என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, September 9, 2013

திருநீறு அணிவது எதற்காக?


அறிவார்ந்த ஆன்மிகம் - 18

நீரில்லா நெற்றி பாழ்என்று பாடினார் ஔவையார். மந்திரமாவது நீறு" என்று பாடினார் திருஞானசம்பந்தர். திருநீறு அந்த அளவிற்குப் பண்டைய காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருநீறு அணிவது சைவர்களது ஆன்மிக அடையாளச் சின்னம் என்கிற அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் திருநீறு அணிவதன் உண்மையான பொருளை அறிந்து கொள்வது ஆன்மிக அன்பர்களுக்கு மிக அவசியமாகும்.

முதலில் எரிக்கப்படும் எல்லாப் பொருள்களின் சாம்பலுமே திருநீறாக கருதப்படுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் ஹோமத் தீயில் தனிச் சிறப்பு வாய்ந்த மரக்கட்டைகள், நெய் மற்றும் மூலிகைகள் போடப்பட்டு கடைசியில் மிஞ்சும் சாம்பலே புனிதத் திருநீறாகக் கருதப்பட்டது. பிற்காலங்களில் ஹோமத்தீயின் மூலமாக மட்டும் அல்லாமல் பசுவின் சாணம் மற்றும் சில பிரத்தியேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பலும் திருநீறாக பயன்படுத்தப்பட ஆரம்பித்தது.

திருநீறு அணிவதற்கு ஆன்மிகம் மற்றும் அறிவு பூர்வமான காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஆன்மிக காரணங்களைப் பார்ப்போம்.

திருநீறு நிலையாமையை உணர்த்தும் அரிய பொருளாய் உள்ளது. அதாவது இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த மானிட உடலானது உறுதியாய் ஒரு நாளைக்கு இத்திருநீற்றைப் போன்று சாம்பலாய்ப்போகும், அதை மறந்து விடாமல் தூய்மையாக,  அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழ வேண்டுமென ஒவ்வொரு கணமும் உணர்த்தும் விதமாக திருநீறு அணியப்படுகிறது. மேலும் ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது இது தான்  என்பதையும் திருநீறு  குறிக்கின்றது. இப்படி அணிகிறவர்களுக்கும், அதைப் பார்க்கிறவர்களுக்கும் பெரும் தத்துவத்தை நினைவு படுத்துவது திருநீறு அணிவதன் முக்கிய நோக்கம்.

திருஞான சம்பந்தர் பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் நோயைத் திருநீறு பூசிப் போக்கியதாக கூறப்படுகிறது. திருநீறின் சிறப்புத் தன்மையை திருநீற்றுப் பதிகமாக பதினோரு பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் ஒரு பாடலில் இப்படிக் கூறுகிறார்.
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

 இதன் பொருள்: பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுதலையைத் தருவது திருநீறு. முற்றும் அறிந்த முனிவர்கள் அணிவது திருநீறு.  நிலையில்லாத இந்த உலகத்தில் என்றும் நிலையானது திருநீறு.  நாம் வணங்கிப் பின்பற்றத் தக்கவர்கள் புகழ்வது திருநீறு.  அணிபவர்களுக்கு பக்தியெனும் இறையன்பைப் பெற்றுத் தருவது திருநீறு.  போற்றிப் புகழ இனியது திருநீறு. நினைத்ததை அடைய வைக்கும் சக்தியைத் தருவது திருநீறு.  அது திருவாலவாயாம் தென்மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

திருநீற்றை முறையாக உச்சி, நெற்றி, மார்பு, நாபி, வலது முழந்தாள், இடது முழந்தாள், வலது தோள், இடது தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது விலா, இடது விலா, முதுகு, கழுத்து என்று பதினாறு இடங்களில் அணிய வேண்டும் என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இதன்வழியாக இறைவனே நம் உடல் முழுவதையும் காக்கின்றான் என்பது அன்றைய சைவப் பெரியார்களின் கருத்தாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நெற்றியிலாவது திருநீறு அணியும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

இனி திருநீறு அணிவதற்கு அறிவு சார்ந்த காரணங்களைப் பார்ப்போம்.

நாள் தோறும் எத்தனையோ அதிர்வுகள் (vibrations),  வெளியே இருந்து பலவழிகளிலும் நம் உடலையும் மனதையும் வந்து சேர்கின்றன. அவற்றில் நன்மையானவையும், தீமையானவையும் கலந்திருக்கின்றன. அவை நம் உடலின் சூட்சும சக்ராக்கள் வழியாக நிகழ்வதாக நம் முன்னோர் கருதினார்கள்.

அதிலும் மூன்று சக்ராக்கள் அந்த அதிர்வுகளை ஈர்ப்பதிலும் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதாக முன்னோர் கண்டிருந்தார்கள். அவை மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ள அனாஹதா சக்ரா,  மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள விசுத்தி சக்ரா, மற்றும், புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா சக்ரா.

அனாஹதா சக்ரா இதயத்தையும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். விசுத்தி சக்ரா தைராய்டு சுரப்பியையும், பேச்சுத் திறனையும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியையும் கட்டுப்படுத்துகிறது. ஆக்ஞா சக்ரா கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.

திருநீறிற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. இந்தச் சக்ராக்கள் இருக்கும் இடத்தில் திருநீறு பூசிக் கொள்வது நல்ல அதிர்வுகளை உள்ளுக்கு ஈர்த்துக் கொள்ளவும், தீய அதிர்வுகளை தடுத்து விடவும் உதவுகிறதென முன்னோர் நினைத்தார்கள். அதனால் தான் நெற்றியிலும், தொண்டைப் பகுதியிலும், நெஞ்சுப்பகுதியிலும் மட்டுமாவது நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் முன்னோரிடத்தில் இருந்தது. சட்டை அணியும் வழக்கம் ஆரம்பித்து விட்ட பின்னர் நெற்றி மற்றும் தொண்டைப்பகுதியில் மட்டும் திருநீறு இட்டுக் கொள்வதை பிறகாலத்தவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

சில சக்திகளை வசப்படுத்தியவர்கள் அடுத்தவர்களை தன்னிலை இழக்கச் செய்யவும், அவர்களை வசப்படுத்தவும் அவர்களது ஆக்ஞா சக்ரா மூலம் முயலக் கூடும். மனோ தத்துவத்தில் ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றை செயல்படுத்துவது ஆக்ஞா சக்ரா வழியாகத் தான். அது போன்ற ஆட்கொள்ளல்களைத் தடுத்து நிறுத்தவும் புனிதத் திருநீறு நெற்றியில் இடப்படுகிறது.

மேலும் திருநீறுக்கு சிறப்பான மருத்துவ குணங்களும் உண்டு. முறைப்படி தயாரான திருநீறு ஒரு நல்ல கிருமிநாசினியாக கருதப்படுகிறது. திருநீறு நம் உடலில் உருவாகும் வியர்வையை உறிஞ்சும் தன்மையைக் கொண்டதால்  சளி, தலைவலி ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது. தலைக்குக்  குளித்த பின்  நெற்றி  நிறையத்  திருநீறை அணிந்து கொண்டால் சளி  பிடிக்காது  என்று வயதான பெரியவர்கள் கூறுவதுண்டு. பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதில் திருநீறு பயன்படுத்தப் படுகிறது.

தொல்லைகள் அனைத்தையும் அழித்தும், அனைத்துப் பேறுகளையும் அளித்தும், பிறவிப் பிணி அறுத்து மோட்சம் பெற வழிகாட்டும் என்றெல்லாம் திருநீறு பூசுவதின் பயனாகத் திருமூலரும் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!


இவ்வாறாக திருநீறு பூசுவதன் தத்துவங்களைப் புரிந்து கொண்டு முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும்,  மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும், தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கு அமையும் என்பதெல்லாம் முன்னோர் அனுபவம்.  நாமும் அவ்வாறே பயனடைவோமா?

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 09-07-2013

12 comments:

 1. ஆன்மீகம் அறியத் தந்தீர்கள்...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. மிகவும் அருமையாக விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள், மிக்க நன்றி.

  ReplyDelete
 3. ஆன்மிகம் சார்ந்த காரணத்தை முன்பே அறிவேன், அறிவு சார்ந்த காரணம் இன்றே அறிகிறேன்., நன்றிகள் பல! :-)

  ReplyDelete
 4. வித்யாசமான பதிவு. இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த, நம் பண்பாடு சார்ந்த இதுபோன்ற செய்திகள் நிச்சயம் தெரிவிக்கப்படவேண்டும்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. Thx sir.. wonderful explanation

  ReplyDelete
 6. ok god info but now days what we r using is IORIGINAL THIRUNEER?

  ReplyDelete
 7. Very nice explanation. Many thanks for sharing such useful information. Please keep posting such nice articles.

  ReplyDelete
 8. Please explain about kungumam also

  ReplyDelete
 9. saiva samaya Theedchai pettavarkal(who have got saiva theedchai) still wear the thiruneeru in 16 place using their three fingers for three inch long. when they wear this thiruneeru in each plece they have to chant the proper special manthra.

  ReplyDelete