சுசித்தார்த்தக் மூச்சிறைக்க ஓடி வந்து சொன்னான். “இளவரசே, நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் போகக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.”
மலைகேது திகைத்தான். யோசிக்க அவகாசம் கேட்டவர்கள் இப்படி திடீரென்று முடிவெடுத்துச்
செல்ல என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. என்ன தான்
ராக்ஷசர் மீது அவனுக்குச் சந்தேகம் வந்திருந்த போதும் அவனால்
இப்போதும் சாணக்கியரிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. அவர் அவனுக்கு
எழுதிய கடிதம் இப்போதும் இதயத்தில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. அவனுடைய
தந்தையின் அதிசாமர்த்தியமும் ஆச்சாரியரிடம் பலிக்காமல் போனதை அவனால் சகிக்க முடியவில்லை.
அவன் வேகமாக நட்பு மன்னர்கள் தங்கியிருந்த
முகாம்களை நோக்கிச் செல்ல சுசித்தார்த்தக் பின் தொடர்ந்தான்.
மலைகேதுவுக்கு முதலில் காணக் கிடைத்தவன்
காஷ்மீர மன்னன். அவன் தன் ரதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அவனிடம்
மலைகேது விஷயம் தெரியாதவன் போலவே கேட்டான். “காஷ்மீர
மன்னரே, எங்கே கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?”
காஷ்மீர மன்னன் சொன்னான். “பாடலிபுத்திரத்துக்கு”
மலைகேது திகைப்பை முகத்தில் காட்ட காஷ்மீர
மன்னன் அமைதியாக சாணக்கியரின் கடிதத்தை அவனிடம் நீட்டினான். அந்தக்
கடிதத்தை வாங்கிப் படித்த மலைகேதுவின் திகைப்பு இருமடங்காகியது.
காஷ்மீர மன்னன் அவனிடம் இரக்கத்துடன்
சொன்னான். “மலைகேது தவறு உன் தந்தை மீது இருப்பதாகத் தான் நாங்கள் நினைக்கிறோம். ராக்ஷசருடன்
சேர்ந்து கொண்டு உன் தந்தை திட்டமிட்டதை ராக்ஷசரின்
கடிதமும் உறுதிப்படுத்துகிறது. எதிரியோடு சேர்ந்து கொண்டு நண்பர்களுக்குத் துரோகம் செய்வதை
எங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”
மலைகேது மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக்
கொண்டு சொன்னான். “காஷ்மீர மன்னரே. என் தந்தை
அப்படியொரு முடிவை எடுக்கக் காரணமே சாணக்கியர் வெற்றியில் நமக்குப் பங்கெதுவும் தர
மறுத்தது தான். புத்தி சுவாதீனமுள்ள யாரும் காரணமில்லாமல் எதிரியோடு சேர்ந்து
நண்பர்களை எதிர்க்க மாட்டார்கள். அதை மறந்து விடாதீர்கள்.”
அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த
நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, சாணக்கியர் உன்
தந்தையிடம் பங்கு எதுவும் தர மறுத்திருந்தால் எங்களுக்கும் அதை மறுத்திருப்பார்.”
அதற்குள் அங்கே வந்து சேர்ந்த குலு
மன்னன் சொன்னான். “பங்கு தருவது பற்றி நாங்கள் சாணக்கியருடன் எதுவும் பேசியதில்லை, நாங்கள்
பேசியதெல்லாம் உன் தந்தையுடன் தான் என்ற போதிலும் சாணக்கியர் அதை எங்களுக்குத் தரும்
பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
நேரடியாகப் பேசாத எங்களிடமே அவர் அதை மறுக்காத போது, நேரடியாகப் பேசியிருக்கும் உன் தந்தையிடம் அவர் மறுத்திருப்பார் என்று எங்களுக்கு
நம்ப முடியவில்லை”
நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, உன் தந்தையைக்
கொன்றதும் ராக்ஷசரின் சதியாகவே இருக்கும் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். ராக்ஷசர் அவரைக்
கொன்றதோடு திருப்தியடையாமல் உன்னையும், எங்களையும் சேர்ந்து
பழிவாங்கவே உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது.”
காஷ்மீர மன்னன் சொன்னான். “வயதிலும், அனுபவத்திலும்
மூத்தவர்கள் என்பதால் உனக்கு அறிவுரை கூறுகிறோம். நீ சாணக்கியரையும், சந்திரகுப்தனையும்
எதிர்ப்பது முட்டாள்தனம். நீயும் எங்களோடு அங்கு வா. சந்திரகுப்தனின்
திருமணமும், பட்டாபிஷேகமும் முடிந்து நாம் நம்முடைய தேசங்களுக்குத் திரும்புவோம்.”
மலைகேது அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவனுக்கு
அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அழைப்பு கூட இல்லை என்பதை அவர்களிடம் அவன் எப்படிச் சொல்வான்? அவன் தன்
சேனையுடன் நாடு திரும்ப மட்டுமே அவர் அனுமதி தந்திருக்கிறார் என்பதையும் அவன் எப்படிச்
சொல்வான்?
அவர்கள் அவன் பேச்சிழந்து நிற்பதை இரக்கத்துடன்
பார்த்து விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். அவன்
தந்தையின் அதிபுத்திசாலித்தனமான திட்டங்கள் அனைத்தும் இப்படி பிசுபிசுத்துப் போய் அவர்
மரணத்தில் முடிந்து போகும் என்றோ,
அவரைத் தவிர அவர் நண்பர்கள் சாணக்கியரின் நண்பர்களாக மாறி விடுவார்கள்
என்றோ அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒரு விதத்தில் வாழ்க்கை
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருந்து விடுகிறது என்று எண்ணியவனாய் விரக்தியுடன்
தன் முகாம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். சுசித்தார்த்தக்
மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரத்தில் ஹிமவாதகூட வீரன் ஒருவன்
வந்து சொன்னான். “இளவரசே பாடலிபுத்திரத்திலிருந்து நம் படை வந்து கொண்டிருக்கிறது.”
சாணக்கியர் அவன் படையைத் திருப்பி அனுப்பி
விட்டார். யோசிக்கையில்
சாணக்கியர் ஆரம்பத்திலிருந்தே அவன் தந்தையின் எதிர்பார்ப்பின் படியெல்லாம் நடந்து கொள்ளவில்லையே
ஒழிய அநியாயம் என்று குற்றம் சாட்டுகிறபடி எப்போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் மறைத்தும் பேசவில்லை.
தனநந்தனிடம் பேசியதைக் கூட அவர் மறைக்கவில்லை. அவன் கொண்டு செல்ல அனுமதித்த செல்வத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளக்கூட அவர் பர்வதராஜனை
அழைத்திருந்தார். அதை அவர் பங்கிலிருந்து குறைத்துக் கொள்ளவும்
சம்மதித்திருந்தார். சரியாகப் பங்கு தரும் உத்தேசமில்லாதவர் அப்படியெல்லாம்
செய்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை…
எல்லாவற்றையும் முழுமையாக அடைய ஆசைப்பட்டு அவன் தந்தை முடிவில்
உயிர் உட்பட அனைத்தையும் இழந்து விட்டதை வேதனையுடன் எண்ணியபடி மலைகேது பெருமூச்சு விட்டான். அவன் தந்தை இந்த மூன்று
மன்னர்களுக்குக் கூட சாமர்த்தியமாக மிகக்குறைவாகவே வாக்களித்திருந்தது இப்போது சாணக்கியருக்கு மிக வசதியாகப்
போயிருக்கும். இவர்களுக்குக் குறைவாகத் தந்தது போக மீதமுள்ள அனைத்தும்
இனி சந்திரகுப்தனுக்கே என்று நினைக்கையில் அவன் மிக மனவேதனையை உணர்ந்தான்.
கனத்த மௌனத்துடன் நடந்த அவன் முன் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக
நின்றது. இனி
என்ன செய்வதென்று அவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. சமீபத்திய
எல்லா கஷ்ட காலங்களிலும் தன்னுடன் இருந்த சுசித்தார்த்தக்கிடம் மலைகேது மெல்ல கேட்டான். “இனி நான்
என்ன செய்வது நல்லது என்று நினைக்கிறாய் சுசித்தார்த்தக்?”
சுசித்தார்த்தக் இரக்கத்துடன் சொன்னான். “இனி யாரை
நம்பியும் பலனில்லை என்றான பின் நீங்கள் ஹிமவாதகூடத்திற்குத் திரும்பிச் செல்வதே நல்லது
என்று இந்த அடியவனுக்குத் தோன்றுகிறது இளவரசே. நீங்கள்
அங்கு முடிசூடிக் கொண்டு ஆட்சி புரியுங்கள்.”
மலைகேது ஆற்றாமையுடன் கேட்டான். “வெறுங்கையுடன்
திரும்பிப் போவதற்கா இத்தனை தூரம் இத்தனை படையுடன் வந்தோம் சுசித்தார்த்தக்?”
”வெறுங்கையுடனாவது
திரும்பிப் போக முடிவதே இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்குப் பாக்கியமாகி விடுகிறது
இளவரசே. தங்கள் தந்தையால் அதுவும் முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.”
அதுவும் உண்மை தான் என்று நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி மலைகேது கேட்டான். “நீயும் எங்களுடன்
வருகிறாயா சுசித்தார்த்தக்?”
“இல்லை இளவரசே”
“நீ எங்கே
செல்லப் போகிறாய்?”
”மகதம் என்
தாய் மண் இளவரசே. அங்கேயே நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.”
மலைகேது அவனை வற்புறுத்தி அழைத்துச்
செல்ல விரும்பவில்லை. ஒருவிதத்தில் சுசித்தார்த்தக் அவனுடன் வராமல் இருப்பது நல்லது
தான் என்று தோன்றியது. அவன் உடனிருந்தால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கசப்பான
சம்பவங்கள் நினைவுக்கு வரும்....
சந்திரகுப்தனும், சாணக்கியரும்
பேசிக் கொண்டிருக்கையில் சாரங்கராவ் வந்து சொன்னான். “நேபாள, காஷ்மீர
மன்னர்கள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ஆச்சாரியரே. மலைகேது
ஹிமவாதகூடம் சென்று கொண்டிருக்கிறான்.”
சந்திரகுப்தன் புன்னகைத்தபடி சாணக்கியரிடம்
சொன்னான். “நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்திருக்கிறது ஆச்சாரியரே.”
சாணக்கியர் திருப்தியுடன் புன்னகைத்தார். சந்திரகுப்தன்
சொன்னான். “பர்வதராஜனிடமிருந்து இவ்வளவு எளிதாக விடுபட முடியும் என்று
நான் எதிர்பார்க்கவில்லை ஆச்சாரியரே. ஒருவேளை அவன் நமக்கு
எதிராகச் சதியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?”
சாணக்கியர் சொன்னார். “நான் கொடுத்த
வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருந்திருக்கும். ஆனால் என்
பாரதத்தைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டேன். ’நிதியை நீ வேண்டுமளவு எடுத்துக் கொள். பூமியை
எங்களுக்குக் கொடுத்து விடு’ என்று அவன் காலில் விழுந்து கெஞ்சியிருப்பேன். பிரிவினையால்
இழந்த பெருமையை எல்லாம் நம் பாரதம் ஒற்றுமையால் தான் மீட்க வேண்டும் என்று புரிய வைக்க
முயற்சி செய்திருப்பேன்.”
சாரங்கராவ் சிரித்தபடி சொன்னான். “ஆனால் அதற்கெல்லாம்
பர்வதராஜன் சம்மதித்திருக்க மாட்டான். ”பிரிக்க வேண்டாம்
என்றால் முழுவதுமாக எனக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லக்
கூடியவன் அவன் ஆச்சாரியரே”
சாணக்கியர் புன்னகைத்தார். “உண்மை சாரங்கராவ்.
உயர்ந்த உணர்வுகள் இருப்பது போல் எத்தனை தான் அவன் நடித்தாலும்
அவை எதுவும் அவனிடம் எப்போதும் இருந்ததில்லை. அதனால்
தான் பேராசையும், நயவஞ்சகமும் நிறைந்திருந்த அவன் சதித்திட்டங்கள் வெற்றி பெறும்
சூழல் இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளச் சிறிதும் தயங்க மாட்டான் என்று அறிந்த
நான் அவனுக்கு அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆர்வமாக அவன் பங்கெடுத்துக் கொண்டான்....”
(தொடரும்)
என்.கணேசன்



No comments:
Post a Comment