சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 28, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 109


ந்த ஆள் ஏன் முகத்தைக் கடுகடுவென்று வைத்திருக்கிறார்” என்று கௌதம் தாழ்ந்த குரலில் மைத்ரேயனைக் கேட்டான். இருவரையும் லீ க்யாங் ஜீப்பில் அழைத்துப் போய்க் கொண்டிருந்தான். பின்னாலும் முன்னாலும் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்தன. லீ க்யாங் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தான் கௌதம் அப்படிக் கேட்டான்.

“அப்படிக் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் தான் நாம் பயந்து அவர் சொன்னபடி நடந்து கொள்வோம் என்று நினைக்கிறார்” என்றான் மைத்ரேயன்.

லீ க்யாங்குக்கு அவர்கள் இருவரும் தமிழில் பேசிக் கொண்டது புரியவில்லை. பின்னால் திரும்பி மைத்ரேயனிடம் கேட்டான். “அவன் என்ன கேட்டான்? நீ என்ன சொன்னாய்?”

மைத்ரேயன் இரண்டையும் மாற்றாமல் அப்படியே திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னான். லீ க்யாங் அவன் சொன்னதை ரசிக்கவில்லை. அந்தப் பையன் கேட்டதிலும் தப்பில்லை, இவன் சொன்னதிலும் தப்பில்லை, ஆனால் கேட்டவுடன் கொஞ்சமும் பயப்படாமல் அப்படியே மொழி பெயர்த்துச் சொன்ன துணிச்சல் லீ க்யாங்கை அசர வைத்தது. இருவரையும் முறைத்துப் பார்த்தான். கௌதம் கண்களைத் தாழ்த்திக் கொண்டு ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாய் லீ க்யாங்கைப் பார்க்க லீ க்யாங் முகம் கடுமையை இழந்தது. ஒன்றுமே பேசாமல் லீ க்யாங் திரும்பிக் கொண்டான்.

டோர்ஜேயையும், ஒற்றைக்கண் பிக்குவையும் தங்க வைத்திருந்த வீட்டை ஜீப் அடைந்தது. ”இங்கேயே இருங்கள்” என்று சொல்லி விட்டு லீ க்யாங் இறங்கினான். அசலும் நகலும் சந்தித்துக் கொள்வதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லி நகலைத் தயார்ப்படுத்துவது நல்லது என்று அவன் நினைத்தான்.


லீ க்யாங் வந்து சேர்ந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்த ஒற்றைக்கண் பிக்கு ஓடிச் சென்று டோர்ஜேயிடம் சொன்னார். “லீ க்யாங் வந்திருக்கிறான்...”

டோர்ஜே படித்துக் கொண்டிருந்த காமிக்ஸ் புத்தகத்தை வேகமாக மூடி ஒளித்து வைத்து விட்டு பிக்குவுடன் வேகமாய் முன்னறைக்கு வந்தான். டோர்ஜே கலவரத்துடன் கேட்டான். “ஏன் திடீரென்று....”

ஒற்றைக்கண் பிக்கு ”தெரியவில்லை...” என்று பதற்றத்துடன் சொன்னார்.

படிகளேறி வந்து கொண்டிருந்த போது லீ க்யாங்கின் அலைபேசி அடித்தது. பீஜிங்கில் அவசர வேலை வந்து சேர்ந்து விட்டிருந்தது. அவன் இன்று சில மணி நேரங்களாவது இங்கிருக்க வேண்டும் என்றெண்ணி வந்தது இனி நடக்க சாத்தியம் இல்லை. அவசர அவசரமாக அவன் படியேறினான்.

உள்ளே வந்த லீ க்யாங் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த ஒற்றைக்கண் பிக்குவின் வணக்கத்தை சின்ன தலையசைப்போடு ஏற்றுக் கொண்டான். பின் லேசாக நடுங்கிக் கொண்டிருந்த டோர்ஜேயைப் பார்த்துக் கேட்டான். “என்ன செய்து கொண்டிருந்தாய்?”

எப்போதுமே டோர்ஜேயை “வணங்குகிறேன் மைத்ரேயரே” என்று ஆரம்பத்திலேயே பொய் வணக்கமாவது சொல்லும் லீ க்யாங் இன்று வணக்கம் தெரிவிக்காததுடன் இப்படி ஒருமையில் கேட்டது இருவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. டோர்ஜேக்கு நாக்கு வாயினுள் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. பேச வரவில்லை.

“சூத்திரங்கள் படித்துக் கொண்டிருந்தான்.” ஒற்றைக்கண் பிக்கு சமாளித்துக்கொண்டு சொன்னார்.

லீ க்யாங் இருக்கையில் அமர்ந்து அவர்கள் இருவரையும் எதிர் இருக்கைகளில் அமரச் சொன்னான். பின் ஒற்றைக்கண் பிக்குவிடம் சொன்னான். “இவனை உலக அரங்கில் அரங்கேற்றும் நேரம் நெருங்கி விட்டது பிக்குவே”.

ஒற்றைக்கண் பிக்கு மெல்ல கேட்டார். “அந்த... அந்த மைத்ரேயன்....?”

”வெளியே ஜீப்பில் அமர்ந்திருக்கிறான்”

இருவர் முகங்களும் ரத்தம் வடிந்து வெளுத்தன.

லீ க்யாங் சொன்னான். “இது வரை உங்களிடம் இவன் நிறைய கற்றுக் கொண்டாகி விட்டது. இனி அவனிடமும் சில நாட்கள் கற்றுக் கொள்ளட்டும். இவனை மைத்ரேயனாக நாம் அறிமுகப்படுத்தும் போது யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது”

“அசல் இருக்கிற வரை நகல் நிம்மதியாக இருக்க முடியாது” என்று சூசகமாகச் சொல்லி அசலுக்கு இப்போது ஆபத்துக் காலம் என்று பத்மசாம்பவாவின் ஓலை சொல்கிறது என்று குறிப்பும் கொடுத்து அனுப்பினால் சொன்னதைச் செய்யாமல் அந்த அசலையே அங்கு அழைத்துக் கொண்டு வந்து அவனிடமிருந்தும் இந்த நகல் கற்றுக் கொள்ளட்டும் என்று சொல்கிறானே இந்த பாழாய் போனவன் என்று ஒற்றைக்கண் பிக்கு மனதிற்குள் திட்டினார். ஆனால் அவர் தலை மட்டும் சரியென்று அசைந்தது.

ஆனால் டோர்ஜே முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. லீ க்யாங் டோர்ஜேயைப் பார்த்து நம்பிக்கை ஊட்டும் தொனியில் சொன்னான். ”அவனை சிலர் மைத்ரேயன் என்று நம்புகிறார்களே ஒழிய அவனே அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அவனிடம் கற்றுக் கொள்ளவும் உனக்கு நிறைய இருக்கிறது. முக்கியமாக தியானத்தைக் கற்றுக் கொள். அதிகபட்சம் ஒருவாரம் அவன் இங்கே இருப்பான். அதற்குப் பிறகு போய் விடுவான். பின் என்றைக்குமே வர மாட்டான். உன் வழியில் குறுக்கிட மாட்டான். அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. இந்த ஒரு வாரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கற்றுக் கொள். அவன் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் நீ அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. புரிகிறதா?”

டோர்ஜேக்கு தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. திடீரென்று லீ க்யாங் ஏற்றுகிற பாரம் அவனுக்குத் தாங்க முடிகிறதாய் இல்லை. ஆனாலும் அவன் ஆசிரியரைப் போலவே தலையசைத்தான்.

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவிடம் சொன்னான். “நீங்கள் இவன் அவனிடமிருந்து படிக்க வேண்டியதைப் படிக்கிறானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவனும், அவனுடன் இருக்கும் இன்னொரு பையனும் இன்னும் ஒரு வாரம் இங்கிருப்பார்கள். அப்புறம் போய் விடுவார்கள். அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் இவனை அரங்கேற்றப் போகிறோம். அந்த நேரத்தில் நானே வருகிறேன்.... அந்த மைத்ரேயன் இங்கே இருக்கும் வரை சிறப்புக்காவல் இந்த வீட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆயுதம் ஏந்திய ஐந்து பேர் வெளியே காவலுக்கு இருப்பார்கள்.... யாராவது இங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தாலோ, வெளியாட்கள் இங்கே நுழைய முயற்சி செய்தாலோ யோசிக்காமல் சுட்டுக் கொல்லச் சொல்லி இருக்கிறேன்.....”

அவசர அவசரமாகச் சொல்லி விட்டு லீ க்யாங் கிளம்பினான். கிளம்பும் போது அங்கு வந்த சமையற்கார ஒற்றனைப் பார்த்து சமிக்ஞை செய்யவே அவனும் பின்னாலேயே சென்றான். பாதிப்படிகள் இறங்கிய பின் லீ க்யாங் அவனிடம் சில கட்டளைகள் இட சமையல்காரன் தலையசைத்தான். பின் வேகமாகப் படிகள் இறங்கிய லீ க்யாங் ஜீப்பில் இருந்த மைத்ரேயனிடம் சொன்னான். “இனி சுமார் ஒரு வாரம் நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்கப் போகிறீர்கள். இங்கே தான் மைத்ரேயன் இருக்கிறான். அவனுக்குத் தியானம் கற்றுக் கொடு. தெரியாததைக் கேட்டால் கற்றுக் கொடு. எந்தக் காரணம் கொண்டும் வீட்டை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யாதீர்கள். உயிர் மிஞ்சாது. புரிகிறதா?”

”புரிகிறது”என்று அமைதியாக மைத்ரேயன் பதில் அளித்தான். இப்போது அவன் அமைதியும், அனுசரணையும் லீ க்யாங்குக்கு ஏதோ வில்லங்கமாகத் தோன்ற ஆரம்பித்தது. சந்தேகத்துடன் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே லீ க்யாங் கேட்டான். “நீ எனக்குத் தெரியாமல் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?”

மைத்ரேயன் சொன்னான். “மனிதன் போடும் திட்டங்களைப் பார்த்து இறைவன் சிரிப்பதாகச் சொல்கிறார்கள். எனவே நான் திட்டம் எதுவும் போடுவதில்லை....”

தன் திட்டங்களையும் மறைமுகமாக கேலி செய்கிறானோ என்ற சந்தேகம் லீ க்யாங்குக்கு வந்தது. இது வரை இவனைப் பற்றிப் படித்ததில் இந்த எகத்தாளம் பற்றி எந்த தகவலும் இல்லையே. சொல்லப் போனால் இப்போது இருக்கிற தைரியம், வெளிப்படையான துணிச்சலான பேச்சு பற்றி கூடப் படிக்கவில்லையே... கூர்மையாக அவன் மைத்ரேயனைப் பார்த்தான். அந்த முகத்தில் கேலியோ, ஏளனமோ தெரியவில்லை. மகத்தான உண்மை ஒன்றைச் சொல்லி நிற்கிற பணிவே தெரிந்தது. அடிக்கடி ஐயா என்று சொன்னவன் லீ க்யாங் வேண்டாம் என்ற பின் ஒரு வாக்கியத்துக்குக் கூட ஐயா என்று சொல்லவில்லை என்பதையும் லீ க்யாங் கவனித்தான். இவனை எல்லாம் அரை மணி, ஒரு மணி நேரத்தில் எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டம்....

பெருமூச்சு விட்ட லீ க்யாங் ஜீப்பின் முன்பகுதியில் வைத்திருந்த ஒரு பையை மைத்ரேயனிடம் நீட்டினான். “உங்கள் இரண்டு பேருக்கும் இதில் உடைகள் இருக்கின்றன்....”

வாங்கிக் கொண்ட மைத்ரேயன் “மிக்க நன்றி” என்று தலை வணங்கினான். லீ க்யாங்கின் ஜீப் அங்கிருந்து பறந்தது. வரும் போது ஜீப்பைப் பின் தொடர்ந்து வந்த போலீஸ் வாகனம் இப்போது பின் தொடரவில்லை. அதிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் அந்த வீட்டுக் காவலுக்குத் தயாரானார்கள்.

மைத்ரேயனும், கௌதமும் படியேறினார்கள். மேலே இருந்து ஒற்றைக்கண் பிக்குவும், டோர்ஜேயும், சமையல்காரனும் அவர்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.


மாராவுக்கு மைத்ரேயன் இருக்கும் இடம் பற்றிய தகவல் போய் சேர்ந்தது. “.... ஆரம்பத்தில் அந்த வீட்டைக் காவல் காக்க துப்பாக்கி ஏந்திய ஐந்து போலீஸ்காரர்களை ஏற்பாடு செய்திருந்த லீ க்யாங் பீஜிங் விமானம் ஏறுவதற்கு முன் கூடுதலாக ஐந்து பேரைத் தெருவையே கண்காணிக்க ஏற்பாடு செய்து விட்டுப் போயிருக்கிறான்.... அதனால் மைத்ரேயன் இருக்கும் தெருவுக்கே கூட அவர்கள் அறியாமல் போய் விட முடியாது.... ”

மாரா புன்னகைத்தபடி தன் மற்ற வேலைகளில் ஆழ்ந்தான். திடீரென்று அவன் மேசையில் வைத்திருந்த பழங்கால மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து நீல நிற ஒளி ஒளிர ஆரம்பித்தது. அவசரமாக திறந்து பார்த்தான். கருப்புத் துணியால் போர்த்தி வைத்திருந்த மாராவின் சிலை தான் ஒளிர்ந்தது. மாரா திகைத்தான். ரகசியச்சடங்கில் ஈடுபட்டு பிரார்த்திக்கும் போது மட்டுமே ஒளிரக்கூடிய அவர்கள் தெய்வத்தின் சிலை இப்போது ஒளிர்வதன் காரணத்தை அவனால் உணர முடியவில்லை. கவனத்தை அந்தச் சிலையில் குவித்தான். ஒளிர்வது நின்றது. அவர்களுடைய மகாசக்தி ஏதோ அவசர எச்சரிக்கை உள்ளது என்று சொல்லி விட்டுப் போனதாக உள்ளுணர்வு சொன்னது.

ஆழமாக யோசித்து விட்டு சைத்தான் மலையில் அவர்கள் இயக்க உள்வட்ட ஆட்களை உடனடியாகக் கூட்டி, ரகசியச்சடங்கை மறுபடி ஒருமுறை நடத்தி அந்த அவசர எச்சரிக்கை என்ன என்பதையறியவும், மைத்ரேயன் விஷயத்தில் இறுதி முடிவெடுக்கவும் மாரா தீர்மானித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில்ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடக்கும் ஆன்மிகக் கண்காட்சியில் கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்ற அரங்கில் “புத்தம் சரணம் கச்சாமி”, “பரம(ன்) இரகசியம்” நாவல்களை சிறப்புத் தள்ளுபடியில் பெறலாம்.

3 comments:

  1. Great narration. I love maithreyan. His dealing li kyang is very interesting.

    ReplyDelete
  2. தங்கள் எழுத்து நடை மனம் கவர்கிறது. பாத்திரப்படைப்புகளும், நிகழ்வுப்புனைவுகளும் அருமை. நீண்ட நல்ல நாவல்கள் தற்போது அதிகம் எழுதப்படுவதில்லை என்ற குறையைத் தீர்க்கிற வகையில் தங்கள் நாவல்கள் உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை அண்ணா,...
    நாவல் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete