சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 10, 2025

யோகி 93

 

லைபேசி இசைத்தது. ஸ்ரேயா அதை எடுத்து யாரென்று பார்த்தாள். இதுவரை தொடர்பில் இல்லாத புது எண். கடன் வேண்டுமா என்று ஏதாவது வங்கியிலிருந்து கூப்பிட்டுக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அல்லது, வேறெதாவது விளம்பர அழைப்பாய் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவள் அலைபேசியை எடுத்து சற்று கண்டிப்பான குரலில் பேசினாள். “ஹலோ

 

ஹலோ ஸ்ரேயா. நான் ஷ்ரவன் பேசறேன்.”

 

அவன் குரலைக் கேட்டதும் அவளுடைய மனத்தில் பரவிய புத்துணர்ச்சியை அவள் கடிந்து கொண்டாள். ‘எத்தனை பட்டாலும் இந்த மனம் பாடம் கற்றுக் கொள்வதே இல்லை.’

 

சொல்லுங்கஎன்று வறண்ட குரலில் ஸ்ரேயா சொன்னாள்.

 

உன் கிட்ட நேர்ல கொஞ்சம் பேசணும்.”

 

இன்னைக்கு நான் ரொம்ப பிசியாய் இருக்கேன்.” என்று பொய் சொன்னாள். மீண்டும் மீண்டும் அடிபட அவள் இதயம் தயாராயில்லை.

 

அப்படின்னா, நாளைக்குப் பேசலாமா?”

 

இந்த வாரம் முழுசுமே நான் பிசி.”

 

புரியுது ஸ்ரேயா. ஆனால் நான் இன்னைக்கோ, நாளைக்கோ உன் கிட்ட கண்டிப்பாய் பேசியாகணும். பிறகு நான் ஓரிடத்திற்குப் போக வேண்டியிருக்கு.  போனால் எப்ப திரும்பி வருவேன்னு நிச்சயமில்லை.”

 

என்ன விஷயம்னு போன்லயே சொல்லுங்களேன்.” அவனைப் பார்த்தால் அவள் மனம் சிறிதும் வெட்கம், மானம், ரோஷம் இல்லாமல் அவனைக் கொண்டாடும். பட்ட அவமானமெல்லாம் போதும். அவனைப் பார்க்காமல் இருப்பதே நல்லது!

 

போன்ல பேச முடியாது ஸ்ரேயா.”

 

அப்படின்னா சாரி.”

 

ஒரே ஒரு தடவை நாம சந்திச்சுப் பேசலாம் ஸ்ரேயா. அதற்கப்பறம் உனக்கு வேண்டாம்னு  தோணுச்சுன்னா பிறகு நான் கண்டிப்பாய் எப்பவுமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

இப்போதும் முடியாதென்று சொல்லி அவன் செய்ததற்குப் பழிதீர்த்துக் கொள் என்று மனதின் ஒரு பகுதி சொன்னது. ஆனால் மனதின் மறுபகுதிஅப்படிச் சொன்னால் பின் நீ எப்போதும் நிம்மதியாக இருக்க முடியாதுஎன்று எச்சரித்தது. அது மட்டுமல்ல, அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும்....

 

சரி எங்கே சந்திக்கலாம்?” என்று அவள் கேட்டாள்.

 

உனக்கு வர சௌகரியமான இடமும் நேரமும் சொல்லு.”

 

ஸ்ரேயா அவள் வீட்டுக்கும் ஆபிசுக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய பூங்காவின் பெயரைச் சொல்லி, அங்கு அன்று மாலை ஆறு மணிக்குச் சந்திக்கலாம் என்றாள்.

 

தேங்க்ஸ் ஸ்ரேயா

 

அன்று அவளுக்கு ஆபிசில் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. ஷ்ரவன் என்ன சொல்வான் என்று அவள் மனம் பல அனுமானங்களை யோசிக்க ஆரம்பித்தது. காதலைச் சொல்வதிலிருந்து கடன் கேட்பது வரை அத்தனை சாத்தியக்கூறுகளும் மனதில் வந்து போயின. சொன்னபடி அவன் வராமல் போகவும் வாய்ப்புண்டு என்று அவள் மனம் அச்சுறுத்தவும் செய்தது.

 

அவளுடைய ஆபிசிலிருந்து ஸ்கூட்டியில் போனால் அந்தப் பூங்காவை கால் மணி நேரத்தில் அடைந்து விடலாம். ஆனால் மாலை ஐந்தரையிலிருந்தே அவள் மனம் அவனைச் சந்திக்கக் கிளம்பச் சொன்னது. இந்த முட்டாள் மனமே பெரிய இம்சை தான் என்று அவள் சலித்துக் கொண்டாள்.  5.46க்கு அவள் கிளம்பினாள்.

 

பூங்காவின் வாசலிலேயே ஷ்ரவன் அவளுக்காகக் காத்திருந்தான். தூரத்திலிருந்து அவனைப் பார்த்தவுடனேயே மனதில் பட்டாம்பூச்சிகள் படபடக்க அவள் மனதை எச்சரித்தாள். “பொறு. ஒரேயடியாய் கற்பனைக் குதிரையை ஓட விடாதே.”

 

அவனை நெருங்கிய போது தான் அவனிடம் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரிவதை அவள் கவனித்தாள். நடை, உடை, பாவனை, கண்கள், சிகையலங்காரம் எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது. ஆத்மார்த்தமாய் அவனிடம் உணர்ந்த ஆரம்பக் காதல் தான் அவனை உடனடியாக அடையாளம் காட்டியதேயொழிய, மற்றபடி அவன் புதிய ஆளாகவே தெரிந்தான். இந்த மாற்றங்களும் அவனுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய்த் தோன்றியது. ’மனமே கற்பனைக் கோட்டை எதையும் கட்டாதே. அவன் அழைத்தது அவனுடைய திருமண அழைப்பிதழ் தரவதற்காகக் கூட இருக்கலாம்என்று அவள் மனதை எச்சரித்தாள்.

 

வந்ததுக்கு தேங்க்ஸ்என்று சொல்லி அவன் கையை நீட்டிய போது, அவள் கை தானாக நீண்டது. இருவருமே அந்த ஸ்பரிசத்தின் இனிமையை உணர்ந்தார்கள். கைகள் விலக சிறிது நேரமாகியது.

 

ஆட்கள் அதிகமாக இல்லாத ஒரு இடமாய்ப் பார்த்து அவர்கள் இருவரும் அமர்ந்தார்கள். ஷ்ரவன் அவளிடம் சொன்னான். “யோகாலயத்துல நான் நடந்துகிட்டது உனக்கு புரியாத புதிராய் இருந்திருக்கும் ஸ்ரேயா. ஆனால் நான் காரணமாய் தான் அப்படி நடந்துகிட்டேன். நான் என்ன செய்தாலும் அதை உன்னிப்பாய் கவனிக்க அங்கே ஆள்களும், கேமிராக்களும் இருந்ததால நாம நெருக்கமாகிறோம்னு அவங்க தெரிஞ்சுக்கறது கூட உனக்கு ஆபத்துல முடியலாம்னு தான் நான் அங்கே அலட்சியமாய் இருந்தேன்.”

 

ஸ்ரேயா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் சொன்னான். “எல்லாத்தையும் நான் விவரமாய் சொல்றேன். ஆனால் நீ எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செய்து தரணும். நான் இப்ப சொல்றது எதுவுமே உன் மூலமாய் வேற யாருக்குமே எப்பவுமே தெரியக்கூடாது.”

 

அவன் கையை நீட்ட அவன் உள்ளங்கையில் தன் கையை வைத்து அவள் சத்தியத்தை உறுதிப்படுத்தினாள். ஷ்ரவன் தான் யார் என்பதையும், யோகாலயத்தின் யோகா, தியான வகுப்புகளில் சேர்ந்த காரணத்தையும் அவளுக்குச் சொன்னான். போலீஸ் இலாகா சைத்ரா வழக்கை ரகசியமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்று அவன் சொன்னானே தவிர இதில் முதல்வர் சம்பந்தப்பட்டதை அவன் சொல்லவில்லை. சைத்ரா, டாக்டர் வாசுதேவன் இருவர் மரணங்களையும் சொன்னவன் தேவையான சில விவரங்கள் தவிர மற்ற விவரங்களைச் சொல்வதைத் தவிர்த்தான். இதுவே கூட அவன் தொழில் தர்மத்தை மீறிய செயல். ஆனால் அவன் தன் செய்கைக்கான காரணத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னானேயொழிய மற்றதெல்லாம் சொல்வதற்கு அவசியமிருக்கவில்லை.

 

ஸ்ரேயா அவன் சொன்னதை எல்லாம் கேட்டு திகைத்தாள். அவளும் சைத்ரா வழக்கு  குறித்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்திருந்த செய்திகளை அறிந்திருந்தாள். ஆனால் உண்மை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருந்ததால் அவள் தெளிவான அபிப்பிராயத்தை எட்டி இருக்கவில்லை. ஆனால் ஷ்ரவனிடம் உண்மையைக் கேட்டறிந்த போது அவளுக்கு ரத்தம் கொதித்தது. யோகாலயத்தில் இருக்கும் குற்றவாளிகள் எத்தனை உயிர்களை எடுத்திருக்கிறார்கள். என்னவொரு அலட்சியம், என்னவொரு ஆணவம்.... 75 வயதில் அனாதையாய் நிற்கும் சைத்ராவின் தாத்தாவை நினைக்கையில் அவள் மனம் பதைத்தது. 

 

ஷ்ரவன் முடிவில் சொன்னான். “நான் இது வரைக்கும் எடுத்துகிட்ட எந்த வேலையைப் பற்றியும் என் வீட்டுலயோ, என் நண்பர்கள் கிட்டயோ சொன்னதில்லை ஸ்ரேயா. முதல் முதல்ல அதை நான் மீறியிருக்கேன். வாழ்க்கைல முதல் தடவையாய் உன்னைப் பார்த்த முதல் கணத்துலயே நான் காதலை உணர்ந்திருக்கேன். நீயும் அப்படியே உணர்ந்தாய்னும் ஆத்மார்த்தமாய் உணர்ந்திருக்கேன். இப்படியெல்லாம் உணர முடியும்னு யாராவது எப்பவாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாய் நான் கேலி செய்திருக்கக்கூடிய ஆள். சினிமால தான் நடக்கும், கதையில தான் நடக்கும்னு சொல்லியிருப்பேன். மனசுல உணர்ந்த காதலை வாயால உன்கிட்ட தெரிவிக்கிற இந்த நேரத்துல எனக்கு இருக்கற ஆபத்தையும் உன்கிட்ட சொல்றது தான் நியாயம். இதுவரைக்கும் நான் எடுத்துகிட்ட எல்லா வேலையும் ஆபத்து நிறைஞ்சது தான். ஆனால் ஒவ்வொன்னுலயும் அதை மீறி சாதிச்சுட்டு தான் நான் வந்திருக்கேன். இந்த வேலையும் அப்படி தான். போய்ச் சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தாலும்,  போனவன் திரும்பி வராமலேயே போகக்கூடிய ஆபத்தும் இருக்குன்னு உன் கிட்ட நான் தெரிவிக்கறது தான் நியாயமாய் இருக்கும். நான் உன் கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்டுக்கறேன். நான் இதுல கண்டுபிடிச்சு வெளியே வர சுமார் மூனு மாசத்திலிருந்து ஆறு மாசம் வரைக்கும் ஆகலாம்னு எதிர்பார்க்கறேன். அது வரைக்கும் எனக்காக காத்திருப்பாயா? அப்படி திரும்பி வந்தால் நான் உன் அம்மா அப்பா கிட்ட முறைப்படி பேசறேன். அப்படி நான் வரலைன்னா, என்னையும் இந்தக் காதலையும் மறந்துட்டு, ஒரு நல்ல பையனாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு புதிய வாழ்க்கையை நீ ஆரம்பிக்கணும்.”

 

(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment