என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 27, 2025

சாணக்கியன் 189

 

ந்திரகுப்தனும், சாரங்கராவும் சாணக்கியரை வியப்புடன் பார்த்தார்கள். மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிகளையும், சதித்திட்டங்களையும் அவர் துல்லியமாக அறியும் அறிவு படைத்தவராக இருந்த போதும் கூட முடிந்த வரை சதிகாரர்களை முந்திக் கொண்டு அவர் சதிச்செயல்களில் ஈடுபட்டதில்லை. சதி செய்பவர்கள் முதல் அடியை எடுத்து வைத்த பின்பே அவர் பதிலுக்குச் செய்ய வேண்டியதைச் செய்வது அவரது மாறாத வழக்கமாக இருந்தது.

 

பர்வதராஜன் ஆரம்பத்தில் இருந்தே தன் இலாபத்திலேயே குறியாயிருந்தானேயொழிய அதற்கு வேண்டிய பொது முயற்சிகளில் அலட்சியத்தையே காட்டினான். கூடுமான வரை குறைவாய் கஷ்டப்பட்டு, இலாபத்தில் கூடுமான வரை அதிகப் பங்கை பிடுங்கிக் கொள்ள ஆசைப்பட்டான். அப்படிப் பெறுவது தன் சாமர்த்தியமென்று நம்பினான். சாமர்த்தியத்தில் சாணக்கியரை மிஞ்ச வேண்டும் என்பதில் குறியாக இருந்த அவன் உழைப்பிலும், பொதுநல அக்கறையிலும் அவரைப் பின்பற்றுவதைத் தவிர்த்தான்.  அவற்றை எல்லாம் தன் சாமர்த்தியமான பேச்சினாலேயே சரிக்கட்டி விடலாம் என்று நம்பினான். அப்படிப்பட்டவனை முழுமையாக அறிந்திருந்தாலும் கூட அவன் அவர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கும் வரை அவர் பொறுமையாக சகித்தே வந்ததை ஆச்சரியத்துடன் இருவருமே கவனித்து வந்திருக்கிறார்கள்.

 

சாரங்கராவ் சொன்னான். “நான் தனநந்தனிடம் பெருந்தன்மை காட்டியதைப் போல் பர்வதராஜனிடமும் காட்டி விடுவீர்களோ என்று பயந்தேன் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் சொன்னார். “எதிரியிடம் பெருந்தன்மை காட்டலாம். ஆனால் துரோகியிடம் பெருந்தன்மை காட்டுவது அவனால் பலவீனமாகவே எடுத்துக் கொள்ளப்படும். அது அவன் கூடுதல் துரோகம் செய்ய வழிவகுத்து விடும். அதனால் துரோகத்திற்குத் தண்டனையே சரியான பதில். அந்த உத்தேசம் இருந்து நம்முடன் பழகுபவர்களுக்கும் அது சரியான எச்சரிக்கையாக இருக்கும். தனநந்தனிடம் நான் பெருந்தன்மையைக் காட்ட முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று  துர்தரா. சந்திரகுப்தனை மணந்து கொள்ளப்போகும் அவள் நாம் அவள் தந்தையை நடத்திய விதத்தில் வேதனையோடு மண வாழ்க்கையில் நுழைவதை நான் விரும்பவில்லை. இன்னொரு காரணம், சந்திரகுப்தனின் பெருந்தன்மை மக்களால் பாரபட்சமில்லாமல் பாராட்டப்படும். இனி ஆளப் போகும் மன்னனைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் குடிமக்களுக்கும், அறிஞர்களுக்கும் இருப்பது நமக்குப் பயன்படும்.”

 

சந்திரகுப்தன் அவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து அவன் நன்மைகளையே உத்தேசித்து தனநந்தனை நடத்திய விதத்தில் மனம் நெகிழ்ந்தான். அவர் உயரத்திற்கு ஒருவன் உயர முடிவது கஷ்டம் என்று ஆத்மார்த்தமாக நம்பினான். துர்தராவைப் பார்த்த முதல் கணத்திலேயே மனதைப் பறி கொடுத்த போதே எத்தனையோ முறை அவளைஎதிரியின் மகள்’, ‘எதிரியின் மகள்என்று சொல்லி விலகிக் கொள்ள அவன் கடுமையாக முயற்சி செய்திருக்கிறான். ஆனால் மனம் அவன் முயற்சியைச் சிறிதும் இலட்சியம் செய்யவில்லை. அவர் மறுத்திருந்தால் நிச்சயமாக அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருக்க மாட்டான். ஆனால் அவரே அவனிடம் சொன்னது போல் மீதமுள்ள வாழ்க்கையில் ஒரு வெறுமையை அவன் உணர்ந்தபடியே வாழ வேண்டி இருந்திருக்கும். அவர் அதனைப் புரிந்து கொண்டு நடந்த விதத்திற்கு அவன் வாழ்நாளெல்லாம் நன்றிக்கடன் பட்டிருப்பதை அவன் திரும்பத் திரும்ப எண்ணுகிறான்

 

சந்திரகுப்தனுக்கு இப்போது விளங்காமல் இருப்பது ராக்ஷசர் விஷயத்தில் அவர் என்ன உத்தேசித்திருக்கிறார் என்பது தான். ராக்ஷசர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து கொண்டு செய்வதை எல்லாம் சாணக்கியர் அனுமதித்து, உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாரேயொழிய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

 

சந்திரகுப்தன் கேட்டான். “இனி ராக்ஷசரை நாம் எப்படி கையாளப் போகிறோம் ஆச்சாரியரே?”

 

சாரங்கராவும் ஆர்வத்துடன் கேட்டான். “பர்வதராஜனோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டிய அவருக்கும் துரோகத்திற்கான தண்டனை தானா?”

 

சாணக்கியர் சொன்னார். ”இருவர் திட்டமும் ஒன்றே என்றாலும் ராக்ஷசர் செயல் துரோகமல்ல. நம்பிக்கைக்கோ, கடமைக்கோ எதிர்மாறாகவும் வஞ்சமாகவும் செயல்படுவது தான் துரோகம். எதிரியை அழிக்க ராக்ஷசர் திட்டமிடுவது இயற்கையே. சொல்லப் போனால் தனநந்தனின் பிரதம அமைச்சராக அவர் இந்தச் சூழலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார். அவருடைய அறிவு, அனுபவம், செயல்பாடுகள் எல்லாம் யோசித்துப் பார்க்கையில் அவர் நம்முடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவரே ஒழிய விலக்கப்பட வேண்டியவரோ, தண்டிக்கப்பட வேண்டியவரோ அல்ல.”

 

அவர்கள் இருவரும் திகைத்தார்கள்.

 

ராக்ஷசர் மலைகேதுவிடமிருந்து பதில் வரும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்து போனார். ஒரு நாள் ஜீவசித்தி வந்து அவரிடம் தகவல் சொன்னான். “ஹிமவாதகூட இளவரசர் ஹிமவாதகூடம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகவும், நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது பிரபு

 

ராக்ஷசர் திகைத்தார். “அவர்களுடன் சேர்ந்து மலைகேதுவும் அல்லவா போர் தொடுத்து வர வேண்டும்? அவன் பிரிந்து ஹிமவாதகூடம் போவது ஏன்?”

 

ஜீவசித்தி சொன்னான். “அந்த மூன்று மன்னர்களும் கூட போர் தொடுத்து வரவில்லை பிரபு. சப்தமியன்று நடைபெறவிருக்கும் சந்திரகுப்தரின் திருமணத்திலும், தசமியன்று நடைபெறவிருக்கும் சந்திரகுப்தரின் பட்டாபிஷேகத்திலும் கலந்து கொள்ளத் தான் வருகிறார்கள்

 

ராக்ஷசரின் திகைப்பு இரட்டிப்பாகியது. அவர் பெரிதாக நம்பியிருந்த மலைகேதுவும் இப்படிப் பின்வாங்குவான் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படி மனம் மாறும்படியாக என்ன நடந்து இருக்கும் என்று அவருக்குப் புரியவில்லை. அவர் விளக்கம் கேட்ட போது ஜீவசித்தியும் தெரியவில்லை என்று சொன்னான். காவலர் தலைவனான அவன் காதில் விழுந்த தகவல்களைச் சொல்லலாமே ஒழிய நேரடி நிலவரம் சொல்லக்கூடியவர்கள் ஒற்றர்களே. நிலைமை மோசமாகிக் கொண்டே போவதால் ராக்ஷசர் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டார். உடனடியாக எதாவது செய்யா விட்டால் பிறகு செய்யும் படியாக எதுவுமிருக்காது....

 

ராக்ஷசர் சொன்னார். “நான் மன்னரை ஒரு முறை சந்திக்க வேண்டும் ஜீவசித்தி

 

ஜீவசித்தி சொன்னான். “சாணக்கியரின் அனுமதியில்லாமல் அது முடியாத காரியம் பிரபு. மன்னர் கானகத்தில் இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பது சாணக்கியரின் வீரர்களும், பணியாட்களும் தான். மன்னரின் இருப்பிடத்தில் இருந்து ஒரு காத தூரத்தில் நீங்கள் எட்டினாலும் அது சாணக்கியரின் கவனத்தை எட்டாமல் இருக்காது

 

ராக்ஷசர் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் நான் என் ஒற்றர் தலைவனைச் சந்திக்க வேண்டும் ஜீவசித்தி. அதற்கு ஏற்பாடு செய்

 

ஜீவசித்தி சற்று தயக்கம் காட்டினான். ராக்ஷசர் முடிவாகச் சொன்னார். “இதிலும் ஆபத்து இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் முடிவெடுத்து எதாவது செய்தாக வேண்டும் ஜீவசித்தி. அதற்கு எனக்கு உண்மை நிலவரம் தெரிய வேண்டும். நான் பிடிபட்டாலும் பரவாயில்லை. இனியும் நான் பாதுகாப்பு கருதி மறைந்திருப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் துர்தராவின் திருமணமும், சந்திரகுப்தனின் பட்டாபிஷேகமும் முடிந்த பின் நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. செய்வது எதுவானாலும் நான் உடனடியாகச் செய்ய வேண்டும்.”

 

ஜீவசித்தியிடம் சாணக்கியர் அன்று காலை தான் இந்தக் கோரிக்கை இனி எந்த நேரத்திலும் ராக்ஷசரிடமிருந்து வரும் என்று சொல்லி இருந்தார். ”தயக்கம் காட்டி விட்டு ஒத்துக் கொள். அவர்கள் சந்தித்துக் கொள்ள ஏற்பாடும் செய்து கொடுஎன்று அனுமதியும் தந்திருந்தார். அதனால் ஜீவசித்தி மேலும் சிறிது யோசிப்பது போல் காட்டி விட்டுச் சம்மதித்தான்.

 

அன்றிரவு பர்வதராஜனைச் சந்தித்த அதே கட்டிடத்திற்குச் சென்று ராக்ஷசர் காத்திருந்தார். நள்ளிரவு கழிந்த பின் ஒற்றர் தலைவன்  பதுங்கியபடி வந்தான். ராக்ஷசரைக் கண்டவுடன் அவன் கண்கலங்கினான். எப்போதும் அதிகார நிலையிலேயே அவரை இது வரை கண்டிருந்த அவனுக்கு இப்போது அவர் இப்படித் தலைமறைவாக இருக்க நேர்ந்த சமயத்தில் காண்பதுது மிகுந்த வேதனையாக இருந்தது. பரிதாபகரமாக இருந்த தனநந்தனை கானகத்தில் தொலைவில் பார்த்த போது கூட அவன் இப்படி உணரவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் தனநந்தன் செய்ததற்கெல்லாம் சேர்த்து அனுபவிக்கிறான் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ராக்‌ஷசர் கடுமையாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் நோக்கத்தில் தவறில்லாத மனிதர் என்று அவன் அனுபவத்தில் அறிந்திருந்தான்.  

 

ராக்ஷசர் அவன் கண்கலங்கியதில் மனம் நெகிழ்ந்தபடி அவனிடம் கேட்டார். “மகதம் எப்படி இருக்கிறது?”

 

(தொடரும்)

என்.கணேசன்       



 

No comments:

Post a Comment