்ததுஉன்னை எடுத்துட்டு வந்த பிறகு அவர் நிறைய யோசிச்சார்உன்னை அந்தக் கொலைகாரக் குடும்பத்துக்கு திருப்பி அனுப்ப  அவருக்கு மனசு வரலைவேலையை ராஜினாமா செய்துட்டு, இருந்த வாடகை வீட்டையும் காலி செஞ்சுட்டு யாருக்கும் சொல்லிக்காம அங்கிருந்து என்னையும் உன்னையும் கூட்டிகிட்டு கிளம்பிட்டார்எங்க போறதுன்னு முடிவு செய்ய முடியலைமனசெல்லாம் ரணம், குழப்பம்அரவிந்தாஸ்ரமத்து அன்னை மேல் இருந்த நம்பிக்கைல, இங்கே வழி கிடைக்கும்னு இந்தப் பாண்டிச்சேரிக்கு வந்தோம்அவருக்கு டியூஷன் ரூபத்தில் பிழைப்புக்கு வழி கிடைச்சது. பிறகு லைப்ரரியில வேலையும் கிடைச்ச பிறகு சுதாரிச்சுகிட்டோம். நாங்க இங்கே இருக்கிறோம்னு உங்கப்பாவுக்கு தெரிவிக்கலை. அவங்களுக்குத் தெரியாமல் இங்கே நாம ஒளிஞ்சு வாழ்ந்திட்டிருக்கிறோம்...."

    "என் மகள் இறந்ததுல எனக்கு துக்கம் இல்லாமல் இல்லைஆனா உன்னை உங்கப்பா கிட்டே இருந்து பிரிச்சு எடுத்துகிட்டு வந்ததில் எனக்கு ஒப்புதல் இல்லைஉன் தாத்தா கிட்டே அப்பவே இதைச் சொன்னேன். அப்ப நான் சொன்னதுக்கு அதுக்கு பதிலாய் விஷத்தை சாப்பாட்டுல கலந்து கொடுக்க உன் தாத்தா சொன்னார்இந்த மாதிரிப் பேசினா நான் என்ன செய்ய முடியும் சொல்லுஉன் தாத்தாவுக்கு உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துட்டு, பிறகு அது தான் சரின்னு சாதிக்கிறது எப்பவுமே இருக்கிற கெட்ட பழக்கம். உன்னை எடுத்துகிட்டு வந்தது தான் உனக்கு செஞ்ச நல்ல காரியம்கிறது அவர் எண்ணம்ஆனா உங்கப்பா குடும்பம் போலீசு மூலம் எங்களைத் தேடிகிட்டு எப்ப நம்ம வீட்டு வாசலில் நிற்குமோன்னு நான் ஆரம்பத்தில் நிறையவே பயந்துகிட்டிருந்தேன்..."

    பார்வதியின் கண்களில் லேசாய் நீர் கோர்த்தது. "பணம், செல்வாக்குன்னு ராணி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இந்த தீப்பெட்டி மாதிரிச் சின்னதாய் இருக்கிற மூணு ரூம் வீட்டில் வச்சு வளர்த்தினதில் எனக்கு நிறையவே வருத்தம் ஆர்த்தி. எமன் எப்ப கூப்பிடுவான்னு தெரியாமல் காத்துகிட்டிருக்கிற இந்த சமயத்தில் கூட நாங்க உன் கிட்ட உன் அப்பா பத்தி சொல்லாமல் இருக்கிறது சரியில்லைன்னு தான் உன் கிட்டே இதைச் சொன்னேன். எங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா உனக்கு யாரிருக்காங்கன்னு நான் பயப்படறேன்...."

    ஆர்த்திக்கு பாட்டி சொன்னதையெல்லாம் ஜீரணிக்க இன்னும் கஷ்டமாகவே இருந்ததுஎப்போதும் அர்த்தமில்லாமல் வரும் கனவு என்று அவள் நினைத்திருந்த அந்தக் கனவில் வரும் அந்தப் பெண்ணின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அந்த பெண்ணின் உருவமே மங்கலாகத் தெளிவில்லாமல் இருந்ததால் தான் தினமும் பார்க்கும் தாயின் புகைப்படத்திற்கும் அந்தப் பெண்ணிற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்கிற சந்தேகம் கூட அவளுக்கு இத்தனை நாள் வரவில்லை என்பது புரிந்தது.

   எத்தனையோ கேள்விகள் ஒருசேர மனதில் எழுந்தாலும் ஆர்த்தி ஒரு கேள்வியை முதலில் தேர்ந்தெடுத்தாள்.  "அம்மாவை யார் கொன்னாங்க பாட்டி?"


3


     பார்வதியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. பின் கைகளை விரித்தபடி சொன்னாள். "தெரியலை....ஆனால் பிணத்தை எடுத்துட்டு வந்ததில் இருந்து அவசர அவசரமாய் அதை எரிக்க ஏற்பாடு செய்தது வரை எல்லாமே உன் பெரியத்தை மேற்பார்வையில் நடந்ததால் உன் தாத்தா அவளைத் தான் சந்தேகப்படறார்....." 

     "பெரியத்தையா?" ஆர்த்தியின் கேள்வியில் இருந்த குழப்பத்தைப் பார்த்த பார்வதி விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

     "தாயைச் சின்ன வயதிலேயே இழந்துட்ட உன் அப்பாவுக்கு இரண்டு அக்காக்கள் இருந்தாங்கபெரியக்காவை அவர் அம்மா ஸ்தானத்திலேயே வச்சிருந்தார்அவங்கப்பாவும் அவர் மேஜராகறதுக்கு முன்னால் போய் சேர்ந்துட்டதால் வியாபாரம், சொத்து எல்லாத்தையும் கூட அவர் பெரியக்கா தான் ஆரம்பத்தில் பார்த்துகிட்டிருந்தாள். அப்புறமும் கூட எல்லாமே அவள் கட்டுப்பாட்டில் தானிருந்துச்சு. உன் அப்பா ஒரு ரப்பர் ஸ்டாம்பாக தானிருந்தார்அவளைக் கேட்காம அந்த வீட்டில் ஒரு அணு கூட அசையாதுங்கற அளவு உயரத்தில் பெரியக்காவை வச்சிருந்தார். அவள் சொல்லாமல் அவராய் செய்த காரியம் உங்கம்மாவைக் காதலிச்சதாய் தான் இருக்கணும்..."

     ஆர்த்தி கேட்டாள். "அவங்களுக்கு அப்பா அம்மாவைக் காதலிச்சது பிடிக்கலையா?"

    "அவள் இவங்க காதலுக்கு எதிராய் இருக்கலைஅவள் தான் எங்க கிட்ட வந்து தம்பிக்குப் பெண் கேட்டாள். கட்டின சேலையோட பெண்ணை அனுப்பினா போதும்னாள்நாங்களும் எங்க பொண்ணு மாதிரி அதிர்ஷ்டக்காரி உலகத்தில் இல்லைன்னு நினைச்சோம். கல்யாணத்துக்கு அப்புறம் உங்கம்மாவும் அவளைத் தலையில் வச்சு கொண்டாடினாள்..." சொல்லிக் கொண்டே வந்த பார்வதி திடீரென்று  நிறுத்தி பேத்தியிடம் கேட்டாள். "உனக்குத் தெரியுமா, உன் பெரியத்தை யாருன்னு?"

    "தெரியலை"

    "உங்க காலேஜ் டேயில்  சீஃப் கெஸ்ட்டாய் போன வருஷம் வந்தாளே ஒருத்தி.... நீ கூட அன்றைக்கு முழுசும் அவளைப் பத்தியே பேசிகிட்டிருந்தாயே....."

    "சிவகாமியம்மாவா?"  

  ஆர்த்தியால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. "அவள் தான் உன் பெரியத்தை" என்று பாட்டி சொன்ன போது அவள் நம்ப முடியாமல் திகைத்தாள்ஆனால் சந்திரசேகர் இண்டஸ்ட்ரீஸின் எக்சிகியூடிவ் டைரக்டர் சிவகாமியம்மாள் என்று அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பலராலும் பாராட்டப்பட்ட அவளை இன்று வரை அவளால் மறக்க முடிந்ததில்லை என்பது உண்மைதன் தந்தை சந்திரசேகர் தான் அந்த இண்டஸ்ட்ரீஸின் பெயரில் இருக்கும் சந்திரசேகர் என்பதையும் இப்போது தான் ஆர்த்தி அறிகிறாள்.   

    சென்ற வருடம் கல்லூரி நாளில் சிறப்பு விருந்தினராக வந்து மேடையில் அமர்ந்திருந்த சிவகாமி அப்போது அவளைக் காந்தமாய் கவர்ந்திருந்தாள்நல்ல உயரம், சிவந்த நிறம், கம்பீரமான அழகான தோற்றம், தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு, என  அவளின் எல்லாமே ஆர்த்தியை அன்று வசியப்படுத்தியதுபெண் சுதந்திரம், பெண்களின் முன்னேற்றம், என்று எல்லா மாணவிகளையும் புத்துணர்ச்சி பெறும் வண்ணம் பேசி எல்லோரையும் அன்று சிவகாமி நிறையவே கவர்ந்து விட்டிருந்தாள்அன்று மேடைக்கு முன்னால் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த ஆர்த்தி மந்திரத்தால் கட்டுண்டது போல அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.....

    அவள் தான் தன் பெரியத்தை என்று அறிந்த இந்தக் கணம் தான் இன்னொரு உண்மை அவளுக்கு உறைத்ததுசிவகாமி மேடைக்கு வந்தது முதல் அங்கிருந்து கிளம்பும் வரை ஆர்த்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்பேசும் போது அவளையே அதிக நேரம் பார்த்துப் பேசினாள். மற்ற நேரங்களிலும் அவளையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை தன் மீது அதிக நேரம் விழுவது கூட அவளுக்குப் பெருமையாக அன்று இருந்ததுவீட்டுக்கு வந்து அன்று முழுவதும் ஆர்த்தி சிவகாமியம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்அப்போதெல்லாம் பாட்டியும் தாத்தாவும் தர்மசங்கடத்துடன் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டிருந்ததன் அர்த்தமும் இப்போது தான் புரிந்ததுஅவர்கள் முடிந்த வரை பேச்சை வேறு திசைகளில் திருப்பப் பார்த்தார்கள்ஆனால் ஒரு வித "ஹீரோ வர்ஷிப்"பில் இருந்த ஆர்த்தி அன்று திரும்பத் திரும்ப சிவகாமி பற்றியே பேசினாள்.... தாத்தா முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே போனவர் நீண்ட நேரம் வரவேயில்லை.

     "நீ அன்றைக்கு சிவகாமி பத்தி அவ்வளவு பெருமையாய் பேசிகிட்டுருந்தப்ப எங்களுக்கு உன் அம்மா ஞாபகம் தான் வந்தது. அவளும் அப்படி தான் சிவகாமி பத்தி வாய் நிறைய பேசுவாள்..." என்று பார்வதி சொன்னாள்.

  தன் மனதைக் கவர்ந்திருந்த அந்த சிவகாமி ஒரு கொலைகாரியாக இருப்பாள் என்று நம்ப ஆர்த்திக்குத் கஷ்டமாக இருந்ததுஆனாலும் யோசித்துப் பார்க்கையில் சிவகாமி வேறு விதங்களிலும் சந்தேகத்தைக் கிளப்பினாள். சென்ற வருடக் கல்லூரி நாளன்று ஆர்த்தி யார் என்று முதல் பார்வையிலேயே உணர்ந்து தான் சிவகாமி அவளைக் கவனித்தாள் என்று இப்போது ஆர்த்திக்கு உள்ளுணர்வு சொன்னது. அப்படியானால் பாட்டி சொன்னது போல் அவள் எங்கிருக்கிறாள் என்று அவளது தந்தை குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லைகுறைந்த பட்சம் சிவகாமி கண்டிப்பாக ஆர்த்தி பாண்டிச்சேரியில் இருப்பதை தெரிந்து வைத்திருந்தாள் என்பதில் ஆர்த்திக்கு சந்தேகம் இருக்கவில்லை

   என்ன தான் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தாலும் தன் மகள் இருக்கும் இடம் தெரிந்த பிறகு ஒரு தந்தை வராமல் இருப்பார் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஒன்று, சிவகாமி தன் தம்பியிடம் ஆர்த்தியைப் பார்த்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவகாமிக்கு அவளை யார் என்றே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.... மறுபடியும் யோசித்துப் பார்த்த போதும் அவள் மனம் இரண்டாம் அனுமானத்தை ஏற்க மறுத்ததுஆனந்திக்கும் அவளுக்கும் உள்ள உருவ ஒற்றுமை பார்வை உள்ளவனுக்கு கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் சிவகாமி அதை ரகசியமாய் வைத்திருப்பது தான் உண்மை என்று பட்டதுஅது ஏன் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.
  
   பாட்டியிடம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தன. பாட்டி கதைச் சுருக்கம் தான் சொன்னாளே ஒழிய முழுக்கதை இன்னும் தெளிவாக இல்லை என்பதை ஆர்த்தி உணர்ந்தாள். மனதில் எழுந்த பிரதானமான கேள்வியை கேட்டாள்.

     "அவங்க அம்மாவைக் கொல்ல என்ன காரணம் இருந்திருக்கக்கூடும் என்று நீங்க நினைக்கிறீங்க?"

     "அது தான் குழப்பமாய் இருக்கு ஆர்த்தி. என்ன காரணம் இருக்க முடியும்னு எனக்கு இன்னும் புரியலை...." என்று பார்வதி சொல்லச் சொல்ல தாத்தாவின் குரல் இடைமறித்தது. "கடவுள் கொடுத்த மூளையை உபயோகிச்சுப் பாரு, புரியும்."

     அப்போது தான் பாட்டியும் பேத்தியும் நீலகண்டனைக் கவனித்தார்கள்அவர் தன் மனைவியை சுட்டெரித்து விடுவது போல் பார்த்தபடி நின்றிருந்தார்


4

       
    ந்த இறுக்கமான சூழ்நிலையிலும் எல்லா விதங்களிலும் அந்த தம்பதிகள் மாறுபடுவதை ஆர்த்தியால் கவனிக்காமல் இருக்க முடியவில்லைதாத்தா மாநிறம், நல்ல உயரம், ஆஜானுபாகுவான உடல்வாகு. பாட்டியோ நல்ல சிவந்த நிறம், குறைவான உயரம், ஒடிசல் தேகம். தோற்றத்தில் மட்டுமல்லாமல் குணாதிசயங்களிலும் நிறையவே இருவரும் மாறுபட்டார்கள்தாத்தா உணர்ச்சிகளால் உந்தப்படுபவர்பாட்டியோ சிந்தித்து செயல்படுபவள்...... நான்கு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டால் ஐந்தாவது வார்த்தை சண்டையில் தான் முடியும் என்பது ஆர்த்தியின் அனுபவ அறிவு. அதைப் பொய்யாக்க விரும்பாதது போல் பார்வதி கோபத்துடன் சொன்னாள். "கடவுள் எனக்கு மூளையை வைக்கலை. எனக்கும் சேர்த்து உங்களுக்குத் தானே வச்சிருக்கார். சொல்லுங்க, உங்க பேத்தி கேட்கட்டும்"

    "மூளை இருந்தால் இதையெல்லாம் அவ கிட்ட சொல்லுவாயா? சொல்ல வேண்டாம்னு படிச்சுப் படிச்சு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்"
 
     "நாம என்ன சிரஞ்சீவிகளா? எமன் கூப்பிடு தூரத்தில் இருக்கான்அவன் நம்மளை கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி நாம அவள் கிட்ட அவங்கப்பா பத்தி சொல்லி அவர் கிட்ட சேர்த்துடறது நல்லதில்லையா"

     "எதுக்கு? அவளோட அம்மாவைக் கொன்னுட்ட மாதிரி இவளையும் அவங்க கொன்னுடறதுக்கா?"

     "இவளை ஏன் கொல்லப் போறாங்க?"

     "சொத்துக்காக தான். வேறென்னஇவங்கப்பாவுக்கு இரண்டாம் தாரத்திலும் குழந்தை இல்லை. இப்ப எல்லா சொத்துக்கும் இவள் தான் வாரிசு" என்று ஆக்ரோஷமாக தெரிவித்த நீலகண்டன் ஆர்த்தியிடம் சொன்னார். "நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்மா. உங்கம்மா ஏழ்மை நிலையில் வளர்ந்தாலும் பிடிவாதக்காரி. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வளைந்து கொடுக்கிற ரகம் அல்ல. என்னை மாதிரி. கிட்டத்தட்ட எல்லாத்தையும் தன் கைப்பிடிக்குள் வச்சிருக்கிற சிவகாமிக்கு உங்கம்மா ஒத்துப் போகாமல் இருந்திருக்கலாம். உங்கப்பாவும் மனைவி பக்கம் சாய்கிற மாதிரி இருந்திருக்கலாம். நிலைமை கை மீறிப் போகிறதுக்கு முன் உங்கம்மாவை தீர்த்துக் கட்ட அந்த ராட்சஸி முடிவெடுத்திருக்கலாம்....." தாத்தாவுக்கு சிவகாமியைப் பற்றிப் பேசப் பேச இரத்தக் கொதிப்பு அதிகமானது போல் தோன்றியதுபேச்சில் ஆக்ரோஷம் அதிகரித்தது.

     பார்வதி சொன்னாள். "ஆனந்தி எதுவும் நம்ம கிட்ட சொல்லவேயில்லையே."
        
  தாத்தா மனைவியை இடைமறித்து சொன்னார்.  "பெத்தவங்க கிட்ட சொல்லி அவங்க மனசைப் புண்படுத்த வேண்டாம்னு நினைச்சிருப்பாள். அதனால் தான் சொல்லலை. எனக்குத் தெரியும், என் குழந்தை மனசு....ஆனா அவள் ஏதாவது சொல்லியிருந்தா நாங்க கண்டிப்பா உன்னை எடுத்துகிட்டு வந்த மாதிரி அவளையும் கூட்டிகிட்டு வந்திருப்போம். யாருக்கு வேணும் காசு பணம்ஆனா எதுவும் சொல்லாமல் மனசுக்குள் இருந்ததையெல்லாம் மூடி வச்சுட்டே இருந்துட்டு முகத்தைக் கூட கடைசியாய் காட்டாம ஒரேயடியாய் போயிட்டாள்....." தாத்தா சொல்லச் சொல்ல கண் கலங்கினார். துக்கத்தால் உடைந்து போனார்திடீர் என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

    பார்வதி வேகமாய் வந்து அவரைப் பிடித்துக் கொண்டு "என்ன ஆகுதுங்க" என்று கேட்டாள்.

    "பார்வதி எனக்கு நெஞ்சடைக்கற மாதிரி இருக்கு...." என்று சொன்னவர் மனைவி மீது சாய்ந்தார்.

                             *****
                                           
     டாக்டர் ஆர்த்தியை தனியாக அழைத்துச் சொன்னார்.  "இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருக்கும்மா. எவ்வளவு சீக்கிரம் பை பாஸ் சர்ஜரி செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது. இல்லாட்டி உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம்"

    ஆர்த்தி பயந்து கொண்டே கேட்டாள். "எவ்வளவு செலவாகும்?"

    "கிட்டத் தட்ட ரெண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் ஆகும். ஏதாவது மெடிக்கல் இன்ஷுரன்ஸ் செஞ்சிருக்கீங்களா?"

    இல்லை என்று ஆர்த்தி தலையசைத்தாள். டாக்டர் அடுத்த ·பைலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தபடி தலையை நிமிர்த்தாமல் சொன்னார். "பணம் உடனடியாய் ரெடி செய்ய முடிஞ்சா சொல்லும்மா. இல்லாட்டி நீங்க நாளைக்கே அவரை டிஸ்சார்ஜ் செய்துக்கலாம்"

    கண்ணில் தழும்ப ஆரம்பித்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆர்த்தி வெளியே வந்தாள்பார்வதி தன் பேத்தியை ஆவலோடு பார்த்தாள். "டாக்டர் என்ன சொல்றார்? பயப்பட ஒண்ணும் இல்லை தானே?"

    "ஆபரேஷன் செய்தால் நல்லதுங்கறார்"

    "எவ்வளவு ஆகுமாம்?"

    ஆர்த்தி தொகையைச் சொன்னவுடன் பார்வதியின் முகம் வெளிறியது. "வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் எந்த நேரத்தில் எமன் பக்கத்தில் இருக்கான்னு சொன்னேனோ தெரியலை அவன் இப்படி வாசல்ல வந்து நிற்கறான்எத்தனை நாள் லக்ஷ்மி ஷோபானம் படிச்சிருப்பேன். அவள் பார்வையைக் கூட இந்தப் பக்கம் திருப்பலை".  எழுந்து போய் ஆஸ்பத்திரியின் .சி.யூ கண்ணாடி வழியாக கண்கலங்க கணவனைப் பார்த்தாள். மறுபடி வந்து ஆர்த்தி அருகில் அமர்ந்தாள். "மனுஷன் வலி கொஞ்சமும் தாங்க மாட்டாரே. இப்ப எப்படி இருக்கோ தெரியலையே"

    பாட்டியைப் பார்க்க ஆர்த்திக்குப் பாவமாக இருந்ததுஎன்ன தான் சண்டை போட்டாலும் அந்த முதிய தம்பதிகள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு ஆழமானது என்பதையும் ஆர்த்தி அறிவாள். தாத்தாவைக் காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்கையில் அவளுக்கு ஒரே ஒரு வழி தான் கண் முன் தெரிந்தது.

    "பாட்டி நான் என் அப்பா கிட்ட பணம் கேட்டுப் பார்த்தால் என்ன?"

  பார்வதி திகைத்துப் போய் அவளைப் பார்த்தாள். சிறிது யோசித்த பின் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தாள். நிறைய யோசித்து விட்டுப் பேத்தியைக் கேட்டாள். "திடீர்னு எப்படிப் போய் கேட்பாய்? என்ன சொல்வாய்? அவங்க கோயமுத்தூர்லயோ, ஊட்டியிலயோ இருப்பாங்கநம்ம கிட்ட போன் நம்பர் கூட இல்லையே."

     ஆர்த்தி தன் கல்லூரி முதல்வருக்குப் போன் செய்து சிவகாமி அம்மாளின் ஆபீஸ் அல்லது வீட்டு போன் நம்பர் தர முடியுமா என்று கேட்டாள். நல்ல வேளையாக கல்லூரி முதல்வர் தன் விசிட்டிங் கார்டுகள் சேமித்து வைத்திருந்த தொகுப்பில் தேடி எடுத்து  மூன்று எண்களைச் சொன்னார். ஆர்த்தி ஊட்டி வீட்டு எண்ணிற்குப் போன் செய்தாள்.

     "ஹலோ சந்திரசேகர் இருக்கிறாரா"

     "அவர் கோயமுத்தூர் ஆபீசில் இருக்கார். நீங்க யார் பேசறது?"

  பதில் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்து ஆர்த்தி கோயமுத்தூர் ஆபிசிற்குப் போன் செய்தாள்.

     "ஹலோ சந்திரசேகர் இருக்கிறாரா?"

     டெலிபோன் ஆபரேட்டர் சந்திரசேகரின் செகரட்டரிக்கு இணைப்பு கொடுத்தாள். அந்த செகரட்டரியோ எடுத்தவுடன் யார் பேசுவது என்று கேட்டாள்ஆர்த்திக்கு சிறிது நேரம் தொண்டையை அடைத்தது. பிறகு சொன்னாள்.  "நான் அவர் மகள் பேசறேன்"

     அந்த செகரட்டரியின் குழப்பம் அவளது அடுத்த கேள்வியில் தெரிந்தது. "உங்களுக்கு எந்த சந்திரசேகர் வேணும். இது மேனேஜிங் டைரக்டர் சந்திரசேகர் ஆபிஸ்"

     "நான் அவர் மகள் தான் பேசறேன்"

     "உங்களுக்கு விளையாட வேறு ஆள் கிடைக்கவில்லையா?" என்று கோபத்துடன் கேட்ட அந்த செகரட்டரி போன் இணைப்பை உடனடியாக துண்டித்தாள்.

     தன் துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்திய ஆர்த்தி இனி என்ன செய்வது என்று யோசித்தாள்...... 

(மீதியை நாவலில் நீங்கள் படித்துக் கொள்ளலாம். நாவலை வாங்கவும், தங்கள் பகுதியில் கிடைக்கும் கடைகளை அறியவும் 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV






அன்புடன்
என்.கணேசன்

6 comments:

  1. ஆரம்பமே செமயா இருக்கு. நாலாவது அத்தியாயம் முடிவுக்கு வந்தது வரை நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் ரெண்டு அத்தியாயம் சேர்த்து குடுத்திருக்கலாம். பரவாயில்லை. நான் புத்தகம் வாங்கி படித்து கொள்கிறேன். நன்றி சார்.

    ReplyDelete
  2. Netru stall no 80 IL kidaikavillai..

    ReplyDelete
    Replies
    1. நேற்று இரவு ஏழு மணிக்கு தான் ஸ்டாலுக்கே நூல்கள் வந்தன. இனி கிடைக்கும்.

      Delete
  3. Dear
    Why you do not provide ebook . NRI people like us, your die hard fans will get the benefit.

    consider.

    raju/dubai

    ReplyDelete
    Replies
    1. Earlier version of this book is already available as ebook by nilacharal. So I ethically cannot allow this also become ebook. This present printed version is revised one with many changes. You can buy this version of printed book by clicking ”வெளிநாட்டு வாசகர்கள் புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்” in right hand side message in this blog. Thank you.

      Delete
  4. மிக மிக அருமையான நாவல் இது... இந் நாவலை..படித்தபின் சுய ஆய்வு செய்து நிறைய விஷயம்களை திருத்திக் கொண்டேன்...,

    Will buy the edited verison… and read it again…. SIVAGAMI madam கிட்ட இருந்து நிறைய விஷ்யம் கத்துக்கணும்...

    பல ஆண்டு அனுபவத்தில் அடிபட்டு உணரும் பக்குவத்தை.. தங்கள் வரிகள்.. எழுத்தின் ஆழம் சில நொடிகள்.. தந்து விடுகின்றன...,

    ReplyDelete