சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 6, 2015

இருந்தும் இல்லாமலும் இறைவன்!


கீதை காட்டும் பாதை 36

"பொறாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையின் ஒன்பதாம் அத்தியாயமான ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

பகவத்கீதையின் நடுநாயகமாக அமைந்து இருக்கும் இந்த ஒன்பதாம் அத்தியாய யோகத்தை ராஜ வித்யை என்றும், மிகப் புனிதமானது என்றும், அழிவற்றது என்றும், கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானது என்றும் மேன்மைப்படுத்தியும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பொறாமை இல்லாத உனக்கு இந்த உபதேசம் என்று அவர் கூறுவதன் சூட்சுமம், பொறாமை இல்லாதவர்களே இந்த உபதேசம் பெறத் தகுதியானவர்கள் என்பதே என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அடுத்தவர்களைப் பார்த்து வயிறெரியாமல் இருப்பதே பொறாமையற்ற நிலை என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம் நீதி நூல்கள் அதற்கு மேலும் சில தகுதிகளைச் சொல்கின்றன. உதாரணத்திற்கு பண்புள்ளவர்களின் நற்பண்புகளை மறுக்காமல் ஏற்பது, கொஞ்சம் குணம் இருந்தாலும் அதைக் கொண்டாடுவது, பிறரிடம் குற்றங்குறைகள் கண்டாலும் அவற்றைப் பேசி மகிழாமல் இருப்பது இவையே பொறாமை அற்ற நிலையின் லட்சணங்கள் என்று அத்ரிஸ்மிருதி என்ற சம்ஸ்கிருத நீதிநூல் கூறுகிறது.

மற்றவர்களின் நற்பண்புகளை ஒத்துக் கொள்ள மனம் வராமல் இருப்பது பொறாமையின் முழு வெளிப்பாடே. பொறாமை இல்லாதவன் மட்டுமே அடுத்தவனிடம் இருக்கும் நல்லதைக் காண மறுக்க மாட்டான். அத்ரிஸ்மிருதி இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறது. கொஞ்சம் நல்லதிருந்தாலும் அதைக் காண்பது மட்டுமல்லாமல் கொண்டாடவும் முடிய வேண்டும் என்கிறது. எந்த நல்லதும் லேசில் வந்து விடாது. அதைத் தன் இயல்பாக வைத்திருக்க ஒருவன் நிறையவே முயற்சித்திருக்க வேண்டும். அதை மனதில் இருத்திக் கொண்டால் கொஞ்சம் இருக்கும் நல்லதையும் மனதாரப் பாராட்ட முடியும். அது பொறாமை அற்ற நிலையின் சற்று மேல் நிலை. சரி நல்லது கொஞ்சம் இருந்தாலும் மோசமானதும் நிறையவே இருக்கிறது, அதையாவது சொல்லலாமா என்றால் அதைப் பற்றிப் பேசி மகிழ்கிற சில்லறைத்தனம் இல்லாமல் இருப்பதும் முக்கியம் என்கிறது அத்ரிஸ்மிருதி. இப்படிப்பட்ட விசாலமான, கண்ணியமான, உயர்ந்த மனதிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பெற உண்மையான தகுதி  என்றாகிறது.

எனவே மேலும் படிக்கப் போகும் முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொண்டு உண்மையாகவே பொறாமை அற்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ள உறுதி கொள்வோமாக!

அசுபமான சம்சாரம் என்று ஏன் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்றார் என்றால் இந்த சம்சார பந்தம் ஒன்றன் பின் ஒன்றாக துக்கங்களை உருவாக்கிய வண்ணமே இருக்கிறது. சம்சார சாகரம் என்று சொல்லப்படும் இந்தப் பிறவிப் பெருங்கடலில் ஓயாத துக்க அலைகள் உருவாகிக் கொண்டே இருந்து வருத்தப்படக் காரணங்கள் இருந்து கொண்டே இருப்பதால் இதை அசுபம் என்று சொல்வது சரியே அல்லவா?    

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்கிறார்:

இந்த தர்மத்தின் விஷயத்தில் சிரத்தை காட்டாதவர்கள் என்னை அடைய முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

சிரத்தை என்பதென்ன? ஆதி சங்கரர் சொல்கிறார். “புனித நூல்கள் என்ன சொல்கின்றன என்பதன் உண்மைப் பொருளைக் கூர்மதியால் உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் சிரத்தை”.  புனித நூல்களைப் படிப்பது சுலபம் தான். கஷ்டமான பகுதி அவை சொல்வது இன்னது தான் என்பதைச் சரியாக உணர்தல். அதுவும் கூர்மதி இருந்தால் சாத்தியமே. மிக மிகக் கஷ்டமான பகுதி உணர்ந்தபடி வாழ முடிதல். இந்தக் கடைசி விஷயத்தில் தான் அநேகமாக அத்தனை பேரும் கோட்டை விடுகிறோம்.  

ஸ்ரீகிருஷ்ணர் இந்த சிரத்தையை தான் காட்ட வேண்டும் என்கிறார். கீதை உட்பட எந்தப் புனித நூலையும் மனனம் செய்வதிலோ, அதை வியாக்கியானம் செய்வதிலோ, ஒருவன் தன் பாண்டித்தியத்தை வெளிப்படுத்தலாமே ஒழிய, பிறவித் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அந்த சிரத்தை என்பது உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள முடிந்த ஒன்றல்ல. பல பிறவிகளின் பெருமுயற்சிக்குப் பின்னரே வரக்கூடிய ஒன்று. அது ஒன்றே ஒருவன் கடைத்தேறும் வழி.

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து தன்னை விவரிக்கிறார்.

உருவமற்ற பரமாதமாவான நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன். சகல ஜீவகோடிகளும் என்னுள்ளே அடங்கியுள்ளன. ஆனால் நான் அவற்றில் அடங்கி இருக்கவில்லை.

அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவை அல்ல. என்னுடைய ஈஸ்வரத் தன்மை கொண்ட யோகசக்தியைப் பார். அனைத்து உயிரினங்களையும் தாங்குகிறவனும், உண்டாக்குகின்றவனாகவும் இருந்த போதிலும் என்னுடைய ஆத்மா உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை.

எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எப்படி ஆகாயத்தில் இருக்கிறதோ அப்படியே எல்லா உயிரினங்களும் என்னிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்.

பரந்தாமனின் இந்த சுலோகங்கள் வெறுமனே படிக்கையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருப்பதாய்த் தோன்றலாம். பல பேருண்மைகள் எப்போதும் அப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாய்த் தோன்றக்கூடியவையே. ஆனால் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது உண்மையாய் தோன்றுகின்ற ஒன்று இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது அதற்கு எதிர்மாறாகத் தோன்றலாம். அதனால் ஒவ்வொரு சுலோகமும் ஒவ்வொரு கோணத்தில் அணுகப்பட்டது என்று எடுத்துக் கொண்டு பார்க்கலாம்.

சகல ஜீவன்களும் என்னுள்ளே அடங்கி இருக்கின்றன ஆனால் நான் அவற்றில் அடங்கி இல்லை என்று சொல்வதற்கு உதாரணமாய் கடல் அலைகளுக்கும், கடலுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லலாம். கடலால் உருவாக்கப்படும் அலைகள் கடலில் அடங்கி இருக்கின்றன. ஆனால் அலைகளுக்குள்ளே தான் கடல் அடங்கி இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா? இறைவனும் அப்படித் தான். எத்தனையோ ஜீவகோடிகளை உருவாக்கினாலும் அந்த ஜீவகோடிகளுக்குள் இறைவனை அடக்கி விட முடியாது.

அடுத்ததாக அண்டசராசரங்கள் என்னுள்ளே இருப்பவை அல்ல என்கிற உவமானம். கனவு காணும் ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவன் எத்தனையோ கனவு காண்கிறான். அவனில்லை என்றால் கனவின் நிகழ்வுகளும் இல்லை, பொருள்களும் இல்லை. ஆனாலும் கூட கனவில் காணும் பொருள்களும், மனிதர்களும், இடங்களும் அவனுக்குள்ளே இருக்கின்றன என்று சொல்ல முடியாதல்லவா? அத்தனைக்கும் ஆதாரம் அவன் தான் என்றாலும் அவன் அதற்குள் இல்லை, அவையும் அவனுக்குள் இல்லை.

அடுத்த உவமானம் ஆகாயம்-காற்று. இங்கே ஆகாயம் என்பது வெற்றிடத்தைக் (Space) குறிக்கிறது. ஆகாயத்தைப் போலவே இறைவன் உருவமற்றவர், செயல்புரியாதவர், எதிலும் ஒட்டாதவர். வாயுவோ ஆகாயத்திலேயே உருவாகி பரவி எங்கும் சஞ்சரிக்கும் இயல்புடையது. ஆகாயத்திலேயே நிலைபெற்றிருப்பது. வாயுவுக்கு ஆதாரம் ஆகாயமே. ஆனாலும் ஆகாயம் வாயுவிற்கு அப்பாற்பட்டதே. எல்லா உயிரினங்களும் இறைவனின் சங்கல்பத்தாலேயே உருவாகி அவனிடமே நிலைத்து நின்ற போதும் இறைவன் ஒட்டாதவனும், அப்பாற்பட்டவனுமே ஆவான்.

மொத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்ற ஈஸ்வரத் தன்மை கொண்ட யோக சக்தி என்பதை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். எல்லாவற்றையும், உண்டாக்கி, எல்லாவற்றிலும் நிறைந்து, எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவராக இருந்தாலும், ஒன்றிலும் ஒட்டாமல் விலகி இருக்கும் இறைவனின் அற்புத சக்தியே ஈஸ்வர யோக சக்தி!

பாதை நீளும்....
என்.கணேசன்     



4 comments:

  1. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete
  2. பொறமையற்றவன் என்தற்க்கு விளக்கம் அருமை... கடைசி விளக்கமும் தெளிவாக உள்ளது.

    ReplyDelete