என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 11, 2025

சாணக்கியன் 191

 

சாணக்கியரின் குரல் கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளான ராக்ஷசர் ஸ்தம்பித்து சிலையாகச் சமைந்து ஒரு கணம் நின்றாலும் மறு கணமே சுதாரித்துக் கொண்டு கூர்ந்து பார்த்த போது அகல் விளக்கொளியில் சாணக்கியர் மட்டுமல்லாமல் சந்திரகுப்தனும் தெரிந்தான். அவனும் சாணக்கியரைப் போலவே கைகூப்பி வணங்கி நின்றான்.

 

ராக்ஷசர் இதயம் வேகமாக படபடத்தாலும், சூழ்நிலை அவரை செயலற்றவராக ஆக்கி விடவில்லை. மௌனமாக பெரிய விளக்கொன்றை ஏற்றியபடியே அவர் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டார். சற்று முன் ஒற்றர் தலைவன் சொன்னபடி எல்லாம் கைமீறிப் போய் விட்ட நிலையில் இனி பதறுவதற்கும், அதிர்வதற்கும் எதுவுமில்லை என்று தோன்றியது. முடிவு எதுவாக இருந்தாலும் அவர் சந்தித்தே ஆக வேண்டும். அவர் சந்திப்பார்

 

ராக்ஷசர் விரக்தியால் அமைதி அடைந்தவராகச் சொன்னார். “வணக்கம் சாணக்கியரே. தாங்கள் என்னுடைய பழைய பதவியை நினைவு வைத்துக் கொண்டு இப்போதும் அப்படியே அழைப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது. அதுவும் தற்போது அந்தப் பதவியில் இருக்கும் தாங்கள் அப்படி அழைப்பது என்னை நையாண்டி செய்வது போல் இருக்கிறது.”

 

அந்தப் பழைய பதவியிலிருந்து தங்களை யாரும் விலக்காததால் தான் அப்படியே அழைத்தேன் ராக்ஷசரே. தங்கள் பொறுப்புகளை நிர்வகிக்க நீங்கள் இருக்காததால் நான் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதனால் இதில் நையாண்டி எதுவுமில்லைசாணக்கியர் இப்போதும் பணிவாகவே பேசினார்.

 

இது என்ன நாடகம் என்று ராக்ஷசருக்குத் தோன்றினாலும் அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. பெரிய விளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்தார். சாணக்கியரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. முன்பிரு முறை சாதாரணமான மனிதராக அவரைப் பார்த்த போது அவர் எந்த மாதிரியான எளிய உடையில் பார்த்தாரோ, அதே எளிமையான உடையில் தான் இப்போதும் இருந்தார். அவர் அடைந்த வெற்றிகள் எதுவும் தோற்றத்தில் அவரைப் பெரிதாக மாற்றி விடவில்லை. அந்த அமைதியும் மாறவில்லை. மகத அரசவையில் அவமதிக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட போது இருந்த அதே அமைதி தான், வெற்றி வாகை சூடி அனைத்தையும் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் அவரிடம் தெரிகிறது. இப்படி இருக்க முடிவது எத்தனை பேருக்குச் சாத்தியம் என்ற வியப்பும் ராக்ஷசர் மனதில் எழுந்தது. அதுவும் சாணக்கியர் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.  தனியொரு மனிதனாய் எதிர்க்க ஆரம்பித்து இன்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வெற்றி கொண்டிருக்கிறார்.

 

ராக்ஷசர் பார்வை சந்திரகுப்தனையும் அளந்தது. பட்டு பீதாம்பரமும், ஆபரணங்களும் அணிந்து ஆணழகனாய் ராஜ கம்பீரத்துடன் இருந்த அவனைப் பார்க்கையில் அவராலும் துர்தராவைக் குற்றப்படுத்த முடியவில்லை. 

 

ராக்ஷசர் சொன்னார். “முன்பெல்லாம் கைது செய்யக் காவலர்கள் தான் வருவார்கள். ஆனால் புதிய ஆட்சி மாற்றத்தில் மன்னரும், பிரதம அமைச்சருமே அந்தப் பணியைச் செய்ய வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

 

சாணக்கியர் சொன்னார். “கைது செய்வதென்றால் காவலர்களைத் தான் அனுப்பி இருப்போம். ஆனால் திருமணத்திற்கும், பட்டாபிஷேக விழாவுக்கும் அழைக்க சம்பந்தப்பட்டவர்களே வர வேண்டியிருப்பதால் தான் வந்தோம். ராக்ஷசரே.  வரும் சப்தமியன்று சந்திரகுப்தனுக்கும், இளவரசி துர்தராவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. வரும் தசமியன்று சந்திரகுப்தனின் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. இரண்டுக்கும் வந்து ஆசிகள் வழங்கி சுபநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தங்களை வேண்டிக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொல்லி விட்டு சந்திரகுப்தனைப் பார்க்க சந்திரகுப்தன் தலைவணங்கி ஒரு கணம் நின்று விட்டு பின் ராக்ஷசரின் பாதம் தொட்டு வணங்க ராக்ஷசர் திகைத்தார். அவர் இதைச் சிறிதும்  எதிர்பார்த்திருக்கவில்லை.  பொதுவாக வென்றவர்கள் தோற்றவர்களை நடத்தும் விதம் இதுவல்ல. அதுவும் அவரைப் போல் மறைவாக ஒளிந்திருந்து கொலைத்திட்டம் கூடத் தீட்டிய ஒரு மனிதனை மகத மன்னனாகப் போகிறவன் வணங்குவது இயல்பாயில்லை. ஆனால் இந்த மனிதரின் நாடகங்களில் மயங்கி விடக்கூடாது என்று தனக்குத் தானே ராக்‌ஷசர் சொல்லிக் கொண்டார். இது வரை இவரது எல்லா சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர் பார்த்து வந்திருக்கிறார். அவற்றில் நிறைய பாதிக்கவும் பட்டிருக்கிறார். அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ராக்‌ஷசர் இறுகிய முகத்துடன் சொன்னார்.

 

“ஆச்சாரியரே. தயவு செய்து இந்த நாடகங்களையும், நடிப்பையும் நிறுத்துங்கள். என்னை உங்களுக்குத் தெரியும். உங்களை எனக்கும் தெரியும். நான் உங்கள் நண்பனோ நலம் விரும்பியோ அல்ல. இப்போது வரை நாம் எதிரிகள் தான். அதனால் பாசாங்கு எதுவும் இல்லாமல் நீங்கள் வந்த காரணம் என்ன என்று சொன்னால் இருபக்கமும் காலம் விரயம் ஆவதைத் தவிர்க்க முடியும்”

 

சாணக்கியர் அந்த நேரடியான பேச்சில் எந்தப் பாதிப்பும் அடையாமல் அமைதியாகச் சொன்னார். ”ராக்‌ஷசரே. நீங்கள் எங்களை எதிரிகளாக நினைத்திருப்பதற்கு நான் வருந்துகிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக நிறைய செயல்கள் செய்திருக்கலாம். அவை எல்லாம் எங்கள் இலக்கை நாங்கள் அடைய, செய்தே ஆக வேண்டியிருந்த செயல்கள். ஆனாலும் உண்மையில் உங்களை எதிரியாக ஒரு போதும் நினைத்தது கிடையாது.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “வாக்கு வாதத்தில் தங்களை ஜெயிக்க முடியாது என்பதை நான் நம் முதல் சந்திப்பிலேயே அறிந்திருக்கிறேன் ஆச்சாரியரே. நான் பேசியது உண்மையை.”

 

“நானும் உண்மையையே பேசுகிறேன் ராக்‌ஷசரே. நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இது எங்கள் தாய் மண். இந்த தாய் மண்ணுக்கு எதிரானவர்களையே நாங்கள் எதிரிகளாகக் கருதுகிறோம். நானறிந்த வரை நீங்களும் இந்த மண்ணுக்கு விசுவாசமானவர் தான்.  அப்படி இருக்கையில் நாம் எதிரிகளாவதெப்படி?”

 

“இந்த மண் மீது படையெடுத்து வந்தவர்கள் எதிரிகளாகாமல் இருப்பதெப்படி?”

 

“இந்த மண்ணின் மைந்தர்கள் மக்கள் நலனில் அக்கறையில்லாத ஒருவனால் ஆளப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்களை அந்தக் கஷ்டத்தில் இருந்து மீட்கும் நியாயமான நோக்கத்தில் படையெடுத்து வருபவர்கள் எதிரிகளாவதெப்படி?”


”வாதத்திறமையால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் ஆச்சாரியரே”

 

”தனநந்தன் மீதிருக்கும் கண்மூடித்தனமான பிரியத்தினால் நீங்கள் உண்மையை மறுக்கிறீர்கள் ராக்‌ஷசரே. மன்னனின் நலத்திற்கும், மக்கள் நலத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அறியாதவரல்ல நீங்கள். ஆனாலும் மன்னன், மக்கள் என்று இரு பக்கமும் தங்கள் சேவையை எதிர்பார்த்த போது நீங்கள் மன்னன் பக்கமே நின்றீர்கள். நீங்கள் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. முடிந்த வரை செய்தீர்கள். ஆனால் தனநந்தன் அனுமதித்த வரை, அனுமதித்த அளவு வரை மட்டுமே செய்தீர்கள்.  ஆனால் தனநந்தனின் மனதின் அகலம் என்னவென்று நாமனைவரும் அறிவோம்.  அந்த மனதில் அவனைத் தவிர எத்தனை பேருக்கு இடம் இருந்தது? அவன் எத்தனை நன்மைகள் மக்களுக்குச் செய்ய உங்களை அனுமதித்தான்? யோசித்துப் பாருங்கள் ராக்‌ஷசரே. அவன் பக்கம் இந்தக் கணம் வரை இருந்த நீங்கள் மகதத்தின் பக்கம் இருப்பதாகவும், அதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் எண்ணிக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கூறுவதை இல்லை என்று உங்களால் நேர்மையாக மறுக்க முடியுமா ராக்‌ஷசரே?”

 

சாணக்கியரின் கேள்வி ராக்‌ஷசரின் மனசாட்சியின் அடி ஆழம் வரை சென்று தைத்ததால் அவர்  பேச்சிழந்து நின்றார். சரியாக இருக்கிறோம், சரியாக வாழ்கிறோம் என்று இக்கணம் வரை இறுமாந்திருந்த ராக்‌ஷசர் சாணக்கியர் சுட்டிக் காட்டிய நிதர்சன உண்மையில் இப்போது கூனிக் குறுகினார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நேர்பார்வை பார்த்தபடியே அவர் சாணக்கியரிடம் ஆத்மார்த்தமாகச் சொன்னார். “குற்றம் சாட்டிய நீங்களே தண்டனையையும் சொல்லுங்கள் ஆச்சாரியரே. தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “மகதத்தின் பிரதம அமைச்சராக இத்தனை காலம் செய்யத் தவறிய கடமையை அதே பொறுப்பேற்று இனி செய்து தீர்க்க வேண்டும் என்று மன்னராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரகுப்தன் உங்களைக் கேட்டுக் கொள்கிறான் ராக்‌ஷசரே”  

 

(தொடரும்)

என்.கணேசன்        




No comments:

Post a Comment