என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 20, 2015

மற்றவர் எண்ணங்களையும் அறியமுடிந்த யோகி!


மகாசக்தி மனிதர்கள் 31.

ஒரு சீடன் தன் குருவிடம் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதும், எதை எல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதும் அவன் ஆர்வத்தின் தன்மையையும் விழிப்புணர்வையும் பொருத்தது. அவை இரண்டும் இருப்பின் சின்னச் சின்ன சம்பவங்களிலும் தெளிவான பாடங்களை ஒரு சீடனால் படிக்க முடியும். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் அப்படி பரமஹம்ச யோகானந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்.

கொசுக்களின் தொந்தரவு கூட யோகிகளை அணுகுவதில்லை என்று யோகானந்தர் புரிந்து கொண்டதைப் பார்த்தோம். அதே போல் ஒரு கொசுக்கடி மூலமாகவே இன்னொரு பாடமும் யோகானந்தர் தன் குருவிடம் இருந்து கற்றுக் கொண்டார். அதைப் பார்ப்போம்.

ஒரு நாள் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி புனிதநூல்களில் ஒன்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் காலடியில் அமர்ந்து கொண்டு யோகானந்தர் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரமாகப் பார்த்து ஒரு பெரிய கொசு யோகானந்தர் தொடையில் உட்கார்ந்து அவர் இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. அதை அடிக்க யோகானந்தர் கையை உயர்த்தினார். ஆனால் பதஞ்சலியின் யோகசூத்திரங்களில் கூறியிருந்த அஹிம்சை நினைவுக்கு வந்தது. கொசுவைக் கொன்றால் அதுவும் ஒரு உயிருக்கு இழைக்கும் தீங்கே அல்லவா? அந்த நினைவு வந்தவுடன் பரமஹம்ச யோகானந்தர் அந்தக் கொசுவை அடித்து நசுக்காமல் விட்டு விட்டார்.  

அதைக் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “ஏன் நிறுத்தி விட்டாய்?என்று கேட்டார்.

“ஒரு உயிரைப் பறிப்பது பாவமல்லவா குருதேவா?

“ஆனால் நீ கையை உயர்த்தும் போதே எண்ணத்தால் அந்த உயிரைக் கொன்று விட்டாய். பதஞ்சலியின் யோகசூத்திரத்தில் அஹிம்சை என்று சொல்லி இருப்பது எண்ணத்தினாலும் ஒரு உயிரைக் கொல்லாமல் இருப்பதே. எண்ணங்கள் மிக முக்கியம். எண்ணத்தினால் கூட ஒரு உயிருக்குத் தீங்கு இழைக்காமல் இருப்பது முக்கியம். சில நேரங்களில் சில கொடிய விலங்குகளை நாம் கொல்ல வேண்டி வரலாம். அப்படி அவசியமான போது அழிக்க நேர்ந்தாலும் வெறுப்போ, கோபமோ இல்லாமல் அதைச் செய்ய வேண்டும்.

யோகானந்தருக்கு சந்தேகம் வந்தது. “கொடிய விலங்கானாலும் அதன் உயிரைப் பறிப்பதை விட நாமே அதற்குப் பலியாவது சாலச் சிறந்தது அல்லவா குருதேவா?

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “மனித உயிர் மற்ற எல்லா உயிரினங்களை விட உயர்ந்தது. பரிணாம வளர்ச்சியில் மிகுந்த முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம் இறையுணர்வுக்கு நெருக்கமானது. தன்னை அழிவில் இருந்து காத்துக் கொள்ளும் மனிதன் அந்த இறையுணர்வின் துணை கொண்டு நடந்தால் உலகத்திற்கு எத்தனையோ நன்மைகளைச் செய்ய முடியும். அதனால் மனிதன் தன் உடலையும் உயிரையும் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியம். நீ சொன்னது போல அந்தக் கொடிய விலங்கின் உயிரைப் பறிப்பதும் சிறிய அளவில் பாவமே. ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாமல் உயிரை மாய்த்துக் கொள்வது நம் சாஸ்திரங்களின்படி மகாபாவம்

யோகானந்தர் தெளிவடைந்தார். இந்த நிகழ்ச்சியில் கொசுவை அடிக்கப் போகும் முன் பதஞ்சலியின் யோகசூத்திரங்களில் சொல்லப்பட்ட அஹிம்சை பற்றிய நினைவு உட்பட அவர் சொல்லாமலேயே அறிந்து கொண்டு அதற்கும் சேர்த்து விளக்கத்தை அளித்தது யோகானந்தருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள அவசியமான சமயங்களில் கொடிய விலங்கினங்களைக் கொல்வது நியாயமே என்று காரணத்தோடு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி விளக்கினாலும் அதைப் பொதுவாகச் சொன்னாரே ஒழிய தன் வாழ்க்கையில் கொடிய விலங்கினத்தையும் நேசத்தோடே அணுகினார் என்பதை அவரது பூரி ஆசிரமத்தில் சீடராக இருந்த ப்ரபுல்லா என்பவர் நினைவுகூறுகிறார்.

ஒரு முறை பூரி ஆசிரமத்திற்கு வெளியே தன் சீடர்களுடன் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அமர்ந்திருந்த போது ஒரு கொடிய நாகம் அங்கே வந்தது. நாகம் சுமார் நான்கு அடி நீளம் இருந்தது. அது தன் விஷ நாக்கை வெளிப்படுத்திக் கொண்டு வேகமாக வந்தது. அதைக் கண்டு உடனே சீடர்கள் அலறினார்கள். ஆனால் சிறிதும் அமைதி இழக்காத ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சிரித்துக் கொண்டே, இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன் கைகள் இரண்டையும் ஒருவித தாளலயத்துடன் தட்ட ஆரம்பித்தார். அவரை மிக அருகில் நெருங்கிய அந்த கொடிய நாகம் அப்படியே அவர் அருகில் சிறிது நேரம் அசைவற்று நின்றது. பின் தன் நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு அவருடைய பாதங்களைக் கடந்து  பக்கத்தில் இருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் இருக்கும் தருணங்களில் யாருமே அவர் அறியாமல் எதையும் நினைத்து விடக் கூட முடியாது. அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் ஒரு சீடன் கவனம் வேறெங்காவது இருந்து அதைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தால் அதை அவர் சொல்லிக் காட்டுவதுண்டு. 

ஒரு முறை அவர் ஏதோ விளக்கிக் கொண்டிருக்கையில் யோகானந்தர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் மனம் எதிர்காலத்தில் எங்கெங்கு ஆசிரமங்கள் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனையும் செய்து கொண்டு இருந்தது.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி நான் பாடம் நடத்துகின்ற பாடத்தில் உன் முழு கவனம் இல்லைஎன்றார்.

யோகானந்தர் “கவனமாய் தான் இருக்கிறேன். வேண்டுமானால் நான் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்ததை அப்படியே திருப்பிச் சொல்லவாஎன்று கேட்டார். சூட்டிப்பான மாணவர்களுக்கே இருக்கக்கூடிய இயல்பான குணமல்லவா?

“தேவையில்லை. நான் சொன்னதை நீ ஒத்துக் கொள்ளாததால் நான் உன் எண்ணத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. பாடத்தோடு, நீ சமவெளியில் ஒரு ஆசிரமமும், மலைமுகட்டில் ஒரு ஆசிரமமும், சமுத்திரக்கரையில் ஒரு ஆசிரமமும் அமைப்பது பற்றிக் கூட யோசித்துக் கொண்டிருந்தாய். மூன்றுமே கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். இப்போது நீ பாடத்தை முழுமனதோடு கவனிஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது யோகானந்தருக்கு பிரமிப்பாக இருந்தது. தன் குருவின் முன்னால் தனிப்பட்ட எண்ணங்களையும் அவர் அறியாமல் வைத்துக் கொள்ள முடிவதில்லையே என்று வியந்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது போலவே யோகானந்தர் பிற்காலத்தில் இந்தியாவில் சமவெளியான ராஞ்சியில் ஒரு ஆசிரமமும்,  லாஸ் ஏஞ்சல்ஸ் மலைமுகட்டில் அமெரிக்க ஆசிரமங்களின் தலைமையகமும், கலிபோர்னியா அருகில் பசிபிக் சமுத்திரத்தின் அருகில் ஒரு ஆசிரமமும் அமைத்தது வரலாறு. ஒருவரின் எண்ணங்களைப் படிக்க முடிவது மட்டுமல்லாமல் அந்த எண்ணங்கள் நிறைவேறுமா இல்லையா என்று கூடச் சொல்ல முடிவது யோகசக்தியால் மட்டுமே முடிந்த ஒன்றல்லவா?

யோகானந்தர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் இருந்த ஆரம்ப நாட்களில் மிகவும் ஒல்லியாக  இருந்தார். அவருக்கு வயிற்றுக் கோளாறும் இருந்தது. நிறைய மருந்துகளும், டானிக்குகளும் அவர் சாப்பிட்டு வந்தார்.

ஒரு முறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோகானந்தரிடம் “முகுந்தா (யோகானந்தரின் பூர்வாசிரமப் பெயர்) நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய்என்று சொன்னார்.

யோகானந்தருக்கு அக்காலத்தில் அவர் உடல்நிலை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருந்தது. தன் உடல் பிரச்னைகளைச் சொல்லி எத்தனையோ மருந்தும் டானிக்குகளும் சாப்பிட்டும் கூட பயனில்லாமல் இருந்ததை வருத்தத்துடன் குருவிடம் சொன்னார்.

“மருத்துவத்தில் எப்போதுமே எல்லைகள் உண்டு. எல்லைகள் இல்லாதது எதையும் உருவாக்க முடிந்த இறைசக்தியே. அந்த சக்தியால் நோய்கள் குணமாக முடியும் என்றும் நீ நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்பதையும் உறுதியாக நம்பு. அப்படியே நடக்கும்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.

அப்படிப்பட்ட குருவிடம் இருந்து வந்த வார்த்தைகள் யோகானந்தர் மனதில் ஆழமாகப் பதிந்தன. குரு சொன்னபடியே செய்தார். இரண்டே வாரங்களில் அவர் உடல் எடை கணிசமாகக் கூடியது. வயிற்று பிரச்னைகள் நிரந்தரமாக அவரை விட்டு நீங்கியது. பல வருடங்களாக மருத்துவத்தால் முடியாதது குருவருளாலும், நம்பிக்கையான எண்ணங்களாலும் முடிந்தது!
 
-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 18-03-2015              
  

4 comments:

  1. நல்ல பதிவு. நன்றி. Autobiography of a yogi முழுவதுமே ஒரு பொக்கிஷம் என்று கருதப்படவேண்டிய புத்தகம்.

    ReplyDelete
  2. சரோஜினிJuly 20, 2015 at 6:50 PM

    யோகியின் சுயசரிதையை முன்பே படித்திருந்தாலும் இந்த சம்பவங்களை உங்கள் எழுத்தில் உங்கள் கருத்துக்களுடன் படிக்கையில் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete