என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, April 6, 2015

யோகியின் கட்டுப்பாட்டில் உடல்!


18 .மகாசக்தி மனிதர்கள் 
                                                          
ன் உடல் மீது ஒரு யோகிக்கு இருக்க முடிந்த கட்டுப்பாடு கற்பனைக்கும் எட்டாதது. யோகியால் தன் எண்ணத்திற்கேற்ப உடலின் இயல்பான செயல்முறைகளை மாற்ற முடியும். அதற்கு இது வரை பல உதாரணங்களைப் பார்த்தோம். ஆனால் உடலியல் செயல்பாடுகளை அளக்க முடிந்த விஞ்ஞானக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மற்றவர்கள் செய்ய முடிந்திராத பல அற்புதங்களை முறையாக விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தில் செய்து காட்டிய யோகிகளில் முதலாமவர் சுவாமி ராமா.

(இவர் குறித்து சுருக்கமாக ஆழ்மனதின் அற்புத சக்திகளில் எழுதி இருக்கிறேன். விரிவாக இங்கே பார்ப்போம்)


1925 ஆம் ஆண்டு வட இந்தியாவில் பிறந்த சுவாமி ராமா குழந்தையாக இருக்கும் போதே பெங்காலி பாபா என்ற துறவியால் இமயமலையில் வளர்க்கப்பட்டவர். பல சாதுக்களிடமும், துறவிகளிடமும் யோகக் கலையையும் ஆன்மிக தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்த இவர் சில வருடங்கள் திபெத்தின் உட்பகுதியில் ஒரு மகாயோகியிடம் மேலும் பல பயிற்சிகள் எடுத்து விட்டு இந்தியா திரும்பியவர். கார்வீர்பீடம் என்ற பீடத்தின் சங்கராச்சாரியராக 1949 முதல் 1952 வரை இருந்த இவர் யோக வேட்கை காரணமாக அந்த பதவியைத் துறந்து மீண்டும் இமயமலையில் இருந்த குகைகளில் யோகப்பயிற்சிகளைத் தொடர்ந்தவர். இந்திய மெய்ஞானத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரப்ப பயணம் மேற்கொண்டார்.

அப்படி அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்ட போது 1969 ஆம் ஆண்டு மின்னெசோடா (Minnesota) பகுதியில் இருந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையின் தலைமை மருத்துவரான டாக்டர் டேனியல் ஃபெர்குசன் (Dr. Daniel Ferguson) என்பவரை சந்திக்க நேர்ந்தது. அப்படி சந்திக்கையில் யோக சக்தி பற்றி பேச்சு வர யோகியால் தன் உடல் மீது தன் விருப்பத்திற்கேற்ப பல விதங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று சுவாமி ராமா சொல்ல ஏதாவது ஒன்றையாவது தனக்கு செய்து காட்டும் படி டாக்டர் டேனியல் ஃபெர்குசன் கூறினார். உடனடியாக அப்போதே சுவாமி ராமா தன் நாடித்துடிப்புகளைக் கூட்டியும் குறைத்தும் காட்டினார். மனித உடலை ஆராய்ந்து படித்து மருத்துவப் பட்டம் பெற்று அதில் அனுபவமும் பெற்றிருந்த டாக்டர் டேனியல் ஃபெர்குசனுக்கு சுவாமி ராமா செய்து காட்டியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மருத்துவ சாஸ்திரத்திற்கே புதிராக ஒரு யோகியால் இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்பதை விஞ்ஞான முறைப்படி ஆராய டாக்டர் டேனியல் ஃபெர்குசன் விரும்பினார். தன் விருப்பத்தை அவர் சுவாமி ராமாவிடம் தெரிவித்த போது சுவாமி ராமாவும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

டாக்டர் டேனியல் ஃபெர்குசன் உடனடியாக அமெரிக்காவின் தலைசிறந்த மனோசக்தி ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் ஃபௌண்டேஷனில் முன்பே உடல் மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்களைத் தொடர்பு கொண்டார். மென்னிங்கர் ஃபௌண்டேஷன் ஆராய்ச்சிக்கூடம் அந்த சமயத்தில் மற்ற ஆராய்ச்சிகளுக்காக முன்பே பதிவாகி இருந்தது. அதனால் சுவாமி ராமா அடுத்த முறை அமெரிக்கா வரும் போது ஆராய்ச்சிகளைச் செய்ய முடிவு செய்தார்கள். அதன்படி 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரம் (மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை) சுவாமி ராமாவை ஆராய்ச்சி செய்தார்கள்.

அந்த ஆராய்ச்சிகளை விரிவாக Beyond Biofeedbackஎன்ற நூலில்  Elmer & Alyce Green என்ற ஆராய்ச்சியாளர்கள் 1977 ல் வெளியிட்டுள்ளார்கள். அவற்றைப் பார்ப்போம் .


ஆறடிக்கு மேல் உயரம் கொண்ட 45 வயதுடைய சுவாமி ராமாவின் உடலை முதல் நாள் சோதித்து அவரது அப்போதைய உடல்நிலையின் அனைத்து குறிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள்.    

ஆராய்ச்சிக்கூடத்தை சற்று உயரத்தில் இருந்த இன்னொரு அறையில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிறகு அவர்கள் செய்யப்போகும் சோதனைகளுக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். சுவாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் யோக சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.

இரண்டாவது நாள் பரிசோதனைகள் ஆரம்பமாயின. ஆராய்ச்சிக்கூடத்தில் எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்களும், கண்காணிப்பு அறையில் டேல் வால்டர்ஸ் என்ற ஆராய்ச்சியாளரும் இருந்தார்கள். சுவாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது.


அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. அந்த பரிசோதனை வரைபடம் இதோ-


அந்த ஆராய்ச்சிகளின் முடிவில் உடனடியாக இதயத்துடிப்பு ஆராய்ச்சிக்கு சுவாமி ராமா தன்னை உட்படுத்திக் கொண்டார். “இப்போது என் இதயத்தின் செயல்பாட்டைக் கண்காணியுங்கள்என்று உடனடியாக தன் இதயத் துடிப்பையும் ஏற்றிக் காட்டினார். இந்த முதல் ஆராய்ச்சியில் இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை.

ஆனால் அடுத்ததாய் அவர் செய்து காட்டிய ஆராய்ச்சி அவர்களை வியப்படைய வைத்தது. இதயத்துடிப்புகளில்  மற்றும் T  என்று இருவகையான அலைகள் இருக்கின்றன. இவை இதயத்தின் பகுதிகளின் இரு விதமான செயல்பாடுகளைக் குறிப்பவை. சாதாரணமாக R அலைகள் T  அலைகளை விட உயரமாக இருக்கும். ஆனால் சுவாமி ராமா தன் உடலில்  R அலைகளை விட  T அலைகளை நீளப்படுத்திக் காட்டினார். இதயத்தின் சூட்சும அலைகளில் கூட யோகியின் ஆதிக்கம் இருந்தது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியம் கொள்ள வைத்தது இயல்பே அல்லவா?


மூன்றாவது ஆராய்ச்சியில் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்டதற்கு சுவாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து பிரமிப்பூட்டினார். இது வரை அவர்கள் அப்படியோர் அதிசயத்தை இதயத்துடிப்பு விவகாரத்தில் கண்டதில்லை. இந்த மூன்று ஆராய்ச்சிகளின் வரைபடங்கள் இதோ-இந்த ஆராய்ச்சிகள் முடிந்து உணவருந்துகையில் அடுத்ததாய் இதயத்துடிப்பையே நிறுத்திக் காட்ட முடியும் அந்த யோகி சொன்ன போது அவர்களால் நம்ப முடியவில்லை.


-என்.கணேசன்
நன்றி- தினத்தந்தி - 9.1.2015

1 comment: