என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, July 9, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 53


 டுத்த அரை மணி நேரத்தில் மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் ஒவ்வொருவராக வாங் சாவொ முன் வந்து நின்றார்கள். புத்த பிக்குவை வெளியே நிற்க வைத்து விட்டு ரகசியமாக அவர்களைத் தனித்தனியாக விசாரித்த போது கண்சிமிட்டி மனிதன் கழுத்து திருகி விழுந்த போது கூட இருந்த ஆள் அவர்களில் ஒருவரும் அல்ல என்பது தெரிந்தது. அவர்களை வாங் சாவொ அனுப்பி விட்டான். அப்படியானால் நான்காவது ஆள் தான் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆள் என்பது வாங் சாவொவுக்கு ஊர்ஜிதமாகியது. அடுத்தவனை அனுப்புங்கள் என்று வாங் சாவொ  வெளியே இருந்த புத்த பிக்குவிடம் சத்தமாகச் சொன்னான்.

புத்தபிக்கு உள்ளே வந்து தயக்கத்துடன் சொன்னார். அவன் வரவில்லை

வாங் சாவொவின் முகம் இறுகியது. “ஏன்?என்று கேட்டான்.

அவனை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்களாம்

“என்ன ஆயிற்று?

“அவனை பாம்பு கடித்து விட்டதாம்

வாங் சாவொவுக்கு திகைப்பும் கோபமும் ஏக காலத்தில் வந்தன. எழுந்து நின்றான். “பா..ம்பு.... கடித்து விட்டதா? எப்போது

“சிறிது நேரத்துக்கு முன்பு தான்....

“எந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்?

“சேடாங் நகரின் அரசு மருத்துவமனையில் தான்.” 

வாங் சாவொவுக்கு சந்தேகம் வலுத்தது. ‘பாம்பு கடித்திருப்பது உண்மை தானா இல்லை கட்டுக்கதையா? உண்மையாக இருந்தால் இவனையாவது மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களா, இல்லை இவனும் மாயமாய் மறைந்திருப்பானா?

வாங் சாவொ தன் அலைபேசியை எடுத்தான். “சேடாங் நகர அரசு மருத்துவமனையில் பாம்பு கடிபட்டவனை இன்று காலை சேர்த்திருக்கிறார்களா என்று கேட்டுச் சொல்.என்று ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு சொன்னான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் “ஆம் சேர்த்திருக்கிறார்கள்என்று பதில் வந்தது.

“மருத்துவமனையில் நம் ஆட்களை நிறுத்து. அந்த ஆளைக் கண்காணிக்க ஏற்பாடு செய். அவனை நான் சந்தித்துப் பேசியாக வேண்டும்.

பேசியவன் தயக்கத்துடன் சொன்னான். “... ஆனால் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் முன்பே அவன் இறந்து விட்டிருக்கிறான்.

வாங் சாவொ திகைத்தான். அவனை ஒருவித கையாலாகாத கோபம் ஆட்கொண்டது. சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு கண்டிப்பான குரலில் சொன்னான். “பரவாயில்லை. நான் பிணத்தைப் பார்க்க வேண்டும். அந்த மருத்துவர்களிடமும் பேச வேண்டும். உடனே வருகிறேன் என்று சொல்

வாங் சாவொ உடனே கிளம்பினான். போகின்ற அவனையே புத்தபிக்கு யோசனையோடு பார்த்து நின்றார். மருத்துவமனைக்குப் போகும் இவன் அப்படியே போய் விடுவானா, இல்லை திரும்பவும் இங்கே வருவானா?


சேடாங் நகர அரசு மருத்துவமனைக்குப் போன வாங் சாவொ இறந்து போயிருந்த சுற்றுலா வழிகாட்டியின் பிணத்தை ஆராய்ந்தான். பிணம் கருநீல நிறமாகி விட்டிருந்தது. காலில் பாம்பு கடித்த காயம் இருந்தது. வாங் சாவொ மருத்துவரிடம் கேட்டான். இது உண்மையாகவே பாம்பு கடித்த காயம் தானா. இதில் தில்லு முல்லு நடந்திருக்க வாய்ப்பில்லையே

“இல்லை பாம்பு கடித்த காயம் தான். ஆனால்....

“என்ன?

“இந்த வகை விஷப்பாம்புகள் இந்தப் பகுதியில் அபூர்வம் தான். நான் கடந்த ஐந்து வருடங்களில் இந்தப் பாம்பு தீண்டி இறந்தவர்களை இந்தப் பகுதியில் பார்த்ததில்லை. இந்தப் பகுதியில் இருக்கும் பாம்புகள் இந்த அளவு விஷத்தன்மை கொண்டவையும் அல்ல. அந்தப் பாம்புகள் கடித்தால் இந்தப் பகுதி மக்களே பச்சிலைகள் போட்டு குணப்படுத்திக் கொள்கிற அளவு தான் விஷத்தன்மை இருக்கும்.....

வாங் சாவொ அங்கிருந்த அந்த சுற்றுலா வழிகாட்டியின் மகனிடம் விசாரித்தான். காலையில் ஏதோ வேலையாக வெளியே போன தந்தை நீண்ட நேரமாய் வரவில்லை என்பதால் தேடிப் போனதாகவும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அவன் பாம்பு கடிபட்டு விஷமேறி மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து அவனைத் தூக்கிக் கொண்டு சேடாங் வந்ததாகவும் சொன்னான். ஆனால் வழியிலேயே தந்தை இறந்து விட்டார் என்பதைச் சொல்லும் போது அவன் கண்கள் நிறைந்தன.

வாங் சாவொ அந்த மகனின் துக்கத்தில் பங்கு கொள்ளும் மனநிலையில் இல்லை. அந்த சுற்றுலா வழிகாட்டி இடையில் நினைவு திரும்பி ஏதாவது தெரிவித்தானா என்று கேட்டான்.

மகன் சொன்னான். “வீட்டருகே மயங்கி விழுந்திருந்த அவரை நான் தூக்கிய போது அரை மயக்க நிலையில் இருந்தபடியே  அடர்த்தியாக மரங்கள் நிறைந்திருந்த பகுதியை நோக்கிக் கை மட்டும் காண்பித்தார். அவரைத் தீண்டிய பாம்பு அந்தப் பக்கம் போயிருப்பதைக் காட்டி இருக்கலாம்.... அப்புறம் அவர் நினைவு திரும்பவே இல்லை.

வாங் சாவொவுக்கு சந்தேகம் இன்னும் தீரவில்லை. மனதினுள் சொல்லிக் கொண்டான். “அவனைத் தீர்த்துக்கட்டிய ஆள் போன பக்கம் இது என்றும் காட்டி இருக்கலாம்....வாய் விட்டுக் கேட்டான். “உன் அப்பா காட்டிய பக்கம் போய்ப் பார்த்தாயா?

“இல்லை.... அந்தப் பாம்பைப் பார்ப்பதை விட முக்கியம் அப்பாவைக் காப்பாற்றுவது அல்லவா?

வாங் சாவொவுக்கு அந்தப் பதில் ஏனோ எரிச்சலைத் தந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு கேட்டான். “உன் அப்பா இரண்டு நாள் முன்பு சம்யே மடாலயத்தின் கோங்காங் மண்டபத்தில் கழுத்து திருகி விழுந்தவனைப் பற்றி உங்களிடம் சொல்லி இருக்கிறாரா?

ஆமாம். அங்கு துஷ்ட சக்திகள் மறுபடியும் பலம் பெற்று வருவதைத் தான் அது காட்டுகிறது என்று சொன்னார்....

“அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று விவரித்தாரா?

“கோங்காங் மண்டபத்தில் இருந்த துஷ்ட சக்தி தேவதைகள் பற்றி அப்பா விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஆள் உள்ளே வந்தாராம். வந்தவர் திடீரென்று என்று மயங்கி விழப்போனதாகவும், அங்கிருந்த புத்த பிக்கு ஒருவர் கீழே விழுந்து விடாதபடி அவனைத்  தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் சொன்னார்.

புத்தபிக்கு அந்த ஆளைப் பிடித்துக் கொண்டது இப்போது நூறு சதம் உண்மை என்று வாங் சாவொவிற்கு ஊர்ஜிதம் ஆனது. “அந்த புத்த பிக்கு பற்றி உன் அப்பா ஏதாவது சொல்லி இருக்கிறாரா? யார் அவர், பார்க்க எப்படி இருப்பார் என்றெல்லாம்...

“இல்லை

“அந்த புத்த பிக்குவுடன் ஒரு சிறுவன் இருந்தான் என்கிற மாதிரி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?

“இல்லையே

அப்போது வாங் சாவொவின் அலைபேசி அடித்தது. சேடாங் வரும் வழியிலேயே தன் ஆள் ஒருவனுக்குப் போன் செய்து சம்யே மடாலயத்தில் குறித்துக் கொண்டிருந்த கண்சிமிட்டி மனிதனின் விலாசத்தைத் தந்து அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தான். இப்போது அந்த ஆள் தான் போன் செய்கிறான். சற்று தள்ளி வந்து ஆர்வத்துடன் வாங் சாவொ பேசினான். “சொல். என்ன தகவல்?

“அந்த விலாசம் போலியானது. அந்தப் பெயரில் அந்த விலாசத்தில் யாருமில்லை.

வாங் சாவொ திகைத்தான். என்ன தான் நடக்கிறது? புத்த பிக்கு மற்ற விதங்களில் சந்தேகத்தைக் கிளப்பிய போதும் அந்த விலாசத்தை மடாலயக் குறிப்பேடுகளில் இருந்து எடுத்துத் தந்த போது யதார்த்தமாகத் தான் அதைச் செய்தார். வாங் சாவொவே அந்தக் குறிப்பேட்டில் இருந்த விலாசத்தைத் தன் கண்ணால் பார்த்திருந்தான். அதில் வரிசையாக மற்ற ஊழியர்களின் விலாசங்களும் கூட இருந்தன.

மைத்ரேயன், பாதுகாவலன் என்ற இரண்டு பேரைக் கண்டுபிடிக்கும் வேலையில் வேறென்னென்னவோ வந்து இப்படிப் புகுந்து கொண்டு குழப்பும் என்று அவன் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது.

லீ க்யாங்குக்கு வாங் சாவொ போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னான். சொல்லும் போது இதை எல்லாம் கட்டுப்படுத்த தன்னால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் வாங் சாவொவுக்கு பலமாக இருந்தது.  கடைசியில் சொன்னான். “அந்தக் கண்சிமிட்டி மனிதன் அப்படி ஆன போது அங்கிருந்த பிக்கு மைத்ரேயனின் பாதுகாவலன் தானா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்யே போன்ற பிரசித்தி பெற்ற புத்த மடாலயத்திற்கு எத்தனையோ புத்த பிக்குகள் தினசரி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக அந்த புத்த பிக்கு இருக்கவும் கூடும். அந்த நேரத்தில் மைத்ரேயன் வயதை ஒத்த ஒரு சிறுவன் அங்கு இருந்தான் என்பதை, புத்த பிக்கு இருந்தார் என்று சொன்னவர்கள் உட்பட, யாருமே சொல்லவில்லை...

லீ க்யாங்க் அமைதியாகச் சொன்னான். “அந்தப் பையனின் தனித்தன்மையே எந்த இடத்திலும் யாரும் கவனிக்காதபடி இருப்பது தான்... இத்தனை காலம் நம் கவனத்திற்கே அவன் வராமல் இருந்தவனாயிற்றே!

வாங் சாவொ ஆவலுடன் கேட்டான். “அப்படியானால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அங்கே மைத்ரேயன் இருந்திருக்கக்கூடுமா? அந்த கண்சிமிட்டி மனிதனைப் பிடித்த புத்தபிக்கு மைத்ரேயனின் பாதுகாவலனாக இருந்திருப்பானா?

லீ க்யாங் சொன்னான். “முழுத் தகவல்களும் கிடைக்காமல் எந்த முடிவுக்கும் வருவது சரியல்ல. ஆனால் நீ சொன்னபடி அந்தக் கண்சிமிட்டி மனிதன் காணாமல் போனதும், அந்த சுற்றுலா வழிகாட்டி பாம்பு கடித்து செத்ததும் தற்செயல் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இதில் நிறைய மர்மம் இருக்கிறது. மைத்ரேயன் சம்பந்தப்பட்டதாகவும் இது இருக்குமானால் இன்னும் நம் உளவுத்துறை கவனத்துக்கு வராத முக்கியமான ரகசியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. எல்லா விதங்களிலும் விசாரி. ஆனால் மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் தான் இப்போதைய முதல் குறி. அதை மறந்து விடாதே

வாங் சாவொவிடம் பேசி முடித்த பின் லீ க்யாங் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். வாங் சாவொ சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அந்தக் கண்சிமிட்டி மனிதன் பொய் விலாசம் கொடுத்து சம்யே மடாலயத்தில் தற்காலிக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். காரணம் இல்லாமல் யாரும் திருட்டுத்தனமாக மடாலய வேலைக்குச் சேர மாட்டார்கள். அவன் கழுத்து திருகி பாதிக்கப்பட்ட விதமும், வாங் சாவொவிடம் கண்சிமிட்டி எதோ சொல்ல வந்ததும், பின் ஒரேயடியாகக் காணாமல் போன விதமும் சந்தேகப்பட வைக்கின்றன. அவனைப் பற்றி விசாரிக்கப் போன இடத்தில் தான் அவனைப் பிடித்துக் கொண்ட புத்த பிக்கு மைத்ரேயனின் பாதுகாவலனாக இருக்கலாமோ என்று சந்தேகம் வாங் சாவொவிற்கு வந்திருக்கிறது. அது பற்றி உறுதியாகச் சொல்ல முடிந்த ஒரே ஆள் அந்த சுற்றுலா வழிகாட்டி என்று எண்ணி அவனைத் தேடிய போது தான் அவன் பாம்பு கடிபட்டு செத்திருக்கிறான். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதான கோர்வையாகவே தெரிகிறது....

அந்த கண்சிமிட்டி மனிதனையும், மைத்ரேயனையும் தான் சம்பந்தப்படுத்தி யோசிக்க முடியவில்லை. என்ன சம்பந்தம் இருக்க முடியும்?... சரி எதற்கு அவன் கோங்காங் மண்டபத்தில் அந்த சமயத்தில் போனான். ஏதாவது வேலை இருந்து போயிருப்பானா, இல்லை ........ மைத்ரேயனும் அந்த பாதுகாவலனும் அங்கு வந்திருப்பதைப் பார்த்து விட்டுப் போயிருப்பானா? ஏதாவது சம்பந்தம் இருந்து அப்படி அவன் போயிருந்தால்....?

லீ க்யாங் தன் சிந்தனையிலேயே ஒரு கணம் சிலையானான். அவன் மனம் அங்கேயே அசையாமல் நின்றது.  சம்பந்தம் என்ன என்று ஊகிக்க முடியா விட்டாலும், சம்பந்தம் இருக்குமானால் நடந்திருந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் இடையே ஒரு பிசிறில்லாத தொடர்பு இருக்கவே செய்கிறது....

(தொடரும்)

என்.கணேசன் 

4 comments:

 1. சுகமதிJuly 9, 2015 at 6:47 PM

  என்.கணேசன் ஐயா, இந்த நாவல் மிக அருமை. கண்முன் காட்சிகள் விரிகின்றன. அக்‌ஷய், லீக்யாங், மாரா என்ற மூன்று புத்திசாலிகளுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை விருவிருப்பாக எழுதுகிறீர்கள். தமிழ் இண்ட்லி மூலமாக சில நாட்கள் மூலமாய் தான் இந்த நாவல் பற்றி பார்த்தேன். பின் ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். நாவலை அழகான தமிழில் சுவாரசியமாக எழுதும் தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Fantastic Ganeshanji

  ReplyDelete
 3. Super sir theedeer pakir thirupangal kalakareenga sir.

  ReplyDelete
 4. தொடருங்கள்... தொடர்கிறோம்.

  ReplyDelete