இந்த முறை கதவைத் தட்டியது யார் என்ற சந்தேகம் மைத்ரேயனின்
வீட்டாருக்கு வரவில்லை. மைத்ரேயனை அழைத்துச் சென்ற மனிதன் எதிரிகள் எந்த
நேரத்திலும் வந்து விடலாம என்று அவர்களை எச்சரித்திருந்ததால் மூவரும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘உஷாராக இருக்க வேண்டும்’ என்று பார்வையாலேயே ஒருவருக்கு ஒருவர்
தெரிவித்துக் கொண்டார்கள். மைத்ரேயனின் மூத்த அண்ணன் கதவைத் திறந்தான்.
வாங் சாவொ இறுக்கமான முகத்துடன் உள்ளே
நுழைந்தான். நீதிபதி குற்றவாளிகளைக் கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டுப் போக
வந்தது போல் இருந்தது அவன் உள்ளே நுழைந்து பார்த்த விதம். ஒன்றுமே சொல்லாமல்,
எதுவுமே கேட்காமல் மைத்ரேயன் உள்ளே எங்காவது ஒளிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று
தன் கூர்மையான பார்வையால் ஆராய்ந்து அவன் இல்லை என்று உறுதியான பிறகு அங்கிருந்த
மூவரையும் அவன் அமைதியாக ஆராய்ந்தான். அவன் அரசு உயர்
அதிகாரி என்பதை உணர்ந்த மைத்ரேயனின் சகோதரர்கள் சற்று நெளிந்தார்கள். ஆனால்
மைத்ரேயனின் தாய் அவன் பார்வையால் பாதிக்கப்படாமல் அவனையே வெறித்துப் பார்த்தபடி
கேட்டாள். “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?”
’என்ன
சொன்னால் இந்த மரமண்டைகளுக்குப் புரியும்’ என்று யோசித்து விட்டு வாங் சாவொ சொன்னான். “ரகசியப் போலீஸ்”
அதைக் கேட்டதும் அவர்களுடைய முகபாவனை
எப்படி இருக்கிறது என்று பார்த்தான். மூவருமே ஒருவித படபடப்பில் இருந்தாலும் அதிர்ச்சி
அடைந்தது போல் தெரியவில்லை. வாங் சாவொ அந்த வீட்டில் உட்கார இடம் தேடினான்.
சுத்தமும் சுகாதாரமும் இல்லாத அந்த வீட்டில் உட்கார்வதை விட நிற்பது நல்லது என்று
அவனுக்குத் தோன்றவே உட்காரும் எண்ணத்தைக் கைவிட்டான். அரண்மனையில் அரச குமானாகப்
பிறந்த புத்தர் மறுபிறவி எடுக்கையில் இது மாதிரிக் குப்பைக்கூள வீட்டிலா பிறப்பார்
என்ற சந்தேகம் வந்தது.
திடீரென்று வாங் சாவொ மைத்ரேயனின் தாயிடம்
கேட்டான். “எங்கே உங்கள் கடைசி மகன்?”
மைத்ரேயனின் தாய் சொன்னாள். “வெளியே போனவன்
இன்னும் வரவேயில்லை”
“எப்போது போனான்?”
“நேற்று காலை பள்ளிக்கூடம் போனவன் இது வரை
வரவேயில்லை”
“போலீசில் புகார் கொடுத்திருக்கிறீர்களா?”
“இல்லை”
“ஏன்?”
“அடிக்கடி இப்படி எங்கேயாவது போய்
விடுவான். ஒன்றிரண்டு நாளில் திரும்ப வந்துவிடுவான்... நீங்கள் ஏன் அவனைப் பற்றிக்
கேட்கிறீர்கள்?”
அந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பது
அனாவசியம் என்பது போல் வாங் சாவொ மௌனமாக அவளையே பார்த்து விட்டு ”அவன் எங்கே போவான்?” என்று கேட்டான்.
மைத்ரேயனின் தாய்
சொன்னாள். “கேட்டால் தூர கை காட்டுவான். சரியாகப் பதில் சொல்ல மாட்டான்.” அவள் சொன்னது உண்மையே. ஆரம்பங்களில் அவள்
அவனிடம் எங்கே போனாய் என்று கேட்ட பொழுதெல்லாம் தூர கை காட்டி விட்டு அமைதியாக
இருப்பான்.
“இந்தச் சின்ன வயதில்
இது விசித்திரமாய் இல்லையா? எதனால் உங்கள் மகன் அப்படிப் போகிறான்?”
“என்ன செய்வது எல்லாம் என் தலையெழுத்து” என்று மைத்ரேயனின் தாய் வருத்தத்தோடு சொன்னாள்.
வாங் சாவொ மைத்ரேயனின் சகோதரர்களைப்
பார்த்தான். அவர்களிடம் மைத்ரேயன் எங்கே போய் இருப்பான் என்பது தெரியுமா,
யூகிக்கவாவது முடியுமா என்று அவன் கேட்ட கேள்விக்கு அவர்களும் தெரியாதென்று பதில்
தந்தார்கள்.
அவன் தொடர்ந்து மைத்ரேயனின் குணாதிசயங்கள்
பற்றி மாறி மாறி அவர்கள் மூவரிடமும் கேட்டான். அந்தக் கேள்விகள் கேட்டு அவன்
எதுவும் புதிதாகத் தெரிந்து கொள்வதற்கு இல்லை என்ற போதும் இது வரை மைத்ரேயன்
பற்றித் தெரிந்து கொண்டிருந்த விவரங்கள் இவர்கள் சொல்வதோடு ஒத்துப் போகின்றனவா
என்று அறிந்து கொள்ளவே அவர்களைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டு வந்தான். மைத்ரேயன்
எங்கே போனான் என்பதே தெரியாது என்ற பொய்யைத் தவிர மற்ற கேள்விகளுக்கு அவர்கள்
உண்மையையே சொல்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தான்.
மைத்ரேயனின் மூத்த அண்ணன் கேட்டான். “ஏன்
என் தம்பியைப் பற்றி இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்கள்? அவனுக்கு என்ன ஆயிற்று?”
வாங் சாவொ அலட்சியமாய் பதில் சொன்னான்.
“இது வரை எதுவும் ஆகவில்லை”. ஆனால் இனிமேல்
என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பது போல் இருந்தது அவன் தோரணை.
வாங் சாவொ கையிலிருந்து ஒரு புகைப்படம்
நழுவி விழுந்தது. அது அக்ஷய் புத்தபிக்கு கோலத்தில் இருந்த புகைப்படம். அவர்கள்
மூவரும் அதை நன்றாகப் பார்க்கும் வரை அவன் அந்தப் புகைப்படத்தை எடுக்கவில்லை.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அவர்கள் மூவர் முகமும் வெளிறியது. கேள்விகள்
கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாததை புகைப்படம் காட்டித் தெரிந்து கொண்ட வாங் சாவொ
மூவரையும் வன்மம் கலந்த புன்னகையுடன் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல்
வெளியேறினான்.
அவன் வந்த ஜீப் கிளம்பிப் போன பிறகு
மைத்ரேயன் தாய் மகன்களை கலக்கத்துடன் பார்த்தாள். ”அவனைக்
கண்டுபிடித்து விட்டார்களா என்ன?”
அவள் இளைய மகன் சொன்னான். “தம்பி
கிடைத்திருந்தால் அந்த ஆள் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டான். இப்படிக் கேள்விகள்
கேட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டான். பயப்படாதே”
மூத்த மகன் சற்றுக் கவலையுடன் சொன்னான்.
“தம்பி எங்கே இருக்கிறான் என்பது தெரியா விட்டாலும் யாருடன் இருக்கிறான் என்று
அந்த ஆள் தெரிந்து வைத்திருக்கிறான். அதைச் சொல்லாமல் சொல்லி விட்டுப்
போயிருக்கிறான் அவன்....”
சிறிது நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது. மைத்ரேயனின் தாய் சொன்னாள். “எத்தனை அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி,
யாரும் தர்மத்தை எதிர்த்து வெல்ல முடியாது”. அந்த
வார்த்தைகளில் ஆசை தொனித்த அளவுக்கு நம்பிக்கை தொனிக்கவில்லை. ’என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்பது போல் அவள் மகன்களைப் பார்த்தாள். அவர்கள்
இருவரும் மெல்ல தலையசைத்தார்கள்.... ‘எல்லா நேரங்களிலும்
தர்மம் வெல்கிறதா என்ன?’ என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடியது போலிருந்ததைக் கண்ட
அந்தத் தாயின் கண்கள் குளமாயின....
சேடாங்
நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் வாங் சாவொ லீ க்யாங்குக்கு போன்
செய்தான். “அவன் தான் வந்து அந்தப் பையனைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறான். அவன்
போட்டோவைப் பார்த்தவுடன் மூன்று பேர் முகமும் பேயறைந்தது போல் ஆகி விட்டது....”
சம்யே மடாலயத்தை அவர்கள் ஜீப் நெருங்க ஆரம்பித்தது. தூரத்தில் மடாலயம்
தெரிய ஆரம்பித்த கணத்திலிருந்து அந்த ஜெர்மானியத் தம்பதியர் அந்த மடாலயத்தைப்
பிரமிப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள். வரலாற்றின் முந்தைய பக்கங்களில் அவர்கள் பயணிக்க
ஆரம்பித்தது போல் அக்ஷய்க்குத் தோன்றியது.
ஜீப் டிரைவர் சம்யே மடாலயத்தின் பின்னணி பற்றி சொன்ன கருத்துகள் அவர்கள்
மனதை ஆக்கிரமித்திருந்ததை அவனால் உணர முடிந்தது.
அக்ஷய்க்கும் கூட தன் தேசத்து பிக்குகளான
சாந்தரக்ஷிதாவும், பத்மசாம்பவாவும் அந்த மடாலயம் ஆரம்பத்தில் உருவாக மூல காரணமாய்
இருந்தவர்கள் என்ற எண்ணத்தினால் அந்த மடாலயம் மீது ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
அக்ஷய் மைத்ரேயனைப் பார்த்து இந்த மடாலயம் அவனிடம் ஏதாவது பிரத்தியேக உணர்வை ஏற்படுத்தி
உள்ளதா என்று அறிய முயன்றான். அந்தச்
சிறுவனின் அமைதியான முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஜீப் சம்யே மடாலயம் வந்து
சேர்ந்தது. அனைவரும் ஜீப்பில் இருந்து இறங்கினார்கள்.
சம்யே மடாலயம் ஒரு சாதாரண மடாலயம் அல்ல. பல
ஏக்கர் பரப்பில் உள்ள பல கட்டிடங்கள், பல தளங்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான
கட்டிடக் கூட்டமைப்பு. மையத்தில் உள்ள மிகப்பெரிய பிரதான கோயில் ஆறு தளங்கள்
கொண்டது. அதைச் சுற்றி உள்ள கட்டிடங்களில்
சில மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டவை. மீதமுள்ள கட்டிடங்கள் பலவும்
அரைகுறையாய் கட்டப்பட்ட நிலைகளில் இருப்பவை. மொத்தப்பகுதியைச் சுற்றி மிகப்பெரிய சுற்றுச்சுவர்
இருந்தது. நான்கு பக்கங்களிலும் பெரிய கதவுகள் இருந்தன. பிரதான வாயிலின் வெளியே பல
வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
ஜீப் டிரைவர் ஜீப்பிலேயே இருந்து கொள்ள
ஜெர்மானியத் தம்பதியரும், அக்ஷயும், மைத்ரேயனும் பிரதான வாயிலை நோக்கி நடக்க
ஆரம்பித்தார்கள். அவர்களைப் போலவே அப்போது தான் வந்து சேர்ந்திருந்த சில பயணிகள்
வாயிலிலேயே நின்று கண்முன் விரிந்து கிடந்த சம்யே மடாலயக் கட்டிடங்களைப் பிரமிப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த அகஷய் அந்த
இடத்தை நிதானமாக ஆராய்ந்தான். அந்தப் பிரம்மாண்டமான பரப்பில் அந்தப் பகுதியை
நன்றாக அறிந்தவர்கள் எங்காவது மறைந்து இருப்பது பெரிய கஷ்டமான காரியம் இல்லை என்று
தோன்றியது. இத்தனை பெரிய நிலப்பரப்பில்
இந்தச் சிறுவன் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் எதுவாக இருக்கும் என்று எண்ணிக்
கொண்டே ஜெர்மானியத்
தம்பதியர் பக்கம் திரும்பினான்.
“நாங்கள் விடைபெறுகிறோம் அன்பர்களே. எங்கள்
இருவருக்கும் புத்தமத சம்பிரதாய சடங்குகள் சில இங்கு செய்ய வேண்டி இருக்கிறது.
உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. போதிசத்துவர் அருள் தங்களுக்குப் பரிபூரணமாக
கிட்டட்டும்”
அவர்கள் இருவரும் நிறைந்த மனதுடன்
விடையளித்தார்கள். அக்ஷய் ஆசிர்வதித்து
விட்டு மைத்ரேயனை அழைத்துக் கொண்டு வேகமாக நடந்தான். மைத்ரேயனிடம் மெல்லக்
கேட்டான். “நீ சொன்ன இடம் எங்கே இருக்கிறது”
மைத்ரேயன் சொன்னான். “பின்பகுதியில்
கடைசியாக உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்று”
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அக்ஷய்க்கு
ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அந்த வயதுச் சிறுவர்கள் இந்தக் கேள்விக்கு கை காண்பித்து, கண்களாலும்
கோடி காண்பித்து தான் பதில் சொல்வார்கள். அப்படிக் காண்பித்தால் தூர இருந்து
கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சு புரியா விட்டாலும் இடமாவது தெரிந்து
விடும். மைத்ரேயனோ கையையும் காட்டவில்லை. கண்களாலும் இடம் காட்டவில்லை. சிறுவன்
விவரமாகத் தான் இருக்கிறான்.....
அக்ஷய் பயணிகளின் போக்குவரத்தைக்
கவனித்தான். எல்லாக் கட்டிடங்களையும் நன்றாகப் பார்த்து விட்டு ஒரே நாளில்
திரும்புவது என்பது முடியாத காரியம் என்பதால் கிட்டத்தட்ட எல்லோருமே முக்கியமான
ஆறு தளமுள்ள பிரதானக்கோயிலைச் சுற்றியே இருந்தார்கள். பிற்பகுதியில் சில அமெரிக்க,
ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தார்கள்.
இப்போது பிற்பகுதியில் பயணித்தால் இவர்கள் இருவரும் பிரத்தியேகமாகத் தெரிவார்கள்.
மைத்ரேயனிடம் பொழுது சாயும் நேரத்தில் தான்
அங்கு செல்வது உசிதம் என்று அக்ஷய் தெரிவித்த போது மைத்ரேயன் தலையசைத்தான்.
இருவரும் பிரதானக்கோயிலின் உள்ளே
பிரவேசித்தார்கள்.
அதே நேரம் மாரா தன் அலைபேசிகளில் ஒன்றிலிருந்து ஒரு நபரைத் தொடர்பு
கொள்ள முயன்று கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து தான் அந்த நபர் பேசக்
கிடைத்தான். மிகுந்த பயபக்தியுடன் அவன் குரல் கேட்டது. “சொல்லுங்கள்”
“நீ இப்போது சம்யே மடாலயத்திற்குள் தான்
இருக்கிறாயா?”
“ஆமாம்”
“மைத்ரேயனின் வெளிப்பட்டு விட்டான்.”
அந்தத் தகவல் அந்த நபரைப் பேச்சிழக்க வைத்தது
போல இருந்தது.
சில வினாடிகள்
கழித்து அந்த நபர் பரபரப்பானான். “எங்கே அவன்?”
“மைத்ரேயனும், அவனைக் காப்பவனும்
புத்தபிக்கு உடைகளில் இன்னேரம் சம்யே மடாலயத்திற்கு வந்திருப்பார்கள்.....”
“நான் என்ன செய்யட்டும்? அவன் கதையை
முடித்து விடட்டுமா?”
(தொடரும்)
என்.கணேசன்
நல்ல விருவிருப்பு. நாங்களும் அந்த மடாலயத்துக்குள் நுழைந்து விட்டோம். மனம் திக் திக் என்று அடித்துக் கொல்கிறது. கடைசி சொல்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை.
ReplyDeleteஅருமை அண்ணா. . .
ReplyDeleteகதாபாத்திரங்கள் கண்முன்னே நடப்பது போன்று தத்ரூபமான கதையோட்டம். . .
பகிர்வுக்கு நன்றிகள்.
apa apa ethana kathapatheram negal novel eluthu potha yoga nelai petru irupegal endru nenikeran. vaalthukal.
ReplyDeleteஉங்களுடைய மற்ற நாவல்கள் எல்லாம் வெறும் கற்பனை. ஆனால் இந்த நாவலில் நிஜமான வரலாற்றுப் பின்னணியோடு உங்கள் கற்பனை பிரமாதமாய் பின்னிப் பிணைகிறது. சம்யே மடாலயத்திற்கு எங்களையும் வரவைத்து விட்டீர்கள். இன்னொரு நண்பர் சொன்னது போல இத்தனை கதாபாத்திரங்களை வைத்து பிசிறில்லாமல் மிக சுவாரசியமாய் நாவலைக் கொண்டு போவதற்கு பாராட்டுகள்.
ReplyDeleteI am not sure as why you have not tried this novel with any magazines or publisher?!
ReplyDeleteSir migavum suspense aaga pogindradhu. .Dharmam patri Maitreyan Thai sollum podhum Maithreyan brothers pola ve Nammanadhilum sandhegamezhugiradhu
ReplyDeleteDear Sir,
ReplyDeleteYou have tied my hands into this novel. But after the death of Singapore's Lee Kuang Yew, I want to know whether he is the Lee kuang in Buddham Karanam Kachami.
Please, clarity our doubts.
The Singapore leader is different. Our man in this story is different.
DeleteThank You for clarifying our doubts, Sir
Deleteஒவ்வொரு பதிப்பும் பரபரப்பை அதிக படுத்தி கொண்டே போகிறது.....உங்களின் பதிவிற்காகவே வியாழனை ரொம்ப எதிர் பார்க்க வேண்டிள்ளது சர்....
ReplyDeleteDear Sir,
ReplyDeleteStarted reading from yesterday.Already i'm a big fan of Amanushyan(Akshai).
Romba interstinga kondu poreengha.Eppudi amanushyan parthu viyapoma athuku equal innoru intersting character leekyang.All the character narration and again bonding between varum and akashai heart touching.Aksahike puriyatha puthira mythreyan irukar.
I started reading this story when i was depressed,After started reading each episode my mind is refreshed and relaxed now.Thank you sir for wonderful story.I read till 40epi will read remaining and come with my comments