என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, September 21, 2013

தினமலரில் “சங்கீத மும்மூர்த்திகள்” விமர்சனம்

சங்கீத மும்மூர்த்திகள்


சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் இசைக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்கள். இவர்கள் அருளிய சில முக்கியப் பாடல்களின் பின்னணியை அறிமுகப்படுத்தும் இந்த நூல் எழுத்து வடிவக் கச்சேரியாக இருக்கிறது.

ரசனை நிறைந்த இந்த நூலில் இருந்து சில அரிய தகவல்கள்............->


நன்றி: தினமலர் (திருச்சி) 17-09-2013

நூலில் இருந்து சில சுவையான தகவல்கள்

ஒரு சமயம் தஞ்சை சமஸ்தானத்தில் பூலோக சாப கட்டி பொப்பிலி கேசவையாஎன்ற வித்வானுடன் சியாமா சாஸ்திரி ஒரு சங்கீதப் போட்டியில் ஈடுபட நேர்ந்தது. தாள சாஸ்திரத்தில் மிக வல்லவரான பொப்பிலி கேசவையா தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்துடன் அறிவிக்க தஞ்சையின் மானம் காக்கும் பொறுப்பு சியாமா சாஸ்திரிகள் மீது விழுந்தது. கோயிலிற்குச் சென்று பங்காரு காமாட்சி அம்மன் முன் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்த அவர் பின் மனமுருக சிந்தாமணி ராகத்தில் “தேவி ப்ரோவா சமயமிதே (தேவி என்னை நீ காக்க வேண்டிய நேரம் இது) என்று பாடினார். பின் தைரியம் வந்தவராகப் போட்டியில் கலந்து கொண்டார். பொப்பிலி கேசவையா கடினமான நீளமான  ஸிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சாஸ்திரிகள் அதைக் கிரகித்து உடனே திரும்பப் பாடி, இன்னொரு கடினமான சரபநந்தன தாளத்தில் புதிதாக ஒரு பல்லவியை பாடி அந்தப் போட்டியில் வெற்றி கண்டார்.

அக்காலத்தில் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடி மகிழ்விப்பது புதிதல்ல. எனவே தியாகராஜரைத் தமது சபைக்கு அழைத்து தம்மைப் பற்றியும் பாடச் செய்ய வேண்டுமென சரபோஜி விரும்பினார். பட்டு, பீதாம்பரம், பொற்காசுகள் எல்லாம் கொடுத்தனுப்பி அரசவைக்கு வந்து தன்னைப் பாட மன்னர் தியாகராஜருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து ‘நிதிசால சுகமாஎன்ற கிருதியைக் கல்யாண இராகத்தில் பாடினார்.
(நிதியும் செல்வமும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா, அல்லது ஸ்ரீராமனின் சன்னிதியில் சேவை புரிவது அதிக சுகம் தருமா? மனமே, இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவை தருமா, அல்லது தசரத குமாரன் இராமனைத் தியானித்துப் பாடல் அதிக சுவை தருமா? அடக்கம், சாந்த குணங்கள் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா அல்லது நல்ல மனம் படைத்த தியாகராஜன் வணங்கு தெய்வத்தைத் துதித்தல் சுகமா?)
தியாகையர் மனதிற்கு புத்தி சொல்லியும், நியாயம் சொல்லியும் பாடி இருக்கும் பாடல்கள் பலவும் நமக்காகவும், நம் மனதிற்காகவும் பாடப்பட்டது போலத் தோன்றும் அளவு இயல்பானவை. சில பாடல்களை இங்கே உதாரணத்திற்குப் பார்ப்போம்.
ஓ மனசா! ஸ்ரீ ஸாகேத ராமுனி பக்தியனே
சக்கனி ராஜ மார்க்கமுலு உண்டக சந்துல தூரனேல?
ஏ மனமே! ஸ்ரீராமபக்தி என்னும் அகலமான ராஜபாட்டை ஒன்று கடைத்தேறுவதற்கு இருக்கும் போது தீயவழிகளான சந்து பொந்துகளில் ஏன் நுழைந்து கொள்கிறாய் என்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் அமைந்தது இந்த அற்புதமான கிருதி. 

*முத்துசாமி தீட்சிதர் சாதி மத இன வேறுபாடுகளைப் பார்க்காதவர் என்பதற்கு சான்றாக அவருடைய சீடர்களில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். கமலம் என்ற தேவதாசியும் அவருடைய சிஷ்யையாக இருந்தாள். முத்துசாமி தீட்சிதரிடம் இசை கற்றுக் கொண்டிருந்த ஒரு சமயம் ஏதோ வேலையாக வீட்டினுள் சென்ற கமலம் முத்துசாமி தீட்சிதரின் மனைவி வறுமையின் காரணமாக அன்று சமைக்க ஏதும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மிகுந்த மனவருத்தம் அடைந்தார். உடனே தன் கையில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். 

விஷயம் அறிந்த முத்துசாமி தீட்சிதர் கமலத்தின் தங்க வளையல்களைத் திருப்பிக் கொடுத்து விட்டுச் சொன்னார். “கமலம். இன்று நீ எங்களுக்கு உதவலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு நீ எங்களுக்கு உதவ முடியும்? எங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நான் வணங்கும் இறைவன் தியாகராஜனுக்கு மட்டுமே உரியது. அவன் மீது நான் வைத்திருக்கும் பக்தி உண்மையானால் அவன் கண்டிப்பாக உதவுவான்என்று கூறிவிட்டு திருவாரூர் கோயிலில் இறைவன் தியாகராஜனைப் பார்த்து யதுகுல காம்போதி ராகத்தில் “தியாகராஜம் பஜரேகிருதியை மனமுருகப் பாடினார்.

அவர் வீடு திரும்பிய போது ஒரு வண்டி நிறைய உணவு தானியங்களும், சமையலுக்குத் தேவையான மற்ற பொருள்களும் இருந்தனவாம். வியப்பு மேலிட விசாரித்த போது தஞ்சாவூர் மன்னரின் மந்திரியார் ஒருவர் திருவாரூர் வந்து தங்க இருந்ததால் அரண்மனையில் இருந்து அந்த தானியங்களும், மற்ற பொருள்களும் முன்பே அனுப்பப்பட்டதாகவும் திடீரென்று அவர் வருகை ரத்தானதால் அந்த வண்டிப் பொருள்களை நல்ல வழியில் செலவிட திருவாரூரில் இருந்த அரசு அதிகாரி முத்துசாமி தீட்சிதருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிந்தது. முத்துசாமி தீட்சிதர் தன் நம்பிக்கைக்கு உடனடியாகப் பதில் சொன்ன இறைவனின் அருளில் மனம் நெகிழ்ந்து போனார். 

இது போல் சுவாரசியமான பல தகவல்கள் கொண்ட இந்த நூலைப் பெற விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க  9600123146

6 comments:

 1. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. Very interesting incidents

  ReplyDelete
 3. அருமை... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ..., சார் தொடரட்டும் தங்கள் சேவை ....,

  ReplyDelete
 5. you also know carnatic music?!
  Really you are a multi-talented person!!
  BTW, this article is as usual interesting...thank you.

  ReplyDelete
 6. My knowledge in carnatic music is limited and I collected facts for this book from many sources. Thank you.

  ReplyDelete