சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 23, 2013

ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம்!



அறிவார்ந்த ஆன்மிகம்-20


வேதாந்த தத்துவ விளக்கங்கள் எல்லாம் மெத்தப் படித்த பண்டிதர்களுக்குத் தான் விளங்கும் என்ற அபிப்பிராயம் பல ஆன்மிகவாதிகளுக்கு இருக்கிறது. ஆனால் அந்த தத்துவங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளும் போது தான் ஆன்மிகம் அறிவார்ந்ததாக அமைகிறது. அவை புரியாத வரை ஆன்மிகம் கண்மூடித்தனமான பின்பற்றுதலாகவே மாறி விடுகிறது என்பதே உண்மை.

நம் பாரத நாட்டைப் பொருத்த வரை மற்ற பல நாடுகள் உருவாகும் முன்பே நம் முன்னோர்களின் ஆன்மிக அறிவு சிகரங்களை எட்டி விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்தந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்ந்த ஆன்மிக தத்துவ சிந்தனைகள் பெரியோர்களால் சிந்திக்கப்பட்டும் உபதேசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. 

அப்படிப்பட்ட மிக முக்கிய வேதாந்த தத்துவங்களையும், அவற்றை உபதேசித்த மகான்களையும், உபதேசிக்கப்பட்ட காலத்தின் தன்மையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அப்படிப் பார்த்தால் மட்டுமே அந்த தத்துவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். முதலில் ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம் பார்ப்போம்.

த்வைதம் என்றால் சம்ஸ்கிருதத்தில் இரண்டு என்று பொருள். அத்வைதம் என்றால் அ+த்வைதம், அதாவது இரண்டில்லாதது என்று பொருள். அத்வைதம் நம் உபநிடதங்களின் ஞான சாராம்சம் என்று சொல்லலாம். அந்த சாராம்சத்தை மறந்து விட்டு ஒரு கால கட்டத்தில் பாரத மக்கள் உலக வாழ்க்கை சுகங்களுக்காகவும், செல்வங்களிற்காகவும் வேண்டி சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அவற்றை மறுத்து கௌதம புத்தர் உபதேசித்த கருத்துகள் பிரபலமாகி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பின்பற்றப்பட ஆரம்பித்தன. அப்படிப்பட்ட காலத்தில், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஆதிசங்கரர்.

கௌதம புத்தரின் கருத்துகள் பலவும் உபநிடதங்களில் சொல்லப்பட்டவையே. அதனால் ஆதிசங்கரர் உபதேசித்தவற்றில் பல அம்சங்களில் கௌதம புத்தரின் கருத்துக்களின் சாயல் இருந்தன.  அதனால் அவரை “கௌதம புத்தரின் இன்னொரு நகல்என்று வைதீகர்கள் கடுமையாக விமரிசித்தனர். ஆனால் கண்மூடித்தனமான சடங்குகள், சம்பிரதாயங்களை கௌதம புத்தரைப் போலவே ஆதிசங்கரரும் எதிர்த்தாரே ஒழிய மற்றபடி கௌதம புத்தரைப் போல அல்லாமல் கடவுள் ஒன்றே என்ற வேதாந்தப் பேருண்மையைப் போதித்து இந்திய ஞான மார்க்கத்தை மீட்டு நெறிப்படுத்தியவர் ஆதிசங்கரர்.

இனி அவர் உபதேசித்த அத்வைத சாராம்சத்தைப் பார்ப்போம்.

அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது. உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது. அத்வைதத்தின் படி நான்,  நீ,  இன்னொருவன், ஜீவாத்மா  போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான். நாம் காண்கின்ற எல்லா  வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

இதை சில உதாரணங்கள் மூலம் சொன்னால் நன்றாக விளங்கும்.

திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம். வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா? திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே அல்லவா? அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே அல்லவா? அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன. பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது. பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம். அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம். அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன. ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

ஒரு காலிப்  பானையை குளத்தில் மூழ்க வைத்தால்  பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா? பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா? பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

அத்வைத சாரத்தை ஈஸ்வரனே ஆதிசங்கரருக்குப் போதித்ததாய் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன், நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் “விலகி நில். எங்களுக்குப் போக வழிவிடுஎன்று சொன்னார்.

புலையன் கேட்டான். “யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா? உடலுக்குள் இருக்கும் என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே. அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான். ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக முடியும்?

அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது. தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

உடனே புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் மணீஷ பஞ்சகம் என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.

இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது. விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார். சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு. ரமண மகரிஷி மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரும் அத்வைத மார்க்கத்தில் பயணித்தவர்களே. அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை!

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் -26-07-2013



10 comments:

  1. Excellent !!

    / PK Pillai

    ReplyDelete
  2. அத்வைதக் கோட்பாடு நன்கு புரிகிறது. நன்றி.

    ReplyDelete
  3. எங்கும் நிறைந்தவன்

    ReplyDelete
  4. மிகவும் நன்றி. வெகுநாள் நான் தேடிய , அத்வைத பொருளை அறிய உதவியதர்க்கு .

    ReplyDelete
  5. சுருக்கமான விவரமான குழப்பங்கள் அற்ற தெளிவான நீண்ட காலம் தேடப்பட்ட பொருளுக்கான பொருள் ஆனது. சிறப்பானது.

    ReplyDelete