என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 18, 2016

பணம் அதிகம் வந்தால் படுத்தும் பாடு!


வாழ்க்கையில் பணம் இல்லா விட்டால் பெரும்பாடு தான். அன்றாட வாழ்க்கையே தினசரிப் போராட்டமாக மாறி விடும். ஆனால் பணம் அதிகம் வந்தாலும் பிரச்னை தான். அதிக பணம் மனிதனை அடியோடு மாற்றி விடும் தன்மை கொண்டது. பழைய ஆள் அடியோடு காணாமல் போய் விடுவார். அதிக பணம் வந்தும் மாறாத மனிதர்கள் அபூர்வம்.

வில்லி பாரதத்தில் துரியோதனனின் போக்கை விவரிக்கும் விதமாக விதுரர் கூறுகிறார்.

செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்
சொல்வன அறிந்து சொல்லார், சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவது அல்லால் வெம்பகை வலிது என்று எண்ணார்
வல்லினை விளைவும் ஓரார், மண்ணில் மேல் வாழும் மாந்தர்.

(உலகத்தில் வாழும் மனிதர்கள் செல்வம் வந்து சேர்ந்த காலத்தில் அதைத்தந்த கடவுளைக் கொண்டாட மாட்டார்கள். ஆராய்ந்து பேச மாட்டார்கள். உறவினரென்றும், நண்பரென்றும் பரிவு காட்ட மாட்டார்கள். தங்கள் வெற்றி பற்றியே நினைப்பார்களே ஒழிய எதிராளியின் வலிமையை யோசித்துப் பார்க்க மாட்டார்கள். வலிமையான ஊழ்வினையின் விளைவுகள் பற்றி ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்)

காலத்திற்கும் பொருந்தும் வரிகள் இவை. பணம் அதிகமாய் வர வர மனிதனின் குணாதிசயங்கள் மாறுவதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைத்திருக்கும். அந்த மனிதன் சேர்ந்திருக்கும் செல்வத்திற்கு இறைவன் அருளும், சாதகமான நேரமும் காரணம் என்று நினைக்காமல் எல்லாவற்றிற்கும் தன்னுடைய அறிவும், திறமையும் தான் காரணம் என்று தன்னையே அதிகம் மெச்சிக் கொள்வான். அதே நேரத்தில் மற்றவர்களைக் குறைவாக நினைக்க ஆரம்பிப்பான். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகள் அலட்சியமாகவும் கூர்மையாகவும் வரும். நண்பன் நட்புக்காகவும், உறவினர் உறவுக்காகவும்,  இருவரும் அன்புக்காகவும் மதிக்கப்பட மாட்டார்கள். ஏதேனும் வகையில் சம அந்தஸ்து இல்லாவிட்டால் நண்பன் என்றோ உறவு என்றோ சொல்லிக்கொள்ள லேசாக தயக்கம் கூட வரலாம்.

இனியும் எப்படி சம்பாதிக்கலாம், செல்வத்தை எப்படிப் பெருக்கலாம் என்கிற எண்ணமே சதா அவன் மனதில் இருக்கும். பண சம்பாத்தியமல்லாத மற்ற எல்லாமே மறந்து போகும். யாராவது குறை கண்டு சுட்டிக் காட்டினால் அவன் செல்வத்தைப் பார்த்துப் பொறாமையால் அதைச் சொல்வதாகத் தோன்றுமே ஒழிய, சொல்வது உண்மை தானா என்று ஆராய்ந்து பார்க்கத் தோன்றாது.

(வில்லிபாரதம் சொன்னதில் ஒன்றை மட்டும் என்னால் காண முடிந்ததில்லை. தெய்வத்தைப் பேண மாட்டார்கள் என்று சொன்னது தான் அது. செல்வம் அதிகம் வந்த மனிதர்களில் பெரும்பாலோர் மனிதர்களை அலட்சியப்படுத்துகிற அளவு கடவுளை அலட்சியப்படுத்தி நான் பார்த்தது இல்லை. கொடுக்கிற தெய்வம் நிறுத்தி விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால் கோயிலுக்குப் போவதிலும், கோயிலுக்குக் கொடுப்பதிலும் தாராளமாகவே இருக்கிறார்கள்.)

காலச்சக்கரம் சுழலும் போது கீழ் இருப்பவர் மேல் நிலைக்கும், மேல் இருப்பவர் கீழ் நிலைக்கும் வருவது சகஜமாக இருந்தாலும் அது தன் வாழ்வில் நேரலாம் என்கிற எண்ணம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதனாலேயே பலருக்கு பணிவும் வருவதில்லை. விதியாக தலையைத் தட்டுகிற வரை ‘என்னை மிஞ்ச ஆளில்லைஎன்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள். பத்தில் ஏழும் வைத்திருப்பவனையே அது என்னென்னவோ செய்வதாகவே இருக்கிறது. ஆனால் பணத்தையே தன் அடையாளமாகவும், தன் அளவுகோலும் நினைக்காத தன்மை விதிவிலக்காக சிலரிடம் இருக்கிறது. அவர்கள் பணத்தை அதற்குரிய இடத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தவர்கள். மற்றவர்கள் பணத்தைத் தங்களுக்கு மேலாக வைத்துப் பார்க்கிறவர்கள். அதனால் அதன் அடிமையாக தாழ்ந்து இருக்கிறார்கள். அப்படி இருந்து இருந்து தாழ்ந்தே போய் விடுகிறார்கள். பெரியதாக ஒரு அடி விழுந்தால் ஒழிய அவர்கள் நிஜத்தை உணர்வதில்லை. அப்படி உணரும் போது அது சில சமயம் காலம் தாழ்ந்த உணர்தலாக இருக்கலாம். அந்த நேரத்தில் உண்மையான நண்பர்களும், பாசமான உறவுகளும் வெகுதூரம் விலகிப் போயிருக்கலாம்.

எனவே பணம் அதிகமாக வரும் போது எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக மனிதனாகவே இருங்கள்.  


என்.கணேசன்

4 comments:

 1. பயன்தரும் எச்சரிக்கைப் பதிவு
  சொல்லிச் சென்றவிதம் வெகு வெகு அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அருமையான பதிவு.

  ReplyDelete
 3. பணம் படுத்தும் பாடு, பணம் உறவுகளை ஊனமாக்குகிறது ஒரு மகன் மூன்று மகள்கள் அதில் மூன்று மகள்கள் ஒரு பக்கம். மகன் ஒரு பக்கம் பாவம் மகன் தந்தை இரந்ததால் வந்த சோகம் , மூன்று மகள்ககளும் கோடீஸ்வரர்கள் தான் ஆனால் அவர்களுக்கு அப்பாவின் பணத்தில் மேலும் பணம் வேண்டும் உண்மை சம்பவம்
  வேதனை பாவம் ஓரே மகன் பல இன்னல்களை சந்திக்கிறான்

  தமிழரசன் சென்னை

  ReplyDelete
 4. பணக்காரர்கள் தெய்வத்தை தொழுகிறார்கள்!!?? (ஹாஹாஹாஹா) யாரைப்போல்? தொழுகிறார்கள். கோவில் சென்று அபிஷேக ஆராதனை செய்வதெல்லாம் தொழுகையாகாது.
  காஞ்சி பெரியவர் ஒருமுறை கூறினார். சத்காரியங்களுக்கு ஏழைகள் ஒரு ரூபாயாவது பணம் தரவேண்டும். பணக்காரர்கள் தங்கள் சரீரத்தை தர்மக்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்னு.

  ReplyDelete