என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 25, 2025

சாணக்கியன் 193

ராக்‌ஷசர் கானகம் நோக்கி குதிரையில் போய்க் கொண்டிருக்கையில் நிறைய குடிமக்கள் வழியில் காணக் கிடைத்தார்கள். பொதுவாக அவர் இப்படி தெருக்களில் செல்கையில் கிட்டத்தட்ட அனைவரும் பயபக்தியுடன் கைகூப்பி வணக்கம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இன்று அவரைக் கண்டவர்கள் முகங்களில் இவர் இன்னும் இங்கேயே தான் இருக்கிறாரா என்ற ஆச்சரியம் தெரிந்ததேயொழிய, அவருக்கு வணக்கம் தெரிவித்தவர்கள் ஒருசிலர் மட்டுமே. மற்றவர்கள் அலட்சியம் காட்டியதை அவர் காண நேர்ந்தது. இது அவருக்குப் புதிய கசப்பான அனுபவமாக இருந்தது. தனநந்தன்  மட்டுமல்லாமல் அவரும் மக்களுக்கு நெருக்கமானவராக இல்லை என்பது புரிந்தது. ஒருவேளை அவர்கள் அவரை தனநந்தனின் பிரதம அமைச்சராக மட்டும் பார்க்கிறார்களோ என்னவோ என்று தோன்றியது. ஆச்சாரியரின் குற்றச்சாட்டும் நினைவுக்கு வர அவர் அந்தக் கசப்பான மனநிலையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார்.

 

பாடலிபுத்திரத்தைக் கடக்கும் போது எதிரில் மூன்று குதிரைகள் பூட்டிய பெரிய ரதம் ஒன்று வருவதைப் பார்த்தார். ரதத்தில் ஒரு பெண்மணியும், ஒரு முதியவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த முதியவர் அவருக்கு மிகவும் பரிச்சயமானவராகத் தெரிந்தார். யாரென்று கூர்ந்து பார்க்கையில் நினைவுக்கு வந்தது. சந்திரகுப்தனின் தாய் மாமன். அப்படியானால் உடன் அமர்ந்திருக்கும் பெண்மணி சந்திரகுப்தனின் தாயாக இருக்க வேண்டும் என்று அவர் அனுமானித்தார். மூன்று நாட்களில் நடக்கவிருக்கும் சந்திரகுப்தனின் திருமணத்திற்காக அவளை சந்திரகுப்தன் வரவழைத்திருக்கிறான் போலும். காலச்சக்கரம் என்று பலரும் சொல்வது மிகவும் சரியானது தான் என்று தோன்றியது. காலம் சுழலும் போது கீழே உள்ளவர்கள் மேலேயும், மேலே உள்ளவர்கள் கீழேயும் போகிறார்கள் என்பதற்கு இப்போதைய நிலவரமே சரியான உதாரணம்.

 

தொடர்ந்து முன்னேறிச் சென்ற போது வழியில் யாரும் அதிகம் காணக் கிடைக்கவில்லை. அவர் மனம் நடந்து முடிந்தவற்றை அசை போட்டது. அவர் சந்தன் தாஸின் வீட்டில் ஒளிந்திருந்ததை சாணக்கியர் ஆரம்பத்தில் இருந்து அறிந்தேயிருக்கிறார். ஆனாலும் பர்வதராஜனுடனான சந்திப்பையும், அவர்கள் இருவரும் போட்ட சதித்திட்டத்தையும் அவர் தடுக்கவில்லை. மாறாக அதைப் பயன்படுத்தி பர்வதராஜனை அப்புறப்படுத்தி விட்டார். ராக்‌ஷசராலும் எந்தப் பயனும் இல்லை, எதிர்காலப் பிரச்சினை ஆவார் என்று தோன்றியிருந்தால் ராக்‌ஷசரையும் சாணக்கியர் அப்புறப்படுத்தி இருப்பார் என்பது புரிந்தது. எல்லா சமயங்களிலும் கணக்கு போட்டே அதற்கேற்றபடி காய்களை நகர்த்தும் சாணக்கியரின் பேரறிவு அவரை வியக்க வைத்தது.

 

கானகம் நெருங்குகையில் சாணக்கியரின் காவலர்களும், ஒற்றர்களும் அங்கங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தார்கள். ஜீவசித்தி சொன்னது போல் சாணக்கியருக்குத் தெரியாமல் யாரும் தனநந்தனை தொடர்பு கொள்வது முடியாத காரியமே என்பது புரிந்தது. ராக்‌ஷசருக்கு ஒரு முறை தனநந்தனைக் காண அனுமதி தந்திருப்பது முன்கூட்டியே காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பது புரிந்தது. இல்லா விட்டால் கண்டிப்பாக அவர்கள் அவரைத் தடுத்திருப்பார்கள் அல்லது சிறைப்படுத்தியிருப்பார்கள். தனநந்தன் எந்த விதத்திலும் எதிர்காலப் பிரச்சினையாக உருவாகாமல் இருக்க சாணக்கியர் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதை அவரால் நேரிலேயே காண முடிந்தது.

 

தூரத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருக்கும் மனிதன் தனநந்தன் தான் என்று அறிய சிறிது நேரம் ராக்‌ஷசருக்குத் தேவைப்பட்டது. காரணம் எப்போதும் ஆபரணங்களுடன் அலங்காரத்தோடு இருக்கும் தனநந்தன் அதெல்லாம் இல்லாமல் யாரோ ஒருவன் போலத் தெரிந்தான். அந்தக் கோலத்தில் தனநந்தனைக் காண ராக்‌ஷசருக்கு மிக வேதனையாக இருந்தது.

 

நெருங்கியவுடன் குதிரையை நிறுத்தி, அதிலிருந்து வேகமாக இறங்கி, கண்கள் கலங்கியபடி சோகமே உருவாகத் தன் முன்னால் வந்து நின்ற ராக்‌ஷசரைப் பார்த்து தனநந்தன் லேசாகப் புன்னகைத்தான்.

 

“வணக்கம் மன்னா” என்று ராக்‌ஷசர் குரல் உடையச் சொன்னார்.

 

தனநந்தன் புன்னகையுடன் சோர்வான குரலில் சொன்னான். “வணக்கம் ராக்‌ஷசரே. நாட்டு நிலவரத்தை யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை போல் இருக்கிறது. இப்போது நான் மன்னனல்ல. நானும் நான் யார் என்று இப்போது தான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.”

 

ராக்‌ஷசர் கண்ணீர் வழியச் சொன்னார். “என்னை மன்னித்து விடுங்கள் அரசே. கடைசியில் உங்களைக் காக்க முடியாத பாவியாக இருந்து விட்டேன்...”

 

தனநந்தன் நெகிழ்ந்த மனதுடன் சொன்னான். “அரசே என்றழைப்பதற்கும், எனக்காக அனுதாபப்படுவதற்கும், என்னை நேசிப்பதற்கும் இன்னும் ஒரு மனிதர் மகதத்தில் இருப்பது பெரிய ஆறுதலாக இருக்கிறது ராக்‌ஷசரே. இங்கு வந்ததில் இருந்தே உங்களுக்கு எதாவது ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் நலமாக இருப்பதும் என்னைப் பார்க்க வந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

 

எப்போதும் கோபமாகவும், ஆத்திரமாகவும், அதிருப்தியில் கத்திக் கொண்டும் இருந்த தனநந்தன், இப்படிப்பட்ட நிர்க்கதியான சூழலில் கூட முன்பிருந்ததற்கு நேர்மாறாக இருப்பது ராக்‌ஷசரை ஆச்சரியப்படுத்தியது.

 

தனநந்தன் கேட்டான். “என்னைக் காண உங்களுக்கு சாணக்கின் மகன் அனுமதி தந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது ராக்‌ஷசரே?”

 

ராக்‌ஷசர் நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பின்பு தனநந்தன் சொன்னான். “நான் யார் என்ற கேள்விக்கான பதிலை யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று சற்று முன் உங்களிடம் சொன்னேனல்லவா ராக்‌ஷசரே. அதற்கு இணையாக இன்னொரு கேள்வியையும் நான் அதிகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சாணக்கின் மகன் நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வி. முதல் கேள்வியைப்  போலவே இரண்டாம் கேள்விக்கும் எனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஏன் என்றால் நல்லவன் என்பதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. அதே போல் கெட்டவன் என்பதற்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் துர்தராவுக்கு சந்திரகுப்தனைத் திருமணம் செய்து வைக்கும் முடிவில் சாணக்கின் மகன் என்னிடம் பெருந்தன்மையாகத் தான் நடந்து கொண்டிருக்கிறான் என்பதை என்னால் மறுக்க முடியாது. இந்தத் திருமணம் என் மகளின் விருப்பமாக இருந்தது. சந்திரகுப்தனும் அவளை விரும்பினான் என்று தெரிவதாக தாரிணி சொல்கிறாள். ஆனாலும் சாணக்கின் மகன் மறுத்து இருந்தால் சந்திரகுப்தனும் மறுத்திருப்பான் என்பதே உண்மை.”

 

ராக்ஷசர் மனதில் இருந்த ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது. இருவரும் அந்தப் பாறையில் அமர்ந்தபடி நிறைய நேரம் பேசினார்கள். ராக்ஷசர் ஒரு புதிய தனநந்தனைப் பார்த்தார். அவனும், அமிதநிதாவும் சமண மதத்தைப் பின்பற்றினார்கள் என்ற போதும் அவன் தீவிர மத சிந்தனைகளில் என்றுமே ஆழ்ந்ததில்லை. தாரிணி இந்து மதத்தைப் பின்பற்றுபவள் என்பதாலும், அமைச்சர் வரருசி போன்றவர்கள் யாகங்கள், வேள்விகளை ஊக்குவித்தார்கள் என்பதாலும் அவற்றிலும் அவன் மன்னனாகப் பங்கெடுத்துக் கொண்டான். ஆனால் வேத தத்துவங்களிலும் அவன் சிறிதளவும் ஆர்வம் காட்டியதில்லை. அப்படிப்பட்டவன் இப்போது மகாவீரரின் போதனைகள் சிலவற்றின் ஆழத்தைத் தற்போது உணர்ந்திருப்பதாகச் சொன்னான். ராக்‌ஷசர் ஆச்சரியப்படும் விதமாக தனநந்தன் ராஜ்ஜியத்தையும், நிதியையும் இழந்ததற்காக வருத்தப்பட்டதை விட அதிகமாக  பிள்ளைகள் இருவரை இழந்ததில் ஏற்பட்ட துக்கத்தை அவருடன் பகிர்ந்து கொண்டான். மகளுக்காவது நல்ல வாழ்வு அமைந்ததில் அவனுக்கு ஏற்பட்ட ஆறுதலைச் சொன்னான். தற்போதைய தோல்வியில் மற்றவர் சதியையும், பங்கையும் பற்றி அவன் பேசவோ விசாரிக்கவோ இல்லை. மாற்ற முடியாததைப் பற்றிப் பேசி என்ன பயன் என்று அவன் நினைத்தது போலிருந்தது. சாணக்கியர் மீதாவது சில கடுமையான சொற்களைப் பிரயோகித்தானே ஒழிய சந்திரகுப்தனுக்கு எதிராக அவன் எதையும் சொல்லாமல் இருந்தது இப்போது அவனை மருமகனாகவே பார்க்க ஆரம்பித்திருப்பதை அவருக்கு உணர்த்தியது. தனநந்தனின் இந்த மாற்றங்களை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மனைவி தாரிணியும் அவர்களுடன் பேச்சில் அவ்வப்போது இணைந்து கொண்டாள். அவளும் நிறைய மாறியிருப்பதை ராக்ஷசரால் உணர முடிந்தது.    

 

மாலை நெருங்க ஆரம்பித்த போது ராக்ஷசர் அங்கிருந்து கிளம்பினார். தனநந்தன் அவரிடம் கேட்டான். “சாணக்கின் மகனின் வேண்டுகோளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ராக்ஷசரே?”

 

ராக்ஷசர் சொன்னார். “இன்னும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை அரசே.”

 

தனநந்தன் அன்புடன் சொன்னான். “அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள் ராக்ஷசரே. நான் நல்ல மன்னனாக இருக்கவில்லை என்றாலும் நீங்கள் நல்ல பிரதம அமைச்சராக இருந்தீர்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதனால் அதை சாணக்கின் மகன் போடும் பிச்சையாக நினைத்து நீங்கள் மறுக்க வேண்டியதில்லை...”

 

ராக்ஷசர் தலையசைத்தார்.  பிரியும் போது இது தனநந்தனுடனான கடைசி சந்திப்பு என்ற நினைவால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கண்ணீர் வழிய அவர் விடைபெற்றார். தனநந்தனும் கண்கலங்கியபடி அவரை அனுப்பி வைத்தான் என்றாலும் அவர் எதிர்பார்த்திருந்த அளவுக்கு தனநந்தன் துன்பமான மனநிலையில் இருக்காதது அவருக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது

 

பாடலிபுத்திரம் நோக்கி அவர் திரும்பி வருகையில் அவர் மனம் தெளிந்திருந்தது.

 

 

(தொடரும்)

என்.கணேசன்        

No comments:

Post a Comment