சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 8, 2015

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்!


மகாசக்தி மனிதர்கள்-26

வெறும் கைகளால் புலிகளை அடக்க முடிந்தவர்களைக் காண முடிவது அபூர்வம். மயக்க மருந்து தந்து புலியின் வலிமையைக் குறைத்தும் சர்க்கஸ் போன்ற இடங்களில் பயிற்றுவிக்கப்பட்ட புலியைக் கையாண்டும் புலியை அணுக முடிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடுமையான காட்டுப் புலிகளைத் தனிமனிதனாக வெறும் கைகளாலேயே கட்டுப்படுத்தி அடக்குவது என்பது பெரும் சாகசமே! அப்படி அடக்க முடிந்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி வரை வட இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்.

புலி சுவாமி (Tiger Swami) மற்றும் சோஹம் சுவாமி (Soham Swami) என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட அவர் வட இந்தியாவில் டாக்காவில் (தற்போதைய பங்களாதேஷில்) பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஷ்யாமகண்ட உபாத்யாயா. பெரும் உடல் பலத்தைப் பெற்றிருந்த இவர் எப்படிப்பட்ட சீற்றமுள்ள புலியாக இருந்தாலும் அதைப் பூனை போல் அடங்க வைக்கும் சக்தியைப் பெற்றிருந்தார். இத்தனைக்கும் அவர் புலியை அடக்க எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை.  எத்தனை தான் பலசாலியாக இருந்தாலும் சீறும் புலியை எதிர்கொள்கையில் செயலிழந்து போவது தான் இயல்பு என்பதால் ஷ்யாமகண்ட உபாத்யாயாவை அக்காலத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து புலிகளை அவர் அடக்குவதைப் பலரும் கண்டு களித்தார்கள்.

ஒரு நாள் ஒரு துறவி ஷ்யாமகண்ட உபாத்யாயாவின் தந்தையிடம் வந்து உங்கள் மகன் மீது புலிகளின் இனத்தில் பெரும் வெறுப்பும் ஆத்திரமும் இருக்கிறது. அதனால் அவர் தேவையில்லாமல் புலிகளின் வெறுப்பை மேலும் சம்பாதித்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். இல்லா விட்டால் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டி வரும். அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். ஆறு மாத காலமாவது கடும் நோயால் அவதிப்பட நேரிடும்என்று கூறினார்.

அந்தத் தந்தையும் மகனிடம் வந்து துறவியின் எச்சரிக்கையைத் தெரிவித்தார். ஷ்யாமகண்ட உபாத்யாயாவுக்கு துறவியின் எச்சரிக்கை வேடிக்கையாகவும் அர்த்தம் இல்லாததாகவும் தோன்றியது. பெரும் உடல் வலிமையையும், மன தைரியத்தையும் பெற்றிருந்த அவர் துறவியின் எச்சரிக்கையைக் கேட்டுப் பயப்படும் தந்தையைக் கடிந்து கொண்டார்.

அது வரை எத்தனையோ புலிகளைச் சந்தித்து வென்றிருந்த அவர் புலிகள் போன்ற கொடிய விலங்கினங்கள் மனிதர்களால் அடக்கவும் வெல்லவும் பட வேண்டியவையே என்று தந்தையிடம் வாதாடினார். புலிகளால் எத்தனையோ பாவப்பட்ட மனித உயிர்கள் பறி போயிருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். அதற்கு மேல் அவருடைய தந்தைக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.

அந்த எச்சரிக்கைக்குப் பின் சில மாதங்கள் கழித்து ஷ்யாமகண்ட உபாத்யாயா கிழக்கு இமாலய அடிவாரத்தில், தற்போதைய மேற்கு வங்காளத்தில், உள்ள கட்ச் பீகார் (Cooch Behar) பகுதிக்குச் சென்றார். அந்தப் பகுதி அப்போது ஒரு தனி அரசரின் ஆட்சியில் இருந்தது. ஷ்யாமகண்ட உபாத்யாயா புகழ் அப்போது இந்தியா முழுவதும் பரவி இருந்ததால் அவர் வருகை அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைப் பார்த்து விட்டுப் போவதற்கென்றே மக்கள் வர ஆரம்பித்தனர்.

அச்செய்தி அரசரின் செவிக்கும் எட்டியது. அரசரிடம் ராஜா பேகம் என்ற ராயல் பெங்கால் புலி இருந்தது. அது சீற்றம் மிகுந்த வலிமையான புலி. அதைச் சில மாதங்கள் முன்பு தான் அவர் காட்டில் இருந்து பிடித்து வந்திருந்தார். அரசர் ஷ்யாமகண்ட உபாத்யாயாவை அரண்மனைக்கு வரச் சொல்லி ஆள் அனுப்பினார். ஷ்யாமகண்ட உபாத்யாயாவும் அரசரைச் சந்திக்கச் சென்றார்.

அரசர் ஷ்யாமகண்ட உபாத்யாயாவிடம் ஏளனமாகக் கேட்டார். “நீங்கள் புலியை அடக்குபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் மயக்க மருந்து தரப்பட்ட கிழப்புலியை அடக்குபவரா இல்லை நிஜமாகவே காட்டுப்புலியையும் அடக்குவீர்களா?

அந்தக் கேள்வி ஷ்யாமகண்ட உபாத்யாயாவை ரோஷமடையச் செய்தது. “மயக்க மருந்து தரப்பட்ட கிழப்புலிகளை அடக்க என்னைப் போன்ற ஆட்கள் தேவை இல்லை அரசரே. நான் இது வரை அடக்கிய புலிகள் எல்லாம் காட்டுப்புலிகள் தான். அதுவும் புலிகளை அடக்க நான் என் கைகளையே நம்பி இருக்கிறேன். ஆயுதங்களைக் கூடப் பயன்படுத்தியதில்லை.

அப்படியானால் உங்களால் என்னிடம் உள்ள ராயல் பெங்கால் புலியான ராஜா பேகத்தை அடக்க முடியுமா?அரசர் கேட்டார்.

“எந்தப் புலியையும் என்னால் அடக்க முடியும்என்றார் ஷ்யாமகண்ட உபாத்யாயா.

“என் புலியான ராஜா பேகத்தை அதன் கூண்டில் சந்தித்து அதை அடக்கி சங்கிலியால் கட்டி உயிரோடு நீங்களாகவே வெளியே வர வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் வென்றவர் என்று நான் ஒத்துக் கொள்வேன். உங்களுக்குப் பரிசாக அந்தப் புலி ராஜா பேகத்தையே தருகிறேன். கூடவே சில ஆயிரம் ரூபாய்களும் தருவேன். ஆனால் தோற்றாலோ நீங்கள் பலரும் புகழ்வதற்கு உகந்தவர் அல்ல போலி என்று நாடு முழுவதும் பறைசாற்றுவேன்என்றார் அரசர். ராஜா பேகம் புலியை வெல்ல ஒரு வார அவகாசம் தந்த அரசர் போட்டிக்கு முன்பு அந்தப் புலியை ஷ்யாமகண்ட உபாத்யாயா பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்தார். அந்தப் புலியைப் பார்த்தால் அவர் ஹிப்னாடிசம் ஏதாவது செய்து விடுவாரோ என்று அரசர் பயந்தது போல இருந்தது.

ஷ்யாமகண்ட உபாத்யாயா அரசருடைய சவாலை ஏற்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சில ஆயிரம் ரூபாய்கள் என்பது இக்கால மதிப்பில் கோடி ரூபாய் பெறும் என்றாலும் அந்தப் பணத்தை விட அவருக்கு தன் கௌரவத்தை நிலைநாட்டுவது மிக முக்கியமாகப் பட்டது.

அரசர் அவரிடம் பேசிய நாளில் இருந்து அந்தப் புலிக்கு உணவளிப்பதை மிகவும் குறைத்து விட்டார். இயல்பாகவே மிக ஆக்ரோஷமான அந்தப் புலிக்கு தரப்படும் உணவும் மிகவும் குறைவாக இருந்ததால் அந்தப் புலியின் ஆக்ரோஷம் பலமடங்காகப் பெருக ஆரம்பித்தது. அந்த உண்மையை ஷ்யாமகண்ட உபாத்யாயாவிடம் அவரது சீடர்கள் அரண்மனை வேலையாட்கள் மூலம் அறிந்து வந்து சொன்னார்கள். அந்தப் புலியை சாதாரண காலத்திலேயே சமாளிக்க பல ஆட்கள் தேவை என்றும் இப்போது அது கடும்பசியில் இருப்பதால் மிகமிக ஆபத்தானது என்று தெரிவித்த அவர்கள் அரசர் அப்படிப்பட்ட புலியை ஷ்யாமகண்ட உபாத்யாயா கண்டிப்பாக வெல்ல முடியாது என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அந்தச் செய்திகளால் ஷ்யாமகண்ட உபாத்யாயா மனம் மாறவில்லை. குறித்த நாள் அன்று ஷ்யாமகண்ட உபாத்யாயா நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்துக்குச் சென்றார். ஒரு பெரிய மைதானத்தின் மையத்தில் ஒரு பெரிய இரும்புக் கூண்டில் ராஜா பேகம் வைக்கப்பட்டிருந்தது. கூண்டுக்குள் புலி கடும்பசியோடு ஆக்ரோஷமாக உலாவிக் கொண்டிருந்தது. இரத்தத்தை உறைய வைக்கும் சீற்றமான உறுமல்களை ராஜா பேகம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் பரபரப்புடன் கூடியிருந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் அவர்கள் கரகோஷம் வானைப் பிளந்தது.

அந்தக் கூண்டின் உள்ளே நுழைந்து ஷ்யாமகண்ட உபாத்யாயா கதவைச் சாத்தினார். வேகமாகத் தான் சாத்தி தாளிட்டார். ஆனால் அதற்குள் வெகுவேகமாய் அவர் மீது பாய்ந்த புலி அவரது வலது கையை ருசி பார்த்து விட்டது. சுதாரித்துக் கொண்ட ஷ்யாமகண்ட உபாத்யாயா தன் இடது கையாலேயே இடி போன்ற அடிகளை அந்தப்புலி மீது செலுத்தி அடங்க வைத்தார். அதை ஒரு  சங்கிலியால் கூண்டின் கம்பியில் கட்டி விட்டு வெளியேற முனைந்தார். அவர் திரும்பிய அந்த வேளையில் அந்த பசித்த புலி ஆக்ரோஷமாய் அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அவர் முதுகில் பாய்ந்து அவர் தோளைக் கவ்வியது. ஷ்யாமகண்ட உபாத்யாயா இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 13-3-2015

3 comments:

  1. துறவி ஷ்யாமாகண்ட் உபாத்யாயா-வின் தந்தையிடம் கூறியதாக வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். நன்றி.

      Delete
  2. கொடிய நகசு, சிறிய நகசு என்று நாட்காட்டியில் போடுகிறார்களே அப்படி என்றால் என்ன? விளக்க முடியுமா?

    ஶ்ரீராம்

    ReplyDelete