பாண்டியன் அன்றிரவு பிரம்மானந்தாவைச் சந்திக்கச் சென்ற போது
ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றை
அவர் பெருமையுடன் படித்துக் கொண்டிருந்தார்.
“வா பாண்டியன். உட்கார்” என்று மகிழ்ச்சியுடன்
அவரை உட்காரச் சொன்னார். அந்தப் பத்திரிக்கையை பாண்டியனிடம் காட்டி அது அமெரிக்காவிலிருந்து
வெளியாகும் பத்திரிக்கை என்றும், அதில் அவரைப் பற்றியும், யோகாலயம்
பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
பாண்டியனைப் பற்றியே பெருமையாக அந்தப்
பத்திரிக்கை எழுதியிருந்தாலும் அதில் பாண்டியன் புளங்காகிதம் அடைந்து விடப் போவதில்லை. அதனால்
என்ன லாபம் என்று மட்டுமே யோசிக்கக்கூடியவர் அவர். நிச்சயமாக
அந்தக் கட்டுரையைப் படித்து பல அமெரிக்கர்கள் பிரம்மானந்தரைப் பெருமையாக நினைக்கலாம், சிலர் அவரைப்
பார்க்கவென்றே இந்தியாவுக்கும் வரலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், இப்போது
பிரம்மானந்தா இருக்கிற உச்ச நிலைக்கு அது சில்லறை இலாபம் தான் என்று பாண்டியன் நினைத்தார்.
அதனால் சம்பிரதாயத்துக்காக அந்தக் கட்டுரையைப்
புரட்டிப் பார்த்து “அருமை” என்று சொல்லி அந்தப் பத்திரிக்கையை பாண்டியன் மூடி வைத்தார். பிரம்மானந்தாவுக்கு சப்பென்று ஆகி விட்டது. இது போன்ற
விஷயங்களில் பாண்டியனுக்கு நடிக்கவும் வருவதில்லை என்பது அவருடைய கசப்பான அனுபவம்.
பாண்டியன் ஷ்ரவன் புதிதாய் கண்டுபிடித்துச்
சொன்னதையும், அதைத் தெரிவித்த பின் தேவானந்தகிரி சொன்னதையும் விரிவாகச்
சொன்னார். தேவானந்தகிரி சொன்னதைக் கேட்ட போது பிரம்மானந்தாவின் முகம்
கருத்தது. அதைப் பார்த்த போது பாண்டியனின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.
பாண்டியன் நேரடியாகவே கேட்டார். “உங்களுக்கு
அப்படிப்பட்ட யோகி யாராவது தெரியுமா யோகிஜி?”
பிரம்மானந்தா அரை நிமிடம் மௌனமாகவே
இருந்தார். அவர் இதுவரையில் பாண்டியன் கேட்கும் கேள்வி எதற்கும் பொய்
சொன்னதில்லை. பாண்டியனும் அவரிடம் அப்படியே தான் இருந்தார். சிறு மனப்போராட்டத்திற்குப்
பின் பிரம்மானந்தா சொன்னார். ”யார் யோகிங்கறது
பதில் சொல்லக் கஷ்டமான கேள்வி பாண்டியன். ஒரு காலத்துல நானும்
உண்மையான யோகியைத் தேடி இருக்கேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொருத்தரை
யோகின்னு அடையாளம் காட்டியிருக்காங்க. பல பேரை அப்படிப்
போய் பார்த்து நான் ஏமாந்து போயிருக்கேன். கடைசில
நானே யோகியாயிட்ட பிறகு தேடறதை நிறுத்திட்டேன்.” சொல்லி
விட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார்.
பாண்டியன் கேட்டார். “தேவானந்தகிரி
பரிசுத்தமான யோகின்னு சொன்னாரே, அப்படி யாரையாவது பார்த்திருக்கீங்களா யோகிஜி?”
எத்தனையோ விஷயங்களுக்கு நடுவே, குறைவான
நேரத்தில் முக்கியமானதைத் தேர்ந்தெடுப்பதில் பாண்டியனுக்கு இணையாக ஒருவரை இதுவரை பிரம்மானந்தா
பார்த்ததில்லை. இந்தக் கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொல்ல முடியாது. பிரம்மானந்தா
பெருமூச்சு விட்டபடி வேண்டா வெறுப்பாகச் சொன்னார். “சிவசங்கரன்னு
ஒரு பேராசிரியர் இருந்தார். எல்லா தத்துவங்களையும் கரைச்சு குடிச்சவர் அவர். அவர் பரிசுத்தமான
ஒரு ஆளை நிஜமான யோகின்னு ரொம்ப காலத்துக்கு முன்னால், எனக்கு
அடையாளம் காட்டினார். அந்த ஆள் வெறும் தோட்டக்காரன் தான். செருப்பு
கூட போட மாட்டார். எந்தத் தத்துவமும் பேச மாட்டார். எந்த அற்புதத்தையும்
செஞ்சு காட்டியதில்லை. ஷ்ரவன் அளவுக்குக் கூட நாம பிரமிக்கற மாதிரி அந்த ஆள் எதுவும்
செஞ்சதில்லை. அமைதியான ஆள். பரிசுத்தமான ஆள்ங்கறதுலயும்
சந்தேகம் இல்லை. ஆனா யோகின்னு என்னால அவரை ஏத்துக்க முடியலை...”
“அப்புறம்
ஏன் அந்தப் பேராசிரியர் அந்த ஆளை யோகின்னு சொன்னார். அதற்கு
அவர் ஏதாவது காரணம் வெச்சிருப்பாரில்லையா?”
இந்தக் கசப்பான விஷயத்தைப் பேச வேண்டியிருப்பதை
பிரம்மானந்தா சங்கடமாக உணர்ந்தார். ”அந்த ஆள் கிட்ட
மாறாத அமைதி இருந்துச்சு. செய்யறது தோட்ட வேலைன்னாலும் அவர் அதையும் ரொம்ப அனுபவிச்சு, சலிப்பு
இல்லாமல் செய்வார். அது அந்தப் பேராசிரியரை ரொம்பவே கவர்ந்துடுச்சுன்னு நினைக்கறேன்.”
“நீங்க அவர்
கிட்ட பேசியிருக்கீங்களா யோகிஜி?”
“ம். ஒரு தடவை
போய்ப் பேசியிருக்கேன். அந்த ஆள் அதிகம் பேசற ரகம் இல்லை. கேட்டதுக்கு
மட்டும் பதில் சொல்றவராய் இருந்தார். சொல்ற அளவுக்கு
பெருசா ஒன்னுமிருக்கலை. எனக்கு ஏன் போனோம்னு ஆயிடுச்சு. பத்து நிமிஷத்துல
குட் பை சொல்லிட்டேன்.”
“சமீபத்துல
அந்த ஆளை எப்பவாவது பார்த்தீங்களா?”
“உம். கொஞ்ச நாளுக்கு
முன்னால் ஒரு நாள் பார்த்தேன். கொதிக்கிற வெயில்ல செருப்பில்லாமல் நடந்து போய்கிட்டிருந்தார். அப்பவும்
அமைதியாய், எந்த சங்கடமுமில்லாமல் சந்தோஷமாய் மனுஷன் போய்கிட்டு இருந்தார். புத்தி
சுவாதீனம் இருக்கற எவனாலயும் அப்படி போக முடியுமா பாண்டியன்? நம்மளால
அப்படி போக முடியாது தான். ஆனா அப்படி நம்மால முடியாததைச் செய்யறவனை எல்லாம் நாம யோகியாய்
எடுத்துக்க முடியுமா?”
பாண்டியனுக்கு உடனடியாக நினைவு வந்தது. பிரம்மானந்தா
முதல்வரைச் சந்தித்து வந்த அன்று தான் அந்த ஆளையும் பார்த்திருக்க வேண்டும். பிரம்மானந்தாவின்
டிரைவர் வர்ணித்த ஆள் அவர் தான்.
பாண்டியன் எதுவும் சொல்லாமல் யோசிப்பது
பிரம்மானந்தாவுக்கு என்னவோ போல் இருந்தது. அவர் சொன்னார். “அமைதியாய்
இருக்கிறதும், எதனாலேயும் பாதிக்கப்படாமல் இருக்கிறதும் மட்டும் தான் ஒரு
யோகியோட லட்சணம்கிற மாதிரி சிவசங்கரன் சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லை. பிணம் கூட
அமைதியாய், எதிலும் பாதிக்கப்படாமல் தான் இருக்கு. அதுக்குன்னு
நாம பிணமாயிட முடியுமா என்ன?”
பிரம்மானந்தா தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு, தானே வாய்
விட்டுச் சிரித்தார். பாண்டியனும் புன்னகை செய்ய, பிரம்மானந்தா
திருப்தியுடன் தொடர்ந்தார். “ஒரு காலத்துல யோகிகளை அப்படி இப்படின்னு வர்ணிச்சுட்டு இருந்தவர்
சிவசங்கரன். சாதாரணமாய் பார்க்கக்கூட கிடைக்க மாட்டாங்க, அப்படி
இப்படின்னு பெருசா பேசிகிட்டிருந்த அவர் கடைசில இவர் தான் அந்த மாதிரி யோகின்னு, அந்த தோட்டக்காரனை
அடையாளம் காட்டின பிறகு எனக்கு சீய்னு ஆயிடுச்சு. நான் அதற்கப்பறம்
சிவசங்கரனைப் பார்க்கவே போகலை.....”
பாண்டியன் சொன்னார். “ஷ்ரவனும்
அந்த நிஜ யோகி ஏதோ தோட்டத்தில் இருக்கிற மாதிரி தான் தெரியிதுன்னு சொன்னானே யோகிஜி.”
“ஆனாலும்
அது இந்த ஆளாய் இருக்காது. சௌகரியமாய் வாழக்கூட முடியாத ஆளை சர்வசக்தி படைச்ச யோகின்னு
எப்படி நம்பறது?... நான் நேற்று பேசின ஆன்மீகக் கூட்டத்தில் ’இந்தியா
பூரா கோசாலைகள் ஆரம்பிக்கப் போகிறோம்’னு சொல்லியிருக்கேன். அதற்கு
ஏற்பாடுகள் செய்யணும். இல்லாட்டி சில அதிகப்பிரசங்கிகள், ‘சொன்னது
என்னாச்சு’ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அவசரமில்லை. மெள்ளமா ஆரம்பிச்சாலும்
போதும். ஒன்னுமே செய்யலைன்னு புகார் வராம இருந்தா சரி”
யோகியிலிருந்து கோசாலைகளுக்குப் பேச்சை
மாற்றியதன் மூலம், யோகி பற்றிய பேச்சு முடிந்தது என்று பிரம்மானந்தா சொல்லாமல்
சொன்னது பாண்டியனுக்குப் புரிந்தது. அவருக்கும் அதற்கு
மேல் யோகி பற்றிக் கேட்க ஒன்றுமிருக்கவில்லை. அவர் தலையசைத்து
விட்டுக் கிளம்பினார்.
பாண்டியன் சென்ற பின்பும் அந்த யோகியின் நினைவு பிரம்மானந்தாவின் மனதை
என்னவோ செய்து கொண்டிருந்தது. அது என்னவென்பதை அவரால் தெளிவாய் வார்த்தைப்படுத்த முடியவில்லை. பாண்டியனிடம்
ஜாடையாய் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டதைப் போல், மனதில்
அந்த யோகியின் நினைவுகளை முடித்துக் கொள்ள முடியவில்லை. தகிக்கும்
உச்சி வெயிலில் செருப்பில்லாமல் அவர் வசந்த காலத்தில் பூப்படுக்கையின் மீது நடப்பது
போல் அமைதியாகவும், ஆனந்தமாகவும் நடந்து போய்க் கொண்டிருந்த காட்சி மனதில் திரும்பத்
திரும்ப ஒளிபரப்பாகியது. பிரம்மானந்தாவுக்குத் தன் மீதே கோபம் வந்தது. ‘அந்தப்
பைத்தியத்தை நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது?’
பாண்டியன் பிரம்மானந்தாவின் டிரைவரை
அழைத்து, பிரம்மானந்தா முதல்வரைச் சந்திக்க சென்ற நாளில் பார்த்த முதியவரை
நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு விவரிக்கச் சொன்னார். செருப்பு கூட இல்லாமல் உச்சி வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்த
பெரியவரை முடிந்த வரை நினைவுபடுத்திக் கொண்டு டிரைவரும் விவரித்தான். டிரைவர்
விவரிக்கையில் கண்ணனும் பாண்டியனுடன் இருந்தார்.
டிரைவர் சென்ற பிறகு பாண்டியன் கண்ணனிடம்
சொன்னார். “அந்தக் கிழவர் சுமார் முப்பது நாற்பது மைல் சுற்றுவட்டாரத்தில்
தான் எங்கேயோ இருக்கார் போலத் தெரியுது. இப்போதும் அவரோட
தொழில் தோட்ட வேலையாய் தான் இருக்கணும்.
எங்கே தங்கி இருக்கார், எங்கே வேலை செய்யறார்ங்கற விவரங்களை உடனடியாய் கண்டுபிடிக்கணும்.”
(தொடரும்)
என்.கணேசன்
இன்று மாலை வெளியீடு!


No comments:
Post a Comment