முதல் கேள்வியாக மகத நலனையே ராக்ஷசர் விசாரித்ததில் மனம் நெகிழ்ந்த ஒற்றர் தலைவன் அவருக்குத் தரவிருக்கும் பதிலுக்காக வருத்தப்பட்டான். ஆனாலும் அவர் எக்காலத்திலும் உண்மை நிலையையே அறிய ஆசைப்படுபவர் என்பதால் உண்மையையே அவரிடம் சொன்னான். ”மகதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது பிரபு. ஆட்சி மாற்றத்தால் மக்கள் கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்கிறார்கள்.”
உண்மை அவரைச் சுட்டது. இன்றைய கஷ்டமும், நஷ்டமும் தனிமனிதர்களின் கஷ்ட நஷ்டங்களாகவே இருக்கின்றன என்பது புரிந்தது. அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய தனிமனிதர்களின் கஷ்ட நஷ்டங்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்ட மனநிலையிலும் இருப்பது தனநந்தனுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியின் அளவை அவருக்குச் சுட்டிக் காட்டியது. அரசன் என்ன செய்தாலும் என்றும் அரசனாகவே இருப்பான் என்ற தப்புக் கணக்கை தனநந்தன் போட்டதை அவரைப் போன்ற அமைச்சர்களும் கூடத் திருத்த முற்படவில்லை…
ராக்ஷசர் மன உறுத்தலைத் தள்ளி வைத்துக் கேட்டார். “இளவரசி எப்படி இருக்கிறார்?”
“அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார் பிரபு”
ராக்ஷசர் திகைத்தார். அவர் இந்த பதிலைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் திகைப்பைப் பார்த்தவுடனேயே அவர் எண்ண ஓட்டத்தை யூகித்த ஒற்றர் தலைவன் சொன்னான். “இளவரசியின் விருப்பத்துடன் தான் இத்திருமணம் நடக்கின்றது பிரபு”
ராக்ஷசருக்கு ஒற்றர் தலைவன் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. மற்றவர்கள் சொல்லியிருந்தால் பரப்பப்பட்ட பொய்யைத் திரும்பச் சொல்கிறார்கள் என்று எண்ணியிருப்பார். ஒற்றர் தலைவன் அப்படிச் சொல்பவன் அல்ல.
அவர் கேட்டார். “எதிரியை இளவரசி எப்படி விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. அதுவும் சாதாரண எதிரியல்ல. அரசரைத் தோற்கடித்து கானகத்துக்கு விரட்டியடித்த எதிரி என்கிற போது வெறுப்பைத் தவிர வேறு எதுவும் இளவரசியின் மனதில் எழுந்திருக்கக் கூடாதே”
ஒற்றர் தலைவன் சொன்னான். “மனித மனம் யார் எதிர்பார்ப்பின்படியும் எண்ணிப் பார்ப்பதில்லை பிரபு. இளவரசிக்குத் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்ற ஆசுவாசம் இருக்கலாம். எதிரி கானகத்துக்கு விரட்டியடித்ததை வனப்பிரஸ்தம் அனுப்பி வைத்ததாக இளவரசி எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது. ஓரளவு பட்டத்தரசியும் அந்த மனநிலையிலேயே இருக்கிறார் என்பதே உண்மை பிரபு”
ராக்ஷசருக்குத் திகைப்பு பன்மடங்காக உயர்ந்தது. மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த அவருக்கு, அரசரின் மனைவி, மகள் மனநிலையை ஜீரணிக்க முடியவில்லை. நாட்டை வெற்றி கொண்டு, மக்கள் மனதை வெற்றி கொண்டு கடைசியில் மன்னர் குடும்பத்தினர் மனதையும் வெற்றி கொண்ட சாணக்கியரின் வெற்றி பரிபூரண வெற்றியாக இப்போது அவருக்குத் தோன்றியது.
கசந்த மனதுடன் தன் அடுத்த கேள்வியை ராக்ஷசர் கேட்டார். “மலைகேது இங்கு போர் தொடுத்து வருவதை உறுதி செய்ய என்னிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தான். ஆனால் பின் அவனிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இன்று காலை தான் அவன் ஹிமவாதகூடம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், மற்ற மன்னர்கள் இங்கு வந்து கொண்டு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். திடீரென்று இந்த மாற்றம் எப்படி நடந்தது?”
“மலைகேது பர்வதராஜன் அளவுக்கு புத்திசாலியோ, உறுதியானவனோ அல்ல பிரபு. அவன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கத் துடித்தாலும் மற்ற மன்னர்கள் ஆரம்பத்திலிருந்தே அதில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. அவனாலும் அவர்கள் மனதை மாற்ற முடியவில்லை. சாணக்கியர் மீது அவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்து கொண்டே இருந்தது. பலம் குறைவாக இருந்த காலத்திலேயே யவன சத்ரப்களை அவரால் ஒதுக்கவும், கொல்லவும் முடிந்ததே அவருக்கு எதிராக இயங்க அவர்களைத் தயங்க வைத்தது. அப்போதே அப்படி சாகசம் புரிந்தவரை, இப்போது அவர் அசுரபலம் பெற்ற பின் எதிர்ப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று கணக்குப் போட்டார்கள். அப்படித் தயங்கிய அவர்களுக்கு சாணக்கியர் சந்திரகுப்தன் திருமணத்திற்கும், பட்டாபிஷேகத்திற்கும் அழைப்பு விடுத்தவுடன் அவர்கள் அவரது நட்பு வட்டத்திலேயே இருப்பது இலாபகரமானது என்று முடிவெடுத்தது போல் தெரிகிறது. மேலும் பர்வதராஜனைக் கொன்றது நீங்கள் தானென்று சாணக்கியர் வதந்தியைப் பரப்பியிருக்கிறார். அவர்களையும் கொல்வதற்காகத் தான் நீங்கள் வஞ்சகமாக அழைக்கிறீர்கள் என்ற சந்தேகத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.”
ராக்ஷசர் அதிர்ச்சியுடன் சொன்னார். “என்ன அபத்தம் இது?”
“இந்த அபத்தத்தை மலைகேதுக்கும் மறுக்க முடியவில்லை பிரபு. காரணம் ரகசியமாக நீங்கள் ஏற்பாடு செய்த கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பர்வதராஜன் இறந்தார் என்பது உங்களுக்கெதிராக இருக்கிறது”
ராக்ஷசர் கண்களை மூடிக் கொண்டார். அவர் நகர்த்திய காயையே அவருக்கு எதிராக நகர்த்தி சாணக்கியர் அலட்டிக் கொள்ளாமல் சாதித்து விட்டார். அவர் வறண்ட குரலில் சொன்னார். “விஷாகா இப்படித் துரோகம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
ஒற்றர் தலைவன் சொன்னான். “இளவரசி மேல் மிகுந்த அன்பு கொண்ட அவள் அவரது துக்கத்துக்குக் காரணமாக இருக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கலாம் பிரபு”
ராக்ஷசருக்குப் புரிந்தது. அவள் இந்தத் திட்டத்திற்குச் சம்மதித்ததே இளவரசியின் நலனுக்காகத் தான். இந்தத் திட்டம் நிறைவேறினால் இளவரசி துக்கப்படுவாள் என்று அவள் பின்வாங்கியிருக்க வேண்டும். பின் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் உடனடியாக யூகிக்க முடிந்தது. எல்லோரும் அவரவர் மனம் சொல்வதற்கு ஏற்ப முடிவெடுக்கிறார்கள். அதன்படி நடந்து கொள்கிறார்கள். மகதம் தோற்றதும், மன்னன் காட்டுக்கு அனுப்பப்பட்டதும் யாருமே கவலைப்படுகிற விஷயமாக இல்லை. விரக்தியுடன் பெருமூச்சு விட்ட ராக்ஷசர் கேட்டார். “வேறென்ன செய்தி?”
ஒற்றர் தலைவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “தாங்கள் இப்போது ஒளிந்திருக்கும் இடத்தை சாணக்கியரின் ஒற்றர்கள் யூகித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன் பிரபு. சாணக்கியர் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கண்டும் காணாமலும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் நீங்கள் அங்கிருந்து சீக்கிரமே இடம் பெயர்வது நல்லது.”
அவன் சந்தேகம் அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. சில நாட்களாக அவரும் அதை உள்ளுணர்வில் உணர்ந்து வருகிறார். அவர் கேட்டார். “ஒருவேளை பர்வதராஜனைக் கொன்ற குற்றத்தை அல்லது சந்திரகுப்தனைக் கொல்லத் திட்டமிட்ட குற்றத்தை என் மீது சுமத்தி தண்டிக்க சாணக்கியர் திட்டமிட்டு இருக்கிறாரோ?”
ஒற்றர் தலைவன் சொன்னான். “தெரியவில்லை பிரபு.”
ராக்ஷசர் சற்று நெருங்கி ஒற்றர் தலைவனின் கண்களை நேராகப் பார்த்தபடி கேட்டார். ”இத்தனை காலம் எனக்கு விசுவாசமாக இருந்தவர்களிடம் மட்டுமே கேட்க முடிந்த கேள்வியை நான் கேட்கிறேன். எதிரிகளை அழிக்கவோ, துரத்தவோ கடைசியாக என்னால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்கிறதா? அது எத்தனை ஆபத்தான வழியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் என் உயிரையே இழந்தாலும் பரவாயில்லை. என்னால் முடிந்ததை எல்லாம் முயற்சி செய்திருக்கிறேன் என்ற திருப்தியுடன் நான் சாக விரும்புகிறேன்.”
ஒற்றர் தலைவன் அந்தக் கேள்வியில் மனமுருகினான். அவன் பார்வை தானாகத் தாழ்ந்தது. அவன் பலவீனமான குரலில் சொன்னான். “இனி எதுவும் செய்வதற்கில்லை பிரபு. எதுவும் செய்ய முடிந்த காலம் கடந்து விட்டது”
தூக்கு தண்டனையென தீர்ப்பு வாசிக்கப்பட்டதைக் கேட்ட கைதி போல் ராக்ஷசர் உணர்ந்தார். பின் மெல்லச் சொன்னார். “நானும் அப்படியே தான் எண்ணினேன். ஆனால் என் அறிவுக்கு எட்டாத ஏதாவது ஒரு வழி உன் அறிவுக்கு எட்டியிருக்குமோ என்ற நைப்பாசையில் தான் கேட்டேன்.”
ஒற்றர் தலைவன் அவருக்காக வருந்தினான். இத்தனை நல்ல மனிதர் இப்படி ஒரு நிலையை அடைந்திருக்க வேண்டியதில்லை….
அவர் மௌனமாக சைகை மூலம் அவனுக்கு விடைகொடுத்தார். வெளியே வரும் போது அவன் மனம் கனத்திருந்தது.
அவன் சென்று சிறிது நேரம் கழித்து ராக்ஷசரும் கிளம்பினார். போர்வையை முக்காடு போட்டுக் கொண்டு பாடலிபுத்திர தெருக்களில் நடக்கையில் அவர் மனம் வெறுமையை உணர்ந்தது. இனியும் நண்பர் சந்தன் தாஸின் வீட்டில் தங்கியிருப்பது நண்பருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்றியது. நேற்று தான் சந்தன் தாஸும் அவர் குடும்பத்தினரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கலிங்க தேசம் சென்றார்கள். தற்போது வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் திரும்பி வந்தவுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட வேண்டும் என்று உறுதியாகத் தோன்றினாலும் எங்கே செல்வது என்ற கேள்விக்கு அவரிடம் விடை இருக்கவில்லை. ஆனால் சீக்கிரமே முடிவெடுக்க வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.
சந்தன் தாஸின் வீட்டில் சத்தமில்லாமல் நுழைந்து, அவர் தங்கியிருந்த அறையிலும் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு திரும்பிய போது சாணக்கியரின் குரல் கேட்டது. “மகத தேசத்தின் பிரதம அமைச்சருக்கு சாணக்கியனின் பணிவான வணக்கங்கள்”
(தொடரும்)
என்.கணேசன்

%20reduced.jpg)

No comments:
Post a Comment