என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, April 16, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 42


க்‌ஷய் கோங்காங் மண்டபத்தில் இருந்த ஒரு வினோத துர்த்தேவதை சிலை முன் மந்திரத்தால் கட்டுண்டவன் போல நின்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு சக்தி அவனை அந்த இடத்தில் சிலையாக்கி விட்டிருந்தது போல் இருந்தது. அந்த சிலையின் கண்கள், அவர்கள் ஜீப்பில் வந்த திபெத்தியக் கிழவர் கண்களைப் போலவே இருந்ததாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. அந்தக் கிழவரின் கண்களில் தெரிந்த அதே வன்மம் அந்தச் சிலையின் கண்களில் தெரிந்ததே அதற்குக் காரணமாக இருக்கலாம்.அவனை விட்டு விலகி மைத்ரேயன் சில அடிகள் நகர்ந்ததை அக்‌ஷய் உணர்ந்தான். தானும் அவனுடனேயே நகர நினைத்தான். ஆனால் அந்தச் சிலை முன் இன்னொரு சிலையாக மாறி விட்டிருந்த அவனால் நகர முடியவில்லை. திடீரென்று யாரோ வேகமாக மைத்ரேயனை நெருங்குவதை அவனால் உணர முடிந்தது. அவனுடைய நாக மச்சத்தில் ஒரு சிலிர்ப்பும் வெப்பமும் ஒரே நேரத்தில் உருவானது. மைத்ரேயனின் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறதோ அவன் உள்ளுணர்வு? அக்‌ஷய் சகல பலத்தையும் திரட்டி தன்னைக் கட்டிப் போட்டிருந்த ஒரு சக்தியை முறியடித்து விட்டு வேகமாக இயங்கினான்.மாராவின் ஆள் அந்த நேரத்தில் மைத்ரேயனை நெருங்கி விட்டிருந்தான். அவன் கையில் அந்த விஷ ஊசி தயாராக வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மைத்ரேயனின் கதையை முடிப்பது கச்சிதமான முடிவு என்று அவன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தான். எந்த இடத்தில் தீயசக்திகள் கட்டிப் போடப்பட்டிருந்தனவோ அந்த இடத்தில் புத்தரின் மறு அவதாரம் முடிவது அந்த சக்திகளின் விடுதலை பெற்றதற்கு பலமான ஆதாரமாக இருக்கட்டும்.அந்த எண்ணமே அவனுக்கு கிளர்ச்சி ஊட்டியது. அந்தக் கணத்தில் தான் அவனும் மைத்ரேயனின் பாதுகாவலன் திரும்புவதைக் கவனித்தான். அவன் தன்னை நெருங்குவதற்குள் மைத்ரேயன் உடலில் அந்த ஊசியைக் குத்தி விட வேண்டும் என்று எண்ணினான். அந்த எண்ணம் எழுந்து முடிவதற்குள் அந்தப் பாதுகாவலன் அவனருகில் இருந்து அவன் கழுத்தைத் தொட்டான். உயிரே போவது போல் ஒரு வலியை அவன் உணர்ந்தான். அது மட்டுமல்ல, அவன் தன் கழுத்தைத் திருப்ப முடியவில்லை. அப்படியே கீழே விழப்போன அவனை அக்‌ஷய் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அக்‌ஷயின் கை கவனமாக அந்த ஆளின் கையில் இருந்த விஷ ஊசியை அவனது ஆடையிலேயே சொருகி விட்டது.


புத்தபிக்கு உடையில் இருந்த அக்‌ஷய் பின் கனிவான குரலில் அன்பான அக்கறை தொனியில் கேட்டான். “என்ன ஆயிற்று. தலை சுற்றுகிறதா?”


இப்போது எல்லோரும் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். “என்ன ஆயிற்று?” என்று கூட்டத்திலிருந்து இரண்டு குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன.


“தெரியவில்லை. இவர் மயங்கி விழப் போவதைக் கவனித்து நான் வேகமாக வந்து தாங்கிப் பிடித்தேன்” என்று அக்‌ஷய் கனிவு சற்றும் குறையாத குரலில் சொல்ல மாராவின் ஆள் பெரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். ஏதோ சொல்ல அவன் வாயைத் திறந்தான். தொண்டை தான் வலித்ததே ஒழிய வார்த்தைகள் வரவில்லை. யாரிவன், என்ன செய்தான்? என்ற கேள்வி மனதுக்குள் பிரம்மாண்டமாய் எழ அவன் கழுத்தைச் சரி செய்து கொள்ள கடுமையாக முயன்றான். தாங்க முடியாத வலி தான் அவனைப் பாடாய் படுத்தியது. அவனால் கழுத்தை இம்மியும் நகர்த்த முடியவில்லை. அவன் உடலையாவது நிமிர்த்தி அக்‌ஷய் பிடியிலிருந்து விடுபட்டுக் கொள்ள நினைத்தான். அதுவும் முடியாமல் போன போது தான் தன் நிலைமையின் பூதாகரத்தை அவன் உணர்ந்தான். கையில் இருந்த விஷ ஊசியை அவன் ஆடையில் அந்த பாதுகாவலன் சொருகி இருந்ததையும் விழியோரத்தில் அப்போது தான் கவனித்த அவன் மனதில் இது வரை அறிந்திராத அச்சம் விஸ்வரூபம் எடுத்து அவன் முகத்திலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.


“அவரைக் கீழே படுக்க வையுங்கள்” கூட்டத்தில் யாரோ சொன்னார்கள். அக்‌ஷய் அவனை பத்திரமாக தரையில் படுக்க வைத்தான்.


“மருத்துவர் இந்த மடாலயத்தில் இருக்கிறாரா?” என்று சுற்றுலா வழிகாட்டியிடம் அக்‌ஷய் கேட்க சுற்றுலா வழிகாட்டி மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னுக்கு வந்தான். அக்‌ஷய் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் மாராவின் ஆளின் முகத்தில் தெரிந்த பீதியைக் கவனித்து விட்டு கண்களைச் சுருக்கிக் கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான்.


”இவரை இந்த மண்டபத்தில் இருக்கும் ஏதோ துர்த்தேவதை தான் தாக்கி இருக்க வேண்டும்” என்று ஆழ்ந்த யோசனையுடன் அவன் சொன்ன போது அவர்களையும் அறியாமல் சில பயணிகள் இரண்டடி பின்வாங்கினார்கள்.


சுற்றுலா வழிகாட்டி மாராவின் ஆளையும் ஒரு காட்சிப் பொருளாக்கித் தன் கருத்தைத் தாழ்ந்த குரலில் சொன்னான். “இந்த மடாலயத்தில் துர்த்தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற பேச்சு சில காலமாக அடிபடுகிறது. அது உண்மை என்பதையே இவர் நிலைமை காட்டுகிறது.... இவர் யார்? இவர் கூட யாராவது வந்திருக்கிறீர்களா?”


யாரும் எதுவும் சொல்லவில்லை. அக்‌ஷய் தான் மறுபடியும் கேட்டான். “மருத்துவர் யாராவது இந்த மடாலயத்தில் இருக்கிறார்களா?”


“மேலை நாட்டுப் படிப்பு படித்த மருத்துவர்கள் யாரும் இங்கில்லை. ஆனால் இந்த மடாலயத்தில் பழங்கால மருத்துவம் அறிந்த பிக்குகள் இருக்கிறார்கள்” என்று அவன் சொல்லச் சொல்ல மடாலய பிக்கு ஒருவர் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு வந்தார். ”என்ன ஆயிற்று?””இந்த மண்டபத்தில் இருந்த துர்த்தேவதை ஒன்று அவரைத் தாக்கி விட்டது போல இருக்கிறது.” சுற்றுலா வழிகாட்டி ஆணித்தரமாய் சொல்ல அந்த மடாலய பிக்கு “என்ன உளறுகிறீர்கள்?” என்று கேட்டார்.


“பின் இவருக்கு என்ன ஆயிற்று என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்” என்று சுற்றுலா வழிகாட்டி சவால் விட்டான்.


கழுத்து ஒரு பக்கமாக திருகி பீதியுடன் கண்களை மட்டும் நகர்த்த முடிந்த நிலையில் இருந்த அந்த ஆளை பிக்கு பார்த்தார். அவருக்கு உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.


பின் மெல்ல சொன்னார். “இந்த ஆள் எங்கள் மடாலய ஊழியர் தான். எத்தனையோ தடவை இந்த மண்டபத்தில் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒன்றும் ஆனதில்லை....” அவர் கையை உயர்த்தி சைகை செய்ய இரண்டு ஊழியர்கள் விரைந்து வந்தார்கள். மாராவின் ஆளை இருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள். அக்‌ஷயையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மாராவின் ஆளின் கண்கள் மைத்ரேயனையும் தேடின. ஆனால் மைத்ரேயன் அவன் பார்வைக்கு அகப்படவில்லை.


மடாலய ஊழியர்கள் மாராவின் ஆளைத் தூக்கிக் கொண்டு அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறிய பின் தான் அக்‌ஷயும் மைத்ரேயனைத் தேடினான். சற்று தள்ளி இருந்த சாளரத்தின் வழியே மைத்ரேயன் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு முன் மரணம் அவனை அணுகவிருந்தது என்கிற உண்மை அவனுக்கு உறைத்திருக்குமா என்பது அக்‌ஷய்க்கு விளங்கவில்லை. அது உறைத்திருக்கா விட்டாலும் எவனோ ஒருவன் கழுத்து திருகி விழுந்தது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ளும் சாதாரண ஆர்வமாவது அவனிடம் எழுந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் எந்த பதட்டமும் இல்லாமல், எந்தக் கவலையும் இல்லாமல் ஏதோ ஒரு உலகில் அமைதியாய் சஞ்சரிக்க முடிந்த மைத்ரேயனைப் பார்க்கையில் ஒரு கணம் அக்‌ஷய்க்குப் பொறாமையாக இருந்தது. இந்த மனநிலை வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.


ஆனால் அந்த ஆசைப்படவும் அவனுக்கு அதிக நேர அவகாசம் இருக்கவில்லை. இந்த மடாலயத்தில் இந்தக் கொலையாளி தனியாக இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மை திடீரென்று உறைத்தது. கண்டிப்பாக இவனது கூட்டாளிகள் இருப்பார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது....அக்‌ஷய் கை தானாக மைத்ரேயனின் பிஞ்சுக் கையைப் பற்றியது. மைத்ரேயனின் பார்வை அவன் பக்கம் திரும்பியது. அக்‌ஷய் அவன் கையை இறுக்கமாகப் பிடித்தபடி தாழ்ந்த குரலில் சொன்னான். “என்னுடனேயே இரு”. மைத்ரேயன் தலையசைத்தான். தொடர்ந்து அக்‌ஷய் சற்று கடுமையாகச் சொன்னான். “சிறிது நேரத்திற்கு முன்னால் நீ என்னை விட்டுத் தனியாக தள்ளிப் போனாயே. அது போல எல்லாம் நீ இனிமேல் செய்யக் கூடாது”. அவன் கடுமையும் மைத்ரேயனைப் பாதித்தது போலத் தெரியவில்லை. மறுபடியும் தலையசைத்தான்.அக்‌ஷயிற்கு அந்தச் சிறுவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவன் தாயின் கண்ணீரும் அந்த நேரமாகப் பார்த்து நினைவுக்கு வர அவன் தன் கடுமையான பேச்சுக்காக வருத்தப்பட்டான். ஓரிடத்தில் தொடர்ந்து நிற்க முடியாத இந்த விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் இந்தச் சிறுவனிடம் கோபித்துக் கொள்வது நியாயம் அல்ல என்று மனசாட்சி உறுத்த அக்‌ஷய் மெல்லிய குரலில் அன்பாகப் புரிய வைக்க முயன்றான். “இந்த முறை என்னால் உன்னைக் காப்பாற்ற முடிந்தது. எல்லா முறையும் அது முடியும் என்று சொல்ல முடியாதல்லவா? அதனால் தான் சொல்கிறேன்”அவனுடைய எண்ண ஓட்டங்களைப் படித்தவன் போல் மைத்ரேயன் லேசாகப் புன்னகைத்து தலையசைத்தான். எண்ணங்களைக் கூடப் படிக்க முடிந்தவனைப் போய் விளையாட்டுப் பையன் என்று உருகுகிறோமே என்று எண்ணிய அக்‌ஷய் மைத்ரேயனை மறுபடியும் கடுமையாகப் பார்க்க முயன்று தோற்றுப் போய்ப் புன்னகைத்தான்.


தே நேரத்தில் சம்யே மடாலயத்தின் இன்னொரு பகுதியில் மருத்துவ ஞானம் உள்ள ஒரு முதிய பிக்கு கழுத்து திருகி கட்டை போல் விழுந்து கிடந்த மாராவின் ஆளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்த மடாலய ஆட்கள் பதினான்கு பேரில் இருவர் மாராவின் மற்ற ஆட்கள். அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆர்வத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் போல நின்று கொண்டிருந்தார்கள். நடந்ததை எல்லாம் மாராவிடம் தெரிவிக்கும் பொறுப்பு இப்போது அவர்கள் தலையில் விழுந்திருக்கிறது. அப்படித் தெரிவிக்கும் போது தற்போதைய நிலவரத்தையும் சரியாகச் சொல்லும்படி மாரா நிர்ப்பந்திப்பான் என்பதால் முதிய பிக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அறிய படபடப்புடன் காத்திருந்தார்கள்.(தொடரும்)


என்.கணேசன்

4 comments:

  1. சரோஜினிApril 16, 2015 at 6:31 PM

    சிறப்பாகப் போகிறது இந்த நாவல். வியாழக்கிழமை வாரம் இருதடவை வராதா என்று ஏங்க வைக்கிறது இந்த கதையின் சுவாரசியம். சில இடங்களில் கதாபாத்திரங்களின் மனதிற்குள் புகுந்து அந்த உணர்வுகளை புரிய வைக்கிறீர்கள். எண்ணங்களைப் படிக்க முடிந்தவனைப் போய் விளையாட்டுப் பையன் என்று நினைத்து உருகுகிறோமே என்று கடுமையாக பார்க்கப்போய் முடியாமல் அக்‌ஷய் புன்னகைப்பது போன்ற இடம் எல்லாம் பிரமாதம். படு யதார்த்தம். மறுபடியும் சொல்கிறேன். வாரா வாரம் காத்திருந்து சில தொடர்கதையை விகடனிலும் குமுதத்திலும் படித்த பழைய காலங்கள் நினைவுக்கு வருகிறது எங்கள் கணேசன் அவர்களே.

    ReplyDelete
  2. Akshay is real hero. you portrayed well his smartness and character. excellent novel.

    ReplyDelete