சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 30, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 44


மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் இப்போதும் சம்யே மடாலயத்தில் தான் இருக்கிறார்கள் என்கிற தகவலை மாராவிடம் தெரிவித்தவன் ஏதேனும் ஒரு உத்தரவை உடனடியாக மாராவிடம் இருந்து எதிர்பார்த்தான். ஆனால் மாராவிடமிருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. மாறாக ஒரு கேள்வி தான் வந்தது.

“இத்தனையும் நடந்த போது மைத்ரேயன் என்ன செய்து கொண்டிருந்தான்?

“தெரியவில்லை. அந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்ட போது அங்கிருந்தவர்கள் எல்லாரும் அந்தப் பாதுகாவலனையும் நம் ஆளையும் தான் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த சிறுவனை யாரும் கவனிக்கவில்லை.

நீங்கள் அவனைப் பார்த்த போது அவன் எந்த மனநிலையில் இருந்தான்?

தெரியவில்லை. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதாவது விதத்தில் பாதிக்கப்பட்டவன் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். எதுவுமே நடக்கவில்லை என்பது போல் மைத்ரேயனால் இருக்க முடிந்தது இயல்பாக இல்லை. மாராவிற்குத் திபெத்தியக் கிழவரின் கோபம் நினைவுக்கு வந்தது. இந்த அசாத்திய அலட்சிய அமைதி தான் அவரை ஆத்திரமடையச் செய்திருந்தது. கோபம், வெறுப்பு, பயம், அதிர்ச்சி, ஏன் சிரிப்பு, ஏளனம் கூட கவனிக்கத்தக்க ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்கான அங்கீகாரம் தான்.  சொல்லப் போனால் அலட்சியப்படுத்துவதாகக் காண்பித்துக் கொள்வதும் மறைமுக அங்கீகாரமே. ஆனால் நடப்பதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அதைக் காணக்கூட சுவாரசியம் காட்டாமல் வேடிக்கை பார்த்தால் என்ன அர்த்தம் என்பது தெளிவாகப் புரிந்தது. மாராவுக்கு கோபம் வந்தாலும் அதனுடன் புன்னகையும் சேர்ந்தே வந்தது. சிறுவனா அவன்?

அதன் பிறகு அந்தப் பாதுகாவலன் மைத்ரேயனிடம் எப்படி நடந்து கொண்டான்.மாரா கேட்டான்.

“அவன் கோப்பபட்டு மைத்ரேயனை ஏதோ திட்டியது போலத் தெரிந்தது. ஆனால் அந்தத் திட்டும் அந்தச் சிறுவனுக்குப் புரிந்தது போலத் தெரியவில்லை. அவன் தலையை மட்டும் ஆட்டினான்.....

அவன் சொல்லச் சொல்ல மாரா ஒரு கணம் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தான்.  பாவம் அந்தப் பாதுகாவலனுக்கும் மைத்ரேயனைக் கையாள்வது சுலபமாக இருக்க வாய்ப்பில்லை என்று கணித்தான்.

ஆனால் அந்த நேரத்திலிருந்து அந்தப் பாதுகாவலன் மைத்ரேயனைத் தன் கண்பார்வையிலேயே வைத்திருக்கிறான். இப்போது மூன்றாவது தளத்தின் வரிசையில் நிற்கிறார்கள்.... நாங்கள் என்ன செய்யட்டும்....

“முடிந்தால் அவன் உடனடியாக உங்களை நெருங்க முடியாத தூரத்தில் இருந்து கண்காணியுங்கள். முடியா விட்டால் அதுவும் வேண்டாம்..... நீங்கள் இதற்கு முன்னால் செய்து வந்ததைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களைப் பாதுகாக்கவும் உங்களுக்கு உதவவும் வேறொரு ஆளை விரைவில் அனுப்புகிறேன்.மாரா அமைதியாகச் சொன்னான்.

“அப்படியானால் இவன்....

“அவனை அழைத்துப் போக வேறு ஆட்கள் வருவார்கள். கவலை வேண்டாம்... மாரா பேச்சை முடித்துக் கொண்டான்.

ஒன்றும் செய்யாமல் ஒதுங்கி நிற்கச் சொன்னதில் அவனுடன் பேசியவனுக்கு உடன்பாடில்லை என்பது மாராவுக்குத் தெளிவாகத் தெரிந்தது.  தங்கள் ஆள் இந்த நிலைமையில் இருக்கையில் அவனை அப்படி ஆக்கியவனை ஒன்றும் செய்யாமல் இருப்பது தங்கள் பக்கத்து பலவீனத்தைக் காட்டுவது போல் ஆகிவிடும் என்று அவர்கள் எண்ணுவது புரிந்தது. ஆனால் பின்வாங்குவது எல்லாம் பின்னடைவு அல்ல. பின்வாங்குவது பல சமயங்களில் பாய்வதற்கான ஆயத்தம். அதை எதிரிக்கு கூடிய சீக்கிரம் மாரா புரிய வைப்பான். நடந்து முடிந்த சம்பவமே தேவை இல்லாதது. எதிராளியின் பலம் பலவீனம் இரண்டையும் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் தன் பலம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு கர்வத்தோடு முட்டாள்தனமாக அவன் ஆள் இயங்கியதன் விளைவு. அவனை அனுமதித்ததில் தானும் அந்த முட்டாள்தனத்தில் பங்கெடுத்து விட்டோம் என்று மாரா மனதார ஒத்துக் கொண்டான். அவன் ஆளால் முடியும் அல்லது முடியாது என்ற இரண்டில் எது நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற கோணத்தில் தான் அவன் அனுமதித்தான். மைத்ரேயனின் பாதுகாவலன் திரும்பித் தாக்க முடியும் என்ற மூன்றாவது கோணத்தை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஏன் என்றால் அவனுடைய ஆள் தன் வாழ்நாளில் இது வரை எந்த எதிரியாலும் தாக்கப்பட்டதில்லை. அவ்வளவு வேகமானவன், திறமையானவன், நுணுக்கமானவன். இதில் எல்லாம் அவனை விட மேலான ஒருவனால் அவன் தாக்கப்படக்கூடும் என்பதை அவன் மட்டுமல்ல மாராவும் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் எதுவுமே வீண் இல்லை. இதில் கூட நல்லது நடந்திருக்கிறது. மைத்ரேயனின் பாதுகாவலன் திறமை வெளிப்பட்டிருக்கிறது. அதை வைத்து அவன் யார் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் இந்த அதிநுட்பத் திறமை கொண்டவர்கள் உலகில் அதிகம் இருந்து விட முடியாது.....

மாரா ஒரு ரகசிய எண்ணுக்குப் போன் செய்தான். எந்த அறிமுக வார்த்தைகளும் இல்லாமல், சம்யே மடாலயத்தில் அவனுடைய ஆள் அடைந்த நிலையைச் சுருக்கமாகத் தெரிவித்தான். பின் சொன்னான். “பெரிய மருத்துவமனையில் திறமை வாய்ந்த மருத்துவர் சகல நவீன உபகரணங்களும் உபயோகித்து மணிக்கணக்கில் அறுவை சிகிச்சை செய்தால் கூட அவன் ஒரு நொடியில் போட்ட முடிச்சைப் போடவோ, அவன் போட்டதைப் பிரிக்கவோ முடியாது. அப்படிப்பட்டவன் ஒரு அனாமதேயமாக இருக்க முடியாது. அவனைப் போல வேறு ஆள்களும் இருக்க முடியாது. அவன் யார் என்ன என்கிற தகவல் எனக்கு உடனடியாகத் தேவை


ம்யே மடாலயத்தின் தாரா தேவதை சிலை பேசுவதுண்டு என்று சிலர் பல்வேறு காலகட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். அதில் எது எவ்வளவு நிஜம், எவ்வளவு கற்பனை என்பதை சரியாக அறிந்தவர்கள் யாருமில்லை. ஒரு நிஜத்தை வைத்து எத்தனையோ கற்பனைக்கதைகள் புனையப்படுவது சகஜம் என்ற போதும் மைத்ரேயன் சொன்னதை அக்‌ஷயால் கற்பனையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் இது வரை அந்தச் சிறுவனிடம் அவன் பொய், பாசாங்கு, கற்பனை ஆகியவற்றை இம்மியளவும் பார்த்திருக்கவில்லை.

“என்ன பேசியது?மைத்ரேயனிடம் அவன் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“நான் உத்தேசித்திருக்கிற இடத்திற்குப் போக வேண்டாம், இப்போதைக்கு மடாலயத்தை விட்டு வெளியே போவது ஆபத்து என்று சொல்கிறதுமைத்ரேயனும் தாழ்ந்த குரலிலேயே தெரிவித்தான்.

அக்‌ஷய் திகைத்தான். மைத்ரேயனிடம் கேட்டான். “வேறென்ன சொல்லியது?

“வேறெதுவும் சொல்லவில்லை

“என்ன செய்யலாம்?அக்‌ஷய் கேட்டான்.

“நீங்கள் சொல்கிறபடி செய்யலாம்என்று அவன் சொன்னான். 

மற்றவர்களுடன் சேர்ந்து மேல் தளங்களுக்குப் போக ஆரம்பித்திருந்த அவர்கள் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. அக்‌ஷய் அதி தீவிர சிந்தனையில் இருந்தான். ஆனால் மைத்ரேயன் எந்த யோசனையும் செய்தது போல் தெரியவில்லை. உன்னிடம் சொல்லியாகி விட்டது, இனி என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பு உன்னுடையது என்பது போல் இருந்தான்.

ஐந்தாவது தளத்திற்கு அவர்கள் சென்ற போது அவர்களைத் தவிர ஏழெட்டு பேர் தான் இருந்தார்கள். எல்லோரும் ஒவ்வொரு இடத்தில் நின்று கொண்டு வெளியே தெரிந்த பேரழகுக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அஸ்தமன சூரியன் தூரத்து மலை முகடுகளில் உறைந்திருக்கும் பனியை தங்கமாக்கிக் கொண்டிருந்தான். மைத்ரேயன் அந்தக் காட்சியில் லயித்திருந்தான்.

மிக அழகான காட்சியாக இருந்த போதும் அதை ரசிக்கும் மனநிலையில் அக்‌ஷய் இருக்கவில்லை. அடுத்தது என்ன என்கிற யோசனை தான் அவன் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அந்தச் சிலையின் எச்சரிக்கையை அவன் அலட்சியம் செய்ய விரும்பவில்லை. இப்போதைக்கு இந்த ஐந்தாவது தளத்திலேயே ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று தோன்றியது. அதை மைத்ரேயனிடம் சொன்னான். மைத்ரேயன் அந்தக் காட்சியில் இருந்து கண் எடுக்காமல் தலையசைத்தான்.

மைத்ரேயன் இருக்கின்ற இடம் எதுவாக இருந்தாலும் பாக்கின்ற இடங்கள் ரம்மியமான, அழகான இடங்களாகவே இருப்பதை அக்‌ஷய் கவனித்தான். இருட்ட ஆரம்பித்து விட்டதால் அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் இறங்க ஆரம்பித்தார்கள். இருட்டிய பிறகு அந்த அழகிய காட்சி மறைந்து விடுமே அப்போது என்ன செய்வான் இவன் என்று பார்ப்போம் என்று அக்‌ஷய் எண்ணினான்.

இருட்டி விட்டது. அப்போது மைத்ரேயன் பார்வை மின்ன ஆரம்பித்த நட்சத்திரங்களில் இருந்தது. இப்போது நன்றாகக் குளிரவும் ஆரம்பித்தது. மைத்ரேயனின் தாய் கொடுத்த சால்வையை அவன் மீது போர்த்திக் கொண்டே அக்‌ஷய் நினைத்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் ரசிக்க உலகில் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது என்பதை இவன் உணர்த்துகிறானோ? 

அக்‌ஷய்க்கு அவன் வாயைக் கிளறத் தோன்றியது. “போக இடம் கூட இல்லாத இந்த நேரத்திலும் அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க உன்னால் எப்படி முடிகிறது?

“நீங்கள் இருக்கையில் நான் கவலைப்பட என்ன இருக்கிறது?யோசிக்காமல் வந்தது பதில். அந்த பூரண நம்பிக்கையில் அக்‌ஷய் நெகிழ்ந்து போனான்.

“உனக்கு நான் இருக்கிறேன். அதனால் தைரியமாக இருக்கிறாய். எனக்கு?என்று அக்‌ஷய் விளையாட்டாய் கேட்டான்.

மைத்ரேயன் அவன் பக்கம் திரும்பினான். “நீங்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர் என்று நினைத்தேன்

அக்‌ஷய் சிரித்து விட்டான். அதிகம் பேசாவிட்டாலும், பேசுவதில் பையன் சாமர்த்தியமாகத் தான் இருக்கிறான். அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான். நீ கடவுளை நம்புகிறாயா?என்று மெல்லக் கேட்டான்.

மைத்ரேயன் பதில் சொல்லவில்லை. இந்தக் கேள்விக்கு கௌதம புத்தரும் பதில் சொல்லி இருக்கவில்லை என்று அவன் படித்திருக்கிறான். இந்த அவதாரத்திலும் பதில் சொல்லும் அபிப்பிராயம் இல்லை போலத் தெரிகிறது... அந்தக் கேள்வியை மீண்டும் வற்புறுத்தி அக்‌ஷய் கேட்கவில்லை.

அவர்கள் இருவரும் ஒரு மறைவான இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த தளத்தில் கும்மிருட்டு நிலவியது. அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தும் சாளரம் வழியாக ஆகாயத்தைப் பார்க்க முடிந்தது. நட்சத்திரங்களை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் மைத்ரேயன் அவன் மடியில் உறங்கிப் போனான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் மனம் லேசாகியது.  அவனுக்கும் உறக்கம் கண்களை அழுத்தியது. ஆனால் அக்‌ஷயால் உறங்க முடியவில்லை. எந்நேரமும் யாரும் வரலாம்.....

அவன் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவில் யாரோ வரும் காலடி ஓசை மெலிதாகக் கேட்டது. கும்மிருட்டை ஊடுருவி விளக்கொளியும் தெரிய ஆரம்பித்தது. விளக்கை எடுத்துக் கொண்டு யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள். அக்‌ஷய் உஷாரானான். மெல்ல  மைத்ரேயனைத் தட்டி எழுப்பினான். மைத்ரேயன் எழுந்து என்ன என்பது போல அவனைப் பார்த்தான். அக்‌ஷய் உதட்டில் விரலை வைத்து சத்தமில்லாமல் இரு என்று சைகை செய்து விட்டு எழுந்து நின்றான்.

(தொடரும்)
என்.கணேசன்
  

9 comments:

  1. Please change in the last but 2 sentence "mella Mythrayannaith thatti eluppinan" .

    ReplyDelete
  2. சுந்தர்April 30, 2015 at 6:53 PM

    ஒரு வாரம் காத்திருந்து படித்தாலும் படித்து முடிக்கையில் கிடைக்கும் இன்பமே தனி. மறுபடி காத்திருக்கிறோம். அருமையாகச் செல்கிறது.

    ReplyDelete
  3. சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, அழகு நடை தவிர என்னை உங்கள் நாவலில் மிகவும் கவர்ந்த அம்சம் அங்கங்கே நாசுக்காக சொல்லப்படும் வாழ்வியல் விடயங்கள். மாலை ஆகாயத்தை ரசிக்கும் மைத்ரேயன் இருட்டினால் என்ன செய்வான் என்று அக்‌ஷய் எதிர்பார்ப்பதும் இருட்டியவுடன் விண்மீன்களை மைத்ரேயன் ரசிக்க ஆரம்பிப்பதும் அற்புதமான காட்சியும் பாடமும். நிறைய எழுதுங்கள் கணேசன். இது போன்ற எழுத்துக்கள் இப்போது அபூர்வமாகி வருகிறது. ஆசிர்வாதம்.

    ReplyDelete
  4. நண்பரே, "என்னேரமும்" என்பதை "எந்நேரமும் யாரும் வரலாம்"என்று மாற்றிவிடுங்கள். உங்கள் எழுத்துக்களில் ஒற்றுப்பிழைகள் கூட இதுவரை என் கண்ணில் பட்டதில்லை. :) வழக்கம்போல் கதை அருமை. சலனமற்ற நீரோடை போன்ற உங்கள் எழுத்து நடையிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அடுத்த வியாழனுக்காகக் காத்திருக்கிறேன். அன்புடன், உதயபாஸ்கர்

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

      Delete
  5. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. அருமை கணேசன். ஆவலுடன் தொடர்கிறோம். நீங்கள் உண்மையிலேயே எங்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்!

    ReplyDelete
  7. நான் தங்களுடைய எழுத்தை கடந்த இரண்டு வருடங்களாக படித்து வருகிறேன் . அற்புதமான நடை, கருத்துக்கள்,சலிப்படைய செய்யாத எழுத்து அனைத்தும் சிறப்பாக உள்ளன. தங்களுடைய இப்பயணம் மெம்மேலும் உயர்ந்து சிகரத்தை அடைய வாழ்த்துக்கள் .

    இந்நாவலின் முடிவிலோ அல்லது இடையிலோ புத்தரின் கேள்வி பதில் மாதிரியான உரையாடல் இருக்கும் படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறன். தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete