என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 1, 2025

யோகி 132

 

குமரேசன் திடுக்கிட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “தெரியலை. யாரோ எதோ நம்பர் எழுதி வீசியிருக்காங்கஎன்று சாதாரணமாகச் சொன்னான்.

அந்தக் கண்காணிப்பாளன் குமரேசனிடமிருந்து அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டான். எழுதப்பட்ட எண் ஏதோ அலைபேசி எண் போலிருந்தது. அவன் சந்தேகத்தோடு குமரேசனைப் பார்த்தான். குமரேசனோ களைகளைத் தன் சட்டியில் போட ஆரம்பித்திருந்தான். அந்தக் காகிதத்தைத் திரும்ப வாங்கவும் அவன் ஆர்வம் காட்டவில்லை. இதில் அவன் பங்கு எதாவது இருந்தால் கண்டிப்பாக அதைத் திரும்ப வாங்கத்தான் அவன் பார்த்திருக்க வேண்டும்

சற்று முன் இந்த இடத்தில் ஷ்ரவன் தான் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்பாளன் ஷ்ரவனை அழைத்துக் கேட்டான். “ஜீ. இந்தக் காகிதம் உங்களுடையதா?”

ஷ்ரவன் திரும்பிப் பார்த்து, குழப்பம் காட்டிச் சொன்னான். “இல்லையே. என்ன அது?”

எதோ போன் நம்பர் போலத் தெரியுது.”

ஷ்ரவன் கேட்டான். “பெயர் இருக்கா?”

அவன் அந்தக் கேள்வியைக் கேட்டது அவன் அந்தத் தாளைப் பார்க்கவே இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

கண்காணிப்பாளன் இல்லையென்றதும் ஷ்ரவன் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கும் அந்தக் காகிதத்தை வாங்கிக் கொள்வதிலோ, என்ன என்று பார்ப்பதிலோ ஆர்வம் இருக்கவில்லை. கண்காணிப்பாளன் யோசித்தான். யாரோ எழுதி வைத்துக் கொண்டு, வேலை முடிந்த பிறகு வீசி எறிந்திருக்கலாம். அது காற்றில் இங்கே வந்திருக்கலாம். எதற்கும் கண்ணனிடம் கொடுத்து விடுவது உத்தமம் என்று எண்ணிய அந்தக் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.  பின் அவன் அங்கிருந்து நகர்ந்தாலும் அவன் பார்வை ஷ்ரவன் மீதும், குமரேசன் மீதுமே இருந்தது. ஆனால் அவர்களோ தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட இல்லை.    

குமரேசன் அங்கிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு எதிர்ப்புறம் சென்று விட்டான். அவனோ ஷ்ரவனோ அந்தக் காகிதம் என்னவாயிற்று என்று அறிந்து கொள்ளக்கூட ஆர்வம் காட்டவில்லை. ஷ்ரவனும் வேறு பக்கம் வேலைக்குப் போனவுடன் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தை, கண்ணனிடம் கொண்டு போய் கொடுத்தான்.

தோட்டக்காரன் மருதகாசி இந்தக் காகிதத்தை களைகள்ல இருந்து எடுத்து பார்த்துகிட்டு இருந்ததை நான் பார்த்தேன். அவனுக்கு அது என்னன்னே தெரியல.  கொஞ்சம் தள்ளி ஷ்ரவனானந்தா இருந்தார். அவர் கிட்ட கேட்டதுக்கு, கீழே விழுந்திருந்ததாகவும், அதை எடுத்து அவர் தான் அந்த களைகளோட போட்டதாகவும் சொன்னார். எதுக்கும் உங்க பார்வைக்குக் கொண்டு வந்துடலாம்னு தான் எடுத்துகிட்டு வந்தேன்.”

அந்தக் காகிதத்தை வாங்கி அவனை அனுப்பி விட்டு கண்ணன் அதிலுள்ள எண்ணைத் தன் அலைபேசியில் அழைத்தார். ”ஹலோ

வணக்கம். மாரிமுத்து நாடார் கடை. சொல்லுங்க.”

நாங்க யோகாலயத்துல இருந்து பேசறோம்.”

யோகாலயமா? அது எங்கே இருக்கு?”

உங்க கடை எங்கேயிருக்கு?”

சாத்தூர்.” 

கண்ணன் இணைப்பைத் துண்டித்தார். பின் யோசித்து விட்டு தலைகீழாய் அந்த எண்களை அடித்தார். “இந்த எண் உபயோகத்தில் இல்லைஎன்ற அறிவிப்பு வந்தது. கண்ணன் சற்று யோசித்து விட்டு, எழுதப்பட்டிருந்த எண்ணிற்கு அடுத்த எண்ணை அழைத்தார். “குட் மார்னிங். காவேரி நர்சிங் ஹோம் ஹியர்என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. எழுதப்பட்டு இருந்த எண்ணுக்கு முந்தைய எண்ணை அவர் அழைத்த போது ஒரு பெண் டெய்லர் உச்சஸ்தாயியில் பேசினாள். சந்தேகம் தெளிந்த கண்ணன் அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டு அதை மறந்தார். 

ஷ்ரவன் எழுதியிருந்த அலைபேசி எண்ணில் கடைசி இரண்டு எண்களை திருப்பிப் போட்டு கண்ணன் அழைத்திருந்தால் அவர் ஸ்ரேயாவிடம் பேசி இருக்கலாம். ஒரு பொது இடத்தில் ரகசியமாய் ஒரு அலைபேசி எண்ணைப் பகிரும் போது அது கவனிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் கடைசி இரண்டு எண்களை மாற்றி எழுதுவது ஷ்ரவன் பின்பற்றும் வழக்கம். அதை அவன் ஏற்கெனவே குமரேசனிடமும் தெரிவித்திருக்கிறான். குமரேசன் அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்தவுடனேயே அந்த எண்ணை மனப்பாடம் செய்து விட்டிருந்ததால் அவனும், ஷ்ரவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லைஆனால் இனி அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச முயற்சி செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் தடவை தெளிந்த சந்தேகம் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உறுதிப்பட்டு விடக்கூடாது

ஆனால் தொலைவில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கல்பனானந்தாவின் மனம் படபடத்திருந்தது. அந்தக் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு போகும் போது அவள் பெரும் பதற்றத்தோடு ஷ்ரவனைப் பார்த்தாள். அவனும், மருதகாசியும் அமைதியாய் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்குத் திகைப்பாய் இருந்தது. உடனடியாக பாண்டியனின் ஆட்கள் வந்து அவர்களிருவரையும் ஆக்கிரமிக்கும் காட்சியை எண்ணி அவள் பயந்திருந்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்காதது அவளை ஆச்சரியப்படுத்தியது. இரண்டு நாட்கள் முன்பு வரை யோகாலயத்தில் இப்படியெல்லாம் நடக்க முடியும் என்பதும், நடத்துபவர்கள் சிக்காமல் தப்பிக்க முடியும் என்பதும் அவளால் சிறிதும் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாக இருந்தது.

மனிதர்களைக் கூர்ந்து கவனித்து எடை போடுவதில் அவள் பாண்டியனுக்குச் சிறிதும் சளைத்தவள் அல்ல. பதின்மப் பருவத்திலிருந்தே சுற்றியிருக்கும் சூழ்நிலையையும், ஆட்களையும்  மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து, கணித்துச் செயல்படும் பழக்கம் அவளிடம் இருந்து வருகிறது. அதை அவள் சரிவரச் செய்து வருவதனால் தான் அவள் தன்னைத் தற்காத்துக் கொண்டு, இன்றும் தாக்குப்பிடித்து வாழ்ந்து வருகிறாள்.  இரண்டு நாட்களாகவே இது வரை நடந்திருக்கும் சம்பவங்களை எல்லாம் அவள் கோர்வைப்படுத்தி யோசித்து வருகிறாள். அவள் மட்டுமே அறிந்தது, அங்கு நடப்பதைக் கவனித்து அறிந்தது, தற்போது நடந்து வருவது எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது.  

ஷ்ரவனிடம் என்ன வித்தைகள் எல்லாம் கைவசம் உள்ளன, அதையெல்லாம் வைத்து அவன் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறான் என்பதெல்லாம் தெரியா விட்டாலும் அவன்  வந்த நோக்கம் அவளுக்குத் தெரிந்து விட்டது. அவனுடைய பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் அவள் யூகித்து விட்டாள். அதை பிரம்மானந்தாவுக்கும், பாண்டியனுக்கும் தெரியாதபடி அவன் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களோடு நெருக்கமாகியும் வருவது பேராச்சரியம் தான். முக்கியமாக, பாண்டியன் கண்களில் மண்ணைத் தூவி நெருக்கமாக முடிவது சாதாரண விஷயம் அல்ல. என்றோ அவள் எதிர்பார்த்திருந்த நல்ல காலம் நெருங்கி வருவது போல் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அதனால் தான் அவள் அவன் பக்கம் சாயத் தீர்மானித்தாள். அவனும் பிரச்சினையில் மாட்டி, அவளையும் மாட்டி விடக்கூடியவன் அல்ல என்ற நம்பிக்கையும் அவளுக்குப் பிறந்திருந்தது.

கல்பனானந்தா எல்லோர் வேலைகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டே வருகையில் ஷ்ரவன் அருகிலும் வந்தாள். அவன் களைகளைப் பிடுங்கி, சரிப்படுத்தியிருக்கும் செடிகளைப் பார்த்தபடியே தாழ்ந்த குரலில் சொன்னாள். “நீங்கள் இருவரும் மாட்டிக் கொண்டீர்கள் என்று நினைத்து நான் பயந்து விட்டேன்.”

அவள் சொன்னது அவனை ஆச்சரியப்படுத்தியது. அவள் அவர்களுக்காகப் பயந்ததும், அதை வெளிப்படையாகத் தெரிவித்ததும் அவளுடைய அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் உறுதிப்படுத்தியது. “நன்றி சுவாமினிஎன்று அவனும் செடிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

ஆனாலும் பாண்டியனை தொடர்ந்து ஏமாற்ற முடிவது சுலபமல்ல. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

தெரியும் சுவாமினி

அவள் நகர்ந்து விட்டாள். மற்ற துறவிகளுடன் அவள் பேசும் கால அளவு தான் அவனிடமும் பேசியிருக்கிறாள். அருகிலிருந்த தோட்டத்திற்குச் சென்ற அவள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த துறவியிடம் நின்று ஏதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது ஷ்ரவனின் காதுகளில் விழுந்தது.

ஷ்ரவனுக்கும் இப்போது ஒரு பெரிய கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. அவள் அவனை யூகித்தது போலவே அவனும் அவளை யூகித்து விட்டான். சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதியது கல்பனானந்தாவாகவே இருக்க வேண்டும். சைத்ரா அவள் கண்காணிப்பில் தான் அதிகம் வேலை செய்திருக்கிறாள். சைத்ராவுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதையும் மற்றவர்களுக்கு முன் அவளுக்குத் தெரியத்தான் வாய்ப்பு அதிகம். முக்தானந்தா அவளைப் பற்றிச் சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பெண்களுக்கு நேரும் கொடுமையைச் சகிக்க முடியாதவள் அவள் என்றும் தெரிகிறது. தபால் அனுப்பக் கூட அவளுக்கே வாய்ப்பு அதிகம்

யோகாலயத்தில் கூடுதல் செல்வாக்கு இருப்பவளாக இருந்த போதும் அவளும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஒரு முறை அவள் தன் சாமர்த்தியத்தால் பிடிபடாமல் தப்பித்திருக்கலாம். ஆனால் எப்படி அவனும் குமரேசனும் சந்தேகத்தைக் கிளப்பும்படியான இன்னொரு முயற்சி எடுக்க மாட்டார்களோ அதே போல் அவளும் இனி சந்தேகத்தைக் கிளப்பும் எந்தக் காரியத்தையும் செய்து விட முடியாது. ஒரு முறை காப்பாற்றிய அதிர்ஷ்டம், இன்னொரு முறையும் காப்பாற்றும் என்பது நிச்சயமில்லை. ஷ்ரவனுக்கு அவளுடைய உண்மை மட்டுமல்லாமல் அவள் நிலைமையும் புரிந்தது.

(தொடரும்)

என்.கணேசன்





No comments:

Post a Comment