சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 19, 2013

பரம(ன்) ரகசியம் – 62



டனடியாக குருஜி  ரிஷிகேசத்திற்கு அழைத்துப் போயிருந்த இளைஞனுக்குப் போன் செய்தார். அவன் தற்போது டில்லியில் இருந்தான். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவன் சில மணி நேரங்களில் உதயனை சந்திக்க முடியும். அவனிடம் போன் செய்து உடனே உதயனிடம் போகச் சொன்னார். போய் அவனுடைய செல்போனை உதயனிடம் கொடுத்து அவரிடம் பேசச் சொல்லச் சொன்னார்.

அந்த இளைஞனுக்கு அந்த ஒற்றையடி மலைப்பாதையில் கால் வலிக்க நடந்தது நினைவுக்கு வர, சிறிது தயங்கினான். பின் ஒப்புக் கொண்டான். அதற்கு குருஜியிடம் யாரும் எதையும் முடியாது என்று சொல்ல முடியாது என்பது ஒரு காரணம். பின் கூலியை அவர் அளவுக்குத் தாராளமாகத் தருபவர் கிடையாது என்பது இன்னொரு காரணம்.

அவன் குருஜியுடன் போனதற்குப் பின் மீண்டும் ஒரு முறை உதயன் இருக்குமிடம் போய் இருக்கிறான். ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றி நாலா பக்கத்திலும் உள்ள மண்ணை எடுத்து அவன் மூலமாகத் தான் குருஜி உதயனுக்கு அனுப்பினார். அப்போது  குகை வரை போக வேண்டி இருக்கவில்லை. வழியில் ஒரு பாறை மீது உதயன் அமர்ந்து கொண்டிருந்தார். அவன் தந்ததை வாங்கிக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார். அப்போதும் தனியாக நடந்த தூரம் அவனுக்கு சலிப்பைத் தந்தது...

குருஜியுடன் போன போதும் பிறகு தனியாக மண்ணைக் கொண்டு போன போதும் போல் அவன் இப்போது ஹெலிகாப்டரில் போக முடியாது. அந்த வசதியை செய்து தருவதாய் இருந்தால் குருஜி சொல்லி இருப்பார். ரிஷிகேசத்தில் விமான நிலையம் இல்லை. மிக அருகில் உள்ள விமான நிலையம் டெஹ்ராடூன் விமான நிலையம் தான். விசாரித்ததில் ஒரு மணி நேரத்தில் டெஹ்ராடூனிற்கு விமானம் இருப்பதாகச் சொன்னார்கள். டிக்கெட்டை புக் செய்து விட்டு அவசரமாக அவன் கிளம்பினான்.

பார்த்தசாரதி நியமித்திருந்த ரகசிய போலீஸ்காரர்கள் அவருக்குப் போன் செய்து, வேவு பார்த்துக் கொண்டிருப்பது தாங்கள் மட்டுமல்ல வேறு சிலரும் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்தார்கள்.

அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி கேட்டார். “நம் மாநில போலீஸ்காரர்களா, வெளி மாநில போலீஸ்காரர்களா, சி.பி.ஐயா?

“சரியாய் தெரியல சார்

“உங்க யூகத்தைச் சொல்லுங்க

அவர் நியமித்திருந்த நபர்கள் மிக புத்திசாலிகள். அவர்கள் யூகமே கிட்டத்தட்ட சரியாக இருக்கும்.

“ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் போலத் தெரியுது

“நீங்க அவங்களைக் கண்டுபிடிச்ச மாதிரி அவங்களும் உங்களைக் கண்டுபிடிச்சிருப்பாங்களோ?

“கண்டு பிடிச்சிருப்பாங்க சார் தயக்கமில்லாமல் வந்தது பதில்.

பார்த்தசாரதி வேதபாடசாலையை வேவு பார்க்கும் இன்னொரு தரப்பு யாரால் நியமிக்கப்பட்டதாய் இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


குருஜி அமைதியாக பாபுஜியிடம் சொன்னார். “கவலைப்படாதே. எதுவும் நம் கையை மீறிப் போயிடலை

குருஜியின் இத்தனை நம்பிக்கைக்குக் காரணம் அவர் நண்பன் உதயன் தான் என்பது அவர் போனில் பேசியதில் இருந்து பாபுஜி புரிந்து கொண்டார். குருஜி முன்பு உதயனைப் பார்க்க ஹெலிகாப்டரில் போக ஏற்பாடு செய்தவர் பாபுஜி தான். அதனால் அவர் உடனடியாகச் சொன்னார். “அவரை இங்கே கூட்டிகிட்டு வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துடட்டுமா குருஜி?

குருஜி சொன்னார். “அவன் இங்கே வரப் போகிறான்னு யார் சொன்னது?

“அவர் இங்கே வராமல் எப்படி இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்?

“அதை அவன் அங்கே இருந்தே சரி செய்வான்குருஜி சொல்ல பாபுஜி சந்தேகத்தோடும் குழப்பத்தோடும் ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன், குருஜி கவலைப்படா விட்டால் நாமும் கவலைப்பட எதுவுமில்லை என்பது போல இருந்தார்.

பாபுஜி இனி இது சம்பந்தமாக மறுபடியும் கேட்டு விடப் போகிறார் என்று பயந்தது போல குருஜி பேச்சை மாற்றினார். ‘நம்ம ஆராய்ச்சி ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு பாபுஜி?

எல்லாம் பிரமாதமாய் இருக்கு. ஆனால் ஆழமனசக்திகளை அளக்கற மாதிரி எத்தனையோ மெஷின்கள் இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். உதாரணத்துக்கு ஒவ்வொரு சக்ராவில் இருந்தும் எத்தனை சக்தி வெளிப்படுதுன்னு அளக்கக் கூட மெஷின்கள் இருக்கறதா  சொன்னாங்க. அதெல்லாம் இங்கே இல்லையே. ஏன்?

குருஜி இதற்கு என்ன பதில் என்பது போல ஜான்சனைப் பார்த்தார். சக்திகளைப் பற்றித் தெரிந்த அளவு அவருக்கு எந்திரங்களைப் பற்றித் தெரியாது.

ஜான்சன் சொன்னார். “மார்க்கெட்டில் எத்தனையோ மெஷின்கள் என்னென்னவோ அளந்து காண்பிக்கறதா சொல்லி விளம்பரம் செய்யறாங்க. அந்த மெஷின்கள் எல்லாம் சரியாத் தான் அளக்குதா, காண்பிக்கற ரிசல்டுகள் எல்லாம் சரிதானான்னு உறுதியா நம்பக்கூடிய அளவுக்கு தரமான ஆராய்ச்சி மையங்களால ஆராயப்படலை... உறுதியாய் தெரியாத எந்த மெஷினையும் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்த வேண்டாம்னு குருஜி சொன்னதால நான் நிரூபிக்கப்படாத எந்த மெஷினையும் தருவிக்கலை

எதையும் தவறில்லாமல் கச்சிதமாய் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படுகிற குருஜியின் சிந்தனை பாபுஜிக்குப் பிடித்திருந்தது. ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருக்கக் கூடிய அந்த மனிதர் இத்தனை ஞானத்தைப் பெற்றிருக்கிறார் என்றால் எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து வைத்திருப்பதால் தான் என்று தோன்றியது. விசேஷ மானஸ லிங்கத்தையும் அப்படியே அல்லவா தெரிந்து வைத்திருக்கிறார்....

விசேஷ மானஸ லிங்கம் பற்றி நினைவுக்கு வந்தவுடன் பாபுஜி குருஜியிடம் கேட்டார். “குருஜி எப்ப எனக்கு அந்த சிவலிங்கத்தைக் காட்டப் போறீங்க?

குருஜி புன்னகையுடன் சொன்னார். “இன்னமும் ஜான்சன் கூட அந்த சிவலிங்கத்தைப் பார்க்கலை.... சரி வாங்க ரெண்டு பேரும் போய் பார்க்கலாம்.. ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க. நான் எந்த இடம் வரைக்கும் போகிறேனோ அது தான் எல்லைன்னு தெரிஞ்சுக்கோங்க. அதைத் தாண்டி ஒரு அடி கூட முன்னால் நகர வேண்டாம்...

சரிஎன்று பாபுஜியும் ஜான்சனும் தலையாட்டினார்கள் என்றாலும் பாபுஜிக்கு ஒரு சந்தேகத்தை குருஜியிடம் கேட்க வேண்டி இருந்தது. “ஒன்னு ரெண்டு அடி அதிகமாய் நெருங்கினால் என்ன ஆகும்? அந்தக் கொலைகாரனுக்கு ஆன மாதிரி ஏதாவது ஆயிடுமா?

குருஜி புன்னகைத்தார். “அப்படி எல்லாம் ஆயிடாது. அவன் முட்டாள். அதற்குப் பக்கத்திலே போறதே அபாயம். அப்படி இருக்கையில் அவன் அதைத் தொட்டே விட்டான் போல இருக்கு. அதனால் தான் அப்படி ஆச்சு. நாம் பாதுகாப்பான ஒரு எல்லையைத் தாண்டி நெருங்கினால் அது ஏதாவது ஒரு விதத்தில் நம் கிட்டே பாதிப்பை ஏற்படுத்திட வாய்ப்பு இருக்கு. அந்தப் பாதிப்போட விளைவுகள் உடனடியாய் தெரியா விட்டாலும் பிற்பாடு புரியும்...

பாபுஜி தலையாட்டினார். குருஜி அவர்கள் இருவரையும் விசேஷ மானஸ லிங்கத்தைக் காட்ட அழைத்துச் சென்றார். அவர்கள் போன போது கணபதி சிவலிங்கத்திற்குப் பூக்கள் வைத்த விதம் திருப்தி இல்லாததால் அதை வேறு விதமாக வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

குருஜியைப் பார்த்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனுக்கு அவர் இது வரை இந்த சிவனைத் தரிசிக்க வராததில் மனத்தாங்கல் இருந்தது. அவனை ஆஞ்சனேயர் கோயிலிற்கு அனுப்பி விட்டு அவர் வந்து சிவலிங்கத்தைப் பார்த்து பேசி விட்டுப் போனது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால் மெல்ல சிவலிங்கத்திடம் “குருஜி வந்திருக்கார்என்று தெரிவித்து விட்டு ஓடி வந்து வரவேற்றான்.    

வாங்க குருஜி

“எப்படி இருக்கே கணபதி?

“உங்க தயவுல நல்லா இருக்கேன் குருஜி

“கணபதி டாக்டர் ஜான்சனை உனக்கு முதல்லயே தெரியும் இல்லையா. இவர் பாபுஜி. பெரிய தொழிலதிபர். பத்திரிக்கைல எல்லாம் இவர் பத்தி படிச்சிருப்பே

அவரைப் பார்த்ததும் கணபதி குட்மார்னிங் என்று கைகூப்பி வணக்கம் சொன்னான். மாலை நேரத்தில் குட்மார்னிங் சொன்ன கணபதியை பாபுஜி சுவாரசியமாகப் பார்த்தார். ஆனாலும் தானும் கைகூப்பி குட்மார்னிங் என்று சொன்னார்.

குருஜி மேலும் சொன்னார். “...இந்த ஆராய்ச்சிகளை ஜான்சன் செய்யறார்னு சொன்னேனில்லையா. அதற்கான செலவு எல்லாத்தையும் பாபுஜி தான் பார்த்துக்கறார்

எத்தனை பெரிய மனது இவருக்குஎன்று நினைத்த கணபதி அதற்காக அவரைப் பார்த்து இன்னொரு தடவை கைகூப்பினான்.

பாபுஜி தலையசைத்தார். இவனுக்கு என்ன கைகூப்புவதே வேலையோ? என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டார்.

அவர் பார்வை விசேஷ மானஸ லிங்கத்தின் மீது நிலைத்தது. தோற்றத்தில் பெயருக்கேற்ற விசேஷம் இல்லை என்றே பாபுஜிக்குத் தோன்றியது. சாதாரணமாய் கோயில்களில் பார்க்க முடிந்த சிவலிங்கம் போல் இருந்தது. பாபுஜி கூர்ந்து பார்த்தார். ஏதாவது ஒளி தெரிகிறதா என்று பார்த்தார். கணபதி ஏற்றி வைத்திருந்த தீபங்களின் ஒளி சிவலிங்கத்தின் மீது படர்ந்திருந்ததே தவிர அவர் கேள்விப்பட்ட ஒளி சிவலிங்கத்தில் இல்லை.

ஜான்சனும் கூர்ந்து சிவலிங்கத்தைப் பார்த்தார். ஆயிரக்கணக்கான வருடங்கள் சித்தர்களால் ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த அந்த சிவலிங்கத்தில் இருந்து ஏதாவது சக்தி அலைகள் வருகின்றனவா, உணர முடிகின்றனவா என்று கண்களை மூடி உணர்வுகளைக் கூர்மையாக்கியும் பார்த்தார். ஆனால் எதையும் உணர முடியவில்லை.

கணபதி அவர்கள் மூவரும் எட்டவே நிற்பதைப் பார்த்தான். அதிலும் குருஜிக்கு ஒரு அடி பின்னாலேயே மற்ற இருவரும் நின்றிருந்தனர்.

“பக்கத்துல வாங்க. நான் சாமிக்கு ஆரத்தி எடுக்கிறேன்என்ற கணபதி அவசர அவசரமாகச் சென்று சிவலிங்கத்திற்கு தீப ஆரத்தி எடுத்தான். அவன் சொன்னதைக் கேட்டு அவர்கள் முன்னுக்கு வந்து விடவில்லை. கணபதி ஆரத்தித் தட்டை அவர்கள் அருகே கொண்டு வந்த போது மற்ற இருவரும் குருஜி என்ன செய்கிறார் என்பதை முதலில் கவனித்தார்கள். குருஜி ஆரத்தியை கண்களில் ஒற்றிக் கொண்டதும் அப்படியே செய்தார்கள். கணபதி நீட்டிய திருநீறை குருஜி எடுத்துக் கொண்ட பின் எடுத்துக் கொண்டார்கள்.

‘இதென்ன இவர்கள் ரெண்டு பேரும் குருஜியைப் பார்த்தே ஒவ்வொன்னும் செய்யறாங்க. இந்த வெளிநாட்டு விஞ்ஞானிக்கு இதெல்லாம் புதுசா இருக்கலாம். இந்த உள்நாட்டு முதலாளியும் இது வரைக்கும் கோயிலுக்குப் போனதே இல்லையோஎன்று கணபதி நினைத்துக் கொண்டான்.

சரி கணபதி கிளம்பறோம்என்று சொன்ன குருஜி கிளம்பினார். மற்ற இருவரும் பின் தொடர்ந்தார்கள். வாசல் வரைக்கும் போன குருஜி திரும்பி கணபதிக்கு நினைவுபடுத்தினார். “என்ன கணபதி நினைவு இருக்கில்ல. நாளைக்கு காலையில் சீக்கிரமே பூஜையை முடிச்சுடு. ஆறு மணிக்கு இங்கிருந்து கிளம்பலாம். நீ தயார் தானே?

பாபுஜியும், ஜான்சனும் திரும்பி கணபதி என்ன சொல்கிறான் என்று பார்த்தார்கள்.  கணபதி தலையசைத்தான். அந்த நேரமாகப் பார்த்து ஒரு வினாடி நேரம் சிவலிங்கம் ஒளிர்ந்தது. நானும் தயார் என்று சொல்வதைப் போல.....!

மூவரும் சிலையாக நிற்க கணபதி மட்டும் பேசினான். “யாரோ பசங்க சும்மா டார்ச் அடிச்சு அடிக்கடி விளையாடறாங்க....

டெஹ்ராடூன் விமானநிலையத்தில் இருந்தே அந்த இளைஞன் ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ரிஷிகேசத்திற்கு வந்தான். பின் மலைப்பாதையில் பயணித்து ஜீப்பை நிறுத்தி பின் ஒற்றையடிப் பாதையில் நடந்து நடந்து அவனுக்குக் களைத்து விட்டது. அந்த இடத்தில் மனித சத்தங்களே இல்லை.  காற்றின் இரைச்சல் தான் பலமாக இருந்து ஒரு அமானுஷ்ய பீதியைக் கிளப்பியது.   இந்தக் காலத்திலும் குகையில் வாழும் குருஜியின் நண்பர் மேல் அவனுக்கு எரிச்சல் வந்தது.
அவன் இதற்கு முன் இங்கு வந்த போது உதயன் உட்கார்ந்திருந்த பாறையில் இப்போது ஒரு கழுகு உட்கார்ந்திருந்தது. ஏமாற்றத்துடன் முன்னேறினான். சிறிது தூரம் போன பிறகு முதலில் அவன் உட்கார்ந்து களைப்பாறிய பாறையும் வந்தது. இன்று அந்த ஆளை குகையில் தான் சந்திக்க வேண்டும் போல இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டான். குகையில் அந்த ஆள் தனியாக இருப்பாரா இல்லை வேறெதாவது மிருகமும் இருக்குமா?...

திடீரென்று அவன் முன்னால் உதயன் வந்து நின்றார். அவனுக்கு இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. எங்கிருந்து வந்தார். வந்ததையே பார்க்கவில்லையே!

“என்ன?என்று கேட்டார்.

“குருஜி உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்...”  என்ற அந்த இளைஞன் செல் போனை எடுத்தான். டவர் இருக்கவில்லை. இந்த மலைக்காட்டுப் பகுதியில் டவர் கிடைக்காதது அவனுக்கு ஆச்சர்யமாக இல்லை. என்ன செய்வது என்று யோசித்தான்.

“என்ன ஆச்சு?உதயன் கேட்டார்.

“டவர் இல்லை

பரவாயில்லை. நம்பர் போட்டுக் கொடு. பேசறேன்

இந்தக் குகை வாழ் மனிதனுக்கு டவர் விஷயம் எல்லாம் புரியாது என்று பொறுமையாக அந்த இளைஞன் “டவர்... டவர் இல்லை... டவர் இல்லைன்னா பேச முடியாது

“பரவாயில்லை. சொன்ன மாதிரி செய்

பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ‘சொன்னால் புரியாது. அனுபவத்துல தான் புரியும்என்று நினைத்தவனாக டவர் கிடைக்காத செல்லில் குருஜியின் நம்பரை அழுத்தி விட்டு உதயனிடம் தந்தான்.

குருஜியின் ரகசிய செல்போன் மந்திரம் சொன்னது. குருஜி உடனே எடுத்துப் பேசினார். ஹலோ

“ராமா உதயன் பேசறேன்  

“உதயா எனக்கு உன்னால் இன்னொரு உதவி ஆகணும்

“என்ன சொல்லு

குருஜி தற்போதைய நிலவரத்தைச் சொன்னார். “.... இந்த ஆராய்ச்சி நடக்கிற இடம் ரகசியமாய் இருக்கிறது முக்கியம் உதயா. இப்ப கண்காணிக்கிற ஆள்கள் எங்கள் பின்னால் வந்து அந்த இடத்தைக் கண்டு பிடிச்சுட்டா பிரச்சினை ஆயிடும். அதிகாரத்துல இருக்கிற ஆள்களைப் பிடிச்சு இதை வாபஸ் வாங்க வைக்கிறது பெரிய விஷயமில்லை.. ஆனால் இதுல ஏதோ ஒன்னு இருக்குன்னு நானே சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தற மாதிரி ஆயிடும். அதான் உன் கிட்ட உதவி கேட்கறேன்

உதயன் உடனடியாக ஒன்றும் சொல்லவில்லை.

குருஜி சொன்னார். “... இனி கண்டிப்பா உன் கிட்ட உதவி எதுவும் கேட்டு தர்மசங்கடப்படுத்த மாட்டேன் உதயா. இதுவே கடைசி

உதயன் அன்புடன் சொன்னார். “என்ன ராமா நண்பன் கிட்ட போய் பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு... நாளைக்கு காலைல எத்தனை மணிக்கு கிளம்பறீங்க?

“காலைல ஆறு மணிக்கு

“நீங்க பாட்டுக்குப் போங்க. யாரும் உங்களைப் பின் தொடர முடியாமல் நான் பார்த்துக்கறேன்

குருஜி நண்பனுக்கு மனதார நன்றி சொன்னார். உதயன் சொல்லி விட்ட பின் கவலைப்பட  எதுவுமில்லை. குருஜி பின்பு கேட்டார். “உதயா, என் வாழ்க்கைல மிகப் பெரிய விஷயமா இந்த ஆராய்ச்சியைத் தான் நினைச்சுகிட்டு இருக்கேன். எல்லாம் எப்படிப் போகும்னு அன்னைக்கு கேட்டப்ப சுவாரசியமாய் இருக்கும்னு சொல்லி முடிச்சுட்டே. நான் எல்லார் அபிப்பிராயத்தையும் விட அதிகமா உன் அபிப்பிராயத்தை மதிக்கிறேன். வெளிப்படையா தயக்கமில்லாமல் சொல்லு. நான் இப்ப இருக்கற நிலை என்னன்னு நீ நினைக்கிறே?...

உதயன் யோசித்து விட்டுச் சொன்னார். “ராமா. இப்போதைக்கு நீ அனுகூலமான நிலையில் தான் இருக்கிறாய்னு நினைக்கிறேன். நம் குரு உன் ஆராய்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காதபடி நான் ஏற்பாடு செய்துட்டேன். அந்தப் பையன் கணபதி உன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான். சிவலிங்கமும் உன் கிட்ட தான் இருக்கு. நாம நினைச்சுகிட்டிருக்கிற மூவர் குழுவில் மீதி இருக்கிறது ஈஸ்வர் தான். அவன் தனி ஆள்...

குருஜிக்கு நிம்மதியாய் இருந்தது.

உதயன் தொடர்ந்து சொன்னார். “ஆனால் அவனைக் குறைச்சு நினைச்சுட வேண்டாம் ராமா. பசுபதி அவன் பேரைச் சொல்லிட்டு போயிருக்கார்னா அது பிரத்தியேக காரணம் இல்லாமல் இருக்காது. அதனால அவன் கிட்ட ஜாக்கிரதையாய் இரு

“எதிரியைக் குறைச்சு மதிப்பிடறது தோற்கறதுக்கான அஸ்திவாரம்னு எனக்குத் தெரியும் உதயா. கண்டிப்பா ஜாக்கிரதையாய் இருப்பேன்.... நன்றி நண்பா

தயன் பேசிக் கொண்டிருந்த போதே அந்த இளைஞன் மலைப்புடன் பார்த்தான். அவர் பேசி முடித்து அவனிடம் செல் போனைத் திருப்பித் தந்த போது அதே மலைப்புடன் செல் போனை வாங்கிப் பார்த்தான். இப்போதும் டவர் இல்லை. அவரைப் பார்த்தான். அவர் போயிருந்தார்.

அந்த இளைஞனுக்கு அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்றாகி விட்டது. ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்



12 comments:

  1. ஒரு வினாடி நேரம் சிவலிங்கம் ஒளிர்ந்தது. நானும் தயார் என்று சொல்வதைப் போல.....!

    அருமையான திருப்பம்..!

    ReplyDelete
  2. Excellent once again :)

    ReplyDelete
  3. சுந்தர்September 19, 2013 at 6:47 PM

    சிவலிங்கம் நானும் தயார் என்று சொல்வது போல என்று படிக்கும் போது ஒரு சிலிர்ப்பை உணர்ந்தேன் என்றால் யாரோ பசங்க சும்மா டார்ச் அடித்து விளையாடறாங்க என்று கணபதி சொன்னதைப் படிக்கும் சிரிப்புடன் கணபதியை சினேகித்தேன். பிரமாதமான எழுத்து நடையில் பரமன் ரகசியம் ஜோராக போகிறது. வாரா வாரம் வெய்ட்டிங்க்.

    ReplyDelete
  4. மிக அருமை வழக்கம் போல். ஆவலுடன் தொடர்கிறோம்...

    ReplyDelete
  5. அர்ஜுன்September 19, 2013 at 8:12 PM

    மனிதரில் எத்தனை நிறங்கள் சிவகாமி, அமானுஷ்யன் அக்‌ஷயிற்கு அடுத்தபடி மனதில் மறையாமல் நிற்கும் கேரக்டர் பரமன் ரகசியத்தில் யார் என்றால் ஈஸ்வரை விட கணபதியே முந்துகிறான் கணேசன் சார். அந்த அளவுக்கு எங்கள் மனதைக் கொள்ளை கொண்டு விட்டான். கண்முன் நிற்கும் கேரக்டர் அவன்.

    ReplyDelete
    Replies
    1. I too agree...Eshwar character have to be designed much better... Both Sivagami & Akshay characters are(not 'were' since v never forget them!!) so strong, influencing & inspirating!

      Delete
  6. அருமை அருமை சார் ...!!!! வாழ்த்துக்கள் தொடருங்கள் .....

    ReplyDelete
  7. அருமை சார்... மிகவும் அழகாக, ஒரு பதற்றத்துடன் கதையைக் கொண்டு செல்கிறீர்கள்... அருமை... அருமை...

    ReplyDelete
  8. //ஒரு வினாடி சிவலிங்கம் ஒளிர்ந்தது, நானும் தயார் என்று சொல்வதைப் போல//

    இந்த வரி ரொம்பப் பிடித்தது. ஓம் நமசிவாய!

    ReplyDelete
  9. நல்ல திருப்பங்களுடன் பரமன் ரகசியம் .ரொம்ப நன்றி கணேசன் சார்.உங்க ஈமெயில் கிடைக்குமா .நா தேடிபார்த்துட்டேன் கிடைக்கலை .

    ReplyDelete