கீதை
காட்டும் பாதை 41
உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் கர்மத்தில் இருந்து
தப்பிக்க முடியாது. மரணம் வரை மனிதன் எந்த வகையிலாவது செயல் புரிந்தே ஆக வேண்டிய
கட்டாயத்திலேயே இருக்கிறான். மரணம் மாத்திரமே கர்மம் என்கிற சங்கிலியில் இருந்து
அவனை விடுவிக்கிறது. சாங்கிய யோகத்திலும், கர்ம யோகத்திலும் கர்மம் பற்றி நிறையவே
அலசி இருக்கிறோம் என்றாலும் மீண்டும் சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.
செயல் புரிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில்
உள்ள மனிதனுக்குப் பிரச்னையே அதன் விளைவுகள் தான். நல்ல விளைவு வந்தால் என்னைப்
போல் புத்திசாலி யார் என்று இறுமாந்து திரிகிறான். மோசமான விளைவு வந்தால் ஏன் விதி
என் விஷயத்தில் சதி செய்கிறது புலம்பி முடங்குகிறான். விளைவுகளால் சில செயல்களைச்
செய்ய வேண்டி வருகிறது. அதிலும் நல்லதும் கெட்டதுமான விளைவுகள். சந்தோஷம் துக்கம்
இரண்டும் மாறி மாறி அனுபவிக்க வேண்டிய சூழல். செயல்-விளைவு-செயல்கள்-விளைவுகள்
என்கிற சங்கிலித்தொடரில் அவன் இன்ப துன்ப அலைகளில் சிக்கி அவன் சந்திக்க வேண்டி இருப்பது
தான் எத்தனை? ஒரு கட்டத்தில் அவனுக்கு ’போதுமடா சாமி’ என்று தோன்றுகிறது. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று
நினைக்கிற அளவுக்கு எல்லாப் பக்கங்களிலும் ஏகப்பட்ட பிரச்னைகள். இது தான் சராசரி மனிதனின்
இயல்பான அனுபவம். இதிலிருந்து எப்படி தான் தப்பிப்பது?
ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார்.
குந்தி
மகனே! எதையெல்லாம் நீ செய்கிறாயோ, எதையெல்லாம் உண்கிறாயோ, எதையெல்லாம்
படைக்கிறாயோ, எதையெல்லாம் தருகிறாயோ, எந்த தவங்களெல்லாம் செய்கிறாயோ அதையெல்லாம்
எனக்கு அர்ப்பணம் செய்வாயாக!
இவ்விதமாக
நீ கர்ம பந்தங்களில் இருந்தும், அதன் நல்ல தீய விளைவுகளிலிருந்தும் விடுபடுவாய்.
துறவின் இந்தக் கொள்கையின் மூலம் நீ முக்தி பெற்று என்னிடமே வருவாய்.
உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதன் லாபநஷ்டங்கள்
உன்னுடையது. உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதனால் வரும் பெருமையும்,
அவமானமும் உன்னைச் சார்ந்த்து. செய்வது அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.
அவன் பிரதிநிதியாக நீ எல்லாவற்றையும் செய். அவன் கொடுத்திருக்கும் கதாபாத்திரம்
நீ. அவன் கருவியாக நீ செயல்படு. இந்த பாவனையில் செய்யும் போது விளைவுகள்
உன்னுடையதல்ல. அந்த பரமாத்மனைச் சேர்ந்தவை. என்ன விளைவு வந்தாலும் அது அவன்
வரவழைத்துக் கொண்டது. உனக்கு அதில் எதுவுமில்லை. இதுவே துறவின் அம்சம். இதுவே
துறவின் நிம்மதியும் கூட. செயல்கள் புரிந்தாலும் விளைவுகளால் பாதிக்கப்படாமல்
அமைதியாக இருக்க இது ஒன்றே மார்க்கம்.
மேலும் இந்த பாவனையுடன் செயல்புரியும் போது
செயலின் தன்மையே மாறிவிடும். விளைவுகளால் உனக்கு பாதிப்பில்லை என்பதால் மன அமைதி
மாறாமல் செய்யும் போது, இது இறைவனின் செயல் என்ற மேம்பட்ட உணர்வில் ஈடுபாட்டுடன்
செய்யும் போது செயல் சிறப்பாகவே இருக்கும். பெரும்பாலும் விளைவுகளும் சிறப்பாகவே
இருக்கும். வாழ்நாள் எல்லாம் இறைவனின் வேலைகளையே செய்த மனிதன் இறுதியில் இறைவன் அடிகளையே
சேர்வான். இந்த உத்திரவாதத்தைத் தான் பகவான் இங்கு தருகிறார்.
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
சகல
உயிர்களிடத்தும் நான் சமமாகத் தான் இருக்கிறேன். எனக்குப் பகைவனோ, அன்பனோ இல்லை.
ஆனால் பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம் அவர்கள் இருப்பார்கள்.
அவர்களிடமும் நான் இருப்பேன்.
ஒருவன்
மிகவும் மோசமான செயலைச் செய்தாலும் அவன் பக்தியில் பிறழாமல் ஈடுபட்டிருந்தால் அவனை
சாதுவாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன்
நல்ல முடிவை எட்டியிருக்கிறான் அல்லவா?
அவன்
வெகு விரைவில் தர்மாத்மாவாகி நித்தியமான அமைதியை அடைகின்றான். குந்தியின் மகனே என்
பக்தன் என்றும் அழிவதில்லை என்பதைத் தைரியமாக அறிவிப்பாயாக!
இறைவன் பாரபட்சம் உள்ளவனாக இருக்க
முடியாது. அப்படி இருப்பவன் இறைவனாக இருக்கவும் முடியாது. ஏனென்றால் விருப்பு
வெறுப்பைக் கடந்தவன் இறைவன். அதைக்கடந்து இயங்குங்கள் என்று அறிவுறுத்துபவன் அவன்.
அப்படி இருக்கையில் இறைவனே விருப்பு வெறுப்பு கொண்டிருந்தால் அது போலித்தனத்தின்
உச்சமாகவே இருக்க முடியும். எனவே தான் சகல உயிர்களிடத்தும் தான் சமமாக இருப்பதாக
பகவான் சொல்கிறார். ஆனால் அடுத்த வரிகள் சிலருக்கு முரண்பாடாகத் தெரியலாம். ”ஆனால் பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம் அவர்கள்
இருப்பார்கள். அவர்களிடமும் நான் இருப்பேன்.”
இதற்கு சின்மயானந்தர் அருமையான
உதாரணத்துடன் விளக்கம் சொல்கிறார். சூரியன் எல்லோருக்குமே சமமாகவே ஒளிர்கிறான்.
ஆனால் கல்லில் அவன் பிரதிபலிப்பதில்லை. கண்ணாடியிலோ தத்ரூபமாக பிரதிபலிக்கிறான்.
சூரியனுக்கு கல், கண்ணாடி என்கிற பாரபட்சம் இல்லை. ஆனால் உள்வாங்கி பிரதிபலிக்கிற
இயல்பு கண்ணாடிக்கே இருக்கிறது, கல்லுக்கு இல்லை. எவ்வளவு அழகான உதாரணம்
பாருங்கள்!
பக்தன் இறைவனிடம் மானசீகமாக இணைந்து
இருப்பதால் இறைவன் பக்தனிடத்தும், பக்தன் இறைவனிடத்தும் இருப்பது இயற்கையே அல்லவா?
இப்போது பகவான் சொன்னதில் முரண்பாடு இல்லையே.
ஆனால் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது
மறுபடி அறிவார்ந்த மனிதர்கள் மனதில் ‘இது சரியல்லவே’ என்கிற எண்ணத்தை
ஏற்படுத்தக்கூடும். மோசமான செயலைச் செய்திருந்தாலும் பகதியில் பிறழாதவனாக
இருந்தால் அவனை சாதுவாகவே கருத வேண்டும் என்றால் பக்தி கொண்டிருப்பவன் மோசமான
செயலைச் செய்யலாமா? அது மட்டும் தவறாகாதா? மோசமான செயலை எவன் செய்தாலும் சாது
என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
இன்றைய உலகில்
எத்தனையோ பேர் பக்தர்கள் தோற்றத்திலேயே இருந்து கொண்டு கொள்ளை கூட அடிக்கிறார்கள்.
அவர்கள் பகவானுடனேயே
கூட்டணி வைத்துக் கொண்டு இருப்பது போல, கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை இறைவனுக்கு
காணிக்கை செலுத்தி விடுகிறார்கள். கீதை சொல்வது போல் பார்த்தால் இவர்களும்
சாதுக்கள் தானா? அல்ல என்பது தான் உறுதியான பதில்.
இங்கே பிறழாமல்
என்கிற சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வார்த்தை தான் தவறான யூகங்களை
களைகிறது. பக்தியில் பிறழாமல் இருப்பவனால் தெரிந்து மோசமான செயல்களைச் செய்ய
முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை வேண்டுபவனால் அடுத்தவனைக் கொள்ளை
அடிக்கவோ, ஈனச்செயல்களில் ஈடுபடவோ முடியாது. இறைவனை வேண்டுபவனுக்கு அதற்குக்
கீழானவற்றுக்கு இறைவனை விட அதிக முக்கியத்துவம் தர முடியாது. அதனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
குறிப்பிடுவது அறியாமலும், சந்தர்ப்பவசத்தாலும் செய்யப்படும் மோசமான செயல்களாகத்
தான் இருக்க முடியும். இறை எண்ணம் நிறைந்த மனதில், செய்த தவறுக்குப் பரிகாரம்
செய்யும் வழியும் புலப்படும். கோணலை நேர் செய்து கொண்டு மறுபடி திருந்திய
வாழ்க்கைக்கு பகதனால் திரும்ப முடியும். இறைவனிடம் பிறழாத பக்தி என்பதே பக்தன் எட்டியிருந்த
நல்ல முடிவு என்பதால் தற்காலிகத் தவறுகள் திருத்தப்பட்டு நல்வழிக்கு சீக்கிரமே
பக்தன் திரும்புவான்.
திருந்திய உள்ளத்தில்
அமைதி மறுபடி குடிகொள்ளும். தற்காலிகத் தவறுகளால் பக்தன் நிரந்தரமாக
தண்டிக்கப்படுவதில்லை. மாறாக தர்ம வழியில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் அவன் மனதின்
அமைதி நிரந்தரமாக இருக்கும். எனவே தூய்மையான, இடைவிடாத பக்தியே பக்தனை அவ்வப்போது நல்வழிப்படுத்துவதால்
இறைவனின் பக்தனுக்கு என்றும் அழிவேயில்லை என்பது கீதை நாயகனின் பிரகடனமாக
இருக்கிறது.
பாதை நீளும்.....
என்.கணேசன்
அருமை
ReplyDeleteதொடருங்கள்
அருமை. இடைவிடாத பக்தி ஒன்றே மனிதனை நல்வழிபடுத்தும் என்பது உண்மை.
ReplyDeleteநன்றி அண்ணா
ReplyDeleteSuper Sir
ReplyDeleteThank you sir! If possible please add the actual sloga in addition to tamil translation. This will help every body to know which sloga you are referring to.
ReplyDeleteவிளைவுகளால் பாதிக்காமல் இருப்பது எப்படி? என்பதற்கு விளக்கம் அருமை...ஐயா...
ReplyDeleteஇடையில் சில முரண்பாடக தோன்றும் வசனங்களுக்கும்... உதராணத்துடன் தாங்கள் கொடுக்கும் தெளிவான விளக்கம்... ரொம்ப சூப்பர்... எளிமையாக மனதில் பதிகிறது...