என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 13, 2025

சாணக்கியன் 187

 

லைகேது சாணக்கியரின் பதில் மடலைப் படித்து மனம் கொதித்தான். அவருக்கு என்ன ஒரு ஆணவம் என்று எண்ணிக் கொண்டான். ஒழுங்காக ஆரம்பத்திலேயே சரிபாதியைக் கொடுத்திருந்தால் எதிரியுடன் இணையும் அவசியம் அவன் தந்தைக்கு இருந்திருக்கவேயில்லை என்பதை ஆச்சாரியர் எவ்வளவு வசதியாக மறந்து விட்டார்.

 

அவர் கடிதத்தில்எப்போது எங்களுடன் இருந்து கொண்டே எதிரியுடன் கைகோத்து எங்களை அழிக்க முற்பட்டீர்களோ அப்போதே எங்கள் நட்பையும், வெற்றியில் பங்கு கேட்கும் தார்மீக உரிமையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நியாயமாகப் பார்த்தால் எங்களிடமிருந்து நீ எதிர்பார்க்க வேண்டியது தண்டனையைத் தான்என்றதும்நீயும் உன் படைகளும் ஹிமவாத கூடத்திற்குத் திரும்பிப் போக அனுமதியளிக்கிறேன்என்றதும் அவனுக்கு ஆத்திரமூட்டின. வெறும் கையோடு திரும்பிப் போக அவன் படுமுட்டாளா?

 

சாணக்கியரின் கடிதத்தில் அவனைக் குழப்பிய வாசகம்எங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக சந்திரகுப்தனோடு சேர்த்து உன் தந்தையையும் கொன்று விட எதிரி தீர்மானித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லை.’ இதென்ன புதுக்கதை என்று அவன் ஆரம்பத்தில் நினைத்தாலும் அவன் மனதில் விழுந்த சந்தேக விதை பல தகவல்களை அசை போட்டது.

 

கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொன்னது சாணக்கியர் அல்ல, ராக்ஷசர். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததும் சாணக்கியர் அல்ல. பர்வதராஜனிடமே அவர் அந்த வேலையை ஒப்படைத்திருந்தார்பர்வதராஜன் பெயரில் எல்லா ஏற்பாடுகளையும் ராக்ஷசரும், அவர் ஆட்களும் தான் ரகசியமாகச் செய்திருக்க வேண்டும். சாணக்கியர் அந்த நிகழ்ச்சிக்கே வரவில்லை. சந்திரகுப்தனும் நிகழ்ச்சி முடிந்து போய் விட்டான். மதுவில் விஷம் கலந்திருந்தால் குடிக்க ஆரம்பித்தவுடனேயே ஏதாவது விளைவுகள் வெளிப்பட்டிருக்கும். நிகழ்ச்சி முடியும் வரை அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பர்வதராஜன் அப்படி ஏதாவது சின்ன விளைவுகளை உணர்ந்திருந்தாலும் கூட அலட்சியப்படுத்தியிருக்க மாட்டார். காவலர்களையும் சுசித்தார்த்தக்கையும் அனுப்பி வைத்திருக்க மாட்டார். அப்படி அவர் செய்திருக்கிறார் என்றால் அவர் அது வரை நன்றாக இருந்திருக்க வேண்டும். அவர் யாரையோ இரகசியமாகச் சந்தித்துப் பேசக் காத்திருக்கத் தான் காவலர்களையும் சுசித்தார்த்தக்கையும் அனுப்பியிருக்க வேண்டும். அந்த யாரோ கூட சாணக்கியராகவும், சந்திரகுப்தனாகவும் இருக்க வாய்ப்பில்லை. அது ராக்ஷசராகவோ அவர் அனுப்பிய ஆளாகவோ இருந்திருக்கலாம். சந்தேக விதை வேகமாகக் கிளைகள் விட ஆரம்பித்தன….

 

கடைசியாக பர்வதராஜனின் மரணத்தைப் பற்றித் தெரிவித்து ஆபத்து மலைகேதுவுக்கும் இருப்பதாகத் தெரிவித்த சுசித்தார்த்தக் கூட இனி என்ன செய்வதென்று ராக்ஷசரிடம் ஆலோசனை கேட்டு வருவதாகக் கிளம்பியவன் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பி வந்தது நினைவுக்கு வந்தது. ”அவரும் சற்று முன் தான் அவர் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து தப்பித்துச் சென்றாராம்என்று அப்போது சொன்னான். ”அவர் இருக்குமிடம் பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார் என்று தெரிகிறது. அதனால் அவரும் ஆபத்தை உணர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்திருக்கலாம் என்றே தோன்றுகிறதுஎன்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். காரணம் அதுவாக இல்லாமல் குற்றம் செய்த குற்றவாளி தப்பிச் சென்றதாகக்கூட இருக்கலாம். சுசித்தார்த்தக் தன் எஜமான விசுவாசம் காரணமாக அதை உணராமல் இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்காதது போல ராக்ஷசர் அவனுக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். இதை எல்லாம் யோசிக்க யோசிக்க  மலைகேதுவுக்குப் பகீரென்றது.

 

சாணக்கியரே சொன்னது போல் பரம எதிரியான தனநந்தனின் மகளை சந்திரகுப்தன் மணக்கச் சம்மதித்ததும், வனப்பிரஸ்தம் போக அனுமதி தந்ததும், செல்கையில் செல்வத்தைக் கொண்டு செல்ல அனுமதி தந்ததும் கூட நினைவுக்கு வந்தன. ஒருவேளை தந்தை தான் தப்புக் கணக்குப் போட்டு ராக்ஷசரிடம் ஏமாந்து விட்டாரோ? சாணக்கியர் சொன்னது போல ராக்ஷசர் தங்கள் எதிரிகள் சந்திரகுப்தன், பர்வதராஜன் இருவரையும் கொல்லத் திட்டமிட்டு இருந்தாரோ? சந்திரகுப்தனை சாணக்கியர் காப்பாற்றி பர்வதராஜன் காப்பாற்றப்படவில்லையோ?

 

இப்படி நினைக்கையில் ராக்ஷசர் சதியும் எல்லா விதத்திலும் கோர்வையாக வந்ததால் மலைகேது குழம்பினான். முடிவில் சுசித்தார்த்தக்கை அழைத்தான்.

 

சுசித்தார்த்தக், சாணக்கியர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் அவர்களுக்கு எதிராக என் தந்தை செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராக்ஷசர் தான் என் தந்தையைக் கொல்ல சதி செய்திருக்கிறார் என்று சொல்கிறார்.” என்று சொல்லி விட்டு மலைகேது அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.

 

சுசித்தார்த்தக் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. “அவர் சொல்வதை நம்பாதீர்கள் இளவரசேஎன்று சொன்னாலும் அதை அவனால் உறுதியான தொனியில் சொல்ல முடியவில்லை என்பதை மலைகேது கவனித்தான்.

 

மலைகேது அவன் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் சொன்னான். “கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொன்னது ராக்ஷசர். ஏற்பாடு செய்ததும் ராக்ஷசர். அந்த நிகழ்ச்சி முடிந்து அந்த இடத்தில் என் தந்தை கொல்லப்பட்டு இருக்கிறார். நீ ராக்ஷசரைக் காணச் சென்ற போது அவர் தப்பித்தும் சென்றிருக்கிறார். நடனநிகழ்ச்சிக்கு சாணக்கியர் வரக்கூட இல்லை. அப்படி இருக்கையில் நான் என்ன நினைப்பது என்று எனக்குப் புரியவில்லை சுசித்தார்த்தக்.”

 

சுசித்தார்த்தக் அந்தத் தகவல்களை மனதில் அசைபோடுவது மலைகேதுவுக்குத் தெரிந்தது. முடிவில் சுசித்தார்த்தக் பலவீனமாகச் சொன்னான். “எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளவரசே

 

சாணக்கியரின் கடிதத்தைப் படித்த நேபாள காஷ்மீர குலு மன்னர்கள் மறுபடியும் குழம்பினார்கள். நேபாள மன்னன் புலம்பினான். “இவர் ராக்ஷசரையும், பர்வதராஜனையும் குற்றம் சாட்டுகிறார். மலைகேதுவும் ராக்ஷசரும் இவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். யார் உண்மை பேசுகிறார்கள் என்றே புரியவில்லையே

 

காஷ்மீர மன்னன் சற்று யோசித்து விட்டுச் சொன்னான். “சாணக்கியர் சொல்வது தான் உண்மை போல் தெரிகிறது”.

 

குலு மன்னன் கேட்டான். “எதை வைத்துச் சொல்கிறீர்கள்?”

 

காஷ்மீர மன்னன் விளக்கினான். “வெற்றிக்கான பங்கீட்டை பர்வதராஜன் சாணக்கியரிடம் நமக்காகக் கேட்ட போது அவர் மறுத்து விட்டதாக மலைகேது சொன்னான். பர்வதராஜன் மறுத்த பிறகுமுதலில் வெற்றியைக் கொண்டாடுவோம், பின் பேசுவோம்என்ற வகையில் பேசி கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியின் போது கொன்று விட்டதாய்ச் சொன்னான். ஆனால் பர்வதராஜன் ராக்ஷசருடன் பேசி சந்திரகுப்தனுக்கு எதிராகத் திட்டமிட்டதை அவன் சொல்லவேயில்லைஆனால் ராக்ஷசரின் கடிதத்தில்  அவரும் பர்வதராஜனும் சேர்ந்து திட்டமிட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும் போது சாணக்கியர் சொன்னது தான் சரியாக இருக்கும் என்று தெரிகிறது. எதிரணியில் உள்ள ராக்ஷசருடன் சேர்ந்து திட்டமிட பர்வதராஜனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?”

 

குலு மன்னன் சந்தேகத்தோடு கேட்டான். “சாணக்கியர் நமக்குப் பங்கு தர மறுத்ததால் கடைசியில் பர்வதராஜன் கோபத்தில் எதிரி ராக்ஷசருடன் சேர்ந்து விட்டிருக்கலாமோ?” 

 

நேபாள மன்னன் சொன்னான். ”உண்மையில் அப்போது சாணக்கியர் நமக்கு எதையும் தர மறுத்திருந்தால் இப்போது நமக்கு எழுதிய கடிதத்தில்பர்வதராஜன் உங்களுக்குத் தந்த வாக்கை நான் நிறைவேற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்என்று ஏன் அவராகவே எழுத வேண்டும். பர்வதராஜன் இறந்த பின்னும் கூட தானாகவே முன் வந்து இதைச் சொல்பவர், பர்வதராஜனிடம் பங்கு தர முன்பு மறுத்தார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லையே” 

 

காஷ்மீர மன்னன் தலையசைத்தபடி சொன்னான். “சரியாகச் சொன்னீர்கள். நமக்கு வாக்களித்த பர்வதராஜனே இறந்த பின், அதை நிறைவேற்றும் பொறுப்பை சாணக்கியர் ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம் தான்.”

 

இத்தனைக்கும் பர்வதராஜன் சதி செய்து எதிரியாக மாறி இறந்திருக்கிறார்...” என்று குலு மன்னன் யோசனையுடன் சுட்டிக் காட்டினான்

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. எல்லாம் இழந்து மறைந்து வாழும் ராக்ஷசர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இலாபமும் இல்லாமல் நமக்கு உதவ முன் வருவது நம்பும்படியாக இல்லை.”

 

நேபாள மன்னன் மெல்லச் சொன்னான். “சாணக்கியருடன் சேர்ந்து அவர்களை வென்ற காரணத்திற்காக பர்வதராஜனை வஞ்சம் தீர்த்தது போல் நம்மையும் வஞ்சகமாகக் கொல்லும் உத்தேசம் ராக்ஷசருக்கு இருக்குமோ?”

 

மூவரும் ஒருவரை ஒருவர் சற்று திகிலோடு பார்த்துக் கொண்டார்கள்அப்படி இருக்காது என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்

அடுத்த வாரம் வெளியாகிறது புதிய நாவல்!



6 comments:

  1. You are great sir. Living as what you say. I mean consistent writing and now next novel is ready and that's awesome. May God bless you.

    ReplyDelete
  2. வியூகம்...நல்ல தலைப்பு.

    ReplyDelete
  3. Many thanks for your new novel.

    ReplyDelete
  4. வணக்கம் சார், புது நாவல் எதுவும் வெளியீடுகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இந்தப் பக்கத்திலேயே இருக்கும் அறிவிப்பையும் அட்டைப் படத்தையும் கவனிக்கவில்லையா?

      Delete
  5. சந்திரகுப்தனுக்கு எதிரிகளும் இல்லை...இனி எதிராக செயல்பட நினைப்பவர்களும்‌ இல்லை..

    ReplyDelete