அந்தக்
கரிய பறவை மிகப் பெரியதாக இருந்தது. அதன் இறக்கைகளும் பெரியதாக இருந்தன. அதன்
கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. அது மலை உச்சியை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பறவையை
மையப்படுத்தி இருந்த அந்தப் படங்களை டைரக்டரும், அந்த விஞ்ஞானப் பெண்மணியும்
கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் அவர்கள்
திருப்திகரமாகப் பார்த்து முடித்த பின்னரே அடுத்த படத்திற்கு நகர ஆராய்ச்சியாளனை
அனுமதித்தார்கள்.
மலையுச்சியை அந்தப் பறவை நெருங்கிய தருணத்தின் ஒரு புகைப்படத்தில்
வானத்தில் பறவையும், மலையுச்சியில் க்ரிஷும், காரிலிருந்து இறங்கி மலையேறிச்
சேர்ந்திருந்த மனிதனும் தெரிந்தார்கள்.
க்ரிஷ் டெலஸ்கோப்பில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கவனம் முழுவதும் அந்தப் பறவையில் இருந்ததால் பின்னால் ஒருவன் வந்திருப்பதை
அவன் அறியவில்லை என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. அந்தப் புதியவனும் மிகவும்
கவனமாகவே பதுங்கிப் பதுங்கி க்ரிஷை நெருங்குவது அடுத்த இரு படங்களில் தெரிந்தது.
இப்போதும் க்ரிஷ் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த மனிதன் தன் கையிலிருந்த அட்டைப் பெட்டியை மெல்லத்
திறந்து அதிலிருந்து ஒரு பாம்பை வெளியே மிகவும் கவனமாக எடுப்பது தெரிந்தது....
அடுத்த படம் முழுவதும் கருமையாக இருந்தது. தொடர்ந்து பல படங்கள்
கருப்பாகவே தென்பட்டன. எந்தப் பிம்பமும் அவற்றில் தெரியவில்லை. கடைசியில்
தெளிவாகத் தெரிய ஆரம்பித்த படத்தில் கரிய பறவை மலையுச்சியிலிருந்து வந்த திசை
நோக்கியே திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. பாம்பு இருக்கும் பெட்டியை எடுத்துக்
கொண்டு மலை ஏறியிருந்த மனிதன் அந்தப் பெட்டியோடு மலையிலிருந்து கீழே இறங்கிக்
கொண்டிருந்தான். க்ரிஷைக் காணவில்லை.
திகைப்படைந்த டைரக்டரும், பெண் விஞ்ஞானியும் அந்தக் கருப்புப்படங்களை
திரும்பவும் திரையில் போட வைத்துக் கூர்மையாக ஆராய்ந்தார்கள். எதுவுமே
தெரியவில்லை. இருட்டு காரணம் அல்ல. இருட்டில் எடுத்திருந்த மற்ற படங்களைக் கூட
தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் இவ்வளவு நேரம் தெளிவாகப் பார்த்திருந்தார்களே......
திகைப்பு தீராமல், தொடர்ந்த தெளிவான புகைப்படங்களைப் பார்க்க
ஆரம்பித்தார்கள். அடுத்த படத்தில் கரிய பறவையும் புகைப்பட எல்லையைக் கடந்து
போயிருந்தது. வந்த போதிருந்த வேகத்தையும் விடப் பன்மடங்கு வேகமாகப் போயிருக்கா
விட்டால் அது கண்டிப்பாக ஐந்து புகைப்படங்களிலாவது தங்கி இருக்கும் என்று டைரக்டர்
கணக்குப் போட்டார். அடுத்த புகைப்படங்களில் அட்டைப் பெட்டியோடு மலையிலிருந்து
இறங்கும் ஆசாமி மட்டுமே தெரிந்தான். அவன் பிம்பத்தைப் பெரிதாக்கிப் பார்த்தார்கள்.
இப்போதும் அந்தப் பெட்டியை அவன் மிகுந்த கவனத்தோடு தான் பிடித்துக்
கொண்டிருந்தான்.
அவன் காரில் ஏறி காரும் புகைப்பட எல்லையைக் கடந்த பின் எடுக்கப்பட்டிருந்த
புகைப்படங்களில் மலை மட்டுமே தன் வழக்கமான சூழலோடு அமைதியாகக் காரிருளில் காட்சி
அளித்தது. மலையடிவாரத்தில் அந்தப் பைக்கும் தனியே நின்றிருந்தது.
அந்தப் பெண் விஞ்ஞானி தன் திகைப்பைத் தெரிவித்தார். “ASTROSAT லிருந்து எடுக்கற படங்கள்ல குளறுபடி
எதுவும் ஆக சாத்தியமேயில்லையே. பிறகு எப்படி அந்தப் படங்க மட்டும் முழுக் கருப்பாயிருக்கு....
ஏதாவது டெக்னிக்கல் கோளாறாக இருக்குமோ?”
டைரக்டரும் ஆழ்ந்த யோசனையோடு சொன்னார். “அப்படியே டெக்னிகல்
ப்ரச்னைன்னா அதுக்கப்பறம் எடுத்த படங்க எல்லாமே கருப்பாவே இருந்திருக்கணும்..... இடையில
சில படங்க மட்டும் அப்படியாக வாய்ப்பே இல்லையே”
பெண் விஞ்ஞானி அடுத்த சந்தேகத்தைக் கேட்டார். “அந்த டெலஸ்கோப் பையன்
என்ன ஆனான்? எங்கே போனான்?”
ஆராய்ச்சியாளன் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “அந்தக் கருப்படிச்ச
படங்கள்ல நம்ம கேள்விகளுக்குப் பதில் இருந்திருக்கலாம்.....”
பெண் விஞ்ஞானி டைரக்டரைக் கேட்டார். “நம்ம அடுத்த நடவடிக்கை என்ன?”
டைரக்டர் சொன்னார். “அந்தக் கருப்படிச்ச படங்கள லேபுக்கு அனுப்பி அப்படி
ஆக என்ன காரணம்னு கண்டுபிடிக்கச் சொல்வோம்.... பிறகு பார்ப்போம்....”
மற்ற இருவரும் தலையசைத்தார்கள். பெண் விஞ்ஞானி இன்னும் குழப்பம்
தீராதவராகச் சொன்னார். “கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமா, கூத்துல கோமாளி மாதிரி
பாம்ப ஒரு பெட்டில எடுத்துட்டு வந்த ஆள் யாரு? அவன் அந்த டெலஸ்கோப் பையனக் கொல்ல
வந்த மாதிரி தான் தெரியுது.... கீழ இறங்கறப்ப அவன் முகத்துல வந்த வேலை முடிஞ்ச
பாவனை தான் தெரியுது. ஆனா அந்தப் பிணம் என்னாச்சுன்னு தெரியலையே....”
டைரக்டருக்கும் அந்தக் குழப்பம் இருந்தது. அந்த ஆராய்ச்சியாளனிடம்
சொன்னார். “அந்த டெலஸ்கோப் பையன் ஏதோ மினிஸ்டர் பையன் தானே? தமிழ்நாட்டுல
விசாரிச்சா தெரியுமே?”
ஆராய்ச்சியாளன் சொன்னான். “அடுத்த பேட்ச்ல வந்த படங்கள் பகல்ல
எடுத்தது. அதையும் பாத்தேன். மலை மேல அவனை ஆள்க தேடிட்டிருந்தாங்க..... நம்ம கிட்ட
அந்தப் பாம்பு எடுத்துட்டு வந்த மனுஷன் படம் இருக்குதே... அதை அனுப்பிச்சு வெச்சா
தமிழ்நாட்டு போலீசுக்குப் பிரயோஜனப்படுமே...”
“அனுப்பி நாம என்ன செய்யறோம்கிறத பகிரங்கப்படுத்தச் சொல்றியா. சும்மா
இரு.... வர்ற தகவல மட்டும் கவனிப்போம்.... நாமளா எதையும் யாருக்கும் சொல்ல
வேண்டாம்.....” என்று டைரக்டர் உறுதியாக அவனிடம் சொன்னார்.
செந்தில்நாதன் க்ரிஷ் வீட்டை அடைந்த போது
இருட்டியிருந்தது. ஜீப்பில் இருந்து இறங்கியவுடனே அவர் கண்ணில் பட்டது அவர் முன்பு
கைது செய்து உதய் விடுவிக்கச் சொன்ன இரண்டு அடியாட்கள் தான். அவரைப் பார்த்ததுமே
இருவரும் வேகமாக மறைவாக நின்று கொண்டார்கள். பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில்
அரசியல்வாதிகளின் அடியாட்கள் வேண்டுமென்றே முன்னுக்கு வந்து நிற்பார்கள்.
நக்கலாகச் சிரிப்பார்கள். சத்தம் போட்டு பக்கத்திலிருப்பவனிடம் கிண்டலாகப்
பேசுவார்கள்.... இந்த
முறை இங்கு அது நடக்காததற்குக் காரணம் முதல்வர் கவனத்திற்குப் போகும் என்பதா,
இல்லை க்ரிஷ் விஷயமாகத் தான் வந்திருக்கிறார் என்பதா என்று தெரியவில்லை. காரணம்
எதுவானாலும் பொறுமையை இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வரவில்லை என்பதே அவருக்கு ஆறுதலாக
இருந்தது. அவரும் அவர்களைப் பார்க்காதது போல வீட்டுக்குள் நுழைந்தார்.
செந்தில்நாதனின் ஜீப் வாசலில் வந்து நின்றவுடனேயே கமலக்கண்ணனின்
உதவியாளர் உள்ளே ஓடி வந்து தகவல் சொல்லி இருந்தார். உதய் தந்தையைப் பார்த்தான். பக்கத்து
சோபாவில் அமர்ந்திருந்த அவர் நிறையவே தளர்ந்து போயிருந்தார். ஒரே நாளில் பத்து
வயது கூடியவர் போலத் தெரிந்தார். பொதுவாக அவர் தைரியம் இழக்காத மனிதர். அவர்
இப்படித் தளர்ந்து உதய் பார்த்ததேயில்லை....
செந்தில்நாதனைப் பார்த்ததும் கமலக்கண்ணன் “வாங்க.... உட்காருங்க” என்று மரியாதையுடன் எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். செந்தில்நாதன்
அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அந்த இருக்கையில் அமர்ந்தார். உதய் அவரை எந்த
விதத்திலும் அங்கீகரிக்காமல் அமைதியாகக் கூர்ந்து பார்த்தான். செந்தில்நாதன்
அவனைக் கண்டு கொள்ளவில்லை. அவர் எந்த
முன்னுரையோ, சம்பிரதாயமான வார்த்தைகளோ இல்லாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தவராக
கமலக்கண்ணனிடம் கேட்டார். “இது சம்பந்தமா எதாவது போன் வந்ததா சார்”
கமலக்கண்ணன் “இல்லை” என்றார்.
“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா
சார்?”
இல்லை என கமலக்கண்ணன் தலையசைத்தார். செந்தில்நாதன் உதயைப் பார்த்தார்.
அவனும் இல்லை என்று தலையசைத்தான்.
“க்ரிஷுக்கு யாராவது
எதிரிகள்....?”
இருவரும் இல்லை என்று தலையசைத்தார்கள். அப்போது பத்மாவதி அங்கே
வந்தாள். அழுதழுது சிவந்த கண்களும், வேதனையோடு வாடியிருந்த முகமும் அந்தத் தாயின் மனநிலையைத்
தெரிவித்தன.
மனைவியின் சோகத்தை நேரடியாகப் பார்க்கிற தெம்பு இல்லாத கமலக்கண்ணன்
உதயைப் பார்த்தார். வேறு வழியில்லாமல் உதய் பத்மாவதிக்கு செந்தில்நாதனை
அறிமுகப்படுத்தினான். “அம்மா சார் தான் க்ரிஷ் விஷயமா துப்பு துலக்கப் போறவர். அவன்
சம்பந்தமான தகவல்கள் தெரிஞ்சுக்க வந்திருக்கார்...”
பத்மாவதி அவரைப் பார்த்து கைகூப்பினாள். மற்ற அமைச்சர்களின் மனைவிகள்
போல அவள் அதிகம் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பதால் செந்தில்நாதன் அவளை
இது வரை பார்த்ததில்லை. மரியாதையுடன் அவள் கைகூப்பியது வித்தியாசமான ’மந்திரி மனைவி’யாக
அறிமுகப்படுத்தியது.
உதய் அருகே சோபாவில் அமர்ந்த பத்மாவதியிடம் செந்தில்நாதன் சொன்னார்.
“நான் இவங்க கிட்டே க்ரிஷுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா, உங்களுக்கு யார்
மேலயாவது சந்தேகம் இருக்கான்னு கேட்டுகிட்டு இருந்தேன்.....”
அவர் அவள் கருத்தையும் அறிய விரும்பினார். பொதுவாக, பிள்ளைகள் பற்றி மற்றவர்களுக்குத்
தெரியாத எத்தனையோ தகவல்கள் தாய்க்குத் தெரிந்து இருக்கும்.
பத்மாவதி கண்களில் கண்ணீர் பொங்கியது. “சார் என் பையனுக்கு எதிரிகள்
யாரும் இருக்க முடியாதுங்க..... நாங்க எல்லாம் எப்பவுமே நல்லவங்கன்னு சொல்ல
முடியாது..... அப்பப்ப சராசரியா இருந்துடுவோம்... அவன்.... அவன் எப்பவுமே நல்லவன்
தாங்க. யாருகிட்டயும் எப்பவுமே நியாயமில்லாம
அவன் நடந்துகிட்டதில்லை...”
சொல்லி விட்டு மனமுடைந்து பத்மாவதி அழ ஆரம்பித்தாள்.
(தொடரும்)
என்.கணேசன்
விறுவிறுப்பாக கதை போகிறது. கண்முன் பார்ப்பது போல் பரபரப்பை உணர்கிறோம். சூப்பர் சார். (இப்போது உங்கள் மனிதரில் எத்தனை நிறங்கள் வாங்கி அதில் மூழ்கிப் போயிருக்கிறேன். நூறு பக்கங்கள் தாண்டி விட்டேன். பிரமாதம்.)
ReplyDeleteI feel like reading a English thriller novel and watching the movie also. Please translate it to English sir. Surely you will receive world wide readership.
ReplyDeleteBy God grace I read your novels (Anabyssinian, Butham Saranam kachami and thamirabarani) I loved lot. Please remove knot of Kris.... We all are waiting... I hope u do in next episode
ReplyDelete- Madankumar, Bangalore
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.