சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 2, 2013

ஓம் மந்திரச் சிறப்பு


அறிவார்ந்த ஆன்மிகம்-17

ம் நாட்டில் மிகவும் பக்தியுடன் உச்சரிக்கப்படும் புனித மந்திரம் ஓம். இதை பிரணவ மந்திரம் என்றும் இந்த பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாகவும், ஓம் என்பது இறைவனின் ஒலி வடிவமாகவும் வேத முனிவர்கள் கருதினார்கள். வேதங்களின் சாரம் அனைத்தும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன. இந்த ஓம் மந்திரம்  உச்சரிப்பவர்களின் உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு கூர்மையையும் ஏற்படுத்தும்  நன்மை தரும் மின்னதிர்வுகளை உண்டாக்குகிறது.

நம் நாட்டில் பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் ஓம் என்ற ஒலியுடன் தான் தொடங்குகின்றன. எல்லா மங்கள நிகழ்ச்சிகளும் ஓம் என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன. ஓம் மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துவதால் தியானம் செய்யும் பொழுதும் ஓம் எனும் மந்திரம் மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. ஓம் எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. ஓம் ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது.

ஓம் என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் அ, உ மற்றும் ம் என்ற மூன்றெழுத்துகளால் உருவாகிறது. அ என்னும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து உ சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது ம் எனும் ஒலியில் அது முடிவடைகிறது. இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று உணர்வு நிலைகளையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் குறிப்பதாக சொல்லப்படுகின்றன.



பகவத்கீதையில் கிருஷ்ணர் எட்டாவது அத்தியாயத்தில் பதின்மூன்றாவது சுலோகத்தில் கூறுகிறார்.  "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
"ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
 ஓமெனு   ஓங்காரத்   துள்ளே   உருவம்
 ஓமெனு  ஓங்காரத்    துள்ளே   பல பேதம்
 ஓமெனு  ஓங்காரம்   ஒண்முத்தி சித்தியே "

என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.

ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது  முதலில் ஒரு சொல்லாகவும்,  பின் உருவமாகவும், அதன் விளக்கங்கள் பலவாகவும், அதை உச்சரித்து தியானிப்பதால் முக்தியும், சித்தியும் கிட்டும் என்றும் திருமூலர் கூறுகிறார்.

ஓம் மந்திரத்தை தியானித்து அறிபவன் தான் விரும்பியது அனைத்தையும் பெறுவான் என்று கதோபநிடதம் கூறுகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஓம் மந்திரம் அறிவியல் ரீதியாகவும் ஆராயப்பட்டுள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். அந்த ஆராய்ச்சிகள் துவங்கப்பட்ட விதத்தையும், அதன் முடிவுகளையும் சற்று விளக்கமாகவே பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே  மனித உடல் அமைப்பில் இசை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் மனித உடல் மீது மந்திர ஒலிகளின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்பட ஆரம்பித்தது. 1993 ல் டெல்லஸ் (Telles.S) என்ற ஆராய்ச்சியாளர் 25 முதல் 45 வயது உள்ள ஓம் மந்திர தியானத்தில் பயிற்சி உள்ள ஒன்பது ஆண்களையும், அதே வயதுப் பிரிவில் ஓம் மந்திரப் பயிற்சி இல்லாத வேறு ஒன்பது ஆண்களையும் தேர்ந்தெடுத்து இரு குழுவிற்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வு 1996  வரை நடந்தது. இந்த ஆய்வின் முடிவில் ஓம் மந்திரம் ஜெபித்து தியானம் செய்பவர்களுடைய சுவாசம் சீராகவும், இதயத்துடிப்பும் குறைவாகவும் ஆகி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் கண்டறிந்தார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் (Ajay Anil Gurjar) அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் (Siddharth A Ladhake)  இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.  இக்காலத்தில் வியாபாரம் செய்வோர்,  தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாட்டைக் களைய நம் முன்னோர் சொன்ன ஓம் மந்திர உச்சரிப்பும் தியானமும் எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதை அறிய அவர்கள் ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.  

25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை அவர்கள் நடத்தினர். அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து அதன் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர். 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன! இந்த ஆய்வின் முடிவில்
1)      ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது;
2)      எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3)      ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வுகள் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது
என்று கண்டார்கள்.

மேலும் உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மாமருந்து ஓம் மந்திர உச்சரிப்பு தான் என்று அவர்கள்  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர். ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் (wavelet transforms) மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

இந்த குர்ஜர்-லடாகே ஆராய்ச்சி முடிவுகள் "Time-Frequency Analysis of Chanting Sanskrit Divine Sound “OM” Mantra" என்ற தலைப்பில் சர்வதேச அரங்கில் (International Journal of Computer Science and Network Security) 2008 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. 


இப்படி ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சிறப்பிக்கப்பட்ட ஓம் மந்திரச் சிறப்பை நாமும் புரிந்து கொண்டு உச்சரித்து பயன்பெறுவோமா?


-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 02.07.2013

5 comments:

  1. Hi boss,
    Thalaivan- in Speciality continues........
    G.Ganesh,
    Saudi Arabia.

    ReplyDelete
  2. விஞ்ஞான ஆராய்ச்சிகளோடு விளக்கியது சிறப்பு. வாழ்த்துக்கள்.

    தங்கள் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நூலை சமீபத்தில் தான் படித்து முடித்தேன். ஒரு சொல்லில் சொல்ல வேண்டுமானால் அற்புதம். வாழ்விற்கு வழிகாட்டும் ஞானச்சுரங்கம் அந்த நூல். நன்றி.

    ReplyDelete
  3. Thanks for this excellent writing. The Mandukya Upanishad exposits the Om very deeply. When time permits, can you elaborate on the significance of the three states Waking, Dream and Deep Sleep?

    ReplyDelete
  4. Hello, Though i registered my e mail id, I am not getting your articles. Why ? pl look into it & do the needful.

    ReplyDelete
    Replies
    1. Sir, sending articles is done by google. It is not being done by bloggers individually.

      Delete