என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, July 16, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 54


திபெத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் இடையே ஒரு பிசிறில்லாத தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த பின் லீ க்யாங் அந்தத் தொடர்பு என்னவாக இருக்கும் என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தான். ஆனால் அவனால் அது குறித்து மட்டும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. நடந்து முடிந்தவைகளில் அந்த சுற்றுலா வழிகாட்டியின் மரணம் அவனை நீண்ட ஆலோசனையில் ஆழ்த்தியது.

வாங் சாவொ சம்யே மடாலயத்திற்கு இரண்டாவது நாள் விசாரிக்கப் போய் சில மணி நேரங்களில் அந்தச் சுற்றுலா வழிகாட்டி மரணத்தைத் தழுவி இருக்கிறான். வாங் சாவொ நான்கு சுற்றுலா வழிகாட்டிகளையும் அழைத்து வாருங்கள் என்று சொன்ன பிறகு சரியாக ஒன்றரை மணி நேரத்தில் அந்தச் சுற்றுலா வழிகாட்டியைப் பாம்பு கடித்திருக்கிறது. அந்தப் பாம்பும் பொதுவாக அந்தப் பகுதியில் காணப்படும் பாம்பல்ல. அந்த புத்தபிக்கு தான் மைத்ரேயனின் பாதுகாவலன் என்று தெரிவித்து விடுவானோ என்று பயந்தோ, இல்லை அந்த சமயத்தில் நடந்த வேறெதோ ஒரு சம்பவத்தை அவன் வெளியே தெரிவித்து விடுவானோ என்று பயந்தோ அவனைக் கொன்றிருக்கிறார்கள். அது கொலை என்று தெரிந்து விடாமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கியது.

இதில் லீ க்யாங்கிற்கு நெருடலாக இருந்த விஷயம் என்னவென்றால் அந்த சுற்றுலா வழிகாட்டியைக் கொல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட குறைவான நேரம் தான். முதலில் கொன்றது மைத்ரேயனின் பாதுகாவலனாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் இத்தனை வேகமாக தனியொரு மனிதன் செயல்பட்டிருக்க முடியுமா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. ஒன்றுக்கு மேல்பட்ட ஆள்கள் இதில் சேர்ந்திருந்தாலும் தகவல் கிடைத்து, தயார்ப்படுத்திக் கொண்டு அந்த ஆள் தனியாக வெளியே வரும் வரைக் காத்திருந்து, அபூர்வ பாம்பை வைத்துக் கொல்வது என்பது அந்தக் குறுகிய காலத்தில் சாதாரண மனிதர்களுக்கு சாத்தியம் அல்ல என்றும் தோன்றியது. இந்த அளவு சாமர்த்தியசாலிகள் அவன் அதிகாரத்திற்குட்பட்ட திபெத்தில் அவனுக்கே தெரியாமல் இருப்பது நல்லதல்ல. யாரவர்கள் என்பது தெரிந்தேயாக வேண்டும்......

மைத்ரேயனுக்கு ஏதாவது விதத்தில் சம்பந்தம் உள்ள ஆட்கள் என்றால் ஆசானுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆசானைக் கண்டுபிடித்து விசாரித்தாலும் அவர் வாயில் இருந்து எதையும் சுலபமாக வரவழைக்க முடியாது. அதற்குப் பதிலாக அவருக்கு நெருங்கி இருந்தவர்களிடம் விசாரிப்பது நல்லது என்று தோன்றியது.

உடனே லீ க்யாங் ஒரு தீர்மானத்திற்கு வந்து திபெத்தில் இருக்கும் ஒற்றைக்கண் பிக்குவுக்குப் போன் செய்தான். ஒற்றைக் கண் பிக்குவின் குரல் லேசான நடுக்கத்துடன் கேட்டது. “ஹலோ

“மைத்ரேயன் எப்படி இருக்கிறான்?என்று வழக்கம் போல் முதல் கேள்வியை லீ க்யாங் கேட்டான்.   ஒற்றைக்கண் பிக்கு லேசான நடுக்கத்துடன் தன் அருகே நின்றிருந்த டோர்ஜேயைப் பார்த்தார். அவர் போனில் பேசுவதே லீ க்யாங்கிடம் தான் என்பதைப் புரிந்திருந்த டோர்ஜே அவர் நடுக்கத்தைப் பார்த்துத் தானும் நடுங்கினான். அந்தச் சிறுவனின் நடுக்கத்தைப் பார்த்த ஒற்றைக்கண் பிக்குவுக்கு மனம் பதறியது.

“நலமாகத்தான் இருக்கிறான் சார்என்று சொன்னார்.

“நல்லது. நான் நாளை அங்கு வருகிறேன். அவனையும் பார்க்க வேண்டும். உங்களிடமும் கொஞ்சம் பேச வேண்டும்

லீ க்யாங் அதற்கு மேல் பேச்சை வளர்த்தவில்லை.  இணைப்பைத் துண்டித்து விட்டான்.

“என்ன ஆசிரியரே?டோர்ஜே பயத்துடன் கேட்டான்.

“லீ க்யாங் நாளைக்கு வருகிறான் டோர்ஜே

டோர்ஜேயின் முகம் அனல் பட்ட பூவாய் வாடியது. அவர் காலை அவன் அணைத்துக் கொண்டான். “எதற்கு ஆசிரியரே?

அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டபடியே ஒற்றைக்கண் பிக்கு சொன்னார். “அவனிடம் அதை நான் கேட்க முடியுமா டோர்ஜே. அவனாகச் சொன்னான். உன்னைப் பார்க்க வேண்டுமாம். என்னிடம் பேச வேண்டுமாம்.....

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பின் ஒற்றைக்கண் பிக்கு அவனிடம் சொன்னார். “அவன் உன்னிடம் என்னவெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்பான்.  நான் சொல்லிக் கொடுத்த சூத்திரங்களை எல்லாம் சரியான உச்சரிப்புடன் நீ அவனிடம் சொல்லிக் காட்ட வேண்டும்.....

டோர்ஜே பரிதாபமாகத் தலையசைத்தான். ஒற்றைக்கண் பிக்கு தனக்குள் சொல்வது போல் சொன்னார். “அவன் முன்னால் நானும் உன்னை மைத்ரேயன் என்று தான் அழைக்க வேண்டும்...பின் அவனைப் பார்த்துச் சொன்னார். “தேவைப்பட்டால் நான் அவன் முன் உன்னிடம் கண்டிப்பு காட்டுவேன். நீ தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. நீ அவன் முன் கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும். பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. சரியா?

டோர்ஜே மறுபடியும் தலையசைத்தான். ஆனால் அவன் முகத்தில் இப்போதும் பயம் நிறைந்திருந்தது. அவரால் அவனிடம் பயப்படாதே என்று சொல்லி தைரியப்படுத்த முடியவில்லை. அவருக்கே நடுக்கமாய் இருந்த போது என்ன சொல்லி அவர் அவனைத் தைரியப்படுத்துவார்?

திடீர் என்று நினைவு வந்தவராக அவர் சொன்னார். “நீ அன்றைக்கு விளையாடப் போய் ஆசானைப் பார்த்ததை எக்காரணத்தைக் கொண்டும் உன் வாய் தவறியும் சொல்லி விடக்கூடாது. மறந்து விடாதே?

டோர்ஜே குழப்பத்துடன் கேட்டான். “ஆசான் யார் ஆசிரியரே?

“அன்று நீ தெருவில் விளையாடப்போன போது ஒரு தாத்தாவும் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாரே, பிறகு உன் பெயர் கூடக் கேட்டாரே அவர் தான்

ஓ. அவர் தான் ஆசானா? அவர் உங்களுக்குத் தெரிந்தவரா ஆசிரியரே

அவர் எனக்குத் தெரிந்தவர் மட்டுமல்ல. என் குருநாதரும் கூடஎன்று வாய்விட்டு அவரால் அவனிடம் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தெரியும்....என்று அவர் சமாளித்தார்.

டோர்ஜே அவன் வயதுக்கே உரிய வெகுளித்தனத்தோடு கேள்வியைக் கேட்டான். “ஒரு வேளை லீ க்யாங்குக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வார் ஆசிரியரே   

ஒற்றைக்கண் பிக்குவின் உடம்பு அவரை அறியாமல் நடுங்கியது. “அவன் எதுவும் செய்வான் டோர்ஜே. ஏனென்றால் அவன் இதயம் இல்லாதவன். பிரச்னை என்ன என்றால் இதயம் இருக்க வேண்டிய இடத்திலும் அதற்குப் பதிலாக கடவுள் அவனுக்கு மூளையையே வைத்து விட்டிருக்கிறார்.


ருணும் வந்தனாவும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸுக்குப் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகிக்கு இருவருக்கும் நல்ல ஜோடிப் பொருத்தம் இருப்பதாகத் தோன்றியது. இருவருக்கும் இடையே மலர்ந்திருக்கும் காதலை அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சொல்லவில்லையே தவிர பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் அந்தக் காதல் அப்பட்டமாகவே தெரிந்தது. அந்த அளவில் இருந்தது அவர்கள் சேர்ந்து இருக்கையில் தெரிந்த முகமலர்ச்சியும், நடவடிக்கைகளும்....

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகி மாடியில் குடி இருக்கும் மனிதன் தலையைக் குனிந்து கொண்டே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டாள். இருட்டானால் தான் அவன் வெளியேவே செல்கிறான், இல்லா விட்டால் அதிகாலையிலேயே சென்று இருட்டிய பின்பு தான் வருகிறான். இப்போதும் கூட இருட்டி விட்டிருக்கிறது. எப்போது வெளியே சென்றானோ தெரியவில்லை. இன்றைக்கு இந்த ஆளிடம் பேசாமல் விடுவதில்லை என்ற முடிவை ஜானகி எடுத்து விட்டாள். வெளி கேட்டில் இருந்து அவன் உள்ளே நுழையும் போதே வீட்டுக்கு அழைத்து அவனிடம் பேசலாமா, இல்லை அவன் மேலே போன பிறகு கதவைத் தட்டி அங்கேயே போய்ப் பேசலாமா என்று ஆலோசித்தவள் அவன் இருப்பிடத்திலேயே போய்ப் பேசுவது நல்லது என்கிற தீர்மானத்திற்கு வந்தாள். அப்போது தான் அவனைப் பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்கும். ஒரு சினிமா கதாசிரியன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி எழுதுகிறான் என்பதை நேரடியாய் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று கணித்தாள். பின் வீட்டுக்குள் வந்து அமர்ந்தவள் அவன் மாடி ஏறிப் போகும் வரை அமர்ந்திருந்து விட்டு, அவன் உடை மாற்ற ஒரு கால் மணி நேரம் அவகாசம் தந்து விட்டு போய் மாடிக்கதவைத் தட்டினாள்.

ஒரு கணம் திடுக்கிட்டாலும் வந்திருப்பது யாராய் இருக்கும் என்று யூகிக்க மாடி வீட்டு ஆசாமிக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஆனாலும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு உறுதிப்படுத்திக் கொண்டான். கீழ்வீட்டு அம்மாளை அவன் இதற்கு முன்பே எதிர்பார்த்தான். அந்த அம்மாளுக்குப் பேசுவது என்பது மூச்சு விடுவது போல் இயல்பானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட என்பது அவனுக்கு இந்த சில நாட்களில் உறுதியாய் தெரிந்திருந்தது. அதனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனிடம் பேசி அறுத்துத் தள்ளாமல் விட மாட்டாள் என்று முன்பே கணித்திருந்தான். எதிர் வீட்டு ஆட்களுடன் வராமல் தனியாக வந்திருக்கும் வேளையிலேயே அவளிடம் பேசி முடித்து அனுப்பி விடுவது உத்தமம் என்று தோன்றியது. கதவைத் திறந்தான்.

“தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். நான் ஜானகி. கீழ் வீட்டில் தான் குடி இருக்கிறேன். சினிமா என்றால் உயிர். மாடியிலேயே ஒரு சினிமா கதாசிரியர் குடியிருக்கிறார் என்று தெரிந்த பிறகும் பேசாமல் இருந்தால் என் தலையே வெடித்து விடும். அதனால் தான் வந்தேன். உள்ளே வரலாமா?....”  கடகடவென்று பேசிய ஜானகியைப் பார்த்துப் புன்னகைக்கவே அவன் படாத பாடு பட்டான். அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை.

ஆனால் வேறு வழி இல்லாமல் உள்ளே வாருங்கள்என்று வரவேற்று உட்கார வைத்தான். ஜானகி உள்ளே நுழைந்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தபடியே நாலா பக்கமும் நோட்டமிட்டாள். உள்ளே அதிகமாய் பொருள்கள் இல்லாமல் வெற்றிடமாய் தான் இருந்தது. அவள் பார்வையில் பேனா பேப்பர் கூடத் தென்படவில்லை. இக்காலத்தில் பேப்பரில் யார் எழுதுகிறார்கள், எல்லாரும் கம்ப்யூட்டரில் தான் எழுதுகிறார்கள் என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள். அலமாரியில் ஒரு பைனாகுலரைத் தவிர வேறு பொருள் இருக்கவில்லை. அவள் கண்கள் பைனாகுலரில் தங்கிய போது அவனுக்கு திக்கென்றது. ஆனால் அவள் அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.

“நீங்கள் எத்தனை படங்களுக்குக் கதைவசனம் எழுதி இருக்கிறீர்கள்?

“இப்போது எழுதுவது தான் முதல் படம். இதற்கு முன் நான்கைந்து நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறேன்.

“இப்போது எழுதுவது என்ன மாதிரியான கதை...

“எல்லாம் கலந்த கலவை....

அவள் கேட்டுக் கொண்டே போனாள். அவன் பொய்யான பதில்களைக் கூசாமல் சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் பதில் சொல்லியே அவனுக்கு வாய் வலித்தது. ஒரு கட்டத்தில் அவளே பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசியதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அவளை ஏமாற்றுவது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. எதிர் வீட்டாருடன் நெருக்கமாகி விட்டிருக்கும் அவளைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் வேண்டியபடி உபயோகித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

அவனையும் மீறி அவன் புன்னகைத்தான். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரியாத ஜானகி “அப்பாடா இப்போது தான் புன்னகை செய்கிறான் இந்த ஆள். இவ்வளவு தூரம் பேசிய பிறகு தான் இறுக்கம் தளர்ந்திருக்கிறதுஎன்று மனதிற்குள் சந்தோஷப்பட்டாள்.

அவளுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவன் மனதினுள் புதியதோர் திட்டம் வடிவம் பெற ஆரம்பித்தது. மறுபடியும் புன்னகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

 1. என்ன சார் இப்படி பீதிய கிளப்பறீங்களே! அக்‌ஷய் வர்ர வரைக்கும் அந்த ஆசாமிய எதுவும் செய்ய விட்ராதீங்க.

  ReplyDelete
 2. நல்லாயிருக்கு.... தொடருங்கள் அண்ணா...

  ReplyDelete
 3. சுந்தர்July 17, 2015 at 6:15 PM

  போத மாட்டேன்கிறது. அடுத்த வியாழன் வரை காத்திருக்க வேண்டுமே.

  ReplyDelete