என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, September 5, 2013

பரம(ன்) ரகசியம் – 60


து வரை உணர்ந்திராத அந்த அழகான அமைதியில் பரவசப்பட்டு அதைப் பற்றி எதோ சொல்ல வாயைத் திறந்த பாபுஜி, குருஜி குறைவாய் பேசச் சொன்னது  நினைவுக்கு வர வெளியே போன பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து மௌனமானார்.

அந்தத் தியான மண்டபம் பெரிதாகவும், அழகாகவும் இருந்தது. உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்தது தியானத்தில் அமர்ந்திருந்த மூன்று பேரைத் தான். மூன்று பேரும் நிறைய இடைவெளி விட்டு வேறு வேறு இடங்களில் தியான மண்டபத்தின் மையப்பகுதியைப் பார்த்தபடி உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்கள். 

தியான மண்டபச் சுவர்களில் அங்கங்கே பல காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதே போல், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அலைகளைக் கண்டுபிடித்துத் தெரிவிக்கும் மிக நவீனக் கருவிகளும் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்தன. ஹாலின் ஒரு மூலையில் மூளை அலைகளை அளக்கும் ஐந்து EEG மெஷின்கள் வைக்கப்பட்டு இருந்தன.  அவை எல்லாம் அந்தத் தியான மண்டபத்தின் அமைதி அழகைக் குறைப்பது பார்ப்பது போல பாபுஜிக்குத் தோன்றினாலும் இதெல்லாம் தவிர்க்க முடியாதது என்று பாபுஜி சமாதானப்படுத்திக் கொண்டார்.

குருஜி நிதானமாக காமிராக்களையும் உபகரணங்களையும் பார்வையிட்டார். ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஹாலின் மையப் பகுதியை குருஜி பார்த்த போது தான் பாபுஜி ஹாலின் மையப்பகுதியில் சில சக்கரங்கள் வரையப்பட்டு இருந்ததைக் கவனித்தார். அங்கு தான் விசேஷ மானஸ லிங்கம் வைக்கப்படும் என்பதை பாபுஜி அனுமானித்தார்.

எல்லாவற்றையும் பார்வையிட்டு முடித்த குருஜி திருப்தியுடன் ஜான்சனைப் பார்த்துத் தலையசைத்தார். ஜான்சனின் முகத்தில் திருப்தி தெரிந்தது. குருஜியின் பார்வை அடுத்ததாக தியானம் செய்பவர்களின் பக்கம் திரும்பியது.

ஜான்சன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த எட்டு பேரில் இருந்து வடிகட்டி இந்த மூவரைத் தேர்ந்தெடுத்தது குருஜி தான். எட்டு பேருமே ஜான்சனால் முன்பு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் ஃபைல்களுடன் குருஜியை ஜான்சன் சந்தித்த போது குறை நிறைகளை அலசி ஆராய்ந்து குருஜி இந்த மூவரைத் தேர்ந்தெடுத்திருந்தார்.  

மூவர் தியானமும் இப்போது கலைந்திருந்தது என்றாலும் அவர்கள் அமைதி கலையவில்லை. மூவரில் இருவர் ஆண்கள். ஒருத்தி பெண். அவர்கள் இவர்களை எந்த வித பரபரப்பும் இல்லாமல் பார்த்தார்கள்.

குருஜி அருகில் இருந்த முதல் நபரை நோக்கிச் செல்ல பாபுஜியும், ஜான்சனும் பின் தொடர்ந்தார்கள். அந்த நபர் மெள்ள எழுந்து நின்றார்.

பாபுஜி அந்த மூவரையும் இப்போது தான் முதன்முதலாகப் பார்க்கிறார் என்றாலும் மூவரைப் பற்றியும் நன்றாக அறிவார். மூவர் பற்றிய விவரங்களும் மூன்று ஃபைல்களில் மூன்று நாட்களுக்கும் முன்பே அவர் பார்வைக்குச் சென்றிருந்தது.

இப்போது குருஜி நெருங்கும் நபர் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி. வயது 53. லெனின்கிராடு நகரில் வசிப்பவர். ஒரு தினசரிப் பத்திரிக்கையில் வேலை பார்த்து வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன் அபூர்வ சக்திகள் பற்றி யாராவது பேசினால் வயிறு குலுங்க சிரிக்கக் கூடியவராக இருந்தவர் அவர். ஒரு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு குணமான போது சில கூடுதல் சக்திகளை அவரை அறியாமல் அவர் அடைந்திருந்தார். மனிதர்கள் சொல்லாமலேயே அவர்களைப் பற்றிய சில விவரங்கள் அவர்களை சந்திக்கையில் அவருக்குத் தெரிய ஆரம்பித்தன. அந்த சக்திகளை முழுமையாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்ட அவர் சைபீரியாவைச் சேர்ந்த பக்கிரி ஒருவரின் சிஷ்யராகச் சேர்ந்து  ஆழ்மனசக்தி நுணுக்கங்களை மேலும் கற்றுக் கொண்டார். திருமணமாகி மனைவி, மகனுடன் வாழ்ந்து வரும் அவர் ரஷ்யாவில் ஆழ்மனசக்தி ஆராய்ச்சி மையத்தின் பல ஆராய்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.....

நல்ல உயரமாகவும், திடகாத்திரமாகவும் இருந்த அலெக்ஸியிடம் ஜான்சன் குருஜியையும், பாபுஜியையும் அறிமுகப்படுத்தினார். வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் கை குலுக்குவது முறை என்பதால் பாபுஜி கையை நீட்ட முனைந்த போது ஜான்சன் மெல்ல அவர் கையைப் பின்னுக்கு இழுத்தார். பின் தான் பாபுஜி குருஜியும், ஜான்சனும் கை கொடுக்க முன் வராததைக் கவனித்தார். அலெக்ஸியும் கை குலுக்க முனையாமல் அப்படியே இருந்தார்.

குருஜி அலெக்ஸியிடம் இங்கு எந்த அசௌகரியமும் இல்லை அல்லவா என்று மிகத் தாழ்ந்த குரலில் கேட்க அலெக்ஸியும் இல்லை என்று பதில் அளித்தார். குருஜி பாபுஜியைக் காட்டி கேட்டார். “இவரிடம் நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? எங்களுக்குத் தெரியாத எதையாவது சொல்லுங்களேன்

பாபுஜி இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் குருஜி அதைக் கேட்ட பிறகு அலெக்ஸியிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதில் ஆவலாக இருந்தார்.

அலெக்ஸி கண்களை மூடி ஒரு நிமிடம் இருந்து விட்டுக் கண்களைத் திறக்காமலேயே சொன்னார். “துக்கம்.... நேசித்த ஒரு உயிரை இழந்த துக்கம்.... அது மனிதரல்ல.... விலங்கு.... நாய்

பாபுஜி திகைத்துப் போனார். அவருடைய செல்ல நாய் இரண்டு நாட்களுக்கு முன் தான் இறந்து போயிருந்தது. அதன் மரணம் அவரை நிறையவே பாதித்திருந்தது. அன்று அவர் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை. அவருடைய நாயின் மரணம் ஜான்சனும், குருஜியும் கூட அறியாதது.

குருஜி பாபுஜியை உண்மையா என்ற கேள்விக்குறியுடன் பார்க்க பாபுஜி பிரமிப்புடன் ஆமென்று தலையாட்டினார். குருஜி பாபுஜியைப் புன்னகையுடன் பார்த்து விட்டு அலெக்ஸிக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த நபரை நோக்கி நடந்தார். பாபுஜியும் ஜான்சனும் பின் தொடர்ந்தார்கள்.

அடுத்த நபர் கியோமி என்ற ஜப்பானியப் பெண்மணி. வயது 38. யோகோஹாமா நகரில் பிறந்து வளர்ந்த கியோமிக்கு இயல்பாகவே அபூர்வ உணர்வு சக்திகள் இருந்தன. சிறு வயதிலேயே வீட்டுக்கு ஏதாவது கடிதம் வந்தால் அதைத் திறக்காமலேயே உள்ளே இருக்கும் செய்தி என்ன என்பதைச் சொல்லி விடுவாள். காணாமல் போன பொருள்கள் தற்போது எங்கு இருக்கின்றன என்பதைச் சொல்லும் திறமையும் பெற்றிருந்தாள். பெரியவளான பிறகு ஜென் தியானம் கற்றுக் கொண்டாள். தற்போது கணவர், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள். இன்றும் ஜப்பானில் பல பகுதிகளில் இருந்து பல கேள்விகளுடன் கியோமியைச் சந்திக்க பலர் வருகிறார்கள். நல்ல வருமானமும் அவளுக்கு இதன் மூலம் கிடைக்கிறது....

கியோமி மிகவும் ஒல்லியாகவும் மென்மையாகவும் இருந்தாள். அவள் சராசரிக்கும் குறைவான உயரமாய் இருந்ததால் அருகில் வந்த மூவரையும் நிமிர்ந்து முகத்தை உயர்த்திப் பார்த்துப் புன்னகைத்தாள்.  ஜான்சன் இருவரையும் அறிமுகப்படுத்த கியோமி ஜப்பானிய முறைப்படி குனிந்து வணக்கம் தெரிவித்தாள்.

அலெக்ஸியிடம் நலம் விசாரித்தது போலவே கியோமியிடமும் குருஜி விசாரித்தார். கியோமியும் நலமே, இங்கு அசௌகரியம் எதுவும் இல்லை என்று சொல்லச் சொல்ல பாபுஜியின் செல்போன் அதிர்ந்தது. போனை எடுத்துப் பேசலாமா கூடாதா என்று பாபுஜி குருஜியை மெல்லக் கேட்க குருஜி கியோமியிடம் சொன்னார். “இவருக்கு எந்த நம்பரில் இருந்து கால் வந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?

நிலத்தை வெறித்துப் பார்த்தபடியே கியோமி ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் முடித்த போது பாபுஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அது அவர் தந்தையின் செல்போன் எண்.  குருஜி சொன்னார். “எடுத்துப் பார்.பாபுஜி செல்போனை எடுத்துப் பார்த்தார். அவள் சொன்னபடி அவர் தந்தையின் போன்கால் தான். குருஜி சொன்னார். “பிறகு பேசறதாய் சொல்லி வச்சுடு. வெளியே போய் பேசிக்கலாம்”.  பாபுஜி அப்படியே செய்தார். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனில் வந்த எண்ணை எவ்வளவு சாதாரணமாக இந்தப் பெண்மணி பார்க்காமலேயே சொல்லி விட்டாள் என்ற திகைப்பு மட்டும் மனதில் தங்கியது. கியோமிக்கு நன்றி சொல்லி விட்டு நகர்ந்தார்கள்.

அடுத்த நபர் இந்தியாவில் ஜம்முவில் வசிக்கும் ஹரிராம். வயது 63. முப்பது வயது வரை டெல்லியில் அரசுப் பணியில் இருந்த ஹரிராமிடம் எந்த விசேஷ சக்தியும் இருக்கவில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்டு மிக ஆனந்தமாக டெல்லியில் வாழ்ந்து வந்தார். மனைவி ஒரு குறைப்பிரசவத்தில் குழந்தையோடு இறந்து விட அந்த நாளில் அவர் ஆனந்தமும் செத்துப் போனது. பைத்தியம் பிடித்தது போல் ஒரு மாதம் சுற்றிக் கொண்டிருந்த ஹரிராம் பின்பு வாழ்வின் சுமை தாங்காமல் ஹரித்வார் சென்று ஒரு அதிகாலை வேலையில் கங்கையில் மூழ்கி உயிரை விடத் துணிந்தார். ஆனால் ஒரு சாதுவால் காப்பாற்றப்பட்ட அவர் வாழ்க்கை பின் திசை திரும்பியது.

அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு, சில அபூர்வ சக்திகள் பெற்றிருந்த அந்த சாதுவின் சீடராக ஹரிராம் மாறினார். சுமார் இருபது வருடங்கள் அந்த சாதுவிடம் தியானத்தையும், அபூர்வ சக்திகளையும் அவர் கற்றுக் கொண்டார். அந்த சாது சமாதி அடைந்த பின் ஹரிராம் மறுபடியும் தனியரானார். அந்த சாது எந்த தனிக்கடவுளையும் வணங்கியவரல்ல. உருவமில்லாத பரம்பொருளை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும் என்று எல்லாவற்றையும் போற்றி வாழ்ந்த அந்த மகானுடன் இருபது ஆண்டுகள் தங்கியும் அந்த மனோநிலையும் பக்குவமும் ஹரிராமிற்கு வந்து விடவில்லை. இறைவனை வணங்கவும் செய்யாமல், மறுக்கவும் செய்யாமல் இறைவனைத் தொந்தரவு செய்யாமல் தான் பெற்றிருந்த அபூர்வ சக்திகளை பர்சோதித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் ஹரிராம் ஜம்முவில் வசித்து வந்தார். அப்போது தான் பயணியாக அங்கு வந்த ஜான்சனால் அவர் கவனிக்கப்பட்டார். பின் ஒருசில ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தவும் பட்டார்.

இந்த மூவரில் ஹரிராமைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் தான் குருஜி மிக அதிகமாய் யோசித்தார். ஹரிராமின் சக்திகளைப் பொருத்தவரை குருஜிக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட மனிதராக ஹரிராமைப் பற்றி முழுமையாக அவரால் தீர்மானிக்க முடியவில்லை. இருந்தும் ஹரிராமிற்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்க மேலான நபர் அவருக்குக் கிடைக்காததால் தான் ஹரிராமைத் தேர்வு செய்தார்.

ஹரிராமின் வயது தோற்றத்தில் தெரியவில்லை. தாடி வைத்திருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். நல்ல ஆரோக்கியமாய் தெரிந்தார்.
ஜான்சன் அறிமுகம் செய்தவுடன் நலம் விசாரித்து விட்டு குருஜி பாபுஜியைக் காண்பித்து ஹரிராமிடம் கேட்டார். “இவர் இப்ப தான் ஒரு ஆளிடம் செல் போனில் பேசினார். இவர் கிட்ட பேசின ஆளை விவரிக்க முடியுமா?

இது கூட முடியுமா?என்று பாபுஜி வியந்தார். ஆனால் ஹரிராம் அந்த கோரிக்கையால் அசந்து விடவில்லை. சிறிது நேரம் பாபுஜியைப் பார்த்த அவர் பின் பார்வையை பாபுஜிக்கு ஓரடி தள்ளி வெற்றிடத்திற்குத் திருப்பினார்.

வயசானவர்... சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கார்... கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கார்.... ஆதித்திய ஹ்ருதயம் சுலோகம் சொல்லிகிட்டு இருக்கார்....ஏதோ நேரில் பார்த்துச் சொல்வது போல அவர் சொல்ல பாபுஜி திகைப்பின் உச்சத்திற்கே போனார். முதல் மூன்றும் உண்மை என்பது அவருக்குத் தெரியும். அவர் வயதான தந்தைக்கு  நடக்க முடியாது என்பதால் சக்கர நாற்காலியில் தான் இருப்பார். ஐந்து நாட்களுக்கு முன் தான் காட்டராக்ட் ஆபரேஷன் ஆகி முடிந்திருந்த்து. அதனால் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்திருப்பதும் உண்மையே. சுலோகம் பற்றி தான் பாபுஜியால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பாபுஜியின் பிரமிப்பில் இருந்தே புரிந்து கொண்ட குருஜி ஹரிராமிற்கு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப பாபுஜியும், ஜான்சனும் பின் தொடர்ந்தார்கள். வெளியே வந்ததும் முதல் வேலையாக பாபுஜி தன் தந்தைக்குப் போன் செய்தார்.

“அப்பா நீங்க என்ன செய்துட்டு இருந்தீங்க?

சும்மா தான் இருக்கேன். ஏம்ப்பா?

“என் கிட்ட இப்ப போன்ல பேசறதுக்கும் முன்னாடியும், பேசின பிறகும் என்ன செய்துட்டு இருந்தீங்க? டிவி பார்த்தீங்களா, இல்லை படிச்சுட்டு இருந்தீங்களா அப்படி கேட்டேன்

டாக்டர் தான் இந்த வாரம் முழுசும், டிவி பார்க்க வேண்டாம், புஸ்தகம் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாரே. என்ன தான் செய்யறது! ஆதித்ய ஹ்ரிதயம் சுலோகம் சொல்லிகிட்டு இருந்தேன். அதை விடு நீ போயிருக்கிற காரியம் என்ன ஆச்சு?

“நான் அரை மணி நேரம் கழிச்சு விவரமா சொல்லறேம்ப்பா.என்று இணைப்பைத் துண்டித்த பாபுஜிக்கு வியர்த்தது. என்ன தான் அந்த மூன்று ஃபைல்களில் எழுதி இருந்ததைப் படித்திருந்த போதும் படித்த விஷயங்களின் ஆழம் அவர் அறிவிற்கு எட்டி இருக்கவில்லை. இப்போது நேரில் பார்த்த பின்போ  பிரமிப்பு தான் மிஞ்சியது. இது போன்ற மனிதர்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது போல இருக்கிறதே, எந்த ரகசியமும் இவர்களுக்குத் தெரியாமல் வைத்துக் கொள்ள முடியாது போலிருக்கிறதே என்று நினைக்கையில் பயமும் எழுந்தது. இந்திய முன்னணிப் பணக்காரராக இருக்கும் அவருக்கு ரகசியம் காப்பது தான் பெரிய பாதுகாப்பு, மனதில் என்ன நினைக்கிறோம் என்று வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வது தான் வியாபார அரிச்சுவடி. அப்படி இருக்கையில் இது போன்ற மனிதர்கள் அவரை பயமுறுத்தினார்கள்.  குருஜியைத் திகைப்புடன் பார்த்தார்.   

குருஜியைப் பார்த்து பாபுஜி சொன்னார். “என்னைப் பார்த்தே என் சம்பந்தப்பட்டதை எல்லாம் இவ்வளவு சரியாகச் சொல்கிறார்களே. அத்தனை சக்திகளை இவர்கள் வைத்திருக்கிறார்களே, இவர்களை வைத்தே நிறைய சாதிக்கலாம் போல இருக்கே. சிவலிங்கம் கூட நமக்கு வேண்டாம் போல இருக்கே.

அறியாமல் பேசும் சிறு பிள்ளையைப் பார்ப்பது போல் குருஜி அவரைப் பார்த்தார். பாபுஜி. எங்கோ நடந்ததையும், நடப்பதையும் இவர்கள் சொல்கிறார்கள். நமக்கு பக்கத்தில் இருந்தால் தான் தெரிகிறது. உள்ளே போய் பார்த்தால் தான் தெரிகிறது. நம்மால் முடியாதது என்கிறதால் இதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் இவர்களால் எதையும் உருவாக்கவோ, நடக்க வைக்கவோ முடியாது. சித்தர்களுக்கு அதுவும் முடியும். இதுவும் முடியும். எதுவும் முடியும். இவர்கள் எல்லாம் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாதிரி என்றால் சித்தர்கள் இந்தத் துறையில் பெரிய விஞ்ஞானிகள் மாதிரி. அப்படி ஒரு சித்தர் இரண்டு சித்தர் என்றல்ல எத்தனையோ சித்தர்கள் தங்கள் சக்தியை ஆவாஹனம் செய்து வைத்திருக்கிற சிலை தான் சிவலிங்கம். அதை வைத்துக் கொண்டு என்ன முடியும் என்று அளக்கக் கூட உன் வாழ்நாள் போதாது. இந்த சின்ன சித்து வேலைகளிலேயே இப்படி நீ மலைத்து நிற்காதே. உண்மையான சக்தியை நீ அந்த சிவலிங்கம் வந்த பிறகு தான் பார்க்கப் போகிறாய்

ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பே இப்படி என்றால் விசேஷ மானஸ லிங்கம் என்ற அந்த சிவலிங்கம் எப்படியானதாக இருக்கும் என்று உண்மையாகவே பாபுஜியால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. பாபுஜி முதலில் இவர்கள் சக்தி பற்றி சரியாகப் புரிந்து கொள்ள ஆசைப்பட்டார். “குருஜி இவர்கள் எப்படி சொன்னார்கள் என்று எனக்குப் புரிகிற மாதிரி சொல்ல முடியுமா?

நீ நினைக்கிறதும், பேசுகிறதும், செய்கிறதும்  உன்னோட ஒரு பகுதியாயிடுது பாபுஜி. அது அலைகளாய் உன்னுடன் எப்போதுமே இருக்கும். அதைப் படிக்கத் தெரிந்தவனுக்கு நீ சொல்லாமலேயே அதை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். அலெக்ஸி சொன்னது அப்படித்தான். ESP என்கிற விசேஷ உணர்வு புலன்களின் உதவியில்லாமலேயே அந்தப் புலன்களின் மூலமாய் அறிய முடிந்ததை அறிய வைக்கும். இது கியோமிக்கு இயல்பாய் இருக்கிறது. நீ உன் அப்பா கிட்ட பேசின அந்த அலைகளைத் தொடர்ந்து போய் அவரைக் கவனிக்கும் விசேஷ சக்தி ஹரிராமிற்கு இருக்கிறது. விட்டிருந்தால் உன் அப்பா எந்த ரூமில் இருந்தார், என்ன மாதிரியான டிரஸ் செய்திருந்தார் என்கிற மாதிரியான சமாச்சாரம் கூட சொல்லி இருப்பார்....

எந்த மாதிரியான சக்திகள் எல்லாம் இருக்கிறது என்று வியந்து பாபுஜி பேச்சிழந்து நிற்க குருஜி சிரித்துக் கொண்டே சொன்னார். “இந்த மாதிரி ஆள்களை எல்லாம் தான் நம் மக்கள் மகான்கள் ஆக்கி விடுகிறார்கள். தானாய் மக்கள் ஏமாறத் தயாராய் இருக்கிற போது அந்த சந்தர்ப்பத்தைப் பலர் நழுவ விடுவதில்லை. இல்லாத சக்திகளும் கூட இருக்கறதாய் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு சக்தி ஒருத்தருக்கு இருந்தால் கூடவே எல்லா சக்திகளும் அவருக்கு இருக்கும்கிற நம்பிக்கை பொதுவாய் நம் ஜனங்களுக்கு இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை முட்டாள்தனமானது....

எந்த ஒரு விஷயத்தின் ஆழத்திற்கும் சென்று அறிந்து இது இவ்வளவு தான், இப்படித்தான் என்று ஆணித்தரமாய் சொல்லும் குருஜியின் ஞானம் பாபுஜிக்குப் பிடித்திருந்தது. ‘இந்த மனிதர் நிஜமாகவே ஞானப் பொக்கிஷம் தான்”.

சிறிது பொறுத்து பாபுஜி தியான மண்டபத்தில் தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்டார். EEG  மெஷின் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களோட மூளை அலைகளை அளக்கத் தானே

ஆமென்று குருஜி தலையசைத்தார்.

“மூன்று பேர் தானே இருக்கிறார்கள்.

“கணபதியையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்

“நீங்கள் சொல்வதெல்லாம் அவனுக்குப் புரியுமா?

“அவனுக்குப் புரிகிற அளவுக்குப் புரிகிற மாதிரி சொல்லலாம் என்று இருக்கிறேன்

“சரி அப்படியானால் ஐந்தாவது யார்?

“நான் தான். அவ்வப்போது நானும் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்றார் குருஜி.

ஆச்சரியப்பட்டது பாபுஜி மட்டுமல்ல. ஜான்சனும் தான். ஐந்து EEG  மெஷின்கள் இருக்கட்டும் என்று குருஜி சொன்ன போது நான்கில் ஒன்றில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் கூடுதல் ஒன்று இருக்கட்டும் என்ற முன் யோசனையுடன் சொல்லப்பட்டது என்று அவர் நினைத்திருந்தார். இப்போது தான் குருஜியும் கலந்து கொள்வது அவருக்கே தெரிகிறது....!

ஆராய்ச்சி களை கட்டத் தான் போகிறது என்ற பரபரப்பு பாபுஜியைத் தொற்றிக் கொண்டது.

(தொடரும்)
என்.கணேசன்

(பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

என்.கணேசன்)13 comments:

 1. நமது தற்போதைய சாமியார்கள் பற்றி உண்மையான வார்த்தைகள்...

  ReplyDelete
 2. பிரமிக்கவைக்கும் சக்திகள்...

  ஆராய்ச்சியும் கதையும் களைகட்டுகின்றன.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 3. Very interesting... keep rocking GURUJIIIII...

  Waiting for next updates !!!!!

  ReplyDelete
 4. >>அலெக்ஸி திகைத்துப் போனார்.

  ஒரு சிறிய திருத்தம். திகைத்துப் போனவர் பாபுஜி தானே ?

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

   Delete
 5. எந்த ஒரு விஷயத்தின் ஆழத்திற்கும் சென்று அறிந்து இது இவ்வளவுதான், இப்படித்தான் என்று ஆணித்தரமாய் சொல்லும் கணேசனின் ஞானம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் நிஜமாகவே ஒரு ஞானப் பொக்கிஷம்தான்!!

  ReplyDelete
 6. வரதராஜன்September 5, 2013 at 7:12 PM

  நேரில் பார்த்தது போல தத்ரூபமாய் இருந்தது . பரமன் ஆசிர்வாதம் இல்லா விட்டால் இப்படி எழுத முடியாது. தொடருங்கள். அடுத்த வியாழனுக்கு நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 7. சுந்தர்September 5, 2013 at 7:42 PM

  ஆன்மிகமாகட்டும், சக்திகளாகட்டும் நீங்கள் அதை விளக்கும் விதம் அருமை. அதே போல் நடுநிலையாக இருந்து ஏமாற்றும் ஆள்களையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறீர்கள். இத்தனை நடுநிலையாகவும் சிறப்பாகவும் எழுதுவது உங்கள் ஸ்பெஷாலிட்டி. பொதுவாக மற்றவர்கள் ஆன்மிகம் என்றால் எல்லாமே பெருமையாகப் பேசுவார்கள், திட்டுவது என்றால் எல்லாவற்றையும் திட்டுவார்கள். இரண்டு பக்கத்தையும் நியாயத்தராசு போல் எழுதுவது இல்லை. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. 60 ஒரு சுழற்ச்சி எண் .., அடுத்த கட்ட பரிநாமத்தை எட்டும் ., பரம (ன்) ரகசியமும் 60வதாவது அத்தியாயத்தில் அடுத்த கட்ட பரிணாமத்தில் பரிமளிக்ககிறது ....., கதை அல்ல இது காதை ^ காவியம் .....,

  வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் ...., இறையின் சித்தத்தின் பால் தொடரட்டும் ...,,!!!!

  ReplyDelete
 9. நல்ல திருப்புமுனை..அற்புதமான சிந்தனைவளம் .நன்றி

  ReplyDelete
 10. Great going. very interesting. Please publish this as book and if possible translate it in English also. It will surely be a bestseller. Your novel has all ingredients to become a bestseller.

  ReplyDelete
 11. எங்களையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது - ராஜாராம்

  ReplyDelete