சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 23, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 43


 மைத்ரேயன் அளவு யாருமே சம்யே மடாலயத்தின் கோங்காங் மண்டபத்தில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டி சொன்ன துர்த்தேவதைத் தாக்குதல் கோணம் பயணிகளை ஓரளவு பாதித்திருந்தது. அந்த ஆள் அப்படி விழுந்த விதத்தை விட அந்த முகத்தில் தெரிந்த பீதி சுற்றுலா வழிகாட்டியின் அனுமானத்தை ஊர்ஜிதப்படுத்தியது போல் இருந்தது. சுற்றுலா வழிகாட்டிக்கு அது திருப்தியாக இருந்தது. இனி வரும் நாட்களில் புதியதாக வரும் பயணிகளிடம் இதையும் அவன் சொல்லப் போகிறான். நேரடியாக அவன் முன்னாலேயே நடந்த அந்த நிகழ்ச்சிக்கு வேறு எந்த சுற்றுலா வழிகாட்டியும் சாட்சி இல்லை. சுவாரசியத்திற்குச் சிலதைக் கூட்டியும் சொல்லலாம் என்று அவன் எண்ணிக் கொண்டான். அந்த கழுத்து திருகியவனைப் புகைப்படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அதையும் மற்றவர்களுக்குக் காட்டியிருக்கலாம் என்று திடீர் என்று நினைவு வந்து அப்படி செய்யாததற்காக தன்னையே நொந்து கொண்டான். ஆனால் அவனைப் புகைப்படம் எடுக்காமல் இருந்ததால் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையை அந்த சுற்றுலா வழிகாட்டி அறிந்திருக்கவில்லை.

இந்த மடாலயத்தில் தீய சக்திகளைக் கட்டிப் போட்டிருக்கும் இடத்தைப் பார்த்தோம். இந்த சக்திகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் மாதிரியான ஒரு சம்பவத்தையும் பார்த்தோம். உங்களில் பலரும் பயந்தும் போயிருக்கிறீர்கள். ஆனால் பயம் தேவை இல்லை. காக்கும் சக்திகள் இன்னமும் உறைந்திருக்கும் இடமும் மூன்றாவது தளத்தில் இருக்கின்றது. அங்கே சென்று வணங்கினால் உங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். அங்கே போகும் முன் இரண்டாம் தளத்தில் புத்தபிக்குகள் செய்யும் கலைப்பொருள்களைப் பார்த்து விட்டுப் போவோம் வாருங்கள்”  என்று கூறி விட்டு அவன் நடக்க பயணிகளும் பின் தொடர்ந்தார்கள். கூட்டத்தோடு அக்‌ஷயும் மைத்ரேயனை அழைத்துக் கொண்டு நடந்தான். பயணிகளுக்கு மத்தியில் செல்வதே பாதுகாப்பு என்று அவனுக்குத் தோன்றியது.

இரண்டாம் தளத்தில் சிறிது நேரம் இருந்தார்கள். அங்கு சில புத்த பிக்குகள் கலைவேலைபாட்டுப் பொருள்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்வதைச் சிலர் ஆர்வமாகப் பார்த்தார்கள். அடுத்துச் செல்ல வேண்டி இருந்த மூன்றாவது தளத்திற்குப் போகப் பெரிய வரிசை இருந்தது.

இந்த மூன்றாவது தளத்தில் மட்டும் ஏன் கூட்டம் அதிகம் இருக்கிறது, பெரிய வரிசை இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மூன்றாவது தளத்தில் தலாய் லாமாவின் தங்குமிடம் இருக்கிறது. அங்கு அவரது படுக்கை அறையில் இப்போதும் பத்மசாம்பவாவின் தலைமுடியும்,  நடைதடியும் இருக்கின்றன. தாரா தேவதையின் சிலை ஒன்றும் இருக்கிறது. அந்தச் சிலை சில நேரங்களில் பேசவும் செய்கிறது என்று சொல்கிறார்கள். அங்கு சாந்தரக்‌ஷிதாவின் மண்டை ஓடும் இருக்கிறது. இந்தப் புனிதச் சின்னங்களைத் தரிசிப்பதை ஒவ்வொரு திபெத்திய பௌத்தனும் பாக்கியமாகக் கருதுகிறான். தீய சக்திகளிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் காக்கும் சக்தி இந்தப் புனிதச் சின்னங்களுக்கு இருக்கிறது என்று நம்பி அங்கே பிரார்த்தித்துக் கொண்டு அவர்கள் அதிக நேரம் நிற்பது தான் இத்தனை கூட்டத்துக்குக் காரணம்என்று சொல்லி விட்டு வரிசையில் அவன் நிற்க அவன் பின் வந்தவர்கள் அனைவரும் நின்றார்கள்.

வரிசையில் மத்தியில் தனக்கு முன் மைத்ரேயனை நிற்க வைத்து விட்டு நின்ற அக்‌ஷய் முழு கவனத்துடன் இருந்தான். எந்த நேரத்திலும் எதிரிகளில் யாராவது வந்து விடலாம் என்று அவன் எதிர்பார்த்தான். தேவையில்லாமல் திடீர் என்று யாராவது அந்த நேரத்தில் வந்தால் அவர்களும் மாராவின் ஆளின் நிலைமையையே அடைய நேரிடும். ஆனால் மாராவின் முதல் ஆள் விழப்போன போது தாங்கிப் பிடித்ததாக சொன்ன கதையையே இன்னொரு முறை சொன்னால் அதில் நம்பகத்தன்மை இருக்காது என்பதால் தர்மசங்கடமான நிலையில் அக்‌ஷய் இருந்தான். ஆனால்  நல்ல வேளையாக யாரும் வரவில்லை. வரிசை மிக நிதானமாகவே ஊர்ந்தது.

வரிசையில் போய்க் கொண்டிருக்கையில் அக்‌ஷய் நினைத்தான். ‘எப்போதோ இறந்து போன புத்தமத குருமார்களின் தலைமுடியும், கைத்தடியும் மண்டை ஓடும் புனிதச்சின்னங்கள் என்றால் புத்தரின் மறு அவதாரம் என்று சொல்லப்படுகிற உயிரோடு உள்ள மைத்ரேயனை என்னவென்று சொல்வது? இந்த மைத்ரேயன் இவர்களுக்குக் கடவுளே அல்லவா? அந்தக் கடவுள் இப்போது அவனுக்கு முன் வரிசையில் சென்று கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. அந்தக் கடவுளுக்கு வரிசையில் செல்வதில் எந்த சங்கோஜமும் இல்லை.... அக்‌ஷய் புன்னகைத்தான்.

தலாய் லாமாவின் படுக்கை அறையில் இரும்புக்கம்பிகளின் தடுப்பிற்குப் பின்னால் கண்ணாடிப் பேழையில் பத்மசாம்பவாவின் கைத்தடி, தலைமுடி, தாரா தேவதையின் சிலை மற்றும் சில பொருள்கள் இருந்தன. அக்‌ஷய் அங்கே ஒரு சக்தி மையத்தை உணர்ந்தான். ஏதோ பூர்வ ஜென்மத்தில் இருந்து தொடர்பு இருக்கிற சக்தி அது.... ஒரு கணம் அவனுக்கு சிலிர்த்தது. அவனை அறியாமல் கைகூப்பி வணங்கினான். அக்‌ஷய் மற்றவர்களைக் கவனித்தான். அவனைப் போலவே அந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட எல்லோருமே பிரார்த்தனை சைகைகளில் தான் இருந்தார்கள்- மைத்ரேயன் ஒருவனைத் தவிர. ஆனால் மைத்ரேயன் கூட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கா விட்டாலும் தாரா தேவதை சிலையைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சற்று வினோதமான முகபாவனையுடன் தான் நின்றிருந்தான்.

அக்‌ஷய் என்ன என்பது போல் அவன் தோளைத் தொட்டான். அவனை ஒரு கணம் பார்த்து விட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் மைத்ரேயன் மறுபடி அந்த தாரா சிலையைப் பார்த்தான். அக்‌ஷயும் அந்த தாரா சிலையைக் கூர்ந்து பார்த்தான். அவனுக்கு அந்தச்சிலை சாதாரண சிலை போலத் தான் தெரிந்தது. ஆனால் அந்தச் சிலையை மைத்ரேயன் சிலையைப் பார்ப்பது போலப் பார்க்கவில்லை. நேரடியாக ஒரு நபரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

மடாலய ஊழியர் ஒருவரின் குரல் கேட்டது. தயவு செய்து நகருங்கள். உங்களுக்குப் பின்னால் பல பேர் நிற்கிறார்கள். அவர்களும் இருட்டுவதற்குள் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும்…”

அவர்கள் மெல்ல நகர ஆரம்பித்தார்கள். மைத்ரேயன் அந்தச் சிலையைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டு நகர்ந்தான். அக்‌ஷய் திகைப்புடன் அந்தச் சிலையைப் பார்த்து விட்டு மைத்ரேயனைத் தொடர்ந்தான். ஆனால் மற்றவர்கள் முன்னால் பேசுவது உசிதம் அல்ல என்று அவன் மௌனமாய் இருந்தான்.

சுற்றுலா வழிகாட்டி சொன்னான். “இனியும் மூன்று தளங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த தளங்களில் சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சம்யே மடாலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளின் பிரம்மாண்டத்தை பல கோணங்களில் நீங்கள் பார்த்து மகிழலாம். நான் விடைபெறுகிறேன்.....

அவனுடன் வந்த பயணிகள் அவனுக்குப் பணம் கொடுத்தார்கள். அக்‌ஷயும் தந்தான். சுற்றுலா வழிகாட்டி நன்றி தெரிவித்து விட்டுப் போய் விட்டான். பயணிகளில் சிலர் களைத்துப் போய் அவனுடனேயே கிளம்பி விட்டார்கள். மற்றவர்கள் பிரிந்து ஓரிருவர் அல்லது மூவராய் மேல் தளங்களுக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் வேறு பயணிகளும் வர ஆரம்பித்தார்கள்.

அகஷய் எச்சரிக்கையுடன் மைத்ரேயனை அழைத்துக் கொண்டு மேல் தளத்திற்கு நடக்க ஆரம்பித்தான். போகும் போது தாழ்ந்த குரலில் கேட்டான். “ஏன் அந்தச் சிலையை அப்படிப் பார்த்தாய்?

அந்தச் சிலை பேசுகிறது

லாஸா விமான நிலையத்தில் தன் விமானத்திற்காக மாரா காத்துக் கொண்டிருந்தான். இப்போது பார்க்க செல்வந்தனாக நவநாகரீக உடைகளில் காட்சி அளித்த அவனை இமாலய மலைக்குகையில் இடுப்பில் கருப்பாடை மட்டும் அணிந்த நிலையில் பார்த்ததாகச் சொன்னால் அவனை நன்கு அறியாத  யாருக்குமே நம்பக் கஷ்டமாகத் தான் இருக்கும். அவன் கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கவனம் மட்டும் அந்தப் பத்திரிக்கையில் இல்லை. சுற்றிலும் இருந்த சீன உளவுத் துறையினரின் நடவடிக்கைகளில் தான் அவன் கவனம் இருந்தது. அவன் சில நாட்களுக்கு முன் திபெத்தினுள் நுழைந்த போது இந்த அளவு அவர்கள் கெடுபிடி இருக்கவில்லை. இப்போது மைத்ரேயனையும் அந்தப் பாதுகாவலனையும் பிடிக்க லீ க்யாங்கின் ஆட்கள் மும்முரமாக இருப்பது தெரிந்தது.  மைத்ரேயனும் அந்தப் பாதுகாவலனும் அவனுடைய ஆளிடம் இருந்து சம்யே மடாலயத்தில் தப்பித்தாலும் கண்டிப்பாக விமானம் மூலமாக திபெத்திலிருந்து தப்பிக்க முடியாது.....

தன்னுடைய ஆளிடம் இருந்து இது வரை போன் எதுவும் வராதது மாராவுக்கு நெருடலாக இருந்தது. மைத்ரேயன் கதை முடிந்தது, அல்லது மைத்ரேயனைக் கொல்ல முடியவில்லை என்ற இரு தகவல்களில் ஒன்றைப் போன் செய்து சொல்வதில் ஏன் இவ்வளவு தாமதம்?

அவன் அலைபேசி இசைத்தது. அவனாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவனாகப் அலைபேசியைக் கையில் எடுத்தவன் அலைபேசியில் தெரிந்த எண்ணைப் பார்த்து துணுக்குற்றான். இந்த எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்றால் வரும் தகவல் நல்ல தகவல் அல்ல!

பேசியவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “பேசலாமாஎன்று மட்டும் கேட்டான். மாரா சொன்னான். “சொல்

“நம் ஆள் கழுத்து திருகி விழுந்து கிடக்கிறான். அவனைப் பரிசோதித்த அனுபவமிக்க பிக்கு அவனை நவீன மருத்துவத்தால் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார்

என்ன ஆயிற்று?

“சரியாகத் தெரியவில்லை. இவன் மயங்கிக் கீழே விழப்போன போது மைத்ரேயனுடன் வந்தவன் இவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் என்று அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுடன் நின்று சிலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இவன் விழப்போன போது ஓடிச்சென்று பிடித்திருக்கா விட்டால் இவன் எலும்பு முறிந்திருக்கும் என்று சொல்கிறார்கள். இவன் துணியிலேயே அவன் விஷ ஊசியையும் சொருகி விட்டிருக்கிறான்....

“அவன் முகத்தையும் கழுத்தையும் எனக்குப் புகைப்படம் எடுத்து உடனடியாக அனுப்பி வைஎன்று மாரன் சொல்ல இரண்டே நிமிடங்களில் இரண்டு புகைப்படங்கள் மாராவின் அலைபேசியில் வந்து சேர்ந்தன. அந்த முகத்தில் தெரிந்த பீதி, வலி இரண்டையும் மாரா இது வரை அந்த ஆளிடம் பார்த்ததில்லை. கழுத்துப் பகுதியை மாரா நன்றாக ஆராய்ந்தான். கழுத்துப் பகுதியின் மிக நுட்பமான நரம்பை மர்ம முடிச்சு போட்டு விட்டிருக்கிறான் மைத்ரேயனின் பாதுகாவலன். அந்தப் பயணிகள் நினைத்தது போல அவன் மயங்கி விழப் போன போது அந்தப் பாதுகாவலன் பிடித்துக் கொள்ளவில்லை. மாறாக தாக்கி விட்டு அவன் மயங்கி விடக்கூடாது என்பதில் அந்தப் பாதுகாவலன் கவனமாக இருந்திருக்கிறான். அந்த இடத்தின் வர்ம மையங்கள் ஒருவரைக் கோமாவில் ஆழ்த்தக்கூடியவை. அப்படி அவன் நினைவிழந்து விடக்கூடாது, அந்த வலியை உணர வேண்டும் என்று தான் இப்படிச் செய்திருக்கிறான். இதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிப்பது என்பது மிக நல்ல தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சாத்தியமானதல்ல. மைத்ரேயனின் பாதுகாவலன் தன்னைக் கச்சிதமாகவே அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறான்....

“இது எங்கே நடந்தது?பயமுறுத்தும் அமைதியுடன் மாரா கேட்டான்.

தயக்கத்துடன் வந்தது பதில். “கோங்காங் மண்டபத்தில், நாங்கள் இப்போது பூஜைகள் நடத்திக் கொண்டிருக்கும் அந்தச் சிலையின் முன்னிலையில் தான்.....

அந்தத் தகவல் மாராவை ஓங்கி அறைந்தது.

“இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

“இந்த மடாலயத்திற்குள் தான் இருக்கிறார்கள்

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Excellent as usual. we feel the tension.

    ReplyDelete
  2. சிலை (படம்) பேசுவது போல்தான் இருக்கிறது !!!

    ReplyDelete
  3. சுந்தர்April 24, 2015 at 7:03 PM

    ஆழத்திலும் கதைப்பின்னலிலும் இந்த நாவல் உங்களுடைய மாஸ்டர் பீஸாக இருக்கும் போல தோணுது சார். பிரமாதம்.

    ReplyDelete
  4. Excellent narration sir.

    ReplyDelete