என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, April 13, 2015

இதயம் நின்றும் இறக்காத யோகி!

19.மகாசக்தி மனிதர்கள்


சுவாமி ராமா இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் உட்பட சில ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறினார். ஆனால் அப்போதே அவர் உணவருந்திக் கொண்டு தான் இருந்தார். மேலும் இன்னும் ஒரு நாள் தான் ஆராய்ச்சிக்கு பாக்கி இருக்கிறது என்பதால் அது சாத்தியமாக இருக்கவில்லை. ஆனால் அவருடைய குரு ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் அதைச் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார்.


மூன்று வினாடிகளில் ஆயத்தமாகி நிமிடக்கணக்கில் இதயத்துடிப்பை நிறுத்தவல்ல அவருடைய குருவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்.


பிறகு சுவாமி  ராமா உபவாசம் இருந்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பை மறுநாளே தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் அதுவே சாதனை தான் என்று சொன்னார்கள்.


மறுநாளே அந்த ஆராய்ச்சிக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதாக சுவாமி ராமா சொன்னார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் தயங்கினார்கள். என்ன தான் யோகியானாலும் அவரே முழு ஆயத்தமாக இல்லை என்று சொல்கின்ற ஒரு நிலையில் அந்த ஆராய்ச்சி உயிருக்கே உலை வைக்கலாம் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சுவாமி ராமா இந்த ஆராய்ச்சிக்கு முழு மனதாக ஒப்புக் கொள்வதாகவும், அதன் மூலம் உயிருக்கு ஆபத்து வருமானால் மென்னிங்கர் ஃபௌண்டேஷன் அதற்கு பொறுப்பு அல்ல என்றும் கையெழுத்திட்டுத் தருவதாக உறுதியளித்தார்.   


அதனால் மூன்றாவது நாள் ஆராய்ச்சிக்கு மென்னிங்கர் ஃபௌண்டேஷன் ஆயத்தமானது. இதயத்தையே சில வினாடிகளாவது நிறுத்திக் காட்டுவதாக சுவாமி ராமா சொன்னார் என்று கேள்விப்பட்டவுடனேயே மேலும் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களாக அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் டாக்டர் ஃபெர்குசனும், டாக்டர் சார்ஜெண்டும் முக்கியமானவர்கள். அவர்கள் கண்காணிப்பறையில் அமர்ந்து கொண்டு நடப்பதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.


சுவாமி ராமா ஆராய்ச்சிக்கு முன்பு ஒரு கோரிக்கை வைத்தார். சரியான ஆயத்தம் இல்லாமல் இருப்பதால் ஆராய்ச்சியின் போது ஒரு கட்டத்தில் “போதும். அவ்வளவு தான்என்று சத்தமாகச் சொல்லுங்கள். நான் உடனே இயல்பு நிலைக்கு வந்து விடுகிறேன். ஏனென்றால் என்னை அறியாமல் தொடர்ந்து செய்து இதயத்தின் சூட்சும அலைகளை நான் பாழ்படுத்தி விட விரும்பவில்லை.


ஆராய்ச்சி ஆரம்பமானது. அந்த ஆராய்ச்சியில் 16.2 வினாடிகள் இதயத்தை நிறுத்தி ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்தார். பத்து வினாடிகளே பெரிய விஷயம் என்றவர்களுக்கு 16.2 வினாடிகள் இதயம் துடிக்காமல் இருந்தது அதிசயமாகவே தோன்றியது. அதுவும் 16.2 வது வினாடியில் போதும் அவ்வளவு தான்என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் தான் நிறுத்தினர். அந்த சொல்லைக் கேட்டவுடன் மூச்சு விட ஆரம்பித்த சுவாமி ராமா மிக விரைவில் இயல்பு நிலைக்கு வந்தார். அந்த EKG ரிகார்டிங் இதோ உங்கள் பார்வைக்கு-

இங்கு யோகியே ஆனாலும் இயல்பு நிலைக்கு மாறாகச் செல்லும் போது தகுந்த ஆயத்தங்கள் இல்லாமல் செல்லத் தயங்குவதும், அப்படியே ஆயத்தம் இல்லாமல் போகும் போதும் ஒரு எல்லையைத் தாண்டிப் போக முற்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.


சுவாமி ராமா சொன்னதில் அந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பிடிபடாத ஒரு தகவல் இருந்தது. இதயத்தின் சூட்சும அலைகளைப் பாழ்படுத்தாமல் இருக்க விரும்புவதாக அவர் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. அதைப் பற்றிக் கேட்ட போது இதயம் என்பது பெரிய சக்தி மையம். நீங்கள் பார்ப்பதும், ஆபரேஷன் செய்வதும் எல்லாம் அதன் அடர்த்தியான உருவமான உறுப்பையே. ஆனால் அதைச் சுற்றி உள்ள சூட்சும சக்திகள் அந்த உறுப்பை பாதிக்க வல்லவை. அவை பாழானால் அந்த உறுப்பே பாழாகி விடும்என்று சொன்னார்.

அவர் சொன்னது மருத்துவ ரீதியாக அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் யோகிகள் உடலின் நுட்பமான, கண்ணுக்குத் தெரியாத சக்தி அலைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தவும் அறிந்திருந்ததால் தான் அதிசயங்களை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்தார்கள். அந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நூலில் அவர் அப்படி இதயத்துடிப்பை நிறுத்தும் நிலைக்குப் போனது மட்டுமல்ல மறுபடி பழைய நிலைக்கு மீண்டு வர முடிந்ததும் அதிசயமே என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஏனென்றால் சிலருக்கு சில நிலைகளுக்குப் போய் விட முடியும் ஆனால் திரும்பி வர முடியாது.


மேலும் அவர் இதயத்துடிப்புகளின் EKG ரிகார்டிங்கில் அந்த 16.2 வினாடிக்குப் பிந்தைய பதிவுகளும் சற்று அசாதாரணமாக இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியதால் அந்த முழுக் குறிப்புகளையும் இதய சம்பந்தமான ஆராய்ச்சிகளில் அவர்களை விட சில படிகள் முன்னேறி இருந்த கான்சாஸ் யூனிவர்சிட்டி மருத்துவ மையத்திற்கு (Kansas University Medical Center) அனுப்பி வைத்தார்கள். . அதை எல்லாம் ஆராய்ந்து விட்டு அதன் தலைவரான டாக்டர் மார்வின் டுன்னே ( Dr. Marvin Dunne) கேட்டார். “இந்த ஆள் அப்புறம் என்ன ஆனார்?இப்படி இதயத்துடிப்புகள் பதிவாகி உள்ள ஆள் பிழைக்கவே வழியில்லை என்பது தான் அவர் கருத்தாக இருந்ததால் தான் அப்படி கேட்டார். அங்கு கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் சார்ஜெண்ட் சொன்னார். “வயரை எல்லாம் கழற்றி விட்டு ஒரு சொற்பொழிவுக்குக் கிளம்பிப் போய் விட்டார்” . டாக்டர் மார்வின் டுன்னேக்கு அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.

அதன் பின்னர் நாள் கணக்கில் ஆராய்ச்சிகளுக்கு ஒத்துக் கொள்வதை சுவாமி ராமா தவிர்த்தார். முதல் முறை விஞ்ஞான ஆராய்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பதை அறியவும், தன் சக்திகள் விஞ்ஞானக் கருவிகளில் எப்படி பதிவாகின்றன என்பதை அறியவும் இருந்த ஆர்வம் அந்த ஒன்றில் அறிந்து முடிந்த பின் அலுப்பு ஏற்பட்டது போலும். ஆனால் உடனடியான சவால்களை சந்திக்க அவர் என்றுமே மறுக்கவில்லை.

அவர் சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த சக்ராக்களின்  சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதை புறக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் சுவாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் என்னிடம் உள்ள பொலொராய்டு காமிராவில் இப்போதே புகைப்படம் எடுக்கிறேன். உங்களால் ஏதாவது ஒரு சக்ராவை ஒளிர வைக்க முடியுமா?"

அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.சக்ராக்கள் என்பது வெறும் கற்பனை மையங்கள் அல்ல, அவை உடலின் சக்தி மையங்களே என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துவதாகச் சொல்லலாம்.


சுவாமி ராமா செய்து காட்டிய அற்புதங்கள் இன்னும் முடியவில்லை. அடுத்த வாரம் அவற்றைப் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 23.1.2015
4 comments:

  1. ithu pontra yogi inga mattum than irukagala. matha natalium sithargal irukagala. ungal theadaluku vaalthukal.

    ReplyDelete
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete